`வீட்டுப்பாடம் செய்து விட்டு` முறையான முன் தயாரிப்புடன் சிறீதரன் பா.உ.அவர்கள் சபையில் உரையாற்றியிருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. அவர் உரையின் முக்கிய பகுதி கிளிநொச்சி, யாழ்ப்பாணக் குடாநாடு, தீவகற்ப விவசாயிகளின் நீர்ப்பிரச்சனை சம்பந்தமானதாகும்.இது குறித்து அவர் நிறைய விபரங்களுடனும் சிங்களத்தின் திட்டத்துக்கு மாற்றாக உண்மையில் கடைப்பிடிக்க வேண்டிய மாற்றுத்திட்டத்தையும் முன் மொழிந்து ஒரு ஆக்கபூர்வமான உரையாற்றியுள்ளார்.
எனினும் இப்பிரச்சனையின் கோட்பாட்டு அடிப்படையை பா.உ சற்றேனும் கிரகித்துக்கொள்ள முயலவில்லை.இதிலிருந்துதான் அவருடைய ‘நல்லிணக்கம்`, மற்றும் தென்னாபிரிக்கா, பாலஸ்தீனம் போல் `ஐ.நா.தமிழீழம்` அமையும் என்ற அபத்தமான கற்பனைகளும், கட்டுக் கதைகளும் பிறக்கின்றன.
சீறிதரன் பா.உ ஒரு ஊக்கமுள்ள மனிதராகத் தோன்றுகிறார்.மக்கள் பிரச்சனைக்கு உள்ளாகிற எல்லாச் சந்தர்ப்பங்களிலும் மக்களோடு மக்களாக நிற்கிறார்.மீள்குடியேற்றப் பிரச்சனையில் அவர் துணிந்து போராடினார். இதனால் அவருக்கு உயிராபத்தும் உண்டு.இருந்தும் அவர் அஞ்சவில்லை துஞ்சவில்லை.ஒரு நல்ல மக்கள் தொண்டனாக செயல்பட முனைகின்றார். இதனால் ஈழத்தமிழர்களின் குரலாக மாறிவருகின்றார். உள்நாட்டு ஊடகங்களும் சர்வதேச ஊடங்கங்களும் அவரூடாக ஈழத்தமிழர் நிலையை அறிய முயலுகின்றனர்.எனவே அவருடைய பார்வை அல்லது நோக்கு நிலை நின்று அவர் பேசுகின்ற விடயங்கள் ஈழத்தமிழர் வாழ்வின் மீது பாதிப்புச் செலுத்துவனவாய் உள்ளன.விரும்பியோ விரும்பாமலோ இப்படி ஒரு பாரிய பொறுப்பை அவர் சுமக்கின்றார்.இதனால் அவரது நன்முயற்சிகள் அனைத்தையும் வரவேற்கும் அதேவேளை அவர் தொடர்ந்து பிரச்சாரப்படுத்தி வருகின்ற போலியான பொய்யான மாயையான இந்த ஐ.நா.வுடன் அவருக்குள்ள தீராக் காதலைப் பற்றிய விமர்சனம் இக்குறிப்பாகும்.
கிளிநொச்சி விவசாயிகளின் நீர்ப்பிரச்சனை தீர்க்கப்படாதுள்ளபோது, யாழ்க்குடாவுக்கு ஆனையிறவு நன்னீர் திட்ட வாய்ப்பு உள்ளபோது கிளிநொச்சி விவசாயிகளுக்கு பற்றாக்குறையாகவுள்ள நீரை யாழ்ப்பாணத்துக்கு பகிர்ந்தளிப்பது, மாங்குளம் ஒரு மாநகரமாக மாற்றப்படவிருப்பது, (இது திட்டமிட்ட இராணுவக் குடியேற்ற நகரமாகவே அமையும் என்பதை பா.உ. வெளிப்படையாகக் கூறவில்லை) இந்த மெய்விபரங்கள் விளக்குவது என்னவென்றால் ஈழத்தமிழர்களின் தேசிய இனப்பிரச்சனை என்பது சாராம்சத்தில் விவசாயப்பிரச்சனையே என்பதாகும்.இனப்பிரச்சனை என்பது அதன் வெளிப்பாடு அல்லது தோற்றப்பாடு மட்டுமே.மனித உடலில் கொப்பளங்கள் போடுவது பல்வேறு நோய்களுக்கு காரணமான வெளிப்பாடுதான்.கொப்பளமே ஒரு நோயாகாது.இலங்கையில் தமிழர்கள் வாழ்வதற்குப் பதில் குர்திஸ் மக்கள் வாழ்ந்திருந்தாலும் தேசிய இனப்பிரச்சனை இருந்துதான் இருக்கும். ஏனென்றால் விவசாயப்பிரச்சனை இருந்திருக்கும்.
