SHARE

Thursday, April 28, 2016

நகுலன் கைது அம்மாவின் சாட்சியம்!


விடுதலைப் புலிகள் அமைப்பின் சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப் படைப் பிரிவின் தளபதி நகுலன், பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் (ரி.ஐ.டீ) யாழ்ப்பாணம்,நீர்வேலி பகுதியிலுள்ள அவரது தோட்டக் காணியில் வைத்து செவ்வாய்க்கிழமை (26-04-2016) கைது செய்யப்பட்டார். நகுலன் கைது செய்யப்பட்டமை தொடர்பில், அவரது அன்னை கணபதிப்பிள்ளை கண்மணியம்மா,வெளியிட்ட கருத்தறிக்கை.


‘1975ஆம் ஆண்டு பிறந்த எனது மகன், 1989ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்தார். அதன்பின்னர், அவருக்கும் எங்களுக்குமிடையில் எவ்விதத் தொடர்புகளும் இருக்கவில்லை. விடுதலைப் புலிகள் அமைப்பில் சார்ள்ஸ் அன்டனி சிறப்புப் படைப்பிரிவில் தளபதியாக இருந்ததாக அறிந்தோம். இந்நிலையில், அவர் உயிரிழந்துவிட்டதாக இராணுவம், 2007ஆம் ஆண்டு அறிவித்தது. ஆனால், விடுதலைப் புலிகள் அறிவிக்கவில்லை.
                                                                                 
யுத்தம் முடிவடைந்த பின்னர், நகுலன் உள்ளிட்ட தளபதிகள், இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டதாக, 2011ஆம் ஆண்டு காலப்பகுதியில் இராணுவம் மீண்டும் கூறியது. இதனையடுத்து நாங்கள், மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்தோம். „ஒருவரை இரண்டு முறை இறந்ததாக அறிவிக்கின்றனர். உண்மை நிலை என்ன என்று அறியவேண்டும்… எனக் கோரினோம். அதன்பின்னர், 2012ஆம் ஆண்டு காலப்பகுதியில், நகுலன் வெளிநாடு தப்பிச் செல்ல முற்பட்டபோது கடற்கரையில் வைத்து கைது செய்யப்பட்டதாக இராணுவம் கூறியது.

தொடர்ந்து, 2012ஆம் ஆண்டு மாவீரர் தினத்தன்று, எங்களை மட்டக்களப்பு வாருங்கள் என்று இராணுவத்தினர் அழைத்து, அங்குள்ள விடுதியில் எங்களைத் தங்க வைத்தனர். அங்கு மகனை அழைத்துவந்து, எங்களுடன் கதைக்க வைத்தனர். மகன் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவருக்குத் திருமணம் செய்து வைத்தால் விடுதலை செய்கின்றோம் எனவும் இராணுவத்தினர் எங்களுக்குக் கூறினர். அதற்கமைய நாங்கள், மகனுக்குப் பெண் தேடி, 2013ஆம் ஆண்டு, ஆசிரியை ஒருவருக்குத் திருணம் செய்து வைத்தோம்.

திருமணத்தில், இராணுவத்தினரும் பங்குபற்றினர். சிவில் உடையில் வந்தவர்கள், திருமண வீட்டுக்கான உதவிகளையும் செய்தனர். திருமணம் முடிந்து 15ஆவது நாள், மீண்டும் கைது செய்து அழைத்துச் சென்றனர். ஒரு மாதம் கழிந்ததன் பின்னர் அவரை விடுதலை செய்தனர்.

இதன்பின்னர், நீர்வேலி இராணுவ முகாமில் இருந்து வந்த ரவி, மோகன் என தங்களை அறிமுகப்படுத்திய இருவர், மகனுடன் தொடர்புகளைப் பேணினர். அவர்கள், எங்கள் வீட்டுக்கு வந்து, எங்களுடனும் நெருக்கமாகப் பழகினர். மகனை முகாமுக்குக் கூட்டிச் செல்வார்கள், பின்னர் கூட்டி வருவார்கள். தொந்தரவு என்று இல்லாமல் இருந்தார்கள். எனினும், முகாமுக்குச் சென்று வருவது தொடர்பில், மகன் எங்களுக்கு எதுவும் சொல்வதில்லை.

இந்நிலையில், கடந்த 25ஆம் திகதி திங்கட்கிழமை இரவு, வீட்டுக்கு முச்சக்கரவண்டியில் வந்த மூவர், மகன் தொடர்பில் விசாரித்தனர். மகன் எங்கே எனக் கேட்டனர். மகன், கிளிநொச்சியில் பூப்புனித நீராட்டு விழாவுக்குச் சென்றிருந்தார் எனக் கூறினோம். அவர்கள், மறுநாள் செவ்வாய்க்கிழமையும் வீட்டுக்கு வந்தனர். மகனைக் கேட்டனர். மகன் தோட்டத்தில் இருப்பதாகக் கூறினோம். தோட்டம் எங்கு இருக்கின்றது என்று கேட்டார்கள். வீட்டுக்குக் கூப்பிடுகின்றோம். இங்கு வைத்து விசாரித்துவிட்டுச் செல்லுங்கள்… என்று கூறி, தோட்டத்திலிருந்து மகனை வீட்டுக்கு அழைத்தோம்.

வீட்டுக்கு வந்த மகனை, முச்சக்கரவண்டியில் ஏற்ற முற்பட்டனர். நாங்கள் மறுப்புத் தெரிவிக்க, யாழ்ப்பாணத்திலுள்ள அலுவலகத்துக்குக் கூட்டிச் சென்று விசாரித்துவிட்டு விடுதலை செய்கின்றோம் என்று கூட்டிச் சென்றனர்.

தற்போது, வவுனியாவில் வைத்துள்ளதாக அறிகின்றோம். நீர்வேலி முகாமில் இருந்து வீட்டுக்கு வந்து செல்லும் ரவியிடம் தொடர்புகொண்டு, மகனைத் திரும்பப் பிடித்துவிட்டார்கள்… என்று சொன்னோம். அதற்கு அவர், அவனை ஒளிந்து இருக்கச் சொன்னேன். ஏன் ஒளிந்து இருக்கவில்லை?… என்று கேட்டார்.

ஆத்திரமடைந்த நான், புனர்வாழ்வு பெற்ற ஒருவர், ஏன் ஒளிக்க வேண்டும்? ஒளிவது என்றால் எத்தனை நாட்களுக்கு ஒளிந்து இருப்பது எனக் கேட்டேன். 
``விடுதலைப் புலிகள் அமைப்பின் அம்பாறை மாவட்டத் தளபதியான ராம் என அழைக்கப்படும் எதிர்மன்னசிங்கம் அரிச்சந்திரன் கைது செய்யப்படும் போது, நானும் கைது செய்யப்படுவேன் என நகுலன் எனக்குக் கூறினான்’ என அம்மா பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

How Nato is preparing for war in the Arctic

How Nato is preparing for war in the Arctic  Nordic nations hope US fixation on Greenland will spur alliance to catch up with years of Russi...