தமிழ்ப்புலவர் மேதகு புலமைப் பித்தன் அவர்கள். |
என் அன்புத் தம்பி வைகோவுக்கு,
உன் அண்ணன் ஏழைப்புலவன் எழுதும் மடல்!
வணக்கம்! வாழிய நலம்!
தம்பி என்று நான் உன்னை அழைப்பதை ஒப்புக்காக அழைப்பதாக நினைத்துக் கொள்ளாதே. என் மனசாட்சிப்படி நான் உன்னை தம்பி என்று அழைக்கிறேன்.
தம்பி! நான் ஒருமையில் நீ என்றும், உன்னை என்றும் தான் குறிப்பிடுகிறேன். பன்மையில் நீங்கள் உங்கள் என்றெல்லாம் எழுத முடியவில்லை. அப்படி எழுதினால் நீ எனக்கு அந்நியமாகி விடுவாய்.
நான் தந்தை பெரியாரின் கொள்கையிலிருந்து இந்த நாள் இந்தக் கணம் வரையில் அணுவளவும் விலகியதில்லை.
ஈழ விடுதலைக் கொள்கையிலிருந்தும் எப்போதும் பிறழ்ந்ததில்லை. இதை நான் சொல்லித்தான் உனக்குத் தெரிய வேண்டும் என்பதில்லை.
நான் உன் மீது வைத்திருக்கும் நம்பிக்கை மலையளவு!
நம்பற்குரியர் அவ்வீரர் என்று பாரதி சொன்ன வரியை நான் உனக்கெழுதிய வரியாகத்தான் எடுத்துக் கொண்டிருக்கிறேன்.
என் மனம் என்ன நினைக்கிறதோ அதை மட்டும்தான் நான் பேசுவேன். என் மனம் நினைக்காததை நினைத்தது போல் பாசாங்கு செய்ய இந்தப் பைத்தியக்காரனுக்குத் தெரியாது! தெரியவும் வேண்டாம்!
கால் கொப்புளிக்கக் கொப்புளிக்க நடந்து வந்த உன் நெடிய பயணத்தை முடித்து வைக்க உன் அன்புக் கட்டளையை ஏற்று ஈரோட்டுக்கு வந்தேன்.
‘‘ஒரு நெடிய பயணத்தை முடித்து வைப்பதற்காக மட்டும் நான் இங்கு வரவில்லை.இதைக்காட்டிலும் ஒரு நீண்ட இலட்சியப் பயணத்தைத் தொடங்கி வைப்பதற்காகவும் இங்கே வந்திருக்கிறேன். அது ஈழ விடுதலைக்கான இலட்சிய பயணம்’’
என்று நான் சொன்ன போது கூட்டத்தில் எழுந்த கரவொலி அடங்க நெடுநேரம் ஆனது. அந்தக் கூட்டம் வரவேற்றுக் கைதட்டியது எனக்காக அல்ல. நான் சாதாரணமானவன்; சாமானியமானவன்! நான் உன்னைப் போல் பெரிய பேச்சாளனும் அல்ல, பெருமைக்குரிய தலைமைத் தகுதி பெற்றவனும் அல்ல!
தம்பி!
அந்த வரவேற்பு நான் உன் மீது நம்பிக்கை வைத்துச் சொன்ன கருத்துக்காக! நீ அதற்கு தகுதியானவன் என்பதற்கான அங்கீகாரத்துக்காக!!
இன்று நாட்டிலே ஈழ விடுதலை பற்றி எத்தனையோ பேர் பேசுகிறார்கள்.
நான் உன்னைத்தான் நம்பினேன்.
உன்னை மட்டுமே நம்பினேன்.
என் நம்பிக்கை நட்சத்திரமே!
தேர்தல் காற்றடித்ததிலேயே உதிர்ந்து போய் விட்டாயே!
விதைக்காக வைத்திருந்த நெல் விற்பனைக்குப் போகலாமா?!
நீ எழுச்சி மிக்க இளைஞர் பட்டாளத்தைக் கொண்டிருக்கும் ஓர் இயக்கத்தின் தலைவன் என்றுதான் நம்பிக் கொண்டிருந்தேன்.
உன் கட்சியைத்தான் நான் இயக்கம் என்றும் கருதியிருந்தேன். இயக்கம் வேறு! கட்சி வேறு!
தம்பி!
பாண்டவர் சூதாடு களத்துக்குப் போனது போல் நீ ஏன் சூதாடு களத்துக்கு போயிருக்கிறாய்? தேர்தல் என்பது சூதாடு களம் அல்லாமல் வேறு என்ன?
இந்தியாவில் ஜனநாயகம் கல்லறைக்குள்ளே நிரந்தரமாகப் புதைக்கப்பட்டு விட்டது!
தேர்தல் சூதாடு களத்துக்கு போவது தான் போகிறாய், யாரோடு சேர்ந்து நீ போகிறாய்?
மோடியை நாட்டுக்குப் பிரதமராக முடி சூட்டப்போவது அறிவார்ந்த செயலா?
கொழும்பில் ஒரு ராஜபக்ஷே என்றால், குஜராத்திலும் ஒரு ராஜபக்ஷே!
அருமைத் தம்பி!
நீ படிக்காத எதையும் நான் படித்திருக்கவில்லை.
1946 ம் ஆண்டு மே மாதம் 15 ம் நாள் கோட்சேவைப் புனேவுக்கு வரவழைத்து இந்துராஷ்ட்ரா பத்திரிகை தொடங்குவதற்காக சாவர்க்கர் பதினைந்தாயிரம்
ரூபாய் கொடுத்தார். அந்த இந்து ராஷ்ட்ராவை இலட்சியமாகக் கொண்டவர் தான் மோடி. அதனால் தான் ஊடகங்கள் அத்தனையும் வரிந்து கட்டிக் கொண்டு மோடிக்கு பட்டாபிஷேகம் நடத்தியே தீருவது என்று புறப்பட்டிருக்கின்றன.
இந்தியாவைக் கலவர பூமியாக்க அயோத்தியில் மசூதியை இடித்த அத்வானியைக் கூட புறந்தள்ளி விட்டு மோடிக்கு மகுடம் சூட்டத் துடிக்கிறார்களே ஏன்?
விழுந்து கிடக்கும் இந்து ராஷ்ட்ராவைத் தூக்கி நிறுத்தும் இலட்சிய வீரர் மோடி என்று கருதுகிறார்கள். அந்தக் கருத்தில் பிழையில்லை. அந்த வேலைக்கு மோடி தகுதியானவர் தான்.
2002 ம் ஆண்டு;
இராட்டை சுற்றிய அரை நிர்வாணப் பக்கிரி காந்தி பிறந்த மண்ணில் நர வேட்டையாடிய மகாத்மா, மாமனிதர் மோடி தானே!
மனித நேயத்துக்கு மரண தண்டனை கொடுத்தவர் அந்த மகான் தானே!
2002 ம் ஆண்டு நடந்த ரயில் எரிப்புச் சம்பவத்துக்குப் பின்னால் குஜராத்தே கொலைக்களமாக மாறிப் போயிற்றே நினைவில்லையா?
பர்தா போட்டவர்கள் என்கிற காரணத்துக்காகவே பட்டப்பகலில் வெட்ட வெளியில் வைத்து பாலியல் வன்முறைக்கு ஆளாக்கி கொன்றொழிக்கப்பட்டார்களே!
நிறைமாதக் கர்ப்பிணிகளின் வயிற்றைக் கிழித்துச் சிசுவை எடுத்துப் பெட்ரோல் ஊற்றி எரிந்து கொண்டிருந்த நெருப்பில் போட்டுத் தகனம் செய்தார்களே!
பெஸ்ட் பேக்கரி முற்றிலும் எரிந்து சாம்பலானது போல பலபேர் சாம்பலாகிப் போனார்களே!
இத்தனை கோரச் சம்பவங்களையும் நாச நர்த்தனத்தையும் கண்டும் காணாமல் தடுக்க நினைக்காமல் காவல்துறையே துணை நின்றது.
அதை மறந்து விட்டாயா?
ஈழத்தில் நம் உறவுகளைப் படுகொலைக்கு ஆளாக்கி விட்டு வெற்றிக் களிப்போடு வந்த ராஜபக்ஷேவுக்கு மது விருந்து கொடுத்து மகிழ்ந்த சோனியாவுக்கும் மன்மோகனுக்கும், மகான் வேஷம் போட்டு வருகிற இந்த மோடிக்கும் என்ன வேறுபாடு?
இதையெல்லாம் பார்க்கிற போது, கேட்கிற போது மனித நேயம் மிக்கவர்களின் இதயத்தில் எரிமலை வெடிக்க வேண்டாமா?
