மன்னார் நீதவான் நீதிமன்றம் 18.7.2012 அன்று தாக்கப்பட்டமை தொடர்பாக பல்வேறு ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டும். நேர்காணல்களை நடத்தியும், நாடு தழுவிய அளவில் நீதிமன்றங்கள் போராட்டங்களை நடத்திக் கொண்டும், மன்னார் தவிர்ந்த இதர பல பள்ளிவாசல் நிர்வாகங்கள் இப்பிரச்சனையை இன மோதலாக சித்தரித்துக் கொண்டும் இருக்கும் இத்தருணத்தில், சாதாரண மன்னார் கடற் தொழிலாள மக்களுடன் மேற்கொண்ட கலந்துரையாடலில் பெற்றுக் கொள்ளப்பட்ட கருத்துக்களின் தொகுப்பு.மன்னார்த் தீவுப்பகுதியின் கடல் பிரதேசம், அத் தீவினுள் வாழும் மீனவ சமூகங்களிடையே சுமூகமான கலந்துரையாடலின் மூலம் இற்றைக்கு 50
-------------------------------------------------------- ஈழச்செய்தியாளர் வான்மதி
ஆண்டுகளுக்கு முன்னரே மீன்பிடித் தொழிலுக்காக அரசாங்க அதிபரினால் பிரித்து ஒதுக்கப்பட்டது.

இவர்களது கடல்பிரதேசத்தை அண்டிய நிலப்பரப்பு அம்மீனவ சமூகத்தின் மீன்பிடிசார்ந்த வேலைகளுக்கென பிரித்து ஒதுக்கப்பட்டது.
அவ்வாறே தீவின் புறத்தே அமைந்திருக்கும் கடற்பகுதிகளும் அப்பிரதேசத்தில் வாழும் மீனவர்களுக்கே பிரித்து வழங்கப்பட்டது.
மன்னாரில் பிரச்சனைக்குரிய கோந்தபிட்டி நிலப்பரப்பு, மன்னார்-உப்புக்குளம் தமிழ் மற்றும் முஸ்லீம் மீனவ சமூகத்துக்குரியது. அதில் பெரும்பகுதி
முஸ்லீம் சமூகத்துக்கே உரியது.
உப்புக்குளத்தில் வாழ்கின்ற முஸ்லீம் சமுகத்தினர் கடற்றொழிலையே பிரதானமாகவும் தமது வாழ்வாதாரத்துக்குரிய ஒரே நிரந்தர தொழிலாகவும்
கொண்டு வாழ்கின்றனர்.
கோந்தப்பிட்டிப் பகுதியில் சமூகவிரோத, சமூகச் சீர்கேடான செயற்பாடுகள் இடம் பெற்று வருவதும், இச்சமுகத்தில் கற்றவர்களின் எண்ணிக்கை
அரிதாகவும்,இவர்கள் இஸ்லாமிய மத நெறிகளை முறையாகப் பின்பற்றாது இருந்தமையாலும், ஏனைய முஸ்லீம் சமூகத்தில் இருந்து
தனிமைப்படுத்தப்பட்டவர்களாக வாழ்ந்து வந்தனர்.
1990 ஒக்ரோபர் 31 இல் முஸ்லீம் சமூகம் மன்னாரை விட்டு ஒரே இரவில் கொட்டும் மழையில் விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்படபோது சகல
முஸ்லீம் சமுகத்தினரும் இப்பிரதேசத்தை விட்டு வெளியேறினர்.
மன்னார் முஸ்லிம்களுக்கு ஆதரவாக யாழ் முஸ்லிம்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்.
பின்னர் இராணுவ நடவடிக்கையினால் மன்னார் தீவு 1990 இன் இறுதிப்பகுதியில் கைப்பற்றப்பட்டதன் பின், ஒரு சில முஸ்லீம்கள் வர்த்தக
நோக்கங்களுக்காக மன்னார் வந்து சென்றனர். அவ்வாறு முதலில் வந்தவர்கள் இந்த உப்புக்குளம் முஸ்லீம்களே ஆவர். அவர்களைத் தொடர்ந்து 1995 இல் மன்னார் நெடுஞ்சாலை திறந்த பின்னரே ஏனைய முஸ்லீம்கள் மன்னார் தீவுக்குள் வரத்தொடங்கினர்.
