SHARE

Friday, September 21, 2012

வளமான எதிர்காலத்துக்கு கசப்பான முடிவுகள் தேவை: மன்மோகன் சிங்

வளமான எதிர்காலத்துக்கு கசப்பான முடிவுகள் தேவை: மன்மோகன் சிங்
First Published : 22 Sep 2012 02:28:05 AM IST
Last Updated : 22 Sep 2012 02:42:39 AM IST


தினமணி புது தில்லி, செப். 21: வளமான எதிர்காலத்துக்கு கசப்பான முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது என பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

அரசின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை ஆதரித்தும் அதற்கான அவசியத்தை விளக்கியும் பிரதமர் மன்மோகன் சிங் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு வெள்ளிக்கிழமை உரையாற்றினார்.
தனது உரையில் அவர் கூறியது:

டீசல் விலை உயர்வு, சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு ஆகிய விஷயங்களை முன்வைத்து நமது பொருளாதாரத்துக்குப் பெரும் ஆபத்து  என்பது போல் பீதியைக் கிளப்புபவர்களை நம்ப வேண்டாம்.

இப்போது எழுப்பப்படும் கவலைகள் அடிப்படையற்றவை. 1991-ம் ஆண்டு நான் நிதியமைச்சராக இருந்தபோது பொருளாதாரச் சீர்திருத்தங்களை அமல்படுத்தினேன். அப்போது சிலர் இது குறித்து மக்களிடையே அச்சத்தைப் பரப்பினர். ஆனால், அவர்களால் தொடர்ந்து அம்முயற்சியில் வெற்றி காண இயலவில்லை. அதேபோல் இப்போதும் மக்களிடையே பீதியைக் கிளப்பும் முயற்சி பலிக்காது. இவ்வாறு குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பவர்களின் பேச்சை மக்கள் நம்ப வேண்டாம்.

டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு மீதான கட்டுப்பாடு ஆகியவை தவிர்க்க முடியாத நடவடிக்கைகளாகும். நாட்டின் கடினமான பொருளாதார நிலைமையில் இவை அவசியமாகின்றன. வளமான எதிர்காலத்துக்கு கசப்பான முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது.

நமக்குத் தேவையான கச்சா எண்ணெயில் 80 சதவீதத்தை நாம் இறக்குமதி செய்ய வேண்டியிருக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. நமது மக்களுக்கு இன்னல் தரக் கூடாதென்பதால், அதே அளவுக்கு இங்கு விலை உயர்த்தப்படவில்லை.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையை உயர்த்தாததால் எண்ணெய்த் துறை மானியமாக ரூ. 1 லட்சத்து 40 ஆயிரம் கோடியை ஒதுக்க வேண்டி வந்தது.
இந்த ஆண்டு அது ரூ. 1 லட்சத்து 60 ஆயிரம் கோடியாக அதிகரிக்கும். டீசல் விலையை உயர்த்தாவிட்டால் அது ரூ. 2 லட்சம் கோடியாக அதிகரித்திருக்கும்.

பணம் மரத்தில் காய்க்கவில்லை:

டீசல் வகையில் ஏற்படும் நஷ்டத்தை தவிர்க்க அதன் விலையை ரூ.17 உயர்த்தியிருக்க வேண்டும். ஆனால் வெறும் ரூ. 5 தான் உயர்த்தப்பட்டுள்ளது. மானிய விலையில் விற்கப்படும் டீசல் பெரும்பாலும் பணக்காரர்களின் பெரிய கார்களுக்குத்தான் பயன்படுகிறது. அவர்களுக்குப் பயன், மத்திய அரசுக்குப் பெரும் நிதிப் பற்றாக்குறையா?ரூ. 5 உயர்த்திய பிறகும் ஒரு லிட்டர் டீசலின் விலை இறக்குமதி விலையைவிட ரூ. 13.86 குறைவாகவே இருக்கிறது. மண்ணெண்ணெய் ஒரு லிட்டருக்கு ரூ. 32.70 குறைவாக விற்கப்படுகிறது. சமையல் எரிவாயு ஒரு சிலிண்டருக்கு ரூ. 347 குறைவாக விற்கப்படுகிறது.
 இதையெல்லாம் சமாளிக்க ஏது பணம்? பணம் மரத்தில் காய்க்கவில்லை. இந்த நடவடிக்கையை இப்போது எடுக்காவிட்டால் வரவுக்கும் மேல் தாங்க முடியாத அளவுக்கு அரசின் செலவுகள் கூடிவிடும்.அதே சமயம், பெட்ரோல் மீதான ரூ.5 மதிப்பிலான வரியைக் குறைத்துள்ளோம். ஸ்கூட்டர், மோட்டர் சைக்கிள்கள் ஓட்டிச் செல்லும் கோடிக் கணக்கான நடுத்தர மக்கள் மேலும் பாதிக்கப்படக் கூடாதே என்பதால்தான் அவ்வாறு செய்தோம்.

சமையல் எரிவாயு சிலிண்டரைப் பொருத்தவரை, பெரும்பாலான மக்கள் ஆண்டுக்கு 6 சிலிண்டர்களைத்தான் உபயோகப்படுத்துகிறார்கள். புதிய விதிமுறையினால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் வரப்போவதில்லை. மற்றவர்களைப் பொருத்தவரை, மானிய விலையில் 6 சிலிண்டர்கள் என்பது உறுதி. அதற்கு மேல் பயன்படுத்தினால் அவர்கள் கூடுதல் விலை தந்தே ஆக வேண்டும்.

1991-ல் நாடு பொருளாதாரப் பிரச்னையைச் சந்தித்தபோது யாருமே நமக்கு சிறு தொகையைக் கூட கடனாகத் தர முன்வரவில்லை. கடுமையான, உறுதியான முடிவுகளை எடுத்ததன் மூலம் நெருக்கடியில் இருந்து மீண்டோம். அந்த நடவடிக்கைகளின் சாதகமான பலன்களை நீங்கள் இப்போதும் பார்க்கலாம்.
இன்று நாம் அந்தச் சூழ்நிலையில் இல்லை. ஆனால் மக்கள் நமது பொருளாதாரத்தின் மீது நம்பிக்கை இழப்பதற்கு முன் செயலில் இறங்க வேண்டியுள்ளது. இப்போது நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வராவிட்டால், மேலும் விலைவாசி கடுமையாக உயரும். பொருளாதாரத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழப்பார்கள். உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடுகளைச் செய்யத் தயங்குவார்கள். வெளிநாடுகளில் நமது நிறுவனங்கள் கடன் பெற முடியாது. வட்டி விகிதம் உயரும். வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிக்கும்.

ஐரோப்பிய நாடுகள் பெரும் நிதிச் சிக்கலில் உள்ளன. மற்றவர்களின் உதவியை அவர்கள் நாடுகிறார்கள். ஊதியக் குறைப்பு, ஓய்வூதியக் குறைப்பு செய்து கடன் தருபவர்களைத் திருப்திப்படுத்துகிறார்கள்.

ஆனால் இந்தியாவை அந்த நிலைமைக்குத் தள்ள நான் விரும்பவில்லை. ஆனால் இந்நிலைமையை உங்களுக்குப் புரிய வைத்தால்தான் நான் எனது நோக்கத்தில் வெற்றி காண முடியும் என பிரதமர் தனது 15 நிமிட உரையில் தெரிவித்தார். ஹிந்தியிலும் பின்னர் ஆங்கிலத்திலும் அவர் பேசினார்.

No comments:

Post a Comment

“Nowadays, many people wondering how even to celebrate Christmas and find their daily meals,” Cardinal

Speaking to the media ahead of Christmas on Dec. 19, the cardinal urged Catholics to remember the less fortunate this Christmas, encouraging...