உனக்கு அப்படி வெடிக்கவில்லையா?
உன் இதயம் துடிக்கவில்லையா?
வேறு வழியில்லையே, என்கிறாயா தம்பி?
தேர்தல் அரசியலுக்கு வழிகாட்டிய அண்ணா வழி இந்த நேரத்தில் பயன்படாது என்ற நிலை வரும் போது பெரியார் வழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது தானே உன்னைப் போன்ற இலட்சியவாதிக்கு அழகு!
வழி முக்கியம் அல்ல! வெற்றிதான் முக்கியம் இது வடவர் கொள்கை.
வெற்றி முக்கியம் அல்ல! வழிதான் முக்கியம் இது தமிழர் கொள்கை.
நான் இன்னும் ஒன்றை உன்னைப் பார்த்துக் கேட்கிறேன்.
இந்திய நாடாளுமன்றத்தில் உனக்கு என்ன வேலை தம்பி?
பிரிட்டிஷ் நாடாளுமன்றமாவது நம் தமிழினத்துக்குத் துணை நிற்கும்.
பிரிட்டிஷ் பிரதமர் கேமரூனாவது தமிழினத்துக்காக மனமிரங்குவார்.
மன்மோகனுக்கே மனிதநேயம் இல்லாமல் போன பின்னாலே
ஒரு பாவமும் அறியாத மக்களுக்கு மரண ஓலை எழுதிய மோடிக்கா இருக்கப் போகிறது?
கூப்பிடு தூரத்தில் நடந்த மாபெரும் இனப்படுகொலைக்கு ‘கலியுக அர்ச்சுனன்’
கண்டனம் தெரிவித்தாரா? இரண்டு சொட்டு கண்ணீர் சிந்தினாரா?
சுஷ்மா சுவராஜ் கொழும்புக்குப் பறந்து போய் சிங்கள ஹிட்லர் கொடுத்த விருந்திலே கலந்து கொண்டு அவனை வியந்து பாராட்டி வாழ்த்துக் கூறிவிட்டு வந்தாரே! இதிலிருந்து மோடியை நீ வேறுபடுத்திப் பார்க்கிறாயா?
தம்பி!
ஒருக்கால், நீ இந்தக் கூட்டணியில் இடம் பெற்று வெற்றி பெற்றாலும் பெறலாம். ஆனால் உன் இலட்சியம், உன் கொள்கை அந்த வெற்றியால் படுதோல்வியைச் சந்திக்கும் என்பதை மறந்து விடாதே!
பதவியும் பணமும் கொள்கை கோட்பாடுகளைக்
கொன்றொழிக்கும் கொலைக்கருவிகள்’’
இதுதான் நான் படித்த தத்துவம்.
தம்பி!
இதை, நான் உனக்கு சொல்லாமல் வேறு யாருக்குச் சொல்வேன்?
இதை, நான் உனக்குச் சொல்லாமல் வேறு யார் உனக்குச் சொல்வார்கள்?
என் உயவு நோயை மன உளைச்சலை உனக்குத் தெரிவிக்கிறேன்.
அது என் நீங்காத கடமை.
இதை நீ எப்படி எடுத்துக் கொண்டாலும் அது பற்றி நான் கவலைப்பட மாட்டேன்.
நான் ஒரு பத்திரிகையின் கடைசிப் பக்க அட்டைப் படத்தைப் பார்த்தேன்.
உன் கட்சித் தோழர்கள் உருவகப்படுத்தி வரைந்த ஓவியத்தையும் பார்த்தேன்.
பாவம், அவர்களுக்கு தெரியாது தம்பி; நீ ஈரோட்டுத் தேரை இந்து ராஷ்ட்ராவை ஏற்றி வருவதற்காக குஜராத்திற்குப் போகிறாயா தம்பி?
நீ ஏற்றி வரப்போகிறவர் தர்மத்தைச் சூது கவ்வும் என்று சொன்ன அர்ச்சுனனும் அல்ல! நீ கண்ணனும் அல்ல!
துரியோதனனுக்கு தேரோட்டப் போகும் கர்ணன் நீ!
நான் சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டேன்;
உன் விருப்பம் போல் செய் தம்பி!
அன்புடன்
புலமைப்பித்தன்.
நன்றி தமிழக அரசியல் வாரமிருமுறை இதழ்
No comments:
Post a Comment