Monday, 21 March 2016

வெற்றிச் செல்வி படைப்பும் பகிர்வும்


“முயற்சித் திருமகள்” விருது பெற்ற வேலு சந்திரகலா எனும் இயற்பெயரைக் கொண்ட வெற்றிச் செல்வியின் அகத்திலிருந்து
By, மன்னார் இணையம் On Sunday, Feb 15 2015

மன்னார் இணையத்தின் கலைஞனின் அகம் கணனியில் முகம் இப்பகுதியில் விம்பம் ஊடாக நம்மை காண வருபவர், உலுக்கிய யுத்தத்தின் இலக்கியப் போராளி, புலிகளின் குரல் வானொலி அறிவிப்பாளர், மேடை நாடக இயக்குநர், கவிதை, சிறுகதை, கட்டுரை, நாவல் என இலக்கியத்தோடு வாழும் இளம் படைப்பாளி. ஒரு கையை யுத்தத்தால் இழந்தாலும் தன்னம்பிக்கையோடு அடம்பன் பண்ணையின் முகாமையாளராக கடமையாற்றி வாழ்ந்து கொண்டு இருக்கும், வாழ்வின் சிறப்பிற்காக “முயற்சித்திருமகள்” விருது பெற்ற வேலு சந்திரகலா எனும் இயற்பெயரைக் கொண்ட வெற்றிச்செல்வியின் அகத்திலிருந்து.........

தங்களைப் பற்றி?

எனது சொந்த இடம் அடம்பன் கள்ளிக்குளம். எனது அப்பா வேலு சிறந்ததொரு விவசாயி. அம்மா வேலு தவமணி சிறந்த இலக்கிய ஆர்வம் கொண்டவர். நளவெண்பா, பொன்னியின் செல்வன் போன்ற புராணக்கதைகளை அருமையாகச் சொல்வார்.

 நாங்கள் ஆறு பேர் சகோதரர்கள். எனது ஒரே ஒரு அண்ணன் கணபதி, 1987 இல் விடுதலைப் போராட்டத்தில் இணைந்து தர்மேந்திரா எனும் பெயரில் சிறந்த வீரனாக வாழ்ந்து, 1994-ல் வீரச்சாவடைந்தார்.

முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் இரண்டாவது சகோதரியும் அவர்களது இரண்டு பிள்ளைகளும் எறிகணை வீச்சில் இறந்து போனார்கள்.

மூன்றாவது சகோதரி இந்தியாவிலும் கடந்த மாதம் (10-01-2015) சுகவீனமாக இருந்த எங்களது தந்தையும் இறந்தார்கள்.

இப்போது நானும் எனது இரு சகோதரிகளும் அம்மாவும் தான்.

இழப்புக்களின் வெளியில் அழகான அருமையான எமது ஊரும் எனது குடும்பமும் இப்போது வலிகளிலிருந்து மீளத் துடிப்பவர்களாய்......

உங்கள் பாடசாலைக் காலம் பற்றி?

எனது பள்ளிக்காலம் பற்றிச் சொல்ல பெரிதாக ஒன்றும் இல்லை. நான் மட்டுமல்ல இன்னும் பலரின் பள்ளிக்காலமும் மிகவும் கவலைக்குரியதுதான். விபரம் தெரிந்த காலந்தொட்டு இடப்பெயர்வுதான். இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு பள்ளிக்கூடம் தான் எமது படிப்பு. கல்விக்காலம் வரப்பிரசாதமாய் அமையாவிட்டாலும் புதிய புதிய மாணவர்கள் புதிய சூழல்கள் என நல்ல அனுபவம் கிடைத்தது. ஒழுங்கான கல்வி கிடைக்கவில்லை.

நீங்கள் கவிதை எழுத ஆரம்பித்தது எவ்வாறு?

