SHARE

Saturday, November 01, 2014

மலையக மண்சரிவு : அலட்சியப் படுகொலை!

மலையக மண்சரிவு
அலட்சியப் படுகொலை!

மக்கள் மீது கவனம் செலுத்தாத அரசும், மக்கள் பிரதிநிதிகள் எனப்படுவோரும்,
 தோட்ட நிர்வாகிகளுமே இதற்கான முழுப்பொறுப்பையும் ஏற்கவேண்டும்.


`அத்திப்பட்டி கிராமமும்` மீரியபெத்த தோட்டமும்
[ வியாழக்கிழமை, 30 ஒக்ரோபர் 2014, 10:07.05 AM GMT ]

சிட்டிசன் என்ற படத்தை நீங்கள் அனைவரும் பார்த்திருப்பீர்கள் என நினைக்கின்றேன். அந்தப் படத்தில் காண்பிக்கப்படும் அத்திப்பட்டி என்ற கிராம மக்கள் உரிமைக் குரல் எழுப்பியதால் அவர்கள் அனைவரும் கடலுக்குள் போடப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

இறுதியில் அத்திப்பட்டி என்ற கிராமமே திட்டமிட்ட அடிப்படையில் அழிக்கப்பட்டது. இவை படத்தில் வரும் காட்சிகளாக இருந்தாலும் அவற்றை பார்த்தபோது எம் மனங்கள் பதறின அல்லவா?

இவ்வாறுதான் பதுளை, கொஸ்வாந்த, மீரயபெத்தை தோட்டத்தையும் நாம் பார்க்கவேண்டியுள்ளது. சிட்டிசன் என்பது படம். ஆனால், மலையகத்தில் நடந்ததோ நிஜம். 

மண்சரிவு அபாயம் முன்கூட்டியே தெரிந்தது.

அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை

எனவே, இந்த மண்சரிவு அனர்த்தம் குறித்து இயற்கை மீதோ அல்லது விதி மீதோ மட்டும் பழிசுமத்திவிட்டு எம்மால் இலகுவில் நழுவி விடமுடியாது. அதற்கு பல காரணங்களும் இருக்கின்றன.

இப்பகுதியில் மண்சரிவு அபாயம் இருக்கின்றது என்று பல முறை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இவை குறித்து கவனம் செலுத்தி மக்களை பாதுகாப்பான இடங்களில் அரசு குடியமர்த்தியிருக்க வேண்டும்.

சரி , அபாயம் இருக்கின்றது என தெரிந்தால் மக்கள் தாமாகவே வெளியேறியிருக்கலாமே என்ற கேள்வி எழுகின்றது அல்லவா? ஒருவேளை, உணவுக்கே திண்டாடும் இந்த மக்கள் தோட்டப் பகுதியைவிட்டு சென்றால் அவர்களின் வாழ்வாதாரம் என்ன ஆகும்? மாற்றுடைக்கே வழியின்றி திண்டாடும் பலர் எப்படி வீடுகளை அமைப்பாளர்கள்? எனவே, அரசாங்கம் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். அதை அது செய்யவில்லை.

தமிழ்ப்பிரதிநிதிகள் அக்கறை காட்டவில்லை

இதை அரசின் கவனத்துக்கு கொண்டுவருவதற்கு தமிழ் பிரதிநிதிகளும் உரிய
நடவடிக்கை எடுக்கவில்லை.

நாடாளுமன்றில் கவனயீர்ப்பு பிரேரணையொன்றையோ அல்லது சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையொன்றையோ கொண்டுவந்து இது விடயத்தில் அரசின் நிலைப்பாட்டை அறிந்திருக்கலாம்.தற்போது தோட்ட நிர்வாகம் மீது பழிசுமத்துவது தம்மை நியாயப்படுத்திக்கொள்வதற்கு முன்னெடுக்கப்படும் முயற்சியாகவே பார்க்க வேண்டியுள்ளது.

மண்சரிவும் மலையகத்தின் நிலப்பிரச்சனையும்

குறிப்பாக மலையக மக்களுக்கு ஏழு பேர்சஸ் காணியை வழங்கியிருந்தால் அவர்கள் தனி வீடு அமைத்து பாதுகாப்பாக வாழ்ந்திருப்பார்கள். அதை வழங்காததால் பலர் இன்று 6 அடி குழிக்குள் சடலமாக வாழவேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. நிபந்தனையின்றி ஆதரவு வழங்குவதற்கு முன்வந்துள்ள அட்டைக் கம்பனிகாரர்கள், குறைந்தபட்சம் காணி
உரிமையையாவது நிபந்தனையாக முன்வைத்திருந்தால் குறைந்துவிடுவார்களா என்ன?

