Tuesday, 19 June 2012

மண்மீட்பு பேரணியில் மக்கள் மீது படையினர் கழிவு ஒயில் வீசித் தாக்குதல்!


யாழ். தெல்லிப்பளையில் நடைபெற்ற மண்மீட்பு பேரணியில் பங்குபற்றிய மக்கள் மீது படையினர் தாக்குதல்!

[செவ்வாய்க்கிழமை, 19 யூன் 2012, 21.56 GMT ]

வடபகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் காணி அபகரிப்பு, வலிகாமம் வடக்கில் மக்களின் மீள்குடியேற்றத்துக்கு தடை என்பவற்றுக்கு எதிராக தெல்லிப்பளை துர்க்கை அம்மன் கோவில் முன்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போராட்டம் இன்று காலை ஆரம்பமானது.

காலை 10 மணயளவில் துர்க்கையம்மன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளுடன் ஆரம்பமான போராட்டம், பிரதான வீதியை அடைந்தபோது  பெருந்தொகையான பொலிஸார் பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டிருந்தார்கள். கலகம் அடக்கும் பொலிஸார் பெருமளவுக்கு ஆயுதபாணிகளாகக் குவிக்கப்பட்டிருந்தார்கள். குண்டாந்தடிகளும், கண்ணீர்ப்புகைக் குண்டுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.



பெண்கள், தாய்மார்கள் உட்பட போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள், ``எம் வீட்டில் நாம் வாழ வேண்டும், எம் நிலத்தில் நாம் ஆள வேண்டும்``, ``ஆக்கிரமிக்காதே எமது நிலத்தை, பறிக்காதே எமது உரிமைகளை`` `` அரசே நிலங்களைப் பறிக்காதே! அரசே எங்களை வீடுகளுக்கு போகவிடு!`` என முழங்கிய வண்ணம் பதாகைகளை ஏந்தியிருந்தனர்,

அருகேயுள்ள உதவி அரசாங்க அதிபர் பணிமனைக்கு மகஜர் சமர்ப்பிப்பதற்காக ஊர்வலமாகச் சென்ற போது மேலும் முன்னேற இயலாதவாறு பொலிஸார் இடைமறித்தனர். மாவை சேனாதிராசா, கஜேந்திரன், சிவாஜிலிங்கம், மற்றும் பிரதேச சபை தலைவர் சுகிர்தன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் 5பேர் மட்டும் சென்று பிரதேச செயலகத்தில் மக்களின் மகஜரை கையளித்தனர். இதரமக்கள் கலைந்து செல்லுமாறு கட்டளையிடப்பட்டனர்.

அதன் பின்னர் பொதுமக்கள் பஸ்களில் திரும்பிச் சென்ற போது மோட்டார் சைக்கிளில் ஆயுத தாரிகளாக வந்தவர்கள் பஸ்களை மறித்து பொதுமக்கள் மீது தாக்குதலை நடத்தியதுடன், அவர்கள் மீது பழைய ஒயிலை ஊற்றி அச்சுறுத்தியும் உள்ளனர்.மற்றொரு செய்தி இவர்கள் பேரணியில் கலந்து கொள்ளச் சென்ற மக்கள் எனத் தெரிவிக்கின்றது. ஆயுததாரிகள் இனந்தெரியாத படையினர் என கூறப்படுகின்றது.

மக்கள் மத்தியில் உரையாற்றிய மாவை சேனாதிராசா, உச்சநீதிமன்றம், ஐ.நா.மனித உரிமை ஸ்தாபனம் ஆகிய சட்டபூர்வ வழிகளில் தமிழர்களின் நிலத்தை மீளப்பெற தாம் தொடர்ந்து போராடுவோம் என்றார்.மக்கள் வன்முறையை நாடக்கூடாது என எச்சரித்ததோடு போராட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது என மக்களை மிரட்டிய இ.பி.டி.பி குண்டர்களையும் கண்டித்து, கலந்து கொண்ட மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

மக்கள் கையளித்த மகஜர் இதுவரை இணையங்களில் வெளியாகவில்லை.

மாவை சேனாதி உரை

No comments:

Post a Comment