எனது கல்வி ஒழுங்காக அமையாவிட்டாலும் அந்தச் சூழல் என்னை மாற்றியது. போரட்டச் சூழலும் இடப்பெயர்வுகளும் சுற்றி சுற்றி எம்மை புடம் போட்டன. அந்த நேரத்தில் விடுதலைப் போராட்டத்தின் மீது  ஈர்ப்பும் மனவெழுச்சியும் ஏற்பட என்னிடம் இருந்த கவிதையாற்றல் எழுச்சிக் கவிதைகளாக வெளிப்பட ஆரம்பித்தன. என்னைச் சுற்றி வாழ்ந்த போராளிகளின் வீரம்-தீரம்-அன்பு-தேசவிடுதலை எண்ணம் இன்னும் எத்தனையோ...... உண்மையின் உணர்வுகளின் வெளிப்பாட்டினை எழுத வேண்டிய அவசியமும் சூழலும் அமைந்து எழுதினேன். ஆனால் அது கவிதைகளா.... என எனக்கு தெரியவில்லை. எனது உள்ளத்துணர்வுகளை எழுதியபின் எனது நண்பர்களிடமும் மேடைநிகழ்ச்சிகளில் வாசிக்கப்பட்ட போதும் நண்பர்களால் பாராட்டப்பட்டேன். அதுவே விடுதலைப்போராட்ட உணர்வின் வெளிப்பாடாய் அமைந்தது எனலாம்.

முதலில் நீங்கள் எழுதியது கவிதையா சிறுகதையா?

கவிதைதான். நான் எழுதிய சிறுகதைதான் முதலில் சஞ்சிகையில் பிரசுரமானது. பெண்கள் ஆய்வு நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட நாற்று சஞ்சிகையில் 1997-இல் ” பூபாளம் இசைக்கத்துடித்தவள்” எனும் பெயரில் பிரசுரமானது. பல கவிதைகள், சிறுகதைகள் எழுதியுள்ளேன். எழுதியும் வருகிறேன். அந்த நேரத்தில் பல சஞ்சிகைகள் வெளிவந்தன. விடுதலைப்போராட்டம் பல படைப்பிரிவுகளை கொண்டமைந்தது.
நான் இணைந்திருந்த பிரிவு பயிற்சித்தளமாளகவே நீண்ட நாட்கள் இயங்கியது. வெளியுலகம் எங்களுக்குள்ளும் வராது. நாமும் வெளியுலகைப் பற்றி அறிய மாட்டோம்.எங்களின் சூழலை வெளிப்படுத்த

வேண்டும் என்றால் அதற்கு எழுதுவது தான் சிறந்தது என்று மாத சஞ்சிகையை வெளியிட்டோம். அப்போது நான் படையணியின் அணிநடை வாத்தியக்குழுவில் ஒருவராகச் செயல்பட்டுக் கொண்டிருந்தேன்.

அதன்போது எனது பயிற்சித் தளத்திற்குள் இருந்த நூலகத்தை பொறுப்பேற்று பராமரித்தேன். எமக்கான பயிற்சி முடிந்ததும் கிடைக்கின்ற ஓய்வு நேரங்களிலெல்லாம் வாசிக்கப்படவும் எழுதப்படவும் வேண்டும் என்ற எண்ணத்துடன் மற்றவர்களையும் ஊக்கப்படுத்தினேன். நானும் பல கவிதைகள் சிறுகதைகள் எழுதினேன். தற்போது அவைகளில் எவையும் எனது கைவசம் இல்லை. அதை யாரும் ஆய்விற்கு உட்படுத்தவும் இல்லை.

தங்களது முதலாவது நூல் வெளியீடு பற்றி?

எனது முதலாவது நூல் வெளியீடானது மிகவும் வித்தியாசமானது. நூலாகவும் எனது குரலில் இறுவட்டாகவும் வெளியிட்டேன்.“ இப்படிக்கு அக்கா” எனும் கவிதை நூலே அதுவாகும். தம்பியை ஆமி பிடித்துபோய்
சிறையில் அடைத்து சித்தரவதை செய்கிறான். தம்பி மீதான பாசஉணர்வும் தம்பி, தானது தாய் அக்கா மீதான பாசஉணர்வும் அந்தச் சூழலின் உணர்வினை உருக்கமாய் வெளிப்படுத்துவதாய் அமைந்தது.