ஏன் விவசாயப்பிரச்சனை இருந்திருக்கும்?
அது உலகு தழுவிய பொது விதியாக இருப்பதுதான் காரணம்.நேரடி காலனியாதிக்கத்திலிருந்து விடுபட்டு அதிகாரம் ஏகாதிபத்திய தரகு வர்க்கங்களுக்கு கைமாற்றப்பட்டு போலிச்சுதந்திரம் அரசோச்சத் தொடங்கியபோதே உள்ளூர் விவசாயம் புறக்கணிக்கப்பட்டுவிட்டது. பெருவீதத் தொழிற்துறையில் முதலீடு தடைசெய்யப்பட்டு விட்டது.
இவை அனைத்து அரைக்காலனிய நாடுகளுக்கும் பொருந்துகின்ற உலகு தழுவிய பொது விதியாகும்.ஏகாதிபத்திய காலகட்டத்தின் பொதுவிதியாகும்.
ஏகாதிபத்தியம் உள்ளவரை இப்பொது விதியும் செயல்பட்டுக்கொண்டே இருக்கும்.ஏகாதிபத்திய நெருக்கடி தீவிரமடையத் தீவிரமடைய விவசாயிகள் மீதான தாக்குதலும் தீவிரமடையும்.இவ்வாறுதான் 70களில் ஜே.ஆரின் திறந்த பொருளாதாரக் கொள்கையின் கீழ் விவசாயத்துறை பின்தள்ளப்பட்டு ஏகாதிபத்திய ஏற்றுமதி சார்ந்த சேவைத்துறை முன்னுரிமை பெற்றது.யாழ் விவசாயிகள் விசுவமடுவுக்கு வெளிக்கிட்டார்கள்.இதன் தொடர்ச்சியாகத்தின் தமிழ்த் தேசிய இன முரண்பாடு கூர்மையடைந்து 1976 இல் வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேறியது. திட்டமிட்ட `சிங்களக்` குடியேற்றம் என்பது நிலமற்ற சிங்கள விவசாயிகளுக்கு தமிழ் விவசாய நிலங்களைப் பறித்து தாரை வார்ப்பது தவிர வேறொன்றும் அல்ல.கல்லோயாத் திட்டத்தில் இருந்து இன்றுவரை இதுதான் உண்மை.
எனவே இலங்கையில் தொடரும் ஏகாதிபத்தியச் சுரண்டலுக்கும், விவசாயத்துறை புறந்தள்ளப்படுவதற்கும், தமிழ்த்தேசிய இன ஒடுக்குமுறைக்கும், இன அழிப்புக்கும் நேரடியான தொடர்பு உண்டு. 2009 இற்குப் பின்னாலும் சிங்களம் உலகமயமாக்கல் கொள்கையையே தீவிரமாக அமூலாக்கி வருகின்றது.Regainnig Sri Lanka திட்டமே அமூலாகி வருகின்றது.தமிழ் முதலாளித்துவ தேசிய வாதிகள் இந்த அடிப்படையான உண்மையை வசதியாக மறைத்து விடுகின்றனர்.இதைத்தான் பா.உ வும் செய்கின்றார்! ஏகாதிபத்தியத்துடன் அவர்களுக்குள்ள தொப்புள்க் கொடி உறவே இதற்குக் காரணமாகும்.இதன் அரசியற் கோட்பாட்டு வடிவம் தான் ஐ.நா.தமிழீழம்.
ஒரு அப்பட்டமான இனப்படுகொலை சாட்சி இல்லாமல் நடந்தேறட்டும் என்று இருகரம் கூப்பி கூவி அழுதமக்களை அநாதரவாகக் கைவிட்டு விட்டு முள்ளிவாய்க்காலில் தலைமறைவான ஐ.நா.ராஜபக்சவைக் கூண்டிலேற்றும்,தமிழர்களுக்கு நியாயம் பெற்றுத்தரும் என்று பேசுகின்ற மனிதர்கள் , கட்சிகள் அரசியல் மோசடிக்காரர்கள் மட்டுமல்ல கடைந்தெடுத்த அயோக்கியர்களும் ஆகும்.
