இருண்ட கண்டத்தில் விரிந்த மலரே!
வாழ்த்துக்கள்.
இரும்புத்திரையை உடைத்தெழுந்த கதிரே!
மேகங்களிடம் ‘முத்தங்களும்’
காற்றிடம் ‘மலர்ச்செண்டும்’ அனுப்பியுள்ளோம்.
பெற்றுக்கொள்.
‘இதரைவாழைக்கன்றுகள்’ இரண்டை
இனிவரும் கடலலைகளிடம் கொடுத்து விடுகின்றோம்.
கொடிமரத்துக்கருகில் பாத்தி கட்டி நாட்டிவிடு.
அடிபெருகி எங்கள் அன்புக்குக் குலைதள்ளட்டும்.
நேற்றுவரை தென்னாபிரிக்கா என்றே
உன்னை அழைத்தோம்.
இன்று ‘என் ஆபிரிக்கா’ என்றே
இங்கே ஒவ்வொருவரும் உச்சரித்துக் கொள்கின்றோம்.
‘வாஸ்கொடாமா’வுக்கு மட்டும்தான்
நீ ‘நம்பிக்கைமுனை’யாக இருக்கவில்லை
போராடும் எங்களுக்கும் அப்படித்தான் புலப்படுகின்றாய்
நெல்சன் மண்டேலா!
கறுப்புச் சிங்கமே! கையை நீட்டு.
குலுக்கிக் கொள்ளுவோம்.
உன்னைக் கட்டித்தழுவத் துடிக்கின்றோம்.
என்ன செய்வது நீ எட்ட இருக்கின்றாய்.
அன்று நீ ‘சிம்மாசனம்’ ஏறியபோது
எமக்கேன் அழைப்பனுப்பவில்லை?
சிறீலங்காவுக்கு நீ எந்தவழி உறவு?
விஜேதுங்காவை விருந்துக்கழைத்தபோது
தமிழீழம் உன் கண்களுக்கு ஏன் தட்டுப்படவில்லை?
இது விருந்து கிட்டவில்லையென்ற விசனமல்ல...
போராடும் பூமியொன்றை
புறமொதுக்கிவிட்டாய் என்ற ஆதங்கம் மட்டுமே.
போகட்டும் இதனால் கோபமேதுமில்லை.
இனிமேலாவது நண்பர்களை இனம் கண்டுகொள்.
நன்மை உனக்குத்தான்.
ஆபிரிக்காவின் ‘காப்பிரி’ மக்களே!
சூரியனை வழிமறித்து
தொட்டுப் பேசும் வல்லமையின் வடிவே!
காற்றுக்கொதுங்கிய வெள்ளையன்
நேற்றுவரை உன் முதுகில்தான் இருந்தான்.
கறுப்பனென்று உன்னை அழைத்தபோது
வெள்ளை உதடுகள் வேதனைப்படவில்லை.
மலத்தைக்கூட தன்வீட்டில் அறைகட்டிக் குடியிருத்தியவன்
உன்னை வீதியில் உலாவவிடவில்லை.
படுக்கை அறைக்குள்ளும் நாயை அழைத்தவன்,
அடுப்படிக்குள்ளே கோழியை அனுமதித்தவன்,
கறுப்பனைத்தொடும் காற்றைக்கூட
வெறுத்து விரட்டினான்.
அழகான உன் கரிய மேனியும்
உரமேறிய தசைநார்களும்
அவனுக்கு அச்சத்தைத் தரவில்லை.
அருவருப்பாகவே இருந்தது.
நீ பேசாமல் இருக்கவில்லை
போராடினாய்.
வெற்றிக்கம்பத்தைத்தான்
உன்னால் தொட்டுவிடமுடியவில்லை.
உங்கு வேர்கொண்ட மரங்களெதுவும்
நீர்குடித்து வளரவில்லை.
கறுப்பனின் குருதி குடித்தே தளிர்த்தன.
உலகெங்கும் தார்பூசியே வீதி கறுப்பானது.
உன் நாட்டில் மட்டும்தான்
கறுப்பனின் வியர்வை பட்டு வீதி கறுப்பானது.
வெள்ளைச் சீமாட்டிகளின் விருந்துக்குப் பிறகு
வீசியெறியும் எச்சில் இலைக்காக
உன்பரம்பரை தாழ்வாரத்தில் தவமிருந்தது.
வந்தவன் ஆள நீ வயலில் மாடானாய்.
வெள்ளைக்காரன்
மாட்டுத்தொழுவத்தில் கறுப்பியின் முலைதொடுவான்.
கறுப்பனுக்கு மட்டும் காயடிப்பான்.
நீ புயலாகிப் போராடியவன்தான்.
என்ன செய்வது?
அம்பும் வில்லும்தான் உனக்கு அகப்பட்டது.
அவனிடம் துப்பாக்கியல்லவா இருந்தது!
காலங்கள் கழிந்தனவே தவிர
உன் துன்பங்கள் கழிய வழிவந்து சேரவில்லை.
நீண்ட காலத்தின் பின்
‘நெல்சன் மண்டேலா’ வந்து பிறந்தபோதுதான்
நெஞ்சு நிமிர்த்தினாய்.
எப்படியோ
சுற்றிய இரும்புவேலிச் சுவர்கள் இடிந்தன.
இன்று ஆபிரிக்காவுக்கு சிறகுமுளைத்துவிட்டது.
புதிதாகப் பிறந்த கறுப்புதேசமே!
விடுதலைக்கு நீ கொடுத்த விலையிலும்
அதிகவிலை நாங்கள் கொடுக்கின்றோம்.
நீங்கள் போராடும் விதமே வித்தியாசமானது.
உனக்குப் பக்கத்து நாடுகள் பால்வார்த்தன.
எமக்கு அண்டை நாடொன்று நஞ்சையே தந்தது.
நின்றும், நடந்தும், குனிந்தும், நிமிர்ந்தும்
நீ வசதிக்குத் தக்கபடி வழிமாறியுள்ளாய்.
நாங்கள் பாதை மாற்றும் பரம்பரை இல்லையே!
விடுதலையைப் பேசிப்பெறும் எண்ணம் எமக்கில்லை.
போராடிப்பெறுவதென்றே முடிவு.
பிரபாகரனைப் பார்க்காவிட்டாலும், கேட்டிருப்பாய்.
தொட்டுத் தோழமையை வளர்த்துக் கொள்.
கண்டங்கள் கடந்து வாழ்ந்தாலும்
நாங்கள் உணர்வால் ஒன்றுபட்டவர்கள்.
நிறத்தால் வேறுபட்டாலும்
நீங்கள் விடுதலை பெறவேண்டுமென்று
அதிகம் விரும்பியது நாங்கள்தான்.
ஏன் தெரியுமா?
வெள்ளைக்காரன் உன்னை மட்டுமா அடக்கினான்?
இல்லை.
எம்மை அடக்கவும் எதிரிக்குத் துணைபோனான்.
இங்கே கண்ணிவெடியில் சிதறும்
‘பவள்’ கவச வண்டியை எதிரிக்கு அனுப்பியதே
வெள்ளைத்தோல் வெறியன்தான்.
இனி இது நடக்காது.
நாங்கள் நம்புகின்றோம்.
போராடிப் பெற்ற சுதந்திரத்தின்
பெறுமதி புரிந்தவர்கள் நீங்கள்.
விடுதலையின் முகவரி தெரிந்தவர்களே!
எங்கள் சுதந்திரத்துக்கு முத்திரை ஒட்டுங்கள்
நம்பிக்கைமுனை நாடே!
எங்களின் நம்பிக்கையை
நாசமாக்கி விடாதே;
கறுப்புச் சிங்கமே நெல்சன் மண்டேலா.
ஒரு கேள்வி பதில் வேண்டும்.
சில இடங்களில் சேற்றிலேன் காலைப்புதைத்தாய்?
சமாதானத்துக்கான நோபல் பரிசை
வேடனும் புறாவும் எப்படிப் பங்கிட முடியும்?
குருதிபடிந்த வெள்ளைக் கொலைக்கரமும்
சிறையில் வாடிய உன் கரிய திருக்கரமும்
குலுக்கிக்கொண்டபோது
அந்த விருதை எப்படி விளங்கிக்கொண்டாய்?
பரிசு வாங்கியபோது
உன் பரம்பரை சிந்திய குருதியை
எப்படி மறந்து கைகளை நீட்டினாய்?
என்றாலும் உன்மீது கோபம் வரவில்லை.
கறுப்புச் சிங்கமே! கைகளை நீட்டு.
குலுக்கிக் கொள்ளுவோம்.
- புலவன் புதுவை இரத்தினதுரை
No comments:
Post a Comment