SHARE

Tuesday, April 19, 2016

ஈழத்தில்முகிழ்க்கும் நல்லிணக்க இலக்கியம்

புத்தரின் கண்ணீர் - சித்தாந்தன்


சமரசிங்க புத்தரின் சிலை முன்னால் கண்களை மூடிக்கொண்டு அமர்ந்திருந்தான். விகாரையின் வாசலில் ஓங்கி வளர்ந்திருந்த அரச 
மரத்தின்இலைகளின் சலசலப்பு கேட்டுக்கொண்டிருந்தது. கண்களை இறுக மூடிமனதை ஒருநிலைப்படுத்த முயன்றான். அவனின் கண்களுக்குள் ஆயிரமாயிரம் பிணங்கள் சிதறிக்கிடப்பதான பிரமை ஏற்பட்டது. பிணங்களுக்கிடையில் நின்று தன் மகன் பலமாக சிரிப்பது போலிருந்தது. அவனால் கண்களை மூடி மனதை ஒருநிலைப்படுத்த முடியவில்லை. துயரமும், அவமானமும் அவனது இதயத்தைப் பிளந்தன.

 புத்தரின் முகத்தை கூர்ந்து பார்த்தான். அந்த முகத்தில் விரிந்த கருணையும்கண்களின் நிர்மலமும் அவனை மேலும் மேலும் வதைத்தன. 
பகவானுக்குமுன்னே அமர்ந்து பிரார்த்திக்க தனக்கு தகுதி இல்லையென நினைத்துக்கொண்டான். எழுந்து விகாரையின் வாயிலை நோக்கி 
நடக்கத் தொடங்கினான். எதிரே விகாரையின் தேரர் வந்துகொண்டிருந்தார்.. சமரசிங்கவால் அவரின் முகத்தை நிமிர்ந்து பார்க்கக்கூட முடியவில்லை. ஊரெல்லாம் பரவிக்கிடக்கும் செய்தி அவரையும் எட்டியிருக்கும் என நம்பினான்.

 “என்ன சமரசிங்க கவனியாது போகிறாய்? எல்லாம் அறிஞ்சன் உன்ர மகன் செய்ததுக்கு நீ என்ன செய்வாய்” தேரர் ஆறுதல் கூறினார். 

அவனால் சமாதானம் கொள்ள முடியவில்லை. காலகாலமாய் இந்த விகாரையிலேயே கடமை செய்து வருகின்றவன்தான் சமரசிங்க. புத்தரின் 
பஞ்சசீலக் கொள்கையையே எப்போதும் கடைப்பிடித்து ஒழுகுபவன், தன் இரண்டு பிள்ளைகளையும் அதன் வழியிலேயே வளர்க்க வேண்டும் 
என்ற விருப்பை எப்போதும் கொண்டிருப்பவன். ஆனால்  எல்லாம் தலை கீழாகமாறி அவனது எண்ணமெல்லாம் நொருங்கி உடைந்து போயின. 

மூளையிலிருந்து முள்மரம் ஒன்று வளர்வதான வலி அவனுக்குள் எழுந்தது. விகாரையின் அரசமரத்தின் இலைகள் காற்றினால் சலசலத்தன. 

அது அவனை யாரோ கேலி செய்து கைகளைக் கொட்டிச் சிரிப்பதான எண்ணத்தை ஏற்படுத்தியது. அதற்குமேல் அவனால் அங்கு நிற்க 
முடியவில்லை. அவனை அறியாமலேயே அவனதுகால்கள் வேகமெடுத்தன.
புலிகள் அழிக்கப்பட்டார்கள் என்ற செய்தி எட்டிய போது சாதாரண சிங்கள மக்கள் அடைந்த மகிழ்ச்சியையே அவனும் அடைந்தான். புலிகளின் 
அழிப்பில் தன் மகனும் ஒரு படைவீரனாக பங்களித்ததில் அவனுடன் பெருமிதமும் ஒட்டிக்கொண்டது. தன் மகனைப்பார்த்து அவனை அணைத்து முத்தமிடவேண்டும் என்ற விருப்பும் அன்றெல்லாம் மேலிட்டன. தன் மகன் வீரன் வீரன் என தனக்குள் பலமுறையும் கூறிக்கூறி மகிழ்ந்திருந்தான். ஆனால் அந்தமகிழ்ச்சியும் பெருமிதமும் இப்படி உடைந்து போய்விடும் என அவன் நினைக்கவில்லை.

00

 மகன் சந்தன ஊரிலே நல்ல பிள்ளையென பேரெடுத்தவன். யாரோடும் சண்டை சச்சரவுகளுக்குப் போனதில்லை. ‘சமரசிங்க தன் மகனை நல்லா வளர்த்திருக்கிறான்’ என்ற பேச்சு ஊர்ச் சனங்களிடையே மிகுந்திருந்தது.

சந்தன க.பொ.த உயர்தரப் பரீட்டையில் தோற்றி பல்கலைக்கழகத்திற்கு தெரிவாக முடியாமல் இருந்தான். கடினமாகப் படித்தும் தன்னால் 
முடியவில்லையே என்ற வேதனையும் அவனுக்குள் குடிகொண்டிருந்தது. சமரசிங்க எல்லாவற்றையும் புரிந்தவனாய் மகனைதேற்றினான். 

“பரீட்சையில் சித்தியடையாவிட்டால் என்ன? எனது தோட்டம் இருக்கு விவசாயத்தைக் கவனி” என ஆறுதற்படுத்தினான். 

 பகல் நேரங்களில் தனது பொழுதை தோட்டத்திலேயே சந்தன போக்கினான்.தந்தையுடன் சேர்ந்து மரக்கறிகளைப் பிடுங்குவது, சந்தைக்கு 
கொண்டுசெல்வது என எல்லாவற்றிலும் உதவினான். தங்கை புஸ்பவதியை தன்சைக்கிளிலேயே பாடசாலைக்கு ஏற்றிச் செல்வதும் கூட்டிவருவதும் என அவனுக்கு வேலைகள் பல இருந்தன.

