இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில் த.தே. கூட்டமைப்புக்கு அழுத்தம் கொடுக்க தயாராகிறது இந்தியா!
[ ஞாயிற்றுக்கிழமை, 23 செப்ரெம்பர் 2012, 03:09.53 AM GMT ]
இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழுமையான பங்களிப்பை வழங்கவேண்டும் என்ற அடிப்படையில் இந்தியா அழுத்தம் கொடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் இடம்பெற்ற பேச்சுக்களை அடுத்து இந்தியா இந்த நிலைப்பாட்டுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன் அடிப்படையில் இந்தியாவுக்கு விரைவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைக்கப்படலாம் அல்லது இந்தியத் தரப்பினர் இலங்கையில் வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்திக்கலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதன்போது இலங்கையின் ஜனாதிபதியினால் கூட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பங்கேற்குமாறு இந்தியா, கூட்டமைப்பை கேட்கக்கூடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, இந்திய பிரதமரும் இலங்கை ஜனாதிபதியும் புதுடில்லியில் சந்தித்தபோது இரண்டு நாடுகளுக்கு இடையிலும் பாதுகாப்பு ஒத்துழைப்பை பலப்படுத்திக் கொள்ள இணங்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது தமிழகத்தில் இலங்கைப் படையினருக்கு எதிராக இடம்பெற்ற சம்பவங்கள் தனிப்பட்ட சம்பவங்கள் என்று இந்திய தரப்பில் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தமிழகத்தில் இலங்கைப் படையினருக்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள், பிரான்ஸில் இருந்து செயற்படும் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினரான விநாயகம் என்ற கதிர்காமத்தம்பி அறிவழகனால் உருவாக்கப்பட்டுள்ள வலையமைப்பின் மூலமே மேற்கொள்ளப்பட்டதாக இலங்கை புலனாய்வுத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment