SHARE

Sunday, May 01, 2016

தேசத் துரோகி சம்பந்தனே தமிழரின் தேசியக் கோரிக்கை சமஸ்டி அல்ல!



சமஸ்டியைத் தமிழ் மக்கள் தெரிவு செய்வதற்கு சிங்களவர்களே காரணம் – இரா.சம்பந்தன் செவ்வி
APR 30, 2016 | 3:22by நித்தியபாரதிin கட்டுரைகள்

கடந்த காலத்தில் தமிழ் மக்கள் சமஸ்டி ஆட்சியை விரும்பவில்லை எனவும், சிங்களவர்கள் மற்றும் சிங்கள அரசியல்வாதிகளினது செயற்பாடுகளே சமஸ்டி ஆட்சியைத் தமிழ் மக்கள் தெரிவு செய்வதற்கான காரணியாக அமைந்ததாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

டெய்லி மிரர் ஆங்கில நாளிதழுக்கு இரா.சம்பந்தன் அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்தச் செவ்வியை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

கேள்வி: தாங்கள் இராணுவ முகாம் ஒன்றுக்குள் அத்துமீறி நுழைந்ததாக கடந்த சில நாட்களாக ஊடகங்களில் கூறப்படுகின்றது. இது தொடர்பாக கூட்டு
எதிர்க்கட்சியின் சில தரப்பினர் விவாதங்களையும் மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக முறைப்பாடு ஒன்றும் முன்வைக்கப்பட்டது. இக்குற்றச்சாட்டு உண்மையா? இது தொடர்பான தங்களின் கருத்து என்ன?

பதில்: என்ன நடந்தது என்பதை நான் இங்கு விரிவாகக் கூறுகிறேன். கிளிநொச்சிக்கான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வீட்டு வளாகத்தில்
ஒழுங்குசெய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்புக்காக நான் அங்கு சென்றிருந்தேன். இந்தச் சந்திப்பின் போது மக்கள் சில பிரச்சினைகள் தொடர்பாகக் கேள்வி
எழுப்பியிருந்தனர். குறிப்பாக அவர்கள் காணிப் பிரச்சினைகள் தொடர்பாக என்னிடம் வினவியிருந்தனர். தமது காணிகளை சிறிலங்கா இராணுவத்தினர்
கையகப்படுத்தி வைத்துள்ளதாகவும் இந்தக் காணிகளுக்கான உறுதிகள் தம்மிடம் உள்ளதாகவும் மக்கள் தெரிவித்தனர். ஆனால் தமக்குச் சொந்தமான காணிகளை சிறிலங்கா இராணுவத்தினர் மீண்டும் தம்மிடம் கையளிக்கவில்லை எனவும், இந்த நிலங்களை இராணுவத்தினர் தமது தேவைக்காகப் பயன்படுத்தாத போதிலும் கூட அவற்றை இன்னமும் திருப்பித் தரவில்லை எனவும் சந்திப்பில் கலந்து கொண்ட சிலர் முறையிட்டனர்.

இந்தச் சந்திப்பின் முடிவில், தமக்குச் சொந்தமான காணிகள் வீதியின் எதிர்ப்புறமாக உள்ளதாக பெண்கள் சிலர் என்னிடம் தெரிவித்தனர். இந்த வீதியின் எதிர்ப்புறத்தில் முருகன் ஆலயம் ஒன்று உள்ளது. இந்த ஆலயத்தின் பின்புறமாகவே தமது காணிகள் உள்ளதாகவும் அவர்கள் கூறினார்கள். சந்திப்பில் கலந்து கொண்ட சிலருடன் இணைந்து நான் அந்தக் காணிகளைப் பார்வையிடுவதற்காகச் சென்றிருந்தேன். அங்கு செல்ல வேண்டாம் என என்னை எவரும் தடுத்து நிறுத்தவோ அல்லது அங்கு போகக்கூடாது எனவோ எவரும் என்னிடம் கூறவில்லை. அந்த இடத்தில் இராணுவ வீரர்களும் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

அந்த இடத்தில் உள்ள சில வீடுகள் இராணுவத்தினரின் பயன்பாட்டிற்கு உட்படுத்தப்படவில்லை என்பதை நான் அவதானித்தேன். ஆகவே என்னிடம் மக்கள் கூறியது உண்மை என்பதை நான் கண்டுகொண்டேன். இந்த வீடுகளில் சில தம்முடையவை என அங்கு நின்ற சிலர் தெரிவித்தனர். அந்த இடத்தில் நான் இருபது நிமிடங்களுக்கும் குறைவாகவே நின்றிருந்தேன். நான் பார்வையிட்ட இடத்தின் ஒரு பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக விடப்பட்டுள்ள போதிலும், சில காணிகள் இன்னமும் விடுவிக்கப்படாமலும் உள்ளது. இது தொடர்பாக நான் அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்தி தீர்வை வழங்குவேன் என அந்த மக்களிடம் உறுதியளித்தேன். இவ்வாறானதொரு காரியத்தை நான் முன்னரும் செய்திருந்தேன்.