 சந்தன பகல் பொழுதுகள் போக மாலை வேளையில் பாடசாலை மைதானத்தில் நண்பர்களுடன் கிறிக்கெட் விளையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தான். கிறிக்கெட் வீரர்களில் அவனுக்கு முரளிதரனையே அதிகமும் பிடித்திருந்தது. முரளியின் பந்துவீச்சால்த்தான் இலங்கை அணிசிறப்பாக வெற்றிகளைப் பெறுகிறது என்ற அபிப்பிராயம் அவனுக்கு இருந்தது. தன் நண்பர்களைப் போல் மகல ஜெயவர்த்தனவையோ, சங்கக்காராவையோ அவனால் கொண்டாட முடியாமல் இருந்தது. தன்பாடசாலை நாட்களில் தானும் ஒரு சுழற்பந்து வீச்சாளனாகப் பிரகாசிக்கவேண்டும் என நினைத்தான் ஆனால் அவனது ஊர்ப் பாடசாலையில் கிறிக்கெட் அணி இருக்கவில்லை. உயர்தரப் 
படிப்பிற்காக நகரப்பாடசாலைக்குச் சென்ற போதும் அவனுக்குச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.என்றபோதும் மாலை வேளைகளில் விளையாடும் போது முரளியைப்போலவே தான் பந்த வீசுவதாக பெருமையாக நினைத்துக் கொள்வான்.

அன்று மதியம் சந்தன வீடு வந்த போது அவனுடைய கண்கள் சிவந்திருந்தன.முகம் வறண்டு போய்க் கிடந்தது. தனியாக வீட்டின் 
தாழ்வாரத்திலிருந்து யோசித்துக்கொண்டிருந்தான். தாய் குசுமாவதி அவனை சாப்பிடஅழைத்தபோதும் அவன் அதைப்பொருட்படுத்தியதாகத் 
தெரியவில்லை.சமரசிங்கதான் “என்ன மகன் ஒரு மாதிரி இருக்கிறாய்” எனக் கேட்டான்.

சந்தன தந்தையைக் கூர்ந்து பார்த்தவனாக “நீங்கள் இண்டைக்கு காலையில் நடந்தது பற்றி கேள்விப்படவில்லையா?” என்றான்

“என்ன மகன் நடந்தது”

 “அப்பா புலிகள் குண்டு வைச்சு சனங்களைக் கொண்டுபோட்டாங்கள். 60சனத்துக்கு மேல செத்துப்போட்டுதுகள். பஸ்ஸில்தான் குண்டுவைச்சவங்களாம்.”

 சமரசிங்கவின் மனம் துயரத்தில் சிக்கியது. “அப்பாவிச் சனங்கள்” அவனை அறியாமலேயே அவனது உதடுகள் கூறின.

 ‘ஏன் எல்லோரும் சனங்களை குறி வைக்கின்றார்கள்?’ இராணுவத்தின் எறிகணை வீச்சுக்களிலும் விமானத்தாக்குதலிலும் தமிழ்ச் சனங்கள் 
கொல்லப்படும் போதும் சமரசிங்க இவ்வாறு நினைப்பதுண்டு. தமிழ்ச்சனங்கள் என்ன சிங்களச் சனங்கள் என்ன எல்லோரும் மனிதர்கள் சமரசிங்காவால் யுத்தம் புரிபவர்கள் ஏன் பலசமயங்களில் கோழைகளாகிவிடுகின்றனர் என்பதைப் புரியமுடியாமலிருந்தது.

 மகனைப் பார்த்தார். அவன் சிந்தனையின் ஆழத்துக்குள் புதைந்து போனதை அவனது அசைவற்ற வெறித்த பார்வையே தெளிவாக்கியது.

“மகனே” என அழைத்தான். அவன் தன் வெறித்த கண்களால் அவரைப்பார்த்தான். “எப்படி மகன் உனக்குத் தெரியும்?” 

 “பண்டாவின் வீட்டுக்குப் போனனான் ரூபவாஹினியில் பார்த்தனான். குழந்தைகள் எல்லாம் செத்துப் போய்க் கிடக்குதுகள்”

சந்தனவின் குரல் அடைத்துக் கொண்டது. அதற்குமேல் அவனால் எதுவும்பேசமுடியவில்லை. சற்று நேர மௌனத்திற்குப் பின் “அப்பா 
நான்இராணுவத்தில் சேரப்போறன்” என்றான்.

 சமரசிங்க அதிர்ந்து போனான். அவனிடமிருந்து அந்த வார்த்தைகளை அவன் எதிர்பாக்கவில்லை.

“என்ன மகன் கதைக்கிறாய்”

 “இல்லை அப்பா புலிகளை அழிக்க வேணும்”

 சமரசிங்க புத்தரின் பஞ்சசீலகக் கொள்கைகளை ஞாபகப்படுத்தினான். கொல்லாமை பற்றி அழுத்திக் கூறினான்;. எதிரியைக் கூட கொல்வது 
பாவம் எனச் சொன்னான். தன் குடும்ப நிலையை எடுத்துச் சொல்லி எங்கள் குடும்பத்தின் முதுகெலும்பு நீதான் என்றான்;. கொன்றவனைக் கொல்வது பௌத்த தர்மமல்ல என்றான்;. இராணுவமும் தமிழ்ச்சனங்களை கொன்று குவிப்பதைச் சொன்னான்;. ஆனால் சந்தனவின் மனம் எதையும் ஏற்றுக்கொள்வதாயில்லை.

“நான் சனங்களைக் கொல்லப் போகல. புலிகளைத்தான் அழிக்கப் போறன்”அவனது குரல் உறுதியாக ஒலித்தது.

 மகனின் பிடிவாதத்தின் முன்னால் சமரசிங்கவால் எதுவும் செய்யமுடியவில்லை. குசுமாவதி கண்ணீர் விட்டுக் கதறினாள். புஸ்பகுமாரி 
தன்அளவற்ற அன்பினால் அவனது மனதை மாற்ற முயன்றாள். எல்லாமேபயனற்றுப்போயின.

00

ஒரு திங்கட்கிழமை சந்தன இராணுவத்தில் சேரப் புறப்பட்டான். தாயும்தங்கையும் கண்ணீருடன் வழியனுப்பினர். சமரசிங்க அவனை 
முகாமில்கொண்டுபோய்விடத் துணையாகச் சென்றான்.

 சந்தன இராணுவத்தில் சோ்ந்து இரண்டு மாதங்களின் பின்னர் அவனிடமிருந்து ஒரு கடிதம் வந்திருந்தது. குசுமாவதி மகிழ்ந்தாள். கடிதம்வந்த செய்தியை வயலில் நின்ற தன் கணவனுக்கு தொpவிக்க அயல் வீட்டில்வசிக்கும் குமுதுவை அனுப்பினாள்.