“ இப்படிக்கு அக்கா”....
எப்படி இருக்கிற என்று கேட்கவே
அழுக பொங்குதடா.....
எப்படி இருப்பாய் என தெரிஞ்சுகிட்டும்
எப்படிடா நான் கேட்க?
கண்ணீரு இல்லாம எத கொண்டு அழ?
எண்டு நீ எழுதிய வரிகளால
ஓடுது அண உடைச்சு
கண்ணீரு ஆறு இங்க.......

இந்தக் கவிதைகளை எழுதிய நாட்களில் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை வேண்டி உண்ணாவிரதம் இருப்பதும் கூரைகளில் ஏறி நின்று போராட்டம் செய்வதும் தம் இன்னுயிர்களை இழப்பதும் நிகழ்ந்தது.

இந்தச்சுமைகளை சுமந்து வந்தது தான் “ இப்படிக்கு அக்கா”. போராட்டம் வெறுமனே ஆயுதம் ஏந்தி போராடுவதல்ல. விடுதலை உணர்வோடு தேச விடுதலைக்காய் போராடியவர்களைத்தான் வன்முறையாளர்கள் என்கிறார்கள். தீவிரவாதிகள் என்கிறார்கள். அவர்களுக்குள், அன்பு, இரக்கம், தாராளகுணம் எல்லாமே அதிகம் உண்டு.

தடுப்பு முகாமில் உங்கள் செயல்பாடு பற்றி?

 நான் பம்பைமடு தடுப்புமுகாமில் ஒரு வருடம் இருந்தேன். என்னோடு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் தோழிகள் இருந்தார்கள். அவர்களில் என்னைப் போலவே இத்துறையில் ஈடுபாடு இருந்தவர்களில் ஐம்பதிற்கும் மேற்பட்டவர்கள் இருந்தார்கள். சும்மா இருப்பதைவிட, எனது சுமையை, வலியை ஏன் எழுதக் கூடாது என நினைத்தேன். அதற்கான வசதி எதுவும் ஏற்படவில்லை. எனினும் கிடைக்கிற அங்கர் மட்டைகள், பிறஸ்-சிக்னல் மட்டைகள், கடதாசித்துண்டுகள் என எல்லாவற்றிலும் எழுதினோம். ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டு படிப்போம். எம்மை பார்க்க வருகின்ற உறவினர்களிடம் கொப்பியும் பேனாவும் கொண்டு வரச் சொல்லி எமது பதிவுகளை பதிந்தோம். யாரும் அந்த பதிவுகளை படிக்கலாம், அதில் தங்கள் உணர்வுகளை எழுதலாம். என்னுடையது மட்டுமல்ல, அதில் பலருடைய மனக்குமுறல்களும் அதில் பதிவாயின. பாரச்சுமைகளை பகிர்ந்துக் கொண்டபோது, ஒருவித அமைதி கிடைத்தது. கொஞ்சம் ஆறுதல் கிடைத்தது. அதிலும் என்னுடைய பதிவுக்கு அதிகமான வரவேற்பு இருந்தது. இவ்வாறு பதிவுகள் தொடர்ந்து. அது தானாக தனக்கான ஒரு வடிவம் எடுத்து, அத்தியாயம்-1, அத்தியாயம்-2 என அத்தியாயம் -18 வரை வளர்ந்து “ ஈழப்போரின் இறுதிநாட்கள்”  எனும் நூலாக, 20112-ல் சோழன் படைப்பகத்தின்
வெளியீடாக வெளிவந்தது.

தங்களின் போராட்ட வாழ்வில் மறக்க முடியாத சந்தர்ப்பம், சம்பவம் பற்றி?

அவை ஒன்று இரண்டல்ல. ஓராயிரம் சம்பவங்கள் உள்ளன. நாங்கள் வாழ்ந்த வாழ்வை எப்படிச் சொல்வது?......அந்த வாழ்க்கை மறக்க முடியாத ஒன்று. இப்போது வாழ்கின்ற வாழ்க்கைதான் மிகவும் மோசமானதும் கஸ்றத்திற்குரியதும் என்பேன்.

