Sunday, 30 December 2012

யாழ். பல்கலைக்கழக மாணவர் போராட்டத்தை முறியடிக்க விசேட கூட்டம்.

யாழ். பல்கலைக்கழகம் தொடர்பில் 31ம் திகதி விசேட கூட்டம்.
வீரகேசரி 2012-12-29 11:19:06

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தொடர்பில் எதிர்வரும் 31ம் திகதி விசேட கூட்டமொன்று நடைபெறவுள்ளதாகத் தெரிகின்றது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விரிவுரைகளை மாணவர்கள் பகிஷ்கரித்து வருகின்ற நிலையில்பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பது குறித்து இந்தக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மாணவர்களின் போராட்டம் தொடர்பில் கலந்துரையாடி தீர்மானமொன்றுக்கு வரும் வகையிலேயே எதிர்வரும் திங்கட்கிழமை கூட்டம் நடைபெறவுள்ளது.
==========
``விடுதலைப்புலிகளின் கொள்கைகளை இப்போதும் பின்பற்றும், மாணவர் கனவு  கலைக்கப்படும் வரையில் அவர்கள் விடுதலை செய்யப்படப் போவதில்லை’’.
யாழ் கட்டளைத் தளபதி

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர்களது விடுதலை தொடர்பில் யாழ் பல்கலைக்கழக சமூகத்திற்கும் யாழ் மாவட்ட கட்டளை தளபதிக்கும் இடையில் பலாலி படைத் தலமையத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது அதன் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

கைது செய்யப்பட்ட மாணவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும் அவரே எமது தலைவர் , அவரின் ஆட்சி விரைவில் அமையும் எனவும்  கூறிவருகின்றனர்

இதனாலே இவர்கள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் எனவே பல்கலைக்கழக மாணவர்கள் விடுதலை செய்யும் வரை யாழ் பல்கலைக்கழக செயற்பாடுகளை ஆரம்பிக்கப்படாது என காத்திருப்பது கனவிலும் கூட நடக்காது எனவே விரைவாக கல்விச் செயற்பாடுகளை ஆரம்பிக்க வேண்டும்.

அத்துடன் தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர்களை சந்திக்கப்போகும் போது பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம்  ``விடுதலைப்புலிகளுடன் தொடர்பில்லை , நாம் இனிமேல் இவ்வாறான செயற்பாடுகளை செய்ய மாட்டோம் எனக் கூறுங்கள்`` எனவும் ஆலோசனை கூறினார்!

அவ்வாறு அவர்கள் கூறுவார்களாயின் அவர்களது விடுதலை விரைவில் கைகூடும். இவ்வாறு அமையுமானால் அவர்களின் விடுதலை தொடர்பில் நானும் கலந்துரையாடி அவர்களை விரைவில் விடுவிக்க முடியும்.

நாம் சமய நிகழ்வுகளுக்கு  தடையில்லை ஆனாலும் பயங்கரவாத
செயற்பாடுகளுக்கு நாங்கள் இடமளிக்க மாட்டோம். அன்றைய தினம் பல்கலைக்கழக வளாகத்தில் 20ற்கு மேற்பட்ட பிரபாகரனின் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதுடன் சில விரும்பத்தகாதாத செயற்பாடுகளும் நிகழ்கின்றன என்ற தகவல் கிடைக்கப்பெற்றதும் .அதனை நிறுத்துவதற்காக இராணுவமும் பொலிஸாரும் வளாகத்திற்குள் நுழைய வேண்டிய சூழல் ஏற்பட்டது.

சில அரசியல் வாதிகள் சுயலாபம் தேடும் நோக்குடன் மாணவர்களைத் தூண்டிவிட்டுள்ளனர். அத்துடன் 15 ஆயிரம் பாதுகாப்புப்படையினர் இருக்கின்ற இடத்தில் அவர்கள் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்டவர்கள் இருக்கின்றனர் என்று கூறிவருகின்றனர். இது தவறான கருத்து.

இலங்கையில் உள்ள  இதர பல்கலைக்கழகங்கள் போலவே யாழ். பல்கலைக்கழகமும். அதில் எந்த வேறுபாடும் இல்லை.மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குள் இருக்கும் போது அவர்களுக்கு கல்விதான் முக்கியம். கல்வியை முடித்து வெளியில் வந்து அவர்கள் அரசியல் நடத்தலாம். அதற்கு எந்தத் தடையும் இல்லை.

தர்சானந் மற்றும் ஜெனமேஜெயன் ஆகியோரை எனக்கு 8 மாதங்களுக்கு முன்பே தெரியும். கல்வியில் மாத்திரம் கவனம் செலுத்துங்கள் என்று அவர்களுக்கு நான் கூறியிருந்தேன்.

தற்போது குறித்த நால்வரும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவில்லை. சாதாரணமான கைதாகவே அமைகின்றது. எனினும் இவர்களது உறுதிப்பாடு தளர்ந்து தாம் நிரபராதிகள் எனக் கூறும் வரைக்கும் இவர்கள் தடுத்து வைக்கப்படுவார்கள். இது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.

எனினும் அவர்களுடைய உறுதிப்பாட்டில் மாற்றம் ஏற்படுமாயின் அவர்களை விரைவாக விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கமுடியும் என்றார்.

 மாறாக இனியும் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் வருவார் எனவும், அவரின் கொள்கைகள் பின்பற்றப்பட வேண்டும் எனவும், இவர்கள் கனவு காண்பார்கள்  ஆனால்,  அந்தக்கனவு கலைக்கப்படும் வரையில் அவர்கள் விடுதலை செய்யப்படப் போவதில்லை.

மேலும் புலம்பெயர் நாடுகளிலுள்ள நெடியவன், விநாயகம் போன்ற பயங்கரவாதிகளுடன் இவர்களுக்கு நேரடியான தொடர்புகள் இருப்பதை நாம் உறுதி செய்திருக்கின்றோம்.

இதிலும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளரான தர்சானந்த் மற்றும் சொலமன் ஆகியோர் புலிகள் அமைப்பின் பிரிகேடியர் தரத்திலானவர்கள்.


ஜே.வி.பியின் போராட்டத்திற்கும், புலிகளின் போராட்டத்திற்கும் நிறையவே வித்தியாசமுள்ளது. புலிகள் தனிநாடு கோரி போராடினார்கள். அதற்கு நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.


உலகமே புலிகளை பயங்கரவாதிகள் என அடையாளப்படுத்தியிருக்கின்றது.
எனவே நாம் இதற்கு அனுமதிக்க மாட்டோம். எனக் கூறியதுடன், விரிவுரையாளர்களும்,பெற்றோரும் தமது பிள்ளைகள் தொடர்பில் பேச முற்பட்டபோது அவர்களை வாயை மூடுங்கள் என அடக்கியுள்ளார்.

இதனையடுத்து, கைதுசெய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோர் கண்ணீர் விட்டழுது தங்கள் பிள்ளைகளை விடுவியுங்கள் எனக் கேட்டபோது கிட்லர் பாணியில் சிரித்தபடியே எழுந்து சென்றுவிட்டார்

( தகவல் இலங்கை ஊடகங்கள்)

No comments:

Post a Comment