இருப்பினும் அன்றைய சூழலில் கடற்பகுதியை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த விடுதலைப்புலிகளுக்கும் இராணுவத்துக்கும் இடையில் மோதல்கள் நிகழ்ந்தமையால் முஸ்லிம் மக்களால் கடலுக்குச் செல்லமுடியவில்லை. இதனால் அவர்கள் கூலித் தொழில் செய்து பிழைத்து வந்தனர்.

இவர்களது மீன்பிடித் தேவைக்காக வள்ளங்களைக் கட்டுவதற்கும், கடல் உற்பத்திகளை கொழும்புக்கு அனுப்புவதற்கும் வாய்ப்பாக கோந்தப்பிட்டிக்
கடற்கரைப் பிரதேசத்தை விடுதலைப் புலிகளின் முன்னிலையில் முஸ்லீம் சமுகத்துடன் கதைத்துப் பெற்றுக் கொண்டார்கள். அன்றைய நிலையில்
அவர்களது வாழ்க்கைக்கு ஆதாரமாக இதைத் தவிர எதையும் செய்ய முடியாத முஸ்லீம் மக்கள் இவர்களிடம் இருந்து ஒரு குறித்த
தொகைப்பணத்தைப் பெற்று வந்துள்ளனர். இருப்பினும் இதனால் பெரும் இலாபத்தை ஈட்டிக் கொண்டவர்கள் விடத்தல்தீவு மீனவர்களே ஆவர். அவர்கள் சம்மாட்டிகளாகவும், வர்த்தகர்களாகவும் தங்களது வருமானத்தை பெருக்கிக் கொண்ட போதும் கோந்தப்பிட்டி முஸ்லீம் மக்கள் பெரும் ஏழைகளாகவே அப்பிரதேசத்தில் வாழ்ந்து வந்தார்கள்.
இந்த நிலை 2009 இற்கு பின்னரும், அதாவது பெருமளவிலான முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்தின் பின்னரும்கூட நடைமுறையில் இருந்து
வந்தது.
மே மாத இறுதிப்பகுதியில் மன்னார் பிரதேசத்தில் முஸ்லீம் மக்களின் மீள்குடியேற்றத்துக்கு மன்னார் ஆயர் தடையாக இருக்கின்றார் என
இலங்கைப் பாராளுமன்றத்தில் வர்த்தகத்துறை கைத்தொழில் அமைச்சர் றிசாட் பதியுதீன் தரக்குறைவாகப் பேசியதைத் தொடர்ந்தே இப்பிரதேசத்திலும்
பிரச்சனை ஆரம்பமாகத் தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து மன்னார் ஆயருக்கு ஆதரவாக மன்னார் கத்தோலிக்க குருக்களால் ஒழுங்கு செய்யப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று
மன்னார் பேராலயத்தில் நடத்தப்பட்டது. இதில் அமைச்சரின் செயற்பாட்டுக்கு கண்டனம் வெளியிடப்பட்டது. இதில் மன்னாரிலுள்ள சகல மீனவ
சமூகங்களும் பங்குகொண்டிருந்தன. இதன் அடிப்படையில் விடத்தல்தீவு மீனவர்களும் பங்கு கொண்டிருந்தனர்.
இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்த எண்ணிய அமைச்சர், உப்புக்குளம் முஸ்லீம் மக்களைத் தூண்டிவிட்டு அங்கிருந்து விடத்தல்தீவு மீனவர்களை
வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டார். இதில் அப்பிரதேசத்தில் வாழும் சமூகச் சீரழிவுகளுக்கு காரணமான முஸ்லீம் சமூக விரோதக் கும்பலை
முஸ்லீம் மக்களின் பிரதிநிதிகளாகக் காட்டி தன் செயற்பாடுகளை முன்னெடுத்தார்.
இதே நேரத்தில் மறுபக்கத்தில் தமிழ் அரசியல்வாதிகள், ``முஸ்லீம் மக்களுக்கு கப்பம் கொடுக்கத் தேவையில்லை`` என விடத்தல்தீவு மக்களை
தூண்டிவிட்டனர்.

விடத்தல்தீவு மக்கள் நீதி கேட்டு பொலிஸ் நிலையத்தை நாடினர்.
இதுவே விடத்தல்தீவு மக்கள் செய்த மிகப்பெரிய தவறான செயற்பாடாகும்.