ஆயுதப்போராட்டம் தோற்றதற்கு காரணம் தனிப்பட்ட முறையில் புலிகள் கிடையாது. அதுபோல வெற்றி பெற்றது தனியாக மஹிந்தவின் அரசாங்கம் கிடையாது. அது உலக அரசியல் சம்பந்தப்பட்டது. இதை எப்படி விடுதலைப் போராட்டத்தின் தோல்வி என்று சொல்ல முடியும் என்று தெரியவில்லை. போராட்டத்தினை நடத்திய அமைப்பு அப்போராட்டத்தினை கைவிட்டுள்ளது.
ஆயுதப்போராட்டம் முடிவிற்கு வந்துள்ளது அவ்வளவுதான்.

அந்தச் சூழலில் வாழ்ந்த மக்கள் மனதில் இன்னும் விடுதலைச்சுடர் சுடர்விட்டுக் கொண்டுதான் இருக்கின்றது.

ஆனால் இப்போது வாழ்கின்ற இளைய தலைமுறையினரிடம் எந்தவித உணர்வும் இல்லையே என்பதுதான் கவலை.....அதிலும் சிலபேர் போராட்ட காலத்தில் போராளிகளாக இருந்தவர்களே. இப்போது விடுதலைப் போராட்டத்தினை விமர்சிப்பதும் கொச்சைப்படுத்துவதும் பலரின் எச்சிப் பொருளுக்காய் பட்டம் பதவிக்காய் எனும்போது இன்னும் வேதனை. கடைசி நேரத்தில் சில போராளிகளுக்கும் மக்களுக்கும் ஏற்பட்ட மனக்கசப்புகளை முரண்பாடுகளை வைத்துக் கொண்டு மக்களின் விடுதலைக்காய் தேசஅபிமானத்தோடு இன்னுயிர்களைத் தியாகம் செய்த உண்மைத் தியாகிகளையும் விடுதலைப்போராட்ட வரலாற்றையும் கொச்சைப்படுத்தி விமர்சிக்க வேண்டாம் என்பது என்னுடைய தயவான வேண்டுகோள்.

தடுப்பு முகாமில் ஒரு வருடம் தங்களது மனநிலையும் நடந்த செயலும்?

தடுப்பு முகாம் எனும்போது நிறையவே....பல விடயங்களை நாம் அங்கு கற்றுக் கொண்டோம். நிர்வாகம் என்றால் என்ன என்பதை நாம் அவர்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறோம். சில செயற்பாடுகளால் எவ்வளவிற்கு எங்களை அவமானப்படுத்த முடியுமோ அவ்வளவிற்கு அவ்வளவு  அவமானப்படுத்தினார்கள். எனினும் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னால் போராளிகள் என்று சொல்லுவார்கள். போராளிகள் போராளிகளாகவே இருக்கிறோம். தடுப்பு முகாமில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் மிகவும் கொடூரமான முறையில் தண்டணை, அட்டூழியங்கள், துன்பதுயரங்கள் எல்லாம் நடந்தது உண்மைதான். தடுப்பு முகாமிற்குள் கொண்டு வருவதற்குள் முன் பரிசோதனை என்ற பெயரில் சதுரக் காப்பரனுக்குள் நாம் நிர்வாணமாக்கப்பட்டோம். அந்தக் காப்பரனின் சிறு சிறு ஓட்டைகள் வழியே பல கண்கள் எம்மை மேய்ந்தன.

அவர்கள் எங்களை பரிசோதனை செய்யவில்லை. நிர்வாணமாக்கி கொச்சைபடுத்த வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கம். வெற்றி மமதையில் இருந்தார்கள், மனிதம் அவர்களிடம் மரணித்து போயிருந்தது. இவ்விடயத்தை எம் புத்தகத்தில் பதிவு செய்துள்ளேன்.

ஆனால் நான் இருந்த பம்பைமடு தடுப்பு முகாமில் அவ்வாறு பெண்களை பாலியல் இச்சைகளுக்காக பயன்படுத்திய செயல் எதுவும் நடக்கவில்லை. இருந்தாலும் அரசாங்கத்திற்கு அடிக்க வேண்டும், கரிபூச வேண்டும் என்பதற்காக ஊடகங்கள் பலவாறு இல்லாத பொல்லாத செய்திகளையும் எழுதியது. நடக்காததை நடந்ததாகவும் எழுதிய சம்பவங்கள் உண்டு. நான் உட்பட பம்பைமடு தடுப்பு முகாமில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் இருந்தோம். எங்கள் பிரிவுக்கு கேப்டன் லக்மலி எனும் பெண் அதிகாரிதான் பொறுப்பாக இருந்தார். அவருக்கு கீழ் பெண் இராணுவத்தினர் செயல்பட்டனர். வேலிக்கு வெளியேதான் ஆண் போலிஸ். உணவு, சுகாதாரம்,வைத்திய தேவை கடமையில் ஆண்கள் ஈடுபட்டார்கள். பம்பைமடு தடுப்பு முகாமில் புனர்வாழ்வு பெறும் பெண்கள் படையினரின் தேவைக்காக பயன்படுத்தப்படுகிறார்கள் என “ ஆனந்த விகடன் ” இதழில் கட்டுரை வெளியிட்டு இருந்தார்கள். அந்த இதழைப் பார்த்ததும் அங்கிருந்த பெண்கள் துன்பமடைந்தார்கள்.

எனது நண்பி கேட்டாள், “ அக்கா எப்படி நாங்கள் வெளியில் போய் வாழ்வது?” முன்னாள் போராளியென ஒதுக்குவார்கள். இப்போது இந்த தகவலால் எம்மை கேவலமான முறையில் எல்லாமே பார்ப்பார்கள்.இல்லையா? ஏன் இப்படி எழுதுகிறார்கள். அரசாங்கத்தை எதிர்ப்பதாக நினைத்து ஆயிரம் பெண்களின் வாழ்வையே எரிப்பதா?”

இன்னும் எதையாவது எழுத வேண்டும் என்று எண்ணியதுண்டா?

ஆம். நிச்சயமாக. நிறையவே எழுத இருக்கிறது. இதுவரை நடந்தவற்றை, அதாவது முள்ளிவாய்க்கால் வரை எழுதியுள்ளேன். இப்போதிருக்கும் சமுதாயத்தை, சமூக வாழ்வை, பிரச்சனையை யார் எழுதுகிறார்கள்?
எழுதுவார்கள்? கெட்ட விடயங்களையும் இல்லாதவற்றையும் எழுத ஆயிரம் பேர் உள்ளனர். தற்போது மக்களின் நிலைமையை வேலை-வீடு-காணி-பாதைப்பிரச்சனைகள் பலவற்றைப் பற்றி எழுத வேண்டும்.

போருக்கு பின்னான எம்மினத்தின் வாழ்வை பதிவு செய்ய இருக்கிறேன். எமது 30  வருட விடுதலைப்போரையே இருட்டடிப்பு செய்கின்ற நாங்கள், இதைப் பற்றி எழுதாமலும் பிரசுரிக்காமலும் இருக்கும் நாங்கள், அதற்கு பல காரணங்களை முன்வைக்கிறோம். பாதுகாப்பு இல்லை என்று சொல்லி விலகி விடுகிறோம். எனது விருப்பம் அந்த 30 வருடத்தை உண்மையில் நடந்தவற்றை அப்படியே வாழ வைக்க வேண்டும். 30 வருடத்திற்கு பின்னும் தான்.....

தங்களின் அங்க இழப்பிற்கான சூழலும் அதற்குப் பின்னான வாழ்வும் பற்றி?

19 வயதிலேயே யுத்தத்தின் காரணமாக எனது கையையும் பார்வையையும் இழக்க நேர்ந்தது. எனது வாழ்வில் முன்பை விடவும் தன்னம்பிக்கையும் தெளிவும் அதிகமாகத்தான் இப்போது இருக்கின்றது.

