Tuesday, 15 December 2015

``பிடுங்கப்படும்`` அதிகாரப் பகிர்வு!

மாகாணசபையின் அதிகாரங்களைப் பிடுங்குகிறது மத்திய அரசு – வட மாகாண முதல்வர் குற்றச்சாட்டு
DEC 16, 2015 | 0:33by யாழ்ப்பாணச் செய்தியாளர் செய்திகள்

மாகாணசபைகளிடம் இருந்து அதிகாரங்களைப் பறிக்கும் முயற்சியில் மத்திய அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக விசனம் வெளியிட்டுள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், மத்திய அரசாங்கம் முன்வைத்துள்ள கிராம இராஜ்ஜியத் திட்டம் மற்றொரு அதிகாரப் பறிப்பு முயற்சி என்றும் விமர்சித்துள்ளார்.

வடமாகாண சபையின் வரவு செலவுத்திட்டத்தை நேற்று அவையில் சமர்ப்பித்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

“கடந்த ஆண்டு நிதி ஒதுக்கீட்டின் போது எனது உரையில் வடமாகாணத்தின் அப்போதைய நிலை பற்றியும் பல ஆண்டுகள் கடந்தும் போரினால் ஏற்பட்ட தாக்கங்களிலிருந்து எமது மக்கள் இன்னமும் முற்றுமுழுதாக விடுபடவில்லை என்ற கருத்தையும் தெரிவித்திருந்தேன்.

தற்போதும் அந்த நிலைமைகளில் பாரிய மாற்றங்கள் எதுவும் ஏற்பட்டுவிடவில்லை.  போரினால் பலவிதங்களில் பாதிக்கப்பட்ட எமது மக்கள் வீடுகளை இழந்து, சொத்துக்களை இழந்து, குடும்பத் தலைவர்களை இழந்து, பிள்ளைகளை இழந்து, பெற்றோர்களை இழந்து, உடல் அங்கங்களைப் பறிகொடுத்து நிர்க்கதியாய் நிற்கின்றார்கள்.

மேலும் காணாமல்போனோரின் குடும்பத்தினர், சந்தேகத்தின் பேரில் சிறையில் வாடுபவர்களின் குடும்பங்கள் என பலதரப்பட்ட மக்கள் தமது குறைகளை தினமும் எம்மிடம் தெரிவித்தவாறு உள்ளனர்.

அதே நேரம் வெளிநாட்டுத் தூதுவர்கள், தூதரக அதிகாரிகள், அரச சார்பற்ற நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் எனப் பல மட்டங்களில் உள்ளவர்கள் எம்மை அணுகி வடமாகாண சபையினதும் இங்கு வாழ்கின்ற மக்களினதும் நிலைமைகள் பற்றித் தினமும் ஆராய்ந்த வண்ணம் உள்ளனர்.

ஆனாலும் இதுவரை குறிப்பிடக் கூடியளவு முன்னேற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றே குறிப்பிட வேண்டும்.

இப்பகுதியில் மத்திய அரசினால் மேற்கொள்ளப்படுகின்ற அல்லது மேற்கொள்ளப்பட இருக்கின்ற அபிவிருத்தித் திட்டங்கள் பல எமது மக்களுக்கு நன்மை பயப்பதைவிட தென் பகுதி மக்களுக்கு நன்மை வழங்கும் திட்டங்களாகவே காணப்படுகின்றன.

அத்துடன் புதிய அரசாங்கத்தினது செயற்பாடுகள் மேம்போக்காக நல்லெண்ண சமிக்ஞைகளை  வெளிப்படுத்துவதாகக் காணப்படுகின்ற போதிலும் மறைமுகமாக மாகாணசபைகள் மீதான கட்டுப்பாடுகளைத் தொடர்ந்தும் பேணுகின்ற வகையில்த் தான் காணப்படுகின்றன.

அத்துடன் மாகாணசபைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் குறைக்கும் வகையிலும் மத்திய அரசாங்கத்தினது நேரடிக் கட்டுப்பாடுகளை அதிகரிக்கக் கூடிய வகையிலுமான மறைமுகத் திட்டங்களை அமுல்படுத்த முற்படுவதைக் காணக்கூடியதாக உள்ளது.

