லட்சக்கணக்கான மக்களைப் பாதுகாக்க ஐநா தவறிவிட்டது: நவி பிள்ளை
உலக அளவில் நடக்கும் பல்வேறு மோதல்களை தடுப்பதில் ஐநாவின் பாதுகாப்புப்பேரவை உரியமுறையில் செயற்படவில்லை என்று பதவி விலகிச்செல்லும் ஐநா மனித உரிமைகள் ஆணையர் நவி பிள்ளை கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
ஐநாவின் பாதுகாப்புப்பேரவை மேலதிகமான பொறுப்புடனும் உடனுக்குடனும் செயற்பட்டிருந்தால், லட்சக்கணக்கான மனித உயிர்களை பாதுகாத்திருக்க முடியும் என்று தாம் உறுதியாக நம்புவதாக தெரிவித்திருக்கிறார் நவி பிள்ளை. பதினைந்து உறுப்பினர்களைக்கொண்ட ஐநாவின் பாதுகாப்புச்சபையில் பேசும்போது அவர் இதை தெரிவித்திருக்கிறார்.
சகித்துக்கொள்ள முடியாத மனித துன்புறுத்தல்கள், சர்வதேச அமைதியையும் பாதுகாப்பையும் பாரதூரமாக மீறிய சம்பவங்களையும் அவற்றுக்கு நீண்டகால ஆபத்துக்களை உருவாக்கக்கூடிய நிகழ்வுகளையும் ஐநா பாதுகாப்புச்சபை இரண்டாம் பட்சமாக கருதி செயற்பட்டதாக அவர் விமர்சித்திருக்கிறார்.
இதற்குக் காரணம், ஐநா பாதுகாப்புச் சபையின் உறுப்பு நாடுகள் தத்தமது குறுகியகால பிராந்திய, அரசியல் தேவைகள், குறுகிய நோக்கில் வரையறுக்கப்பட்ட தேசிய நலன்களுக்கு பலசமயங்களில் முக்கியத்துவம் கொடுத்து செயற்பட்டன என்று கூறினார் நவி பிள்ளை.
தமது ஆறு ஆண்டுகால பதவிக்காலம் நிறைவடையும் நிலையில் அவர் ஐநாவின் பாதுகாப்புச்சபையில் தமது இந்த விமர்சனக் கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.
No comments:
Post a Comment