அங்கமிழப்பு என்பது மற்ற மனிதரை விடவும் நீ எப்படி முன்னுக்கு வரவேண்டும என்பதை எனக்கு கற்றுத் தந்துள்ளது. அங்கமிழந்தவள் என்று என்னை நான் எப்போதும் நினைத்ததில்லை. மனமுடைந்து போகவும்
இல்லை. இரண்டு கண்ணும் கையும் இயங்காமல்தான் இருந்தேன். கண்பார்வை தெரியவரும், நான் எழும்பி நடப்பேன் என்று காயப்பட்டவேளை நான் நினைக்கவேயில்லை. எனது நம்பிக்கைதான் வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் கற்றுக் கொடுத்தது. இந்த அங்கம் இழப்புதான் சமூகத்தின் கருத்தை நாம் கருத்தில் கொள்ளாது, உனது திறமையில் தன்னம்பிக்கையோடு முன்னேறு, உன்னால் எல்லாவற்றிலும் வெற்றி பெற முடியும் என்று கற்றுத் தருகிறது.

பெண் கவிஞர்களுக்கு இருக்க வேண்டிய தகுதிகள் எவையென நீங்கள் கருதுகிறீர்கள்?

எழுத்துலகம் எனும்போது ஆண் பெண் என்று வேறுபாடு பார்க்கத் தேவையில்லை என்று நினைக்கிறேன். எழுதுகின்றவர்கள் துணிவுடன் இருக்க வேண்டும். எழுத்து தெளிவாக இருக்க வேண்டும். யாருடைய
வற்புறுத்தல்களுக்கும் பயந்து மாறுகின்றவர்களாக இருக்கக் கூடாது. எடுத்துக் கொள்ளும் பணியில் உறுதி வேண்டும். ஒவ்வொருவருக்கும் தனியான குணம் இயல்பு இருக்கும். அதற்கு ஏற்றாற் போல்தான் எழுதுவார்கள். அதற்காக முற்பத்தையை வீட்டு முற்றத்தில் வைக்க முடியாது.

தங்களது புனைபெயர்கள் மற்றும் அடுத்த வெளியீடு பற்றி?



வெற்றிச்செல்வி-நிலவுமகள்-ஆநதி-தர்மேந்தினி எனும் புனைபெயர்களில் எழுதி வந்தேன். இப்போது வெற்றிச் செல்வி மட்டுமே.
இதுவரை கவிதைகளாக “ இப்படிக்கு அக்கா” , “ இப்படிக்கு தங்கை”, “ துளிர்விடும் துயரங்களும் நம்பிக்கைகளும்”
சிறுகதைகளாக “ முடியாத ஏக்கங்கள் 2012”, “ காணாமல் போனவனின் மனைவி”, நாவலாக “ போராளியின் காதலி”“
கட்டுரைத் தொடராக “ ஈழப்போரின் இறுதி நாட்கள்”.......

எழுதுவதற்கு பல விடயங்கள் இருக்கின்றன. நான் கட்டாயம் எழுத வேண்டியிருக்கின்ற பலதை எழுதியே ஆக வேண்டும்.

நான் ஏன் போராளி ஆனேன் என்பது தொடக்கம். போருக்கு பின்னான வாழ்வு பற்றி நிச்சயம் எழுதுவேன்.

தங்களுக்கு கிடைத்த முதல் விருதும் மனநிலையும் பற்றி?

