Wednesday 11 June 2014

ஜெயா மோடி எதிர்ப்பு. மனோ கணேசன் எதிர்த்துக் கொந்தளிப்பு!

புதன், ஜூன் 11, 2014 - 15:41 மணி தமிழீழம் |

ஜெயலலிதா கொடும்பாவியை எரிக்க இவர்களுக்கு என்ன யோக்கியத்தை இருக்கிறது?

 பாராளுமன்றத்தை அதிகாரமில்லா நிறுவனமாக மாற்றி, எதிர்கட்சிகளை எட்டி உதைத்த இந்த அரசாங்கம் இன்று தன் மனித உரிமை பாவங்களை பாராளுமன்றத்துக்கு கொண்டு வந்து கழுவி, இந்நடவடிக்கையில் எதிர்கட்சிகளையும் பங்காளிகள் ஆக்க முயல்கிறது.

 தலைவர்கள் இதை செய்கிறார்கள் என்றால் அவர்களின் சீடர்கள், முதல்வர் ஜெயலிதாவின் கொடும்பாவியை எரித்து, பிரதமர் மோடியை திட்டி தீர்த்து கொழும்பு நகர வீதிகளில் இந்தியாவை ஆத்திரமூட்டுகிறார்கள் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாடு இன்று கொழும்பில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் சிங்கள, தமிழ் மொழிகளில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,  ஐநா மனித உரிமை
ஆணையாளரின் இந்த விசாரணை முஸ்தீபுகள் திடீரென இன்று காலையில் முன்னறிவித்தல் இல்லாமல் ஆரம்பிக்கப்படவில்லை.

கடந்த ஐந்து வருடங்களாக ஐநா சபை இலங்கை அரசுடன் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தது.  2009 ல் போர் முடிந்த கையுடன் ஐநா செயலாளர் நாயகமும், இலங்கை ஜனாதிபதியும் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதன் பின்னர் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ், ஜனாதிபதியின் விசேட மனித உரிமை பிரதிநிதி அமைச்சர் மகிந்த சமரசிங்க, இலங்கையின் ஐநா பிரதிநிதி பாலித கோஹன, அன்றைய சட்டமா அதிபரும், இன்றைய பிரதம நீதியரசருமான மொஹான் பீரிஸ், அன்றைய ஜெனீவா பிரதிநிதி தமரா குணநாயகம் ஆகியோர் தொடர்சியாக ஐநா சபையில் இலங்கை அரசு சார்பாக அறிக்கை சமர்பித்து உறுதிமொழிகள் வழங்கினர்.  அத்துடன் இலங்கை அரசால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சிபாரிசுகளை நிறைவேற்றுவதாக இந்த அரசு, ஐநா சபைக்கு வாக்குறுதி அளித்தது.  இந்த பல்வேறுபட்ட அடிப்படைகளில்தான் இன்றைய ஐநா மனித உரிமை ஆணையாளரின் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. ஆகவே தாம் ஏதோ ஒரு அப்பாவி அரசாங்கம் போலவும், விபரமில்லா சிறு குழந்தையை போலவும் இனிமேலும் இவர்கள் நாடகம் நடிக்க முடியாது.  இன்று இந்த நாட்டில் பாராளுமன்ற அதிகாரங்களை இந்த அரசு வெட்டி துவம்சம் செய்து ரொம்ப நாளாகிவிட்டது. இன்று அதிகாரம் முழுக்க அலரி மாளிகையில் குவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் அரசியலமைப்பை திருத்தும் முக்கியமான 18ம் திருத்த மசோதாவை, காலையில் சமர்பித்து, பகலில் பேசி, மாலையில் சட்டமாக்கி கொண்டு போனவர்கள் இவர்கள்.  அதற்கு விலைகொடுத்து வாங்கப்பட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களை பயன்படுத்தியவர்கள், இவர்கள். அன்றே இந்த பாராளுமன்றத்தின் மகிமை இவர்களால் தோற்கடிக்கப்பட்டது.  இன்று வெள்ளம் தலைக்கு மேலே போய் கொண்டிருக்கின்றது. கழுத்து பட்டி இறுகுகின்றது. இந்த பாரதூர நிலைமை இப்போது அரசுக்கு நன்கு தெரியும்.

ஆகவேதான், பாராளுமன்றத்துக்கு இந்த விடயத்தை தள்ளி பொறுப்பை எம்பீக்களிடம் விட்டுவிட்டு இந்த அரசாங்க தலைமை தப்ப பார்க்கிறது.  இதனால்தான் இன்று இவர்களுக்கு பாராளுமன்றம் மீது திடீர் பாசமும், மரியாதையும் ஏற்பட்டுள்ளது.  முதல்வர் ஜெயலலிதாவின் கொடும்பாவியை எரிக்க இவர்களுக்கு என்ன யோக்கியத்தை இருக்கிறது? இங்கே இவர்கள் செய்யும், பேசும் இனவாத, மதவாத கருத்துகளுக்கு பதிலடியாகத்தான் தமிழக அரசியல்வாதிகள் செயற்படுகிறார்கள்.  இதில் இரகசியம் கிடையாது. இங்கே தமிழருக்கும், முஸ்லிம்களுக்கும் அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை கூட கொடுக்க வேண்டாம் என கூச்சல் எழுப்பும் இனவாதிகள், ஜெயலலிதாவை பார்த்து தமிழ் இனவாதி என்றும், மோடியை பார்த்து சர்வதிகாரி என்றும் கூக்குரல் எழுப்புவது வேடிக்கை.  இதில் தேசிய தேசப்பற்று இயக்க தலைவர் பல்வைத்தியர் குணதாச அமரசேகர கோமாளித்தனமாக பேசுகிறார்.

ஜெயலலிதா, இலங்கையில் தனித்தமிழ் ஈழத்தை உருவாக்கி, பின்னர் இந்தியாவில் தமிழ்நாட்டை தனித்தமிழ் நாடாக்கி, ஒரு அகண்ட தமிழ் ராஜ்யத்தை உருவாக்க முயல்கிறார் என இவர் சொல்கிறார்.  ஆகவே பிரதமர் மோடி கவனமாக இருக்க வேண்டும் என இந்தியாவின் ஐக்கியத்தில் மிகவும் அக்கறை உள்ளவர் போல கருத்தும் கூறுகிறார்.  இவரேதான் சில மாதங்களுக்கு முன்னர் இந்தியா துண்டு துண்டாக உடைந்து போக வேண்டும் என்று பகிரங்கமாக சாபம் இட்டவர். ஆகவே இந்த பல் வைத்தியர், பைத்தியத்துக்கு வைத்தியம் செய்யும் ஒரு வைத்தியரை சந்திக்க வேண்டும்.

No comments:

Post a Comment

அநுரா ஆட்சியில் செல்வினின் பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பொறுப்பு பறிப்பு!

அநுரா ஆட்சியில் செல்வினின் பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பொறுப்பு பறிப்பு! பனை அபிவிருத்தி சபைத் தலைவராக இரானியேஸ் செல்வின் அவர்களைப் பொறுப்ப...