''ஒரே நாடு என்ற நிலையை ஏற்படுத்த அரசியலமைப்பு ரீதியான பாதுகாப்பை சிறிலங்கா அதிபர் உறுதிப்படுத்த வேண்டும்''
விமல் வீரவன்ச.13வது திருத்தத்தை இல்லாதொழிக்க கருத்துக்கணிப்பு - மகிந்தவுக்கு விமல் வீரவன்ச அவசர கடிதம்
[ திங்கட்கிழமை, 22 ஒக்ரோபர் 2012, 00:45 GMT ] புதினப்பலகை
13வது திருத்தத்தை இல்லாதொழிக்க வேண்டும் என்று கோத்தாபய ராஜபக்ச வலியுறுத்தியுள்ள நிலையில், 13வது திருத்தம் தொடர்பாக கருத்துக்கணிப்பு நடத்தி முடிவு செய்ய வேண்டும் என்று சிறிலங்கா அதிபரிடம் கோரியுள்ளார் சிறிலங்கா அமைச்சர் விமல் வீரவன்ச.
இது தொடர்பாக நேற்று அவர் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு அவசர கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
இந்திய - சிறிலங்கா உடன்பாட்டின் மூலம் உருவாக்கப்பட்ட இந்தத் திருத்தத்தை இல்லாதொழிப்பது தொடர்பாக பேசுவதற்கு, ஜாதிக ஹெல உறுமய உள்ளிட்ட சிங்களத் தேசியவாதக்-(பேரினவாத)- கட்சிகளுடன் இணைந்து சிறிலங்கா அதிபருடன் அவசர சந்திப்பு ஒன்றுக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
“திவிநெகும சட்டமூலத்துக்கு எதிராக பல்வேறு கட்சிகளும் உயர்நீதிமன்றத்துக்குச் சென்றுள்ள சூழ்நிலையை சிறிலங்கா அரசாங்கம் புறக்கணித்து விடக்கூடாது.
13வது திருத்தத்தினால் எழுந்துள்ள அச்சுறுத்தலை முறியடிக்க மாற்று நடவடிக்கைகளை சிறிலங்கா அரசாங்கம் எடுக்க வேண்டும்.
வடக்கு மாகாணசபைத் தேர்தலை அடுத்த ஆண்டு செப்ரெம்பரில் நடத்துவதாக சிறிலங்கா அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
அதில் தமிழ்த் தேசியக கூட்டமைப்பு பெறும் வெற்றியால், நாட்டில் பாரிய நெருக்கடி ஏற்படக் கூடும்.
வடக்கு மாகாணசபை காணி, காவல்துறை அதிகாரங்களைக் கோரி உயர்நீதிமன்றம் செல்லக்கூடிய வாய்ப்பை சிறிலங்கா அரசு புறக்கணித்து விடக் கூடாது.
ஒரே நாடு என்ற நிலையை ஏற்படுத்த அரசியலமைப்பு ரீதியான பாதுகாப்பை சிறிலங்கா அதிபர் உறுதிப்படுத்த வேண்டும்.
நாடாளுமன்றத்தின் அதிகாரத்தின் மீது மாகாணசபைகள் தலையிடுவதற்கு தொடர்ந்து அனுமதிக்க முடியாது.
விடுதலைப் புலிகளின் போரிடும் பலம் அழிக்கப்பட்ட போதும், பிரிவினைவாதச் சிந்தனைகள் தொடர்ந்தும் உள்ளதையே திவிநெகும சட்டமூலத்துக்கு காட்டப்படும் எதிர்ப்பு உறுதிப்படுத்தியுள்ளது” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment