SHARE

Tuesday, March 15, 2016

வெற்றிச் செல்வியின் ஒரு கவிதை!



எங்கள் கண்ணீருக்கு மட்டுமல்ல
செந்நீருக்கும் விலையற்றுப்போன
வேதனை வரலாற்றை எழுதுவதால்
யாருக்குப் பயன்?

பத்திரிகைகள்
காலத்தின் கண்ணாடிகள்தான்.
எனினும்
குருதிப் படிவும் பிணத்தின் நெடியும் வீசும்
மரணக்குழியாகிய எனது முகத்தை
கண்ணாடியில் பார்க்க எனக்கு விருப்பமில்லை.

வீரத்தின் கொடியேற்றங்களை எழுதிய
எனது பேனாவுக்கு,
தியாகத்தின் உச்சங்களை பாராட்டிய
எனது பேனாவுக்கு,
தோழிகளின் குறும்புகளை வடித்த
எனது பேனாவுக்கு,
துயர்மிகுந்த அந்த வீழ்ச்சியை எழுத
பிடிக்குதேயில்லை.

துகிலுரியப்பட்ட பெண்களாய்
என் தோழிகளை பார்ப்பேன் என்று
நான் கனவிலும் நினைத்தவளில்லை.

இப்போது கனவுகளும் நினைவுகளும்
அவைகளாகவே இருப்பதனால்
எனது எழுத்து
என்னோடு முரண்டுபிடிக்கிறது.

எனது முகத்தின் வடுக்களை பார்த்து
இன்னொருவர் அழுவாரா?
துடிப்பாரா?

யாருக்கு வேண்டும் அந்த வலியின் பிரதிபிம்பங்கள்?
உன்னையும் என்னையும் பெற்றதற்காக
பெருமைப்படவேண்டிய மண் இப்போதெம்மை
புனைபெயர்களில் ஒழித்துவைத்திருப்பதற்காக
அழுகிறேன்.

என் அழுகுரல் கேட்கிறதா?
நித்திரைகூடப் புறக்கணித்த என் இரவுகள்
என்னை குத்திக்கிழிப்பதால்
நானிடும் ஓலம் எவரின் செவிகளையும்
தொட்டுவிடுமா என்ன?

எனினும்
வழியும் விழிகளை துடைத்தபடிஎன் நம்பிக்கைகள்
புதிதாய் துளிர்விடுவதை யாராலும் தடுக்க முடியாது.

வெற்றிச்செல்வி

No comments:

Post a Comment

Modi meets Yunus in Bangkok

PM Modi meets Bangladesh Chief Adviser Yunus, raises India’s concerns over safety of Hindus External Affairs Minister S Jaishankar and Natio...