மன்னார் தமிழ்சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் நூற்றாண்டு விழாவில் எனக்கு “ முயற்சித்திருமகள்” எனும் விருது தந்து என்னை கௌரவித்தார்கள். நான் எதிர்பார்க்கவே இல்லை. ஏனென்றால் மன்னார் தமிழ்சங்கத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இருந்திருக்கவில்லை. தமிழ்சங்கத்தின் செயல்பாடுகள் என்னவென்பதை அறியாமல் இருந்தேன். ஆனால் அவர்கள் என்னைப் பற்றியும் எனது படைப்புகளையும் நன்கு அறிந்து இருக்கிறார்கள். முதல்நாள் கவியரங்கம் தமிழ்மணி அகளங்கள் ஐயா தலைமையில் நடைபெற்றது. அதில் கலந்துக் கொண்டு கவிதை வாசித்தேன். அடுத்தநாள் விருதும் கிடைத்தது. மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். அங்கு விருது பெற்ற பத்து கலைஞர்களில் நான் மிகவும் சிறியவள். அதேநேரம் ஒரேயொரு பெண் கலைஞர் என்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சியடைந்தேன்.

தங்களின் வாழ்வில் இருந்து பெண்களுக்கு சொல்லக் கூடியவை?

யார் என்ன சொன்னாலும் பெண்கள் தங்களின் மனதாலும் உடலாலும் இன்னும் வலுவில்லாமலே வாழ்கின்றார்கள். அவர்கள் தங்களின் நிலைமையை மாற்றிக் கொள்ள வேண்டும். ஆண் பெண் என்று
பிரிக்காமல் அவர்களின் உணர்வுக்கும் உறவுக்கும் மதிப்பு கொடுங்கள்.

விரும்பியோ விரும்பாமலோ பெண்களின் தலைமையில் குடும்பச் சுமையை ஏற்றி விட்டிருக்கின்றோம். அதனால் அவர்கள் பல நிகழ்வுகளில் கூட கலந்துக் கொள்ள முடியாமல் போகிறது. எழுத்துலகில் இருக்கும் பெண்களின் நிலையும் அதுதான். ஆண்கள் பொதுவாக வெளியில் சென்று உழைப்பதும் மாதமானால் சம்பளம் எடுப்பதும் தெரிகிறது.

ஆனால் அதுபோலவே அந்த வீட்டில் கணவனுக்கும் பிள்ளைகளுக்கும் அத்தனை வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்கின்ற பெண்களின் உழைப்பை கணக்குப் போட்டுப் பார்த்தால் ஆண்களின்
சம்பளத்தைவிட அதிகமாகத்தான் இருக்கும். எந்தவித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் தங்களையே அர்ப்பணிக்கும் பெண்களை ஆண்கள் மதிக்க வேண்டும். தாய்க்கும் சமீபத்தில் எனது தந்தைக்கும் இடையில்
சிறிது உரையாடல் எனது தாய் சிரித்துக் கொண்டே “ உங்களுக்கு துணிமணிகளை துவைத்துக் கொடுப்பது போல வெளிநாட்டிற்குச் சென்று துவைத்துக் கொடுத்திருந்தால் மாதமாதம் பல ஆயிரம் டாலர்கள்
சம்பாதித்திருப்பேன்” என்றார் புன்னகையோடு. தந்தையும் சிரித்தார். அப்போதுதான் அம்மா சொல்ல வந்த விடயத்தை விளங்கிக் கொண்டேன்.

நீங்கள் ஏதாவது அமைப்பினை நடத்தினீர்களா?

சிறிதாக- மாற்று வலுவுள்ளோர்களுக்காக “தேனீ” எனும் பெயரில் நடத்தினேன். மனமுடைந்துள்ள மாற்றுத் திறனாளிகளின் வாழ்வை உயர்த்தவும் ஆலோசனை வழிகாட்டியாகவும் செயல்பட்டு வந்தேன்.
அமைப்பினை பதிவு செய்வதில் கடினம். எனவே என்னாலானவற்றை தனிப்பட்ட முறையிலே செய்து வருகிறேன். ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் எனது வீட்டு முற்றத்தில் சிறுவர் சிறுமியருக்கு என்னால்
ஆனவகையில் விளையோட்டோடு கல்வியையும் கற்றுக் கொடுக்கிறேன்.