அண்மையில் தென்னாபிரிக்க அரசு ஏகாதிபத்திய கொள்ளைக்கார கம்பனிக்கு ஆதரவாக தொழிலாளர்களைப் படுகொலை செய்யப் பயன்படுத்திய சட்டம், நிறவெறித் தென்னாபிரிக்காவின் அதே சட்டம் என்பது அம்பலமாகியது ,நமது பா.உ வுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.ஐ.நா.சபையில் பாலஸ்தீனத்துக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் `உறுப்புரிமையற்ற அரசுப் பட்டம்` வெறும்பட்டம் தான்.அது பாலஸ்தீன வாழ்வில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது ஏனெனில் பாலஸ்தீனர்களுக்கு அரசியல் அதிகாரம் இல்லை. அரசு என்கிற பட்டம் தான் இருக்கின்றது.இந்த மோசடியின் ஈழத்து வடிவம் தான் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்! பாலஸ்தீனப் போராளிகளைத் தனிமைப்படுத்தி இஸ்ரேலின் நம்பகமான நண்பனும், அமெரிக்கத் தரகனும், சமரசவாத சந்தர்ப்பவாத,சரணாகதியாளனும் அரபாத்தின் முதுகில் குத்திய கயவனுமான அபாஸுக்கு வழங்கும் சர்வதேச அங்கீகாரமே இந்தப் பட்டம்.
இதுகுறித்து லண்டன் நகரில் வெளிவரும் டைம்ஸ் பத்திரிகையின் இணையப் பதிப்பின் ஆசிரியர் தலையங்கத் தலைப்பு வருமாறு,
The State of Palestine
The UN has given Abbas a chance to start marginalising Hamas
Published at 12:01AM, November 30 2012 The Times UK
When Mahmoud Abbas returned to Ramallah after launching Palestine’s bid for statehood at the United Nations last year, he was given a hero’s welcome. When he returns after yesterday’s vote in New York to make Palestine a non-member observer state of the UN, the reception will be even rowdier. For this reason, among others, this step towards full statehood is constructive.
இதுவா சிறீதரன் பா.உ.வின் கனவு? இதுவா ஈழத்தமிழரின் தேவை?
சிறீதரன் அவர்கள் ஒரு மிதவாத பாராளுமன்ற சட்டபூர்வ அரசியல்வாதியாக செயல்பட்டு தமது வாழ்நிலையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவார் என்று நம்பியே இவரை எம் பி ஆக்கியுள்ளார்கள். அந்த மக்கள் உணர்வை நாம் மதிக்கின்றோம்.
இலங்கை அரசியல் அமைப்பின் 6வது திருத்தம் - தமிழீழ மக்கள் சுய நிர்ணய உரிமை கோருவதை சட்டவிரோதமாக்கிவிட்ட - ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கிவிட்ட பின்னர் இந்த மிதவாத பாராளுமன்ற சட்டபூர்வ அரசியல் என்று ஒன்று இருக்கமுடியாது என்று நாம் உறுதியாக நம்புகின்றோம்.
எனினும் அதில் தங்களுக்கு நம்பிக்கை இருந்தால் முதலில் 6வது திருத்தத்தை நீக்கக் கோரிப் போராடுங்கள்!
தமிழீழ தேசத்துக்கு ஒருஅரசியல் பிரதிநிதித்துவதை இலங்கை நாட்டின் அரசுமுறையில் உத்தரவாதப்படுத்த போராடுங்கள்!
ஒரே சொல்லில் தமிழீழ சுயநிர்ணய உரிமைக்காகப் போராடுங்கள்!
மாவீரர் மண்ணில் மக்கள் பிரதிநிதிகள் என்ற பெயரால் ஐ.நா.வுக்கு மண்டியிடாதீர்கள்! மானத்தை விற்காதீர்கள்!!
அதேவேளை சிறீதரன் பா.உ சபையில் சுட்டிக்காட்டியுள்ள விவசாயப்பிரச்சனைக்கு ஒரு புதிய ஜனநாயக புரட்சிகர விவசாய இயக்கத்தால் மட்டுமே தீர்வுகாண முடியும்.
அவரின் முன் மொழிதல்களை நிறைவேற்ற ஒரு வெகுஜன விவசாய இயக்கத்தைக் கட்டியெழுப்ப வேண்டியது, கையாலாகா (நாம் உட்பட) புரட்சியாளர்களின் கடமையாகும்.
புதிய ஈழப் புரட்சியாளர்கள்
No comments:
Post a Comment