 சமரசிங்க ஆவலுடன் கடிதத்தை வாசித்தான்.தான் அனுராதபுரம் பயிற்சி முகாமில் பயிற்சி பெறுவதாகவும் இன்னும் இரண்டு மாதங்களில் பயிற்சி முடிந்துவிடும் என்றும், தான் பெரும்பாலும் வன்னிக்குத்தான் கடமைக்கு அனுப்பப்படலாம் எனவும் அதில் எழுதியிருந்தான்.

சமரசிங்க கடிதத்தை மடித்து மனைவியிடம் கொடுத்தான். அவனதுகண்களில் கண்ணீர்த்துளிகள் திரண்டன. அவன் எதுவுமே பேசவில்லை.விகாரையை நோக்கி நடந்தான். இதயத்தில் நாளங்கள் இறுகி புடைப்பதாய் உணர்ந்தான்.

 புத்த பகவான் முன் அமர்ந்திருந்து மகனுக்காக பிரார்த்தித்தான். மகனைஎந்த நேரத்திலும் துணையாக இருந்த காப்பாற்றும்படி வேண்டினான்.வன்னிப் போர்க்களம் பற்றியும் அதன் பயங்கரம் பற்றியும் அவன் அறிந்திருந்தான். புலிகளின் சூட்சுமமான போரிடும் திறனால் அமைந்திருப்பதே வன்னிக்களம் என அவனுக்குத் தெரிந்திருந்தது. வன்னியில் நடைபெற்ற போர்கள் அனேகமானவற்றில் இராணுவம் தோற்றுப்போய் இருக்கின்றது என்பதும் சமரசிங்கவிற்கு தெரிந்திருந்தது.

சந்தன சீருடை அணிந்து துப்பாக்கி சகிதம் மிடுக்கோடு நடந்துவரும் காட்சியை ஒரு முறை கற்பனை செய்து பார்த்தான். ‘அவன் வீரன். 

டென்சில் கொப்பேகடுவ போல போற்றப்படும் இராணுவ வீரனாக உயர்ந்து தனக்கும்தன் ஊருக்கும் பெருமைதேடிக் கொடுப்பான்’ என நினைத்தான். அவ்வப்போது ஊருக்கு வரும் இராணுவ வீரர்களிடம் தன் மகனின் நிலைமைகளைப் பற்றி விசாரிப்பான். அவர்கள் யாருமே அவனைக் கண்டதில்லை என்றே சொல்லியிருக்கின்றனர். புதிதாகச் சேர்ந்த இராணுவவீரர்களுக்கு உடனடியாக லீவு கொடுக்க மாட்டார்கள் என்ற தகவல்களையும் அவர்கள் மூலம் அறிந்துகொண்டான். எப்படியும் ஒரு வருடத்திற்குப் பின்தான் லீவு சாத்தியம் என்பதும் அவர்கள் மூலம் 
அறிந்ததுதான்.

 கிட்டத்தட்ட ஆறு மாதங்களின் பின் சந்தனவிடமிருந்து தொலைபேசி அழைப்பக் கிட்டியது. தான் வன்னியில் வவுனியா முன்னரங்கில் 52ஆவது 
டிவிசனில் இருப்பதாகவும் சொன்னான். சமரசிங்க மகனின் குரலில் மகிழ்ந்தார். எனினும் போர் உக்கிரமாக நடைபெறக்கூடிய இடத்தில் நிற்பது 
அவருக்கு மன வேதனையைக் கொடுத்தது.

குசுமாவதி அழுதேவிட்டாள். சந்தன தனக்கு ஒன்றும் ஆகாது இன்னும் சிலமாதங்களில் தான் லீவு பெற்று வரக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் 
கூறினான்.

தங்கை புஸ்பகுமாரியுடன் கதைக்க விரும்பினான். அவள் பாடசாலை சென்றிருந்ததால் சாத்தியம் இல்லாது போயிற்று.

தந்தையின் வங்கிக்கணக்கு இலக்கத்தைப் பெற்றுக்கொண்டான். இனிதன்னால் கிரமமாக சம்பளப் பணத்தை அனுப்ப முடியும் என்றான். 
தங்கைக்கு ஒரு புதுச்சைக்கிள் வாங்கிக் கொடுக்கும்படி தந்தையிடம் கூறினான்.

மகன் பற்றி எந்த தகவல்களையும் அறிய முடியாதிருந்த சமரசிங்கவிற்கும் குசுமாவதிக்கும் தொலைபேசியில் அவனோடு கதைக்க முடிந்தது 
ஆறுதலாக இருந்தது. சமரசிங்க புத்த பகவானிற்கு நன்றி தெரிவித்தான். வீட்டின்முன்புறத்தில் பூத்திருந்த பூக்களில் சிலவற்றைப் பறித்துக்கொண்டு விகாரையை நோக்கிச் சென்றான். விகாரையின் வாசலில் தேரர் நின்றார்.

“என்ன சமரசிங்க இந்த நேரத்தில” என்று தேரர் கேட்டார்.

சமரசிங்க வழமையாக காலையும் மாலையுமே விகாரைக்குச் செல்வதுண்டு. அன்று அவன் மதிய வேளை வந்திருப்பது அவரை அவ்வாறு கேட்க வைத்தது.

சமரசிங்க தன் மகனிடமிருந்து தொலைபேசி அழைப்புக்கிடைத்ததைத் தெரிவித்தான். தேரர், அவனுடைய நிலைமை தொடர்பாக 
கேட்டறிந்ததோடு சமரசிங்கவை கவலைப்படாது இருக்கும்படியும் புத்தபகவானின் ஆசி எப்போதும் சந்தனவுக்கு இருக்கும் என்றும் 
தெரிவித்தார்.

சமரசிங்க புத்த பகவானின் முன் அமர்ந்தான். அவருடைய கண்களின் திவ்விய ஒளி தன்னில் படர்வதாய் உணர்ந்தான். கண்களை மூடிப் பிரார்த்தித்தான். அவன் உள்ளம் சாந்தியடைந்தது.