இப்பிரச்சனையை மன்னார் அரசாங்க அதிபரும், மன்னார் பிரதேசச் செயலாளரும் தலையிட்டு இலகுவில் தீர்த்து வைத்திருக்க முடியும். ஆனால்
மன்னார் பிரதேசச் செயலாளர், அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்காக தேர்தல் காலத்தில் பகிரங்கமாக வேலை செய்தவர். தனது வங்காலை வீட்டிலேயே
சாராயப் போத்தல்களை வைத்து வாக்காளர்களுக்கு விநியோகித்த அதிகாரி. 02-08-2012 இல் மன்னார் மேலதிக அரசாங்க அதிபராக ரிசாட்டின்
அனுக்கிரகத்தால் பதவி உயர்வு பெற இருப்பவர். ஆகவே அவரும் மௌனமாக பார்வையாளராக மக்களை மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் பணியைச்
செய்து கொண்டிருந்தார்.
மன்னார் நீதிமன்றமும் விடத்தல்தீவு மக்களுக்கு இடத்தைக் கண்டுபிடிப்பதில் நாட்டம் காட்டியதே தவிர, உப்புக்குளம் மீனவர்களின் வாழ்வாதார இடத்தை உத்தரவாதப்படுத்தவில்லை.
இப்பின்னணியில் உப்புக்குளம் மக்களின் கோபம் நியாயமானது.

தன்னுடைய அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து மக்களிடையே செல்வாக்கைப் பெருக்கிக் கொள்ள வேண்டுமென அவர் கைக்கொண்ட செயற்பாடுகளுக்கு, அநாகரிகமான முறையில் முஸ்லிம் பெண்களும் நடந்துகொண்டது , பண்பான முஸ்லீம் சமூகப்பெண்களுக்கு வேதனைக்குரிய இழுக்கான விடயமாகும்.
தற்போது விடத்தல்தீவு மக்களுக்கு இடந்தேடும் படலம் ஆரம்பமாகியுள்ளது.
ஆயினும் மன்னார்த் தீவினுள் எந்தவொரு தமிழரோ, முஸ்லீமோ இவர்களுக்கு இடம் கொடுக்கமாட்டார்கள்.ஏனெனில் 19-07-2012 இல் மேலதிக அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்ற மீனவர் சங்கங்களுக்கு இடையான கூட்டத்தில் விடத்தல் தீவு மக்களுக்கு இடம் கொடுக்க எவரும் சம்மதிக்கவில்லை. இதற்குக் காரணம் இவர்களுடைய இறங்குதுறை விடத்தல்தீவில் உண்டு. இதற்குள் வேறு யாரும் சென்று உரிமை கோரமுடியாது. அப்படியாயின் இவர்கள் எவ்வாறு மற்றவர்களின் இடங்களைக் கோர முடியும்?.. இது மன்னார்வாழ் சகல மீனவசமூகத்தினரின் கேள்வியாகும்.
மன்னார் நீதிபதியே மக்களுக்கு காலுக்குக் கீழ் சுடுமாறு உத்தரவிடலாம், கோபத்தில் கொதிக்கலாம் என்றால், சாதாரணமக்கள் அடாவடித்தனத்தில்
ஈடுபடுவது கோபத்தின் வெளிப்பாடு ஆகாதா? இதற்குத் தண்டனை வழங்குவது நீதியா?
இவ்வளவு செயற்பாடுகளுக்குப் பின்னாலும், இலங்கையில் பல இடங்களில் மன்னாரில் முஸ்லீமை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படுவதாக பல
ஆர்ப்பாட்டங்கள் நடந்த போதும், மன்னார் முஸ்லீம்களும் தமிழர்களும் அன்று போல் இன்றும் நட்புறவுடனும் தங்களது அன்றாட செயற்பாடுகளுக்கு
எந்தவித இடையூறுகளும் இல்லாமல் ஒன்றாகவே வாழ்கின்றனர்.
இதுவே இன மத மோதல்களைத் தூண்டி அரசியல் பிழைப்பு நடத்துவோருக்கு மக்களின் பதிலாகும்.
ஒன்றுபடுவோம்! உரிமைகளை வென்றெடுப்போம்!!
===============================
Credit: ஈழச்செய்தியாளர் வான்மதி - புகைப்படங்கள், இதர இணையச் செய்திகள் இணைப்பு Admin - நன்றி ஊடகங்கள்.
No comments:
Post a Comment