பெரியவர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் எவ்வித இடையூறுகள் இல்லாமல் என் மன அமைதிக்காகவும் செயல்பட்டு வருகிறேன். அதே போல் இரண்டு மாத்ததிற்கு ஒரு தடவை வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி போன்ற மாவட்டங்களில் வாழும் மாற்றுத்திறனாளிகளுக்கான பயிற்சி வகுப்புகளில் ஆலோசனை வழங்குனராக கலந்து கொள்கிறேன். தேனீ அமைப்பு இப்போது எனது தனிப்பட்ட முயற்சியில் என்னை மட்டும் நானே இயக்கும் சக்தியாக மனத்திற்குள் உயிர்ப்புடன் இருக்கிறது.

மன்னார் கலைஞர்களுக்கான கௌரவம் மன்னாரில் எவ்வாறு உள்ளது?

என்னைப் பொறுத்தவரையில் கலைஞர்களுக்கு கௌரவம் இருப்பதாகத்தான் உணர்கிறேன். “முயற்சித்திருமகள்” விருது தந்தார்கள். என்னை கௌரவிக்கத்தானே. மன்னார் இணையத்திற்காக நீங்களும் என்னை பேட்டி காண வந்துள்ளீர்கள். என்னைப் பொறுத்தவரை முகத்திற்கு நேரே புகழ்ந்து விட்டு பின்பு இகழ்வதை விட எனது படைப்பின் மூலம் இன்னொருவருக்கூடாக என் படைப்பைப் பற்றி என்னைப் பேசும்போது, அதுதான் உண்மையில் எமக்கு கிடைக்கின்ற சிறந்த விருது. அதைவிட்டு நான் நான்கு புத்தகம் வெளியிட்டு விட்டேன். எனக்கு விருது தரவில்லை என்றால் , அது எனது மடத்தனமாகத்தான் இருக்கும்.

ஒரு தந்தை “ எனது மகள் இறுதி யுத்தத்தின்  அதிர்வில் இருந்து வெளிவராமல் இருந்தாள். உனது புத்தகத்தை படித்த பின்புதான் அவள் நல்ல நிலைக்கு திரும்பியிருக்கிறாள் ``
 என்றபோதுதான் நான் மிகவும் சந்தோசமடைந்தேன்.  அது என்னை கௌரவிப்பதாக இருந்தது.

மேடையில் மாலைபோடுவது மட்டுமே கௌரவிப்பது ஆகாது என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.

எழுத வேண்டும் என்பது எழுத்தாளர்களின் கடமை. கௌரவிப்புகளை எதிர்ப்பார்க்காமல் காலத்திற்கான கடமையைச் செய்வோம். காலம் நம்மை தேவையான போது கௌரவிக்கும்.

மன்னார் மக்கள் கலைஞர்கள் என மன்னாரில் மகிமை பேசுகின்ற மன்னார் இணையம் பற்றி?

மன்னார் இணையம் எனும்போது இதுவரை பொதுவாக மற்ற இணையங்களைப் பார்ப்பது போல நுனிப்புல் மேய்வது போலத்தான் பார்த்து வந்தேன். ஆனால் நீங்கள் எங்களைப் போன்ற கலைஞர்களை வீடு தேடி
வந்து பேட்டி கண்டு இணைய வாயிலாக அறிமுகப்படுத்தும் போது ஆர்வம் ஏற்படுகின்றது. மன்னார் இணையத்தினை முழுமையாக பார்வையிட விரும்புகிறேன்.தொடரவிருக்கிறேன். மன்னார் இணையம் தொடர்பான எனது கருத்தினையும் விருப்பத்தினையும் பகிர்ந்துக் கொள்வேன். தங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் என்றும்!

மன்னார் இணையத்திற்காக –வை. கஜேந்திரன்.

நன்றி மன்னார் இணையம்:தங்கள் போர் வாழ்வு பணி வாழ்க
தமிழீழச் செய்தியகம்

No comments:

Post a Comment

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை! -ஆங்கிலக் குறிப்புடன் தமிழ் சிங்கள வீடியோக்கள்.

அநுரவின் உரையின் முக்கிய பகுதி தமிழில் LINK அநுரவின் உரையின் முழுப்பகுதி சிங்களத்தில்                                                       ...