 00

 அரசு புலிகளுக்கு எதிரான போரை வன்னியில் ஆரம்பித்தது. படைகள் மூர்க்கமாகப் போர் புரிந்தன. புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பெருமளவு 
பிரதேசங்கள் படையினரிடம் வீழ்ந்துகொண்டிருந்தன. மக்கள் இடம்பெயர்ந்து கொண்டிருந்தார்கள். துயரமும் அவலமும், 

எறிகணைகளும்,துப்பாக்கி றவைகளும் சனங்களைத் துரத்திக் கொண்டிருந்தன. புலிகள் பின்வாங்கிக்கொண்டிருந்தனர். படையினர் 
சடுதியாக முன்னேறினர்..சிங்கள மக்கள் வெற்றிக்களிப்பில் மிதந்து கொண்டிருந்தனர்.

படையினரின் வெற்றிச் செய்தியால் தென்பகுதி அலங்காரம் பூண்டது. சமரசிங்க தன் மகன் யுத்தத்தில் ஈடுபடுகிறான் என்பதைப் புரிந்துகொண்டான். யுத்தத்தில் அவனது உயிருக்கு எந்த ஆபத்தும் நேர்ந்துவிடக்கூடாது என பகவானிடம் மன்றாடினான். புலிகளை அழிப்பதற்கான போராக இது அரசால் பிரகடனப்படுத்தப்பட்ட போதும் யுத்தத்தில் தமிழ்ச்சனங்கள் இழப்புக்களாலும், துயரத்தாலும் வலியுறுவார்கள் என்பதை நினைக்கும் போது அவனது இதயத்தில் வலி படர்ந்தது.

 யுத்தத்திற்கு அப்பால் இன முரண்பாட்டை நீக்க மாற்று வழிமுறைகளை இந்தமுப்பது வருட போர் அனுபவம் கற்றுத்தராதிருப்பது வேதனையாகப்பட்டது.ஒரு நாட்டுக்குள் இரண்டு நாடுகளுக்கிடையிலான போர். தமிழ் மக்கள் நிலத்தால் மட்டுமல்ல தமது இதயத்தாலும் பிரிந்தே கிடக்கிறார்கள். இந்தயுத்தம் மேலும் மேலும் பிளவைப் பெரிதாக்குமே தவிர காயத்தினைத் தீர்க்கும்மருந்தாக அமையாது என்பதை சமரசிங்க நன்றாகவே புரிந்திருந்தான்.

எப்படியோ இந்தப் போர் முடிந்துவிட வேண்டும் என்பது அவனது பிரார்த்தனையாகவும் இருந்தது. இராணுவ வீரர்களுக்கு மட்டுமல்ல புலிகளுக்கும் தாய் தந்தையர் உள்ளனர். அவர்களும் தன்னைப் போலவேதங்கள் கடவுளர்களிடம் பிரார்த்திப்பார்கள். ஒரு கட்டத்தில் 
யுத்தத்தை நடத்துபவர்களின் மீதுதான் அவனுக்கு கோபம் எழுந்தது.

 உக்கிரமாக நடைபெற்ற போர் முள்ளிவாய்க்காலுடன் முடிவடைந்தது. புலிகள் தோற்கடிக்கப்பட்டார்கள் என்ற செய்தி அரசால் அறிவிக்கப்பட்ட 
போது சிங்கள மக்கள் அதை பெரும் எடுப்பில் கொண்டாடினர். சமரசிங்கவின் ஊரில் வெற்றியின் ஆரவாரங்கள் எதிரொலித்தன. 

படைவீரர்களின் பெற்றோர்கள் ஊரவர்களால் கௌரவப்படுத்தப்பட்டனர். ஆனால் சமரசிங்கவால் அந்த வெற்றி நிகழ்வுகளில் கலந்து கொள்ள 
முடியவில்லை.

‘நம்மை நாமே வென்றோம். நம்மை நாமே தோற்கடித்தோம்’ என்ற எண்ணமே அவனுக்குள் இருந்தது. தமிழ்ச் சனங்கள் அகதி முகாம்களில் வாழ்வதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்துகொண்டிருந்தன. புலிகளை அழித்ததில் தன் மகனுக்குப் பங்குண்டு என்றால் சனங்களை அகதி வாழ்வுக்குள் தள்ளியதிலும் தன் மகனுக்கு பங்குண்டு எனவும் கருதினான்.ஆயினும் தன் மகன் வெற்றியின் பங்காளியாக உள்ளதை 
ஊரவர்கள் வியந்துபேசும்போது அவனுக்கு உள்ளூர சந்தோசம் பெருகியபடி இருந்தது.

 மாலை விகாரைக்குச் சென்றான். விகாரை முழுவதும் சனங்களால் நிறைந்திருந்தது. புத்தபகவானின் முன் மலர்கள் குவிந்து கிடந்தன. தீபங்கள் 
ஒளிர்ந்தன. தன்னைப் போலவே தங்கள் பிள்ளைகளை யுத்தத்தில் காப்பாற்றியதற்காக பகவானுக்கு நன்றி செலுத்த அவர்கள் எல்லோரும் வந்திருக்கலாம் என  நினைத்தான். புத்த பகவானின் முன் அமர்ந்துகண்களை மூடிப் பிரார்த்தித்தான். அவருக்கு நன்றிகளைத் தெரிவித்தான்.

போர் முடிந்து இரண்டு வாரங்களின் பின் சந்தனவிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. தான் முல்லைத்தீவில் நிற்பதாகவும் தங்கள் 52ஆவது டிவிசன்தான் போரின் முடிவுக்கு முக்கிய பங்களிப்புச் செய்தது எனவும் தன்தந்தையிடம் கூறினான்.

“எப்ப மகன் வீட்டிற்கு வருவாய்” என்று சமரசிங்க கேட்டான். அவனுக்கு மகனின் குரலைக் கேட்ட பின்னர் அவனைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது.

 “இன்னும் பத்துப் பதினைந்து நாட்களில் லீவு கிடைக்கும் அப்ப வருவன். நிறைய கதைகளெல்லாம் என்னட்ட இருக்கு எல்லாத்தையும் சொல்ல 
வேணும் எதுக்கும் வீட்ட வந்து சொல்லுறன்”

மகனின் ஆர்வத்தையும் மகிழ்ச்சியையும் சமரசிங்க புரிந்து கொண்டான்.
அவனின் வரவிற்காக காத்திருந்தான்.

