SHARE

Friday, January 08, 2016

'இந்தியாவும் அமெரிக்காவும் தான் ஆட்சி மாற்றத்துக்கு காரணம்' : பசில்

'இந்தியாவும் அமெரிக்காவும் தான் ஆட்சி மாற்றத்துக்கு காரணம்' : பசில்

இலங்கையில முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்கு எதிராக புதிய ஆட்சியைக் கொண்டுவருவதில் இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகள் பின்னணியில் இருந்து செயற்பட்டதாக மகிந்த

ராஜபக்ஷவின் சகோதரர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

புதிய ஆட்சி ஏற்பட்டு ஓராண்டு பூர்த்தியாகின்ற நிலையில் பிபிசிக்கு அளித்துள்ள பேட்டியிலேயே பசில் ராஜபக்ஷ இந்தக் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ஓராண்டுக்கு முன்னர் புதிய ஆட்சி மாற்றத்திற்கு வழிவகுத்த ஜனாதிபதி தேர்தலின் தோல்விக்குப் பின்னர் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றிருந்தவர், பின்னர் இலங்கை வந்திருந்தபோது, அவர் மீது நிதி மோசடிக் குற்றச்சாட்டில் விசாரணைகள் பாய்ந்தன.

கடந்த ஏப்ரலில் கைதுசெய்யப்பட்ட சிறையில் அடைக்கப்பட்ட பசில் ராஜபக்ஷ, பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டார்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக இருந்த காலத்தில் திவிநெகும என்ற வறுமை ஒழிப்புத் திட்டத்தில் நடந்துள்ளதாகக் கூறப்படும் பெரும் முறைகேடுகள் தொடர்பில் அவர் மீது விசாரணைகள் நடக்கின்றன.
மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சியை கவிழ்க்க இந்தியா, அமெரிக்கா போன்ற பலம்கொண்ட நாடுகள் முக்கிய பங்களிப்பு செய்துள்ளதாக பசில் ராஜபக்ஷ குற்றம்சாட்டினார்.

'குறிப்பாக இந்தியா,அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பல என்று எமக்கு எதிராக அணிதிரண்டிருந்தன. சர்வதேச மட்டத்தில் அந்த நாடுகள் கொடுத்த அழுத்தங்களுக்கு அப்பால் உள்நாட்டிலும் அழுத்தம் கொடுத்தன' என்றார் பசில் ராஜபக்ஷ.

'அந்த நாடுகள் பகிரங்கமாக இதனைச் சொல்லியிருக்கின்றன. அமெரிக்கா தங்களின் வருடார்ந்த அறிக்கையில் 2015-இல் தமக்கு கிடைத்த வெற்றி என்று இலங்கையின் ஆட்சிமாற்றத்தை வர்ணித்துள்ளது.

அதைவிட வேறு சாட்சி என்ன வேண்டும்' என்று கேள்வி எழுப்பினார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் மிகவும் செல்வாக்கு மிக்கவர்களாக இருந்த அவரது மூன்று சகோதரர்களில் ஒருவர் தான் பசில் ராஜபக்ஷ என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Modi meets Yunus in Bangkok

PM Modi meets Bangladesh Chief Adviser Yunus, raises India’s concerns over safety of Hindus External Affairs Minister S Jaishankar and Natio...