Tuesday, 5 June 2012

நிர்வாணத் தாண்டவத்தின் அறுபதாண்டு ராணி!


இந்தியாவில் பிரிட்டிஸ் ஆட்சியால் எதிர்காலத்தில் ஏற்படப் போகும் விளைவுகள்(கா.மார்க்ஸ் லண்டன், வெள்ளிக்கிழமை, யூலை 22, 1853) கட்டுரையிலிருந்து.

------
முடிவாகச் சில குறிப்புரைகளை எடுத்துக் கூறாமல் இந்தியா எனும் இந்தத் தலைப்பை என்னால் பூர்த்தி செய்ய முடியாது.

தன் தாயகத்தில் கௌரவமான வடிவங்களை மேற்கொண்டும், அதே சமயத்தில் காலனிகளில் நிர்வாணத் தாண்டவமாடியும் வரும் முதலாளித்துவ நாகரிகத்தின் அப்பட்டமான போலித்தனமும் உள்ளார்ந்த காட்டுமிராண்டித்தனமும் வேடம் கலைக்கப்பட்டு நம் கண் முன்பு காட்சியளிக்கின்றன. முதலாளி வர்க்கத்தினர் சொத்துடைமையைத் தாங்கி ஆதரவளிப்பவர்கள்தான், ஆனால் வங்காளத்திலும், சென்னையிலும், பம்பாயிலும் நடைபெற்றிருப்பதைப் போன்ற விவசாயப் புரட்சிகளை புரட்சிக்கரக் கட்சி எதுவாயினும் எந்தக் காலத்திலேனும் தோற்றுவித்துள்ளதா? அந்த மாபெரும் கொள்ளைக்காரனான லார்ட் கிளைவ் கூறியிருக்கும் சொற்களையே பயன்படுத்திச் சொல்வதென்றால், இந்தியாவின் சாதாரண லஞ்சம் அவர்களது கொள்ளைக்காரத்தனமான பேராசைக்கு ஈடுசெய்ய முடியாததால் கொடூரமான முறையில் பலவந்தமான சூறையாடலில் அவர்கள் இறங்கவில்லையா?. தேசியக் கடனின் புனிதத்தன்மை நிரந்தரமானதென்று ஐரோப்பாவில் அவர்கள் பிதற்றிக் கொண்டிருந்த அதே போதில், தமது சொந்த சேமிப்புக்களை கிழக்கிந்தியக் கம்பனியின் நிதிகளில் முதலீடு செய்திருந்த சுதேசி இராஜாக்களுக்கு கொடுக்க வேண்டிய லாப ஈவுகளை இந்தியாவில் அவர்கள் பறிமுதல் செய்யவில்லையா? “தமது புனித மதத்தைப்” பாதுகாக்கின்றோம் என்ற சாக்குப்போக்கில் பிரஞ்சுப்புரட்சியை எதிர்த்துப் போராடிய அவர்கள்
அதே பொழுதில் இந்தியாவில் கிறீத்தவம் பரப்பப்படுவதை தடைசெய்யவில்லையா?. ஒரிசாவிலும், வங்காளத்திலும் உள்ள ஆலயங்களுக்கு திரண்டு செல்லும் யாத்திரிகளிடம் பணம் பிடுங்குவதற்காக ஜகன்னாதர் கோவிலில் புரியப்பட்டு வந்த தற்பலியையும் விபச்சாரத்தையும் தமது வாணிபமாக்கிக் கொள்ளவில்லையா? இவர்கள்தான் “சொத்து, முறைமை, குடும்பம், சமயம் ஆகியவற்றின் பாதுகாவலர்கள்!”



ஐரோப்பா அளவுக்குப் பரந்து விரிந்ததும் பதினைந்து  கோடி ஏக்கர் நிலத்தைக் கொண்டதாயும் உள்ள ஒரு நாடான இந்தியா சம்பந்தப்பட்டவரை
நேர்ந்துள்ள ஆங்கில தொழிற்துறையின் நாசகர விளைவுகள் ஸ்தூலமானவையாயும் திகைப்பூட்டுவனவாயும் இருப்பதைக் காணலாம். ஆனால் அவை இப்போது உருவகம் பெற்றுள்ள பொருளுற்பத்தி அமைப்பு முறை முழுவதுடனும் இணைந்த விளைவுகள் மட்டுமே என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. அந்த உற்பத்திமுறை மூலதனத்தின் தலைமையான ஆதிக்கத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. மூலதனம் ஒரு சுயேச்சையான சக்தியாக திகழ வேண்டுமானால் மூலதனத்தை மையப்படுத்துவது அவசியமாகும். உலக மார்க்கெட்டுக்களின் மீது அந்த மையப்படுத்தல் முறை செலுத்திவரும் அந்த நாசகரமான செல்வாக்கே நாகரீகம் அடைந்த ஒவ்வொரு நகரிலும் இப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் அரசியல் பொருளாதாரத்தின் உள்ளார்ந்த கட்டமைப்பு விதிகளை மிகவும் பிரம்மாண்டமான பரிமாணங்களில் வெளிக்காட்டுகிறது. வரலாற்றின் முதலாளித்துவக் காலகட்டம் புதிய உலகத்துக்குரிய பொருளாயத அடித்தளத்தைப் படைத்துருவாக்க வேண்டும்: ஒரு புறத்தில் மனிதகுலத்தின் பரஸ்பர சார்புநிலை மீது தோற்றுவிக்கப்பட்ட சர்வவியாபகமான ஒட்டுறவையும், அந்த ஒட்டுறவுக்கான வழிவகைகளையும் உருவாக்க வேண்டும்;  ‘மறுபுறத்தில் மனிதரின்
உற்பத்தி ஆற்றல்களையும் பொருள்வகை உற்பத்தி இயற்கைச் சக்திகள் விஞ்ஞானபூர்வமான மேலாண்மையாக  உருமாற்றப்படுவதையும் வளர்த்துச்
செல்லவேண்டும்.  மண்ணியல் புரட்சிகள் பூமியின் மேல்பரப்பைப் படைத்துருவாக்கி இருப்பது போன்று அதே வழிகளில் முதலாளித்துவ தொழிற்துறையும் வாணிகமும் புதிய உலகத்துக்கான இந்தப் பொருளாயத நிலைமைகளைப் படைக்கின்றன. மகத்தான சமூகப் புரட்சியானது முதலாளித்துவ சகாப்தத்தின் சாதனைகளையும் உலக மார்க்கட்டையும் நவீன உற்பத்திச் சக்திகளையும் வசப்படுத்தும் முழுத் தேர்ச்சி பெற்று மிகவும் முன்னேறிய மக்களின் பொதுவான கண்காணிப்புக்குக் கீழடக்கினால் மட்டுமே மனித குலத்தின் முன்னேற்றம் கொலையுண்டோரது மண்டையோடுகளில் இருந்து மட்டுமே அமுதம் பருகும் பயங்கரமான காட்டுமிராண்டி விக்கிரகத்தை ஒத்திருக்கும் நிலைக்கு முடிவுகட்டும்.
==============
மார்க்ஸால் 1853 யூலை 22 இல் எழுதப்பட்டது.
(மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் பன்னிரண்டு தொகுதிகளில் தொகுதி 3 பக்கம்213-15)

==============

No comments:

Post a Comment

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை! -ஆங்கிலக் குறிப்புடன் தமிழ் சிங்கள வீடியோக்கள்.

அநுரவின் உரையின் முக்கிய பகுதி தமிழில் LINK அநுரவின் உரையின் முழுப்பகுதி சிங்களத்தில்                                                       ...