போர் முடிந்து, வெற்றியின் மாயையில் அரசும் படையும் மூழ்கியிருந்த வேளையில்த்தான் போர்க்குற்றம் பற்றிய பேச்சுக்கள் சர்வதேச நாடுகளில் இருந்து எழத்தொடங்கின. அரசு பல நிலைகளிலும் நெருக்கடிகளைச்சந்திக்கத் தொடங்கியது.

சிங்கள மக்களிடையேயும் இறுதிப்போர் பற்றிய பல்வேறு வீடியோக் காட்சிகளும், படங்களும் உலாவின. களத்தில் நின்ற இராணுவத்தால் 
கைத்தொலைபேசிகளால் பிடிக்கப்பட்ட வீடியோக்களும், படங்களும் அவை.

இளைஞர்கள், யுவதிகள், முதியோர்கள் என யாவரும் தங்கள் படையினரின் சாகசங்களையும் பார்த்து மகிழத் தொடங்கினர். புலிகள் அழிக்கப்பட்ட செய்தியை விடவும் இந்த வீடியோக்கள் தான் விரைவாகப் பரவின. மனிதாபிமானிகள் பலரும் வீடியோக்காட்சிகளின் கோரத்தையும், வன்மத்தையும் கண்டு வெறுப்புற்றனர்.

யுத்தம் முடிந்து ஐந்தாவது நாள் சமரசிங்க காலையில் தோட்டத்து மரக்கறிகளைச் சந்தையில் கொடுத்துவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தபோது பண்டாவின் தந்தை அளுத்கமே அவனை வீதியில் மறித்தான்.சமரசிங்க “என்ன விசயம் அளுத்கமே” என்றான்.

 “சமரசிங்க உங்கட மகன் பெரிய வீரன்தான் அவனைப்பற்றி ஊரெல்லாம் புகழ்கிறார்கள்” சமரசிங்கவின் உள்ளத்தில் ஒருவித மகிழ்ச்சி பரவித்  திளைத்தது.

 “ஏன் அளுத்கமே” என்றான் சமரசிங்க.

 “சண்டைக் களத்தில உங்கட மகன் செய்த சாகசங்களை காட்டுற வீடியோப்படத்தை என்ர மகன்ர போன்ல பார்த்தனான்” என்றான்.

 சமரசிங்கவுக்கு அளுத்கமேவின் வார்த்தைகள் பேரானந்தத்தை ஏற்படுத்தின.மனதில் பெருகிய ஆர்வத்துடன் “மகன் வீட்டில் நிற்கிறானா” 
எனஅளுத்கமேவிடம் விசாரித்தான்.

“அவன் வீட்டதான் நிற்கிறான்”

என்றதும் சமரசிங்க அளுத்கமேவின் வீட்டை நோக்கி சைக்கிளை மிதித்தான்.தன் மனதுக்குள் ‘மகன் டென்சில் கொப்பேகடுவ போல 
பெரியாளா வருவான்’என  சொல்லிக் கொண்டான்.

 அளுத்கமேயின் வீட்டின் வாயிலை அடைந்ததுமே பண்டா……. பண்டா…….. எனகுரல் கொடுத்தான்.

 பண்டா அவரின் வருகைக்கான காரணத்தை உணர்ந்தது போல தன்கைத்தொலைபேசியுடன் வெளியே வந்தான்.

 “என்ன அங்கிள் அப்பா எதுவும் சொன்னவரோ”

“ஓம் தம்பி அந்த வீடியோக்களை பார்ப்பம்”

 சமரசிங்கவின் உள்ளத்தில் பெருகிய ஆர்வத்தை உணர்ந்தவனாய் தன் கைத்தொலைபேசியிலிருந்த காட்சிகளைக் காட்டினான்.

 சந்தன போர்க்களத்தில் வெற்றிக் களிப்போடு தன் நண்பர்களுடன் குதூகலிக்கும் காட்சிகள் அதில் பதிவாக்கப்பட்டிருந்தன. 

அவர்களுக்குப்பின்னால் உடைந்து நொருங்கிய கட்டடங்களும் எரிந்துபோன நிலங்களும்ஆங்காங்கே கிளைகள் முறிந்த மொட்டை மரங்களும்  காணப்பட்டன.அவற்றினைக் கொண்டே யுத்தத்தின் தீவிரத்தை சமரசிங்கஉணர்ந்துகொண்டான். தன் மகனை புத்த பகவான் தான் காப்பாற்றியிருக்கிறார் என மனதுள் பிரார்த்தித்தான்.

 வீடியோக் காட்சிகளைப் பார்த்து திளைத்துக் கொண்டிருந்தவனுக்கு அடுத்துவந்த காட்சிகள் நெஞ்சைப் பிளப்பது போலிருந்தன. 

நிர்வாணமாக்கப்பட்ட ஐந்தாறு பெண்ணுடல்களை சக இராணுவத்தினர் சூழ்ந்த நிற்க சந்தன ஒரு பெண்ணின் பிறப்புறுப்பில் சப்பாத்துக் காலால் மிதித்தவாறு எதையோ சொல்லவும் சூழ்ந்து நிற்கும் சக வீரர்கள் பலமாகச் சிரிப்பதாகவும் காணப்பட்டது. 

அக்கணம் சந்தனவின் முகத்தில் குரூரத்தின் சாயல் படிந்திருப்பதைப் பார்த்தான்.

சமரசிங்கவால் அதற்கு மேல் அந்தக் காட்சியின் கோரத்தையும், வன்மத்தையும் பார்த்துக்கொள்ள முடியவில்லை. 

தலை சுற்றுவது போலிருந்தது. பண்டாவின் கைகளைப் பிடித்து காட்சிகளை நிறுத்தும்படி செய்தான். தலையை கைகளால் அழுத்தியவாறு சில நிமிடங்கள் அப்படியே இருந்தான்;. அவரால் எதுவும் பேசமுடியவில்லை.உணர்சிகள் யாவும் நூலிழைகளாகப் பிரிந்து தன் உடல் முழுமையும் வலைபோலப் படர்வதாக உணர்ந்தான். நாவிலிருந்து வார்த்தைகள் திரவக்குழம்பாகி இதயத்தினுள் இறங்குவதான பிரமை அவனைப் பற்றிக்கொண்டது. காற்றில் மிதக்கும் சருகைப் போல தடுமாறியவனாக எழுந்துசென்று சைக்கிளை எடுத்துக்கொண்டு புறப்பட்டான்;.

