Monday, 22 October 2012

'13வது திருத்தத்தை ரத்து செய்வது அரசியல் ரீதியாக தவறாக இருக்கும் '

'13வது திருத்தத்தை ரத்து செய்வது அரசியல் ரீதியாக தவறாக இருக்கும் '

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 22 அக்டோபர், 2012 - 16:13 ஜிஎம்டி பி.பி.சி.தமிழோசை

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் விளைவாக இலங்கை நாடாளுமன்றம் நிறைவேற்றிய 13வது அரசியல் சட்டத்திருத்தத்தை இலங்கை அரசு ரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கைகள் இலங்கையில் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இதை ஏற்றுக்கொண்டு இலங்கை அரசு ஒருக்கால் 13வது சட்டத் திருத்தத்தை ரத்து செய்யுமானால் அது அரசியல் ரீதியாக பிழையான ஒரு நடவடிக்கையாக இருக்கும் என இலங்கை-இந்திய உறவுகள் குறித்து கவனம் செலுத்திவரும் தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகப் பேராசிரியர் சஹாதேவன் கூறுகிறார்.


இறையாண்மை பெற்ற ஒரு நாடு என்ற வகையில் எந்த ஒரு சட்டத்தையும் நிறைவேற்றும் உரிமை இலங்கைக்கு உண்டு , எனவே இந்த சட்டத் திருத்தத்தை நாடாளுமன்றத்தின் மூலமாக அது ரத்து செய்வது என்பது சட்டப்படி சாத்தியமே என்றாலும் அது அரசியல் ரீதியில் தவறான ஒரு நடவடிக்கையாக இருக்கும் என அவர் கூறினார்.

இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வாகக் கொண்டுவரப்பட்ட 13வது சட்டத்திருத்தத்தை இலங்கை ரத்து செய்தால் அதன் விளைவுகள் இலங்கையை மீறி இருக்கும், இலங்கையின் நம்பகத்தன்மையை அது பாதிக்கும் என்கிறார் ஆய்வாளர் பேராசிரியர் சஹாதேவன் ஏனென்றால்,  இந்த சட்டத்திருத்தம் இலங்கையின் மற்ற சட்டத்திருத்தங்களைப் போன்றதல்ல. இனப்பிரச்சினைக்கு தீர்வு காண கொண்டுவரப்பட்ட ஒரு நடவடிக்கை. இலங்கையில் போர் முடிந்து மூன்று ஆண்டுகளாகியும், தமிழ்ச் சிறுபான்மையினருக்கு அரசியல் ரீதியான தீர்வு ஒன்றை தர அரசு முன்வரவில்லை என்ற கருத்து சர்வதேசத்தில் மேலோங்கியிருக்கும் நிலையில், இவ்வாறான நடவடிக்கை, இலங்கை மீதான நம்பகத்தன்மையை பாதிக்கும் என்றார் சஹாதேவன்.

இந்தியா இந்த நடவடிக்கையைத் தடுக்குமோ இல்லையோ , ஆனால் நிச்சயம் வரவேற்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், இந்த சட்டத் திருத்தம் இந்தியாவினால் இலங்கை மீது திணிக்கப்பட்டது என்ற கருத்து தவறானது என்று கூறிய சஹாதேவன், இலங்கையில், இந்திய-இலங்கை அமைதி ஒப்பந்தத்தை அடுத்து, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கும் அரசுக்கும் இடையேயான கருத்துப் பரிமாற்றங்களை ஒட்டியே இந்த சட்டத்திருத்தம் வந்தது என்று சமீபத்தில் இந்தியா வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் சந்திப்பில் கூறியதை சுட்டிக்காட்டினார்.

இந்த சட்டத்திருத்தம் வெளிநாட்டினால் திணிக்கப்பட்டதல்ல, உள்நாட்டு வழிமுறையிலேயே உருவானது என்று அவர் கூறினார்.

No comments:

Post a Comment

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை! -ஆங்கிலக் குறிப்புடன் தமிழ் சிங்கள வீடியோக்கள்.

அநுரவின் உரையின் முக்கிய பகுதி தமிழில் LINK அநுரவின் உரையின் முழுப்பகுதி சிங்களத்தில்                                                       ...