யாழ்ப்பாணத்திலுள்ள வலிகாமம் பிரதேசத்தில் இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டிருந்த காணிகளைப் பார்வையிடுவதற்காக நான் அண்மையில் சென்றிருந்தேன். அங்கிருந்த மக்களும் தமது நிலங்கள் இராணுவத்தினரால் பயன்படுத்தப்படாத போதிலும் அவை இன்னமும் விடுவிக்கப்படவில்லை என அவர்கள் என்னிடம் தெரிவித்தனர். இது தொடர்பாக நான் அதிபரிடம் எடுத்துரைத்த போது, இந்தக் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை அவர் முன்னெடுத்தார்.

இதுபோன்றே, நான் தற்போது கிளிநொச்சியில் என்னைச் சந்தித்த மக்களிடமும் உறுதி வழங்கினேன். நான் இந்தச் சந்திப்பை முடித்துக் கொண்டு யாழ்ப்பாணத்திற்குத் திரும்பியபோது, எனது பாதுகாப்பு அதிகாரிக்கு மூத்த இராணுவ அதிகாரி ஒருவர் தொலைபேசியில் அழைத்து என்னிடம் பேசவேண்டும் எனவும் தெரிவித்தார். நான் அவரிடம் பேசியபோது, கிளிநொச்சியில் நான் காணிகளைப் பார்வையிடச் சென்றபோது என்னுடன் இராணுவ வீரர்கள் சிலரை அனுப்பாதமைக்கு மன்னிப்புக் கோரியிருந்தார். நான் இராணுவ முகாமைப் பார்வையிடுவதற்காக அங்கு செல்லவில்லை எனவும், தமது காணிகளைப் பார்வையிடக் கோரிய மக்களின் வேண்டு கோளை ஏற்றே நான் அந்தப் பகுதிக்குச் சென்றிருந்ததாகவும் குறித்த இராணுவ அதிகாரியிடம் நான் தெரிவித்தேன்.

இது தொடர்பாக என்னிடம் எவரும் கேள்வி கேட்கவில்லை. நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக சில அரசியல்வாதிகள் இதனை ஒரு விவகாரமாக மாற்ற முற்படுகின்றனர். இதன் ஊடாக தாம் அரசியல் இலாபத்தை ஈட்டலாம் என அவர்கள் கருதுகின்றனர். நான் இங்கு கூறியதே உண்மை. எனக்குப் பாதுகாப்பு வழங்கும் அனைத்து அதிகாரிகளும் சிங்களவர்களே. அவர்களும் இதனை உறுதிப்படுத்துவார்கள். தமது தனிப்பட்ட நலன்களுக்காக இவ்வாறான இனவாதப் பரப்புரைகளை மேற்கொள்ளும் அரசியல்வாதிகளை நம்பவேண்டாம் என நான் மக்களிடம் கோரிக்கை விடுக்கிறேன்.

கேள்வி: ஆகவே தங்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட இத்தகைய குற்றச்சாட்டுக்களை நீங்கள் மறுக்கிறீர்களா?

பதில்: ஆம், நியாயமற்ற, பொய்யான இவ்வாறான குற்றச்சாட்டுக்களை நான் மறுக்கிறேன்.

கேள்வி: எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில், இந்த நாட்டின் அரசியல்வாதிகள் இராணுவ முகாமிற்குள் செல்லவோ அல்லது இராணுவத் தளங்களுக்குள் தாம் விரும்பிய நேரங்களில் செல்ல முடியும் என நீங்கள் கருதுகிறீர்களா?