வீடு வந்ததும் சைக்கிளை முற்றத்தில் நின்ற வேப்பமரத்தோடு சாத்தி விட்டுவிறாந்தையில் இருந்த கதிரையில் சாய்ந்து கொண்டான்;. 

குசுமாவதிகொண்டு வந்து வைத்த தேநீரைக் கூட அவனது மனம்  பருக ஒப்பவில்லை.விறைத்துப்போன பிணமாகக் சரிந்துகிடந்தான். அவனது 
எண்ணங்கள் சிறகொடுங்கி தலைகுப்பிற விழும் பறவைபோல அந்தக் காட்சிகளிலேயே மீண்டும் மீண்டும் விழுந்தபடியிருந்தது. வெற்றியின் 
களிப்பில் விரிந்து கிடந்த மனம் அவமானத்தின் சிலுவையில் அறையப்பட்டிருப்பது போன்றதான உணர்வு எழுந்தது.

சந்தனவா இவ்வாறு வன்மம் கொண்டாடுகிறான்?. அவரால் அதை நம்பமுடியவில்லை. புத்தரின் பஞ்சசீலக் கொள்கைகள் அனைத்தும் 
ஞாபகங்களில் மிதந்து மிதந்து அவனை அலைக்களித்தன. சிறுவயதிலிருந்து அவனுக்குள் ஊட்டி வளர்த்த அகிம்சை, அறம், கருணையெல்லாம் காற்றில் வாலறுந்த பட்டங்களாய் அவரது மூளைக்குள் சுழன்றடித்தன. சாந்தமேயுருவான புத்தபகவானை நினைத்தான். அவரின் கண்களிலிருந்து குருதி வழிவது போன்ற பிரமை ஏற்பட்டது. கடவுளின் முன் தான் ஒரு குற்றவாளியாகிவிட்டதாய் உணர்ந்தான். 

அவனுடைய புலன்கள் சுருங்கின.இரத்த நாளங்கள் உறைந்து போனவனாக அசைவற்று வராந்தாவின்முகட்டையே வெறித்தபடி இருந்தான்.

 புஸ்பகுமாரி படலையைத் திறந்துகொண்டு வளவுக்குள் நுழைந்தாள். காலையில் ரியூசன் சென்றபோது முற்றத்து மல்லிகை போல மலர்ந்திருந்த அவளது முகம் சிவந்துபோயிருந்தது. கண்களில் நீரும் விம்மலும், விசும்பலுமாய் குசுனிக்குள் நுழைந்தவள் தாயைக் கட்டிக்கொண்டு குரலெடுத்து  அழுதாள்.

 “என்ன மகள் நடந்தது” என குசுமாவதி பதற்றத்துடன் கேட்டாள்.

 “அண்ணா …….” என சொல்லியவாறு தன் வகுப்புத்தோழி மெனிக்காவின் கைத்தொலைபேசியில் பார்த்த காட்சிகளை விபரித்தாள். 

குசுமாவதிஅதிர்ந்து போனவளாய் குசுனிச் சுவருடன் சாய்ந்து கொண்டாள். குசுனிமுழுமையும் சிரிப்பொலிகள் சுவரில் மோதி மோதி எதிரொலிப்பது போல்இருந்தன. புஸ்பகுமாரி தாயின் மடியில் முகம் புதைத்து விம்மினாள்.
வீடே நிசப்தத்தில் உறைந்து கிடந்தது.

சமரசிங்கவால் அந்த நிசப்தத்தை தாங்க முடியவில்லை. அவனை யாரோசுவரோடு தள்ளி முகத்தை தேய்ப்பதாய் உணர்ந்தான். மனைவி 
காலையில் கொண்டுவந்து வைத்த தேநீர்க் கோப்பையின் விளிம்பில் எறும்புகள் ஊர்ந்துகொண்டிருந்தன. எழுந்தவன் படலையைத்திறந்து 

விகாரையைநோக்கி நடக்கத் தொடங்கினான். கைளில் பூக்களில்லை. முகத்தில் இரவின் கருமை ஒட்டிக் கிடந்தது.

 00

 இரவு எட்டு மணியிருக்கும். துயரத்தின் ஆழ்ந்த இருளில் மூழ்கிக் கிடந்த வீட்டின் நிசப்தத்தைக் குலைப்பதாய் சமரசிங்கவின் தொலைபேசி 
ஒலித்தது.அதன் ஒலி சாவுகாலத்தின் ஓலம் போல அந்தக் கணங்களை அதிரவைத்தது.மெல்ல எழுந்து சென்று தொலைபேசியைக் கையிலெடுத்து “ஹலோ”என்றான். மறுமுனையில் சந்தன.
“அப்பா லீவு கிடைச்சு வீட்ட வந்துகொண்டிருக்கிறன். எப்படியும் விடிய எட்டு மணிக்கிடையில் வீட்ட வந்துவிடுவேன்”

சமரசிங்கவால் எதுவும் பேச முடியவில்லை. வெறுமனே “ஓம்” என்றவன்; தொலைபேசியைத் துண்டித்துக் கொண்டான்.

இரவு முழுமையும்; அவனால் தூங்க முடியவில்லை. வீட்டின் விறாந்தையில் வந்த அமர்ந்துகொண்டான். பொழுதுகள் நகர்ந்து ஊர்ந்து ஊர்ந்து 
செல்வதாக உணர்ந்தான். வானத்தில் நட்சத்திரங்கள் வற்றத் தொடங்கியிருந்தன.கண்களை மூடி அனற்படலமொன்று ஒரு செடியைப் போல வளரத் தொடங்கியிருந்தது. வீட்டுக்கும் படலைக்குமான தூரம் நீண்டால்என்ன? மகனை எப்படி எதிர்கொள்வது. ஒரு கொலைகாரனை 
எதிர்கொள்ளும் பதட்டம் அவனுள் தொற்றிக் கொண்டது.

பொழுது விடிந்து காலை 08.30 மணியாகியிருந்தது. வீட்டுப் படலையில் ஓட்டோ ஒன்று வந்து நின்றது. சற்று நிமிடத்தின் பின் சந்தன, கனத்த பை 
ஒன்றினை தோளில் சுமந்தபடி படலையைத் திறந்துகொண்டு வந்தான். சமரசிங்க தன் முகத்தில் லேசான ஒரு புன்னகை முயன்று 
வரவழைத்துக் கொண்டான். அவனுடைய உதடுகளுக்குள்ளிருந்து வார்தைகள் சறுக்கிதொண்டைக் குழிக்குள் தேங்கின.