அற்ப சொற்ப சலுகைகளுக்காக மலையக மக்களின் உரிமைகளை ஆட்சிபீடத்தின் பாதங்களின் கீழ் வைத்து பாதபூஜை செய்யும் இவர்களை எம் மக்களின் கண்ணீர், என்று அழிக்கும் என்பது மில்லியன டொலர் பெறுமதியான கேள்வியாகின்றது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்போது நிவாரணம் வழங்கி என்ன பயன்? மரணித்துப் போன அவர்களின் உறவினர்கள் மீள உயிர்பெறுவார்களா? நடந்து முடிந்த பின்னர் முதலைக் கண்ணீர் வடிப்பதை விட, இருக்கும் போது இந்த மக்களுக்காக எவரும் எதுவுமே செய்யவில்லை.

மலையக மண்சரிவு ஒரு அலட்சியப் படுகொலை!

மலையக மண்சரிவு ஒக்ரோபர் 2014
அதேவேளை, மலையகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களும் மண்சரிவு அபாயம் மிக்க மாவட்டங்களாகத்தான் இருக்கின்றன. எனவே, அபாய வலயத்தில் வாழும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டுசெல்வதற்கு அரசாங்கமும் சம்பந்தப்பட்ட தரப்பும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையேல், இன்னும் பல கிராமங்கள் மண்ணுக்குள்
புதைவதை அந்த கடவுளால் கூட தடுத்து நிறுத்த முடியாமல் போகும்.

மீரியபெத்தை பகுதியில் வாழும் மக்கள், நேற்று கதறி அழுததை பார்க்கையில், அன்று முள்ளிவாய்க்காலில், எமது வடக்கு சொந்தங்கள் ஐயோ...ஐயோ... என இட்ட மரண ஓலத்தை கேட்டது போல் இருந்தது. அது ஓர் கசப்பான அனுபவமாகும். இறுதிப்போரில் இடம்பெற்றது திட்டமிட்ட அடிப்படையிலான இனப்படுகொலை எனக்கூறப்படுகின்றது. இது பற்றி
ஐ.நாவிலும் பேசப்படுகின்றது.

முள்ளிவாய்க்காலில் நடந்ததற்கும், மீரியபெத்த பகுதியில் இடம்பெற்ற இயற்கையின் கோரத்தாண்டவத்துக்கும் என்ன தொடர்பு என்று நீங்கள் கேள்வி எழுப்பலாம்.

இரண்டு சம்பவத்திலுமே உயிர்கள் கொல்லப்பட்டுள்ளன. முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு பொறுப்புகூற வேண்டியவர்கள் இருக்கின்றனர். ஆனால், இயற்கைமீது வழக்கு தொடரமுடியுமா? முடியவே முடியாது.

எனவே, மக்கள் மீது கவனம் செலுத்தாத அரசும், மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களும்,தோட்ட நிர்வாகிகளுமே இதற்கான முழுப்பொறுப்பையும் ஏற்கவேண்டும்.

இது திடீரென இடம்பெற்ற சம்பவம் அல்ல. முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆகவே, அலட்சியத்தால் நடைபெற்றுள்ள படுகொலையாகும். 

இதற்கு இவர்கள் மட்டுமல்ல, இந்தியாவிலிலுள்ள எம்மை அழைத்துவந்த பிரிட்டிஷ்காரர்களும், எம்மை அனுப்பிவைத்த இந்தியாவும் பொறுப்புக் கூறவேண்டு்ம்.

அத்துடன், மீரியபெத்த பகுதி மக்களுக்கு நிவாரணம் வழங்க இவ்விரண்டு நாடுகளும் நிதி உதவிகளை வழங்கவேண்டும்.

குறிப்பாக மலையகத்தில் செயற்படும் சிவில் அமைப்புகள் உதவிகளை வழங்குவதை மட்டும் இலக்காகக்கொண்டு செயற்படுவதால் முழுப் பயனும் கிடைக்கப்போவதில்லை.


மக்கள் ஒன்றுபட்டுப் போராடவேண்டும்!

ஆகவே, (நாம்)அவர்களின் உரிமைகளுக்காகவும் குரல் எழுப்பவேண்டும்.
இதற்காக நாம் அத்திப்பட்டி கிராமத்து அஜித்போல் மாறவேண்டியதில்லை.

ஒற்றுமை என்ற ஆயுதத்தை கையிலெடுத்து ஓரணியில் திரண்டால் விடிவு என்பது நிச்சயம். அது இன்று அல்லாவிட்டாலும் நாளை கிடைப்பது உறுதி.
********************************************************************
குறிப்பு: ஊடகம் ஒன்றில் படித்த ஆக்கம்.இவ் ஆக்கதாரரின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.பதிலாக malayagam1@gmail.com இம்முகவரி காணப்பட்டது.புகைப்பட இணைப்பும் ஆங்காங்கே அழுத்தங்களும், அச்சுப்பிழை திருத்தங்களும்,பிரசுர அமைப்பும் நாம் இட்டவை.Admin:ENB Tenn
********************************************************************

No comments:

Post a Comment

“Nowadays, many people wondering how even to celebrate Christmas and find their daily meals,” Cardinal

Speaking to the media ahead of Christmas on Dec. 19, the cardinal urged Catholics to remember the less fortunate this Christmas, encouraging...