பதில்: தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்ட மக்களின் தலைவர் என்ற வகையில் நான் எப்போதும் உண்மையை உரைக்கவே விரும்புகிறேன். ஆனால் நான் முரண்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு பணியாற்றுவதில் ஒருபோதும் நம்பிக்கை கொள்ளவில்லை. அந்த இடத்திற்குச் செல்வதற்கு நான் முன்னரேயே திட்டமிடவில்லை. இது எதிர்பாராது நடந்த ஒரு விடயமாகும். சில மாதங்களுக்கு முன்னர் நான் வலிகாமத்தில் இராணுவத்தால் பிடிக்கப்பட்ட இடத்தைப் பார்வையிடச் சென்றபோது, கடந்த ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட சில பாரிய கட்டடங்களைப் பார்வையிட விரும்பினேன். பாதுகாப்புச் செயலரிடம் தொடர்பு கொண்டு அனுமதி கோரியபோது அவர் அதற்கான அனுமதியைத் தந்தார். இந்த அடிப்படையில், கிளிநொச்சியிலுள்ள மக்களின் காணிகளைப் பார்வையிடுவதற்காக நான் சென்றதானது முற்றிலும் மக்கள் நலன் சார்ந்ததாகும். வேறெந்த மறைமுக நோக்கத்தையும் கொண்டிருக்கவில்லை.

கேள்வி: தமிழ் பேசும் மக்களுக்குத் தனியாக மாகாணம் ஒன்று வேண்டும் எனக் கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் முன்வைக்கப்பட்ட தீர்மானம் ஒன்றை சில தினங்களுக்கு முன்னர் வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பான தங்களின் கருத்து என்ன?

பதில்: தேசியப் பிரச்சினைக்கான தீர்வு, தமிழ் பேசும் மக்களின் எதிர்காலம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டதொரு அரசியல் யாப்பு சீர்திருத்தம் ஒன்றை சிறிலங்கா அரசாங்கம் தற்போது மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாகப் பல்வேறு தரப்பினரும் தமது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். இதற்காக ஒரு ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டு அது இந்த நாடு முழுவதிலும் பயணம் செய்து மக்களின் கருத்துக்களை கேட்டறிகிறது. தமிழ் மக்களின் பிரச்சினைக்குப் பொருத்தமான தீர்வு யோசனையை வடக்கு மாகாண சபையும் முன்வைத்துள்ளது.

வடக்கு மாகாண சபையால் முன்வைக்கப்பட்ட பரிந்துரையானது சமஸ்டி ஆட்சியை அடிப்படையாகக் கொண்டமைந்துள்ளமை மற்றும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் பேசும் மக்களை ஒன்றிணைத்து தனியொரு அலகாக்கி அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டதாகும்.

 இவ்விரு விவகாரங்களும் நீண்ட காலமாகவே ஏற்றுக் கொள்ளப் படாதவையாகக் காணப்படுகின்றன. 1920களின் மத்தியில், எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க ஐக்கிய இராச்சியத்திலிருந்து சிறிலங்காவிற்குத் திரும்பி வந்தபோது சமஸ்டி ஆட்சி தொடர்பான பரிந்துரையை முன்வைத்திருந்தார்.

இவர் சமஸ்டி நிர்வாகம் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் பல்வேறு ஆக்கங்களை எழுதினார். 1929ல், டொனமூர் ஆணைக்குழு வருவதற்கு முன்னர், கண்டியன் அமைப்பானது சமஸ்டி ஆட்சி முறையை உள்ளடக்கிய அரசியல் சீர்திருத்தப் பரிந்துரையை முன்வைத்திருந்தது. இதில் மூன்று அலகுகளாக அதிகாரங்கள் பிரிக்கப்பட வேண்டும் எனவும் கோரப்பட்டது. அதாவது கண்டி இராச்சியம், சிங்கள இராச்சியம், வடக்கு கிழக்கை உள்ளடக்கிய தமிழர் இராச்சியம் ஆகிய மூன்றுமே அவையாகும். இதனையே தற்போது வடக்கு மாகாண சபையும் பரிந்துரைத்துள்ளது. நாங்கள் சுதந்திரமடைவதற்கு முன்னரேயே,
கண்டியத் தலைவர்கள் சோல்பரி ஆணைக்குழுவின் முன் சமஸ்டி ஆட்சிமுறைத் தீர்வொன்றை முன்வைத்திருந்தனர்.

இந்த நாடு சுதந்திரமடைவதற்கு முன்னர் தமிழ் மக்கள் சமஸ்டி ஆட்சியை வலியுறுத்தவில்லை. சமஸ்டி ஆட்சிமுறையை சிங்களவர்களே முதலில் விரும்பினர்.

சுதந்திரமடைந்ததன் பின்னர், இந்திய வம்சாவளி மலையகத் தமிழ் மக்களுக்கான குடியுரிமையும் வாக்குரிமையும் பறிக்கப்பட்ட போது, 1952ல் முதன் முதலாக திரு.செல்வநாயகத்தால் சமஸ்டிக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இவர் சமஸ்டிக் கட்சி ஒன்றை நிறுவினார். ஆனால் 1952ல் யாழ்ப்பாணத்தில் தேர்தலில் போட்டியிட்ட போது ஐக்கிய தேசியக் கட்சியின் திரு.எஸ்.நடேசனால் தோற்கடிக்கப்பட்டார். 1952ல் செல்வநாயகத்தின் பெடரல் கட்சியானது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இரண்டு ஆசனங்களை மட்டுமே வெல்ல முடிந்தது.

பெடரல் கட்சி ஆரம்பிக்கப்பட்ட பின்னரும் கூட, தமிழ் மக்கள் சமஸ்டித் தீர்வை ஆதரிக்கவில்லை. சுதந்திரமடைவதற்கு முன்னர் சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளும் இந்தநாட்டின் உத்தியோகபூர்வ மொழிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தன.   சிங்களம் மட்டும் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் 1956ல் நடாத்தப்பட்ட தேர்தலில் செல்வநாயகத்தின் பெடரல் கட்சி அதிக வெற்றி பெற்றது. ஆகவே சமஸ்டித் தீர்வை நோக்கி தமிழ் மக்களை உந்தியவர்கள் சிங்களத் தலைமைகளே ஆவர்.

உலகின் பல நாடுகளிலும் நடைமுறையிலுள்ள சமஸ்டி ஆட்சி முறையானது அரசியல் அதிகாரப் பகிர்விற்கு இடமளிக்கிறது. குறிப்பாக இந்தியா, நைஜீரியா, அவுஸ்திரேலியா, கனடா மற்றும் சுவிற்சர்லாந்து போன்ற பல்வேறு நாடுகளிலும் சமஸ்டி ஆட்சி வெற்றிகரமாக மேற்கொள்ளப்படுகிறது.

கேள்வி: ஆனால் காலம் மாறிவிட்டது. 30 ஆண்டு கால யுத்தத்தின் பின்னர், மக்கள் தற்போதும் சமஸ்டியை விரும்புகிறார்கள் என நீங்கள் கருதுகிறீர்களா?

பதில்: இதயசுத்தியுடனான அதிகாரப் பரவலாக்கலையே மக்கள் விரும்புகின்றனர். வடக்கு கிழக்கில் இது தொடர்பாக கருத்து வாக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.

பண்டாரநாயக்க-செல்வநாயகம் உடன்படிக்கை மற்றும் டட்லி-செல்வநாயகம் உடன்படிக்கை போன்றவற்றில் சமஸ்டி ஆட்சி ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1978 அரசியல் யாப்பின் கீழ் இது ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் சிறிலங்கா அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா ஆகியோரால் கைச்சாத்திடப்பட்ட இந்திய-இலங்கை உடன்படிக்கையில் சமஸ்டி ஆட்சி முறை ஏற்றுக்கொள்ளப்பட்டது. 13வது திருத்தச் சட்டத்திலும் இது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஆகவே இவற்றின் அடிப்படையில் வடக்கு மாகாண சபையும் சமஸ்டி ஆட்சி முறைமையைப் பரிந்துரைத்துள்ளது. ஒன்றிணைக்கப்பட்ட சிறிலங்காவிற்குள் தமிழ் மக்களுக்கான தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் என வடக்கு மாகாண சபை விரும்புகிறது. ஆகவே இதன் மூலம் இந்த நாட்டைக் கூறு போட வடக்கு மாகாண சபை விரும்பிவில்லை. ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட சமஸ்டி ஆட்சி முறைமையையே தற்போது இது மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

கேள்வி: இவ்வாறானதொரு பரிந்துரையானது பிரிவினையை ஏற்படுத்தும் என நீங்கள் கருதவில்லையா? ‘அதிகாரமளிக்கப்பட்ட தமிழர் பிரதிநிதிகள்’ என்ற வகையில், இது நாட்டின் இன ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் பாதிக்கும் என நீங்கள் கருதவில்லையா?

பதில்: இல்லை, நான் அவ்வாறு நினைக்கவில்லை. நல்லிணக்கம் மற்றும் நல்லெண்ணம் போன்றன மக்களுக்கு உண்மையை உரைப்பதன் மூலமும் தெளிவாக எடுத்துக்கூறுவதன் மூலமும் மட்டுமே கட்டியெழுப்பப்பட வேண்டும். மக்கள் உண்மையை அறிய வேண்டும். மற்றவர்களின் கட்டாயத்தின் பேரில் தமிழ் மக்கள் பரிந்துரைகளை மேற்கொள்வார்கள் என நீங்கள் எதிர்பார்க்க முடியாது. முரண்பாடுகள் நீக்கப்பட வேண்டுமாயின், இதற்கு அவசியமான அனைத்துப் பரிந்துரைகளையும் முன்வைப்பதற்கான உரிமையை தமிழ் மக்கள் கொண்டிருக்க வேண்டும். நாங்கள் எல்லோரும் ஒன்றிணைந்து பரிந்துரைகளை ஆராய்ந்து தீர்மானங்களை எடுக்க வேண்டும்.

கேள்வி: தமிழ் மக்களுக்கு இதயசுத்தியுடன் கூடிய தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் என ஒரு ஆண்டின் முன்னர் நாடாளுமன்றத்தில் கோரப்பட்டது. மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தின் கீழ் தமிழ் மக்கள் இத்தகையதொரு தீர்வைப் பெற்றுள்ளனர் என நீங்கள் கருதுகிறீர்களா?

பதில்: புதிய அரசாங்கம் பதவிக்கு வந்தபின்னர், திரு.மைத்திரிபால சிறிசேன 2015 ஜனவரி 09 அன்று அதிபராகப் பதவியேற்ற பின்னர், திரு.ரணில் விக்கிரமசிங்க 2015 ஆகஸ்ட்டில் பதவியேற்ற பின்னர், முன்னைய ஆட்சியை விட இந்த நாடானது பிறிதொரு பாதையை நோக்கி ஆட்சிசெய்யப்படுகிறது. அதாவது பல்மொழி, பல் கலாசார, பல்லின மக்கள் வாழும் சிறிலங்காவானது தற்போது ஒன்றிணைக்கப்பட்டுள்ளது. இதற்காக இன்னமும் பல கருமங்கள் ஆற்றப்பட வேண்டும். இதற்கான பயணம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

புதிய அரசியல் யாப்பானது இந்த நாட்டில் வாழும் மக்களின் தேவைகளைத் திருப்திப்படுத்த வேண்டும். புதிய அரசியல் யாப்பை வரைபவர்கள் மக்களின் இந்த நம்பிக்கையை வீணடிக்காது தனியொரு சிறிலங்காவில் அனைவரும் ஒன்றிணைந்து வாழ்வதற்கான வழியை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பைக் கொண்டுள்ளனர்.

இதுவே நாட்டில் இதயசுத்தியுடன் கூடியதொரு தீர்வு முன்வைக்கப்படுமா அல்லது இல்லையா என்பதற்கான ஒரு பிரதான பரீட்சார்த்தக்  களமாக அமையும்.

கேள்வி: வடக்கு கிழக்கில் இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்ட காணிகளை மீண்டும் அவற்றின் உரிமையாளர்களிடம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை புதிய அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. இது நாட்டின் அரசியலில் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்துவதாக நீங்கள் கருதுகிறீர்களா?

பதில்: இதற்கான பதிலை நான் ஏற்கனவே கூறிவிட்டேன் என நினைக்கிறேன். நீண்ட காலமாக மக்கள் வாழ்ந்த நிலங்கள் அவர்களது வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன. இதில் மக்களின் விவசாய நிலங்களும் உள்ளடங்குகின்றன. இது இந்த மக்களுக்கான வாழ்வாதாரத்திற்குத் தேவையான ஒன்றாகும். ஆனால் இந்த நிலங்கள் தற்போதும் சிறிலங்கா இராணுவத்தின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன.

இந்த நிலங்களில் சில இராணுவத்தினரால் தமது தனிப்பட்ட தேவைகளுக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன. சில நிலங்கள் பயன்படுத்தப்படாமலும் உள்ளன.

யுத்தம் முடிவடைந்து ஏழு ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது குறித்த சில மக்களே தமது காணிகளுக்குத் திரும்பிச் செல்ல முடிகிறது. இந்த நிலங்களை
அவர்களது உரிமையாளர்களிடம் வழங்குவதில் மேலும் தாமதங்கள் ஏற்படக் கூடாது. இது நாட்டின் நல்லிணக்கத்திற்கான அடிப்படைக் காரணியாக உள்ளது.

நன்றி புதினப்பலகை

No comments:

Post a Comment

Israel killed 23 Palestinians, injured 39 others across Gaza in the past 24 hours

《  By Nils Adler and Urooba Jamal 25 Dec 2024 Al Jazeera  》 Israel has killed at least 23 Palestinians and injured 39 others across Gaza in ...