சந்தன விறாந்தையில் பையை வைத்துவிட்டு தூணோடு சாய்ந்து அமர்ந்து கொண்டு தாயை அழைத்தான்.

குசுமாவதி குசுனிக்குள் இருந்து வாசலுக்கு வந்தாள்;. “எப்படி மகன் இருக்கிறாய்” என்றவளின் உதடுகள் மறுகணம் வெடித்து உதிர்வது 
போல விம்மிக் கொண்டன.  அவனின் பதிலைக்கூட எதிர்பார்க்காதவளாய் திரும்பவும் குசினிக்குள் நுழைந்தாள்.

 சமரசிங்க எழுந்து தோட்டத்தை நோக்கிச் சென்றான்.

 சந்தன பல முறை அழைத்துங்கூட புஸ்பகுமாரி வெளியில் வரவில்லை. கதவை உட்புறமாக தாழிட்டுக் கொண்டு அறைக்குள் அடைந்து கொண்டாள்.அவளது மனம் அவனின் முகத்தைக் கூட பார்க்க விரும்பவில்லை. அவளது நினைவில் நிர்வாணமாகக் கிடந்த பெண்களின் உடல்களும் சந்தனவின்சிரிப்பும் மட்டுமே மீண்டும் மீண்டும் வந்து கொண்டிருந்தன. அவனை அண்ணா என அன்போடு ஓடிவந்த கட்டிக் கொள்ள அவளால் முடியவில்லை.ஒரு அன்னியன் போலவே அவனை உணர்ந்தாள். பிணங்களின் நடுவில் மோந்து கொண்டு திரியும் ஒரு கொடூர மிருகமே அவனாக அங்குவந்திருப்பதான உணர்வு அவளை அச்சப்படுத்தியபடி இருந்தது.

 சந்தனவால் எதையும் புரிந்துகொள்ள முடியவில்லை. எழுந்து உடைகளை எடுத்துக்கொண்டு கிணற்றடி நோக்கிச் சென்றான். பயணக்களைப்பு தீரும் வரை குளித்தான். அவர்களின் அன்னியத்தனம் அவனை மிகவும்வதைத்தது. குளித்து முடித்து விட்டு வீட்டுக்கூடத்திற்கு வந்தான். காலை உணவு  வைக்கப்பட்டிருந்தது. வீட்டில் தங்கையின்  நடமாட்டமே காணப்படவில்லை. வீட்டினுள் கவிந்திருக்கும் அந்தப் புதிரினை அவனால் அவிழ்க்க முடியவில்லை. செம்பை எடுத்து கைகளைக் கழுவிக்கொண்டான்.பாயையும் தலையணையையும் எடுத்துக்கொண்டு ஈரப்பலா மரத்தின் கீழ் படுத்துக்கொண்டான். முன்பெல்லாம் அதன் நிழல் அவனை மடியேந்திக்கொள்ள அவனது கண்கள் சுகமாக நித்திரையின் ஆழத்துள் புதைந்துபோய்விடும். இப்போது அந்த நிழலில் தீயின் கங்குகள் சிலிர்த்து முட்கள்போல குத்திட்டு நிற்பதாய்த் தோன்றியது. 

கண்களை மூடிக்கொண்டு துயிலமுயன்றான். அவனால் முடியவில்லை. ஒரு புறக்கணிக்கப்பட்ட தெருநாய்போல தன்னை நினைத்துக் கொண்டான்.

 பொழுது முதிர்ந்து மாலையானது. பாயைச் சுற்றி விறாந்தையின் ஒருமூலையாக வைத்துவிட்டு கிணற்றடிக்குச் சென்றான். முகத்தை 
கழுவிவிட்டு ஜீன்சையும், சேட்டையும் அணிந்துகொண்டு பண்டாவின் வீட்டை நோக்கிநடந்தான். பண்டா அப்பொழுதுதான் படலையைத் 
திறந்து கொண்டு தெருவுக்கு ஏறினான். இவனைக் கண்டதும் மகிழ்ச்சியோடு அவனைக்கட்டிக்கொண்டான்.

“எப்ப வந்தனி மச்சான்”

 “விடியத்தான்”

 “எப்படி மச்சான் இருக்கிறாய்”

அவனால் அந்தக் கேள்விக்கு விடையளிக்க முடியவில்லை. அவனது கண்கள்கலங்கின.

“ஏன்… மச்சான் என்ன” பண்டா பதட்டத்துடன் கேட்டான்.

 சந்தன, வீட்டில் தன்னை எல்லோரும் புறக்கணிப்பது போல நடந்துகொள்வதைக் கூறினான். எதற்கு அவர்கள் இப்படி நடந்து 
கொள்கிறார்கள்என தன்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என்றான். தான் வந்ததுமாலையாகியும் தன் தங்கை புஸ்பகுமாரியின் முகத்தைக் கூட தன்னால்பார்க்க முடியவில்லை என துயரத்தோடு சொன்னான்.

 அவனது குரல் கட்டிக்கொண்டது. வார்த்தைகள் உடைந்துடைந்து வெளிப்பட்டன.

 பண்டாவால் அவனது நிலையை உணர முடிந்தது. அவன் சந்தனவின் தந்தைதன்னிடம் வந்ததையும் வீடியோ காட்சிகளை பார்த்ததையும் 
அதன் பின்அவரின் முகத்தில் ஏற்பட்ட மாற்றத்தையும் விபரித்தான்.