அண்மையில் மத்திய அரசாங்கத்திடமிருந்து கிராம இராஜ்ஜியம் என்ற புதிய திட்டத்திற்கான வரைவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் மத்திய அரசாங்கத்தின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் வருகின்ற கிராம மற்றும் மாவட்ட மட்டத்திலான குழுக்களே சகல அபிவிருத்திச் செயற்திட்டங்களையும் தீர்மானித்து செயற்படுத்துகின்ற அதிகாரத்தினை கொண்டுள்ளதாகக் காணப்படுகின்றன.

இது மாகாணசபைகளைப் புறந்தள்ளி மத்திய அரசு தனது நேரடிச் செல்வாக்கை பிரயோகிக்க முற்படுகின்ற ஓர் புதிய வடிவிலான திட்டமாகக் கருத வேண்டியுள்ளது.

இவ்வாறு மத்திய அரசாங்கம் ஒவ்வொரு விடயத்திலும் தனது பிடியை இறுக்க முற்படுகின்றதே தவிர தளர்த்த முற்படவில்லை. அதிகாரப் பரவலாக்கத்திற்குப் பதில் அதிகார மையமாக்கலையே இன்றைய அரசாங்கம் கடைப்பிடிக்க எத்தனிப்பது போல் தெரிகிறது.

கடந்த காலத்தில் எம் மீது திணிக்கப்பட்டிருந்த ஆளுனரின் கட்டுப்பாடுகள் பிரதம செயலாளரின் ஒத்துழையாமை போன்ற தடைகளில் இருந்து நாம் இப்போது விடுபட்டுள்ள போதிலும் எமது செயற்பாடுகளை செயற்திறனுடன் முழுமையாக நிறைவேற்றுவதற்கு முடியாமல் உள்ளது.

பல வழிகளில் மத்தியின் செல்வாக்கை மேம்படுத்தவும் மாகாணத்தைப் புறக்கணிக்கவுமே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்பதே உண்மையாக இருக்கின்றன.

மேலும் அரச அலுவலர்களின் உளப்பாங்கில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு நாம் இன்னமும் கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது. மாற்றங்களை நடைமுறைப்படுத்தவும் நாங்கள் இவ்வருடம் பின்நிற்கப் போவதில்லை என்பதை இங்கு கூறிவைக்கின்றேன்.

மத்திய அரசினது மன நிலைமைகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டு எமது மக்களின் தேவைகளைப் புரிந்து கொண்டு வடமாகாண அரசிற்கு நிலைமைகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டு எமது மக்களின் தேவைகளைப்புரிந்து கொண்டு வடமாகாண அரசிற்கு அனுசரணையாக எமது மக்களுக்கான அடிப்படை வசதிகளையும் வாழ்வாதார தேவைகளுக்குமான உதவிகளையும் புரிய அவர்கள் முன்வருவார்கள் எனவும் நம்புகின்றேன்.

எம்மிடையே உள்ள அனைத்து கருத்து வேறுபாடுகளையும் மறந்து எமது மக்களின் விடிவிற்காக 2016ல் அனைவரும் கைகோர்த்துப் பாடுபடுவோம் என இச்சந்தர்ப்பத்தில் உங்கள் அனைவரையும் விளித்து எனது ஆரம்ப உரையை நிறைவு செய்து 2016ம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்ட அறிக்கையை சமர்ப்பிக்க விழைகின்றேன்.” என்று அவர் தெரிவித்தார்.

அதேவேளை, அடுத்த ஆண்டு செலவினங்களுக்காக வடக்கு மாகாணசபைக்கு 7,978.03 மில்லியன் ரூபாவை ஒதுக்குமாறு கேட்ட போதிலும், மத்திய அரசாங்கம் 3,199 மில்லியன் ரூபாவை மட்டுமே ஒதுக்கியுள்ளதாகவும் அவர் விசனம் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

பத்தாவது பாராளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய முழுமையான உரை-தமிழ்.

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆற்றிய முழுமையான உரை. இன்று எமது பாராளுமன்றத...