SHARE

Friday, July 04, 2014

`` எமது காணியிலிருந்து இராணுவமே வெளியேறு`` கிளிநொச்சியில் மக்கள் ஆர்ப்பாட்டம்!

'மக்கள் காணியிலிருந்து இராணுவமே வெளியேறு': கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்
கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 4 ஜூலை, 2014 - 15:42 ஜிஎம்டி

குரல்: ``நான் என் வீட்டுக்குப் போவதற்கு இராணுவமே நீ உன் வீட்டுக்கு போ!``
யுத்தம் முடிவடைந்து ஐந்து வருடங்களாகின்ற போதிலும், இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற முடியாத வகையில் பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர், அவற்றை விட்டு வெளியேற வேண்டும் எனக்கோரி கிளிநொச்சியில் வெள்ளியன்று ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இதற்கான அழைப்பை விடுத்திருந்தது.

குறிப்பாக, கிளிநொச்சி நகரில் விடுதலைப்புலிகள் தமது அரசியல்துறை மற்றும் சமாதான செயலகம் உள்ளிட்ட பல முக்கிய அலுலகங்களை அமைந்திருந்த பரவிப்பாய்ஞ்சான் பகுதியில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் வெளியேற வேண்டும் என்று அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன், மாகாணசபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் இதில் பங்குபற்றியிருந்தனர்.
இந்த ஆர்ப்பாட்டம் குறித்து பிபிசி தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், 'விடுதலைப்புலிகள் நிலைகொண்டிருந்தார்கள் அல்லது பயன்படுத்தினார்கள் என்ற ஒரே காரணத்திற்காக அந்தக் காணிகளை இராணுவமோ அல்லது அரசாங்கமோ தமக்குச் சொந்தம் கொண்டாட முடியாது' என்றார்.

அந்தக் காணிகளையும் வீடுகளையும் இராணுவத்தினர் எந்தக் காரணத்தைக் கொண்டும் கையகப்படுத்தவும் முடியாது என்றும் அவர் கூறினார்.
'போராட்டக்காரர்களிடம் உறுதிப் பத்திரங்கள் இல்லை': இராணுவம்
இத்தகைய தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களின் மூலம், சர்வதேசத்தின் ஊடாக இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கத்துடன், ஒரு சில வாரங்களில் இரண்டாவது தடவையாக இந்த ஆர்ப்பாட்டத்தைத் தாங்கள் ஒழுங்கு செய்து நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த மாத இறுதியிலும் இத்தகைய ஆர்ப்பாட்டம் ஒன்று இதேபோன்று கிளிநொச்சி அரச செயலகத்திற்கு எதிரில் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்திருந்த இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய, குறித்த காணிகளுக்கு உரிமை கோருகின்றவர்களிடம் காணி உறுதிப் பத்திரங்கள் இல்லை என்று பிபிசி தமிழோசையிடம் கூறியிருந்தார்.

'விடுதலைப் புலிகள் தமது தலைமைப் பிரதேசமாகப் பயன்படுத்திவந்த காணியையே இப்போது இவர்கள் கேட்கிறார்கள். அந்தக் காணியை இராணுவம் கைப்பற்றி தற்போது அங்கே நிலைகொண்டிருக்கிறது. இந்த காணிப்பிரதேசத்திற்கு பல உரிமையாளர்கள் இருந்தபோதிலும், எவரிடம் காணி உரிமைப் பத்திரங்கள் கிடையாது. பலரும் உரிமை கோருகின்றனர்'
 என்றார் இராணுவப் பேச்சாளர்.

சட்டப்படியான ஆவணங்கள் மூலம் உரிமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள 108 ஏக்கர் காணிப் பிரதேசம் கடந்த நாட்களில் கிளிநொச்சிப் பிரதேச மக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Modi meets Yunus in Bangkok

PM Modi meets Bangladesh Chief Adviser Yunus, raises India’s concerns over safety of Hindus External Affairs Minister S Jaishankar and Natio...