சந்தனவுக்கு எல்லாமே புரிந்தன. வீட்டுக்கு உடனே திரும்பிச் செல்ல அவனது மனம் விரும்பவில்லை. தந்தையின் முகத்தைப் பார்க்கும்; 

தைரியம் அவனுக்கு ஏற்படவில்லை. பண்டாவுடன்; வயல்வெளிக்குச் சென்றான். நீர் வாய்க்காலுக்கு அருகில் வளர்ந்திருந்த முதிரை மரத்தின் 

கீழ்இருந்து இருவரும் அமர்ந்துகொண்டனர். அவனது கால்கள் வாய்க்காலில் ஓடும் நீரினை அழைந்தன. இரத்தத்தின் வெதுவெதுப்பைப் போல அதையுணர்ந்தான் அதிலிருந்து தனது கால்களை விடுவித்து வரம்பின் மேல்நீட்டிக் கொண்டான். மரத்தின் உச்சிக்கிளையிலிருந்து பறவையொன்று  ஒலியெழுப்பிக்கொண்டிருந்தது. அதனது குரலில் துயரத்தின் தீராதவலி பெருகுவதான உணர்வெழுந்தது. சில கணங்கள் மவுனத்தில் உறைந்து கனத்தன. சந்தனவின் கண்களிலிருந்து நீர் அவனையறியாமலேயே கசிந்து கொண்டிருந்தது. இதயத்தில் தேக்கிவைத்திருந்த எண்ணற்ற கதைகளிலும் புழுக்கள் பெருகிக் கெம்பிக்கொண்டிருந்தன.

 “என்ன மச்சான் யோசிக்கிறாய்” உறைந்து கிடந்த கணங்களின் மேல் பண்டாவின் குரல் விழுந்து தெறித்தது.

 சந்தனவின் இறுகிய தொண்டைக் குழிக்குள்ளிருந்து வார்த்தைகள் வெளிவரத்தொடங்கின.


 “யுத்தத்தின் வெற்றி என்னளவில் அர்த்தம் இழந்து போயிடுத்து மச்சான். வெற்றிக் களிப்பில நான் நிதானம் இழந்திட்டன். இப்ப என்ர குடும்பத்துக்குள்ளேயே நான் அன்னியனாகிட்டன்.”
அதற்குமேல் அவனால் பேசமுடியவில்லை. வார்த்தைகள் உறையத் தொடங்கின. பண்டாவால் அவனைத் தேற்ற முடியவில்லை. 

நேரம்ஒன்பதைக்கடந்திருந்தது சந்தனவை வீடு வரை அழைத்துச் சென்றுவிட்டான்.

சந்தன வீட்டுக்குள் நுழைந்த போது வீட்டின் விறாந்தையின் லைட் மட்டும்ஒளிர்ந்துகொண்டிருந்தது. ஸ்ரூலில் சாப்பாடு வைக்கப்பட்டு 
பிளாஸ்ரிக் கோப்பையால் மூடப்பட்டிருந்தது. அவனுக்கு பசியிருக்கவில்லை. செம்பில்நிறைந்திருந்த தண்ணீரை எடுத்துப் பருகிக் கொண்டான்.

 மூலையிலிருந்த பாயை சுவரோடு பொருந்த விரித்து படுத்தான். சிறிது நேரத்தின் பின் விறாந்தையின் விளக்கு அணைக்கப்பட்டது.இரவு முழுவதும் தூக்கத்திற்கும் விழிப்பிற்குமிடையில் அவனது மனம் அலை மோதிக் கொண்டேயிருந்தது. யுத்தத்தின் காட்சிகள் முடிவற்ற திரையில் வரையப்பட்ட சித்திரத்தைப் போல தொடர்ந்துகொண்டேயிருந்தன. தன்முகத்தில் இரத்தம் திட்டுத்திட்டாய் பரவியிருப்பதாயும் தன் 
வாயில் வேட்டைப்பற்கள் முளைத்திருப்பதுபோலவும் மாறிமாறிக் காட்சிகள்விரிந்துகொண்டிருந்தன.  அவனால் அமைதியின் விளிம்பைக் 
கூட எட்டமுடியவில்லை. இரவின் எல்லை விரிந்துகொண்டேயிருந்தது. பரிதவிப்பினதும்பதட்டத்தினதும் ஆழத்துள் வீழ்ந்து தவித்துக் கொண்டிருந்தான்.

 அதிகாலையிலேயே எழுந்துவிட்டான். குளித்து விட்டு விறாந்தைக்கு வந்தான்.ஸ்ரூலில் வைக்கப்பட்டிருந்த தேநீரை எடுத்துப் பருகினான். 
தனது உடுப்புபையை எடுத்து உடுப்புக்களைச் சரிசெய்து அடுக்கி வைத்தான்.
சமரசிங்க வெளியே வந்து விறாந்தையின் தூணோடு சாய்ந்து அமர்ந்திருந்தான். அவனது முகத்தில் உணர்சியின் அத்தனை கோடுகளும் அழிந்திருந்தன. 

குசுமாவதி கதவின் அருகில் வந்து நின்றாள். மகனின் தலையைக் கோதி விட வேண்டும் என்ற தவிப்பு அவளை உந்திக்கொண்டாலும். அவனதுமுகத்தில் பொருந்தியிருந்த அன்னியத் தன்மை அவளை தடுத்துக்கொண்டது. இமைகளில் கண்ணீர் பனித்தது. உதடுகளை இறுக மூடிக் கொண்டாள். புஸ்பகுமாரி வெளியே வரக்கூட இல்லை. உள்ளிருந்து விசும்பல் மட்டும் மெலிதாக் கேட்டுக்கொண்டிருந்தது.

சந்தனவால் தாய், தந்தையின் முகத்தை பார்க்கக்கூட முடியவில்லை. அவனது மனமும் உடலும் வேதனையாலும், அவமானத்தாலும் சோர்ந்து போயிருந்தன. உடுப்புப் பையை எடுத்து தோளிலில்மாட்டிக்கொண்டான். சில கணங்கள் உறைந்தவனாய் நின்றான். ஒரு முறைவானத்தைப் பார்த்து கண்களை மூடிக்கொண்டான் பின் தாழ்ந்த குரலில் “போயிற்று வாறன்” என்றவாறு படலையை நோக்கி நடந்தான்.

சமரசிங்கவாலும், குசுமாவதியாலும் எதுவும் பேச முடியவில்லை. அவன் படலையை நோக்கி நடந்து செல்வதை கண்ணீர் ததும்ப பார்த்துக் கொண்டிருந்தனர்.
நன்றி -ஜீவநதி ( 9 ஆவது ஆண்டு மலா்- பங்குனி-2016) தகவல் தீபச்செல்வன் இணையம்

ENB விமர்சனக் குறிப்பு: யாவும் கற்பனையே!

No comments:

Post a Comment

Panama, Denmark respond to Trump’s refusal to rule out military, economic coercion to take control of Canal, Greenland

  Panama, Denmark respond to Trump’s refusal to rule out military, economic coercion to take control of Canal, Greenland By Global Times Pub...