SHARE

Tuesday, February 21, 2012

உலகிலேயே பணக்காரக் கோயிலுக்கு உயர் பாதுகாப்பு!

ஸ்ரீ பத்மநாபசுவாமி கோயில்
பொக்கிஷங்கள் பதியப்படுகின்றன

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 20 பிப்ரவரி, 2012 - 11:20 ஜிஎம்டி பிபிசி

தென்னிந்தியா, கேரள மாநிலத்தில் திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீ பத்மநாபசுவாமி கோயிலின் பாதாள அறைகளில் காணப்பட்ட விலை மதிப்பற்ற பொக்கிஷங்களை அதிகாரிகள் பட்டியல்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

இந்தக் கோயிலில் உள்ள ஐந்து பாதாள அறைகள் ஏற்கனவே கடந்த ஆண்டில் திறக்கப்பட்டன- அவற்றில் ஆபரணக்கற்கள், தங்கம், வெள்ளி என பெருமளவு விலைமதிப்பற்ற பொருட்கள் அடங்கிய பொக்கிஷங்கள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த ஐந்து அறைகளிலும் வைக்கப்பட்டிருந்த பொக்கிஷங்கள் தொழிநுட்ப முறையில் பட்டியல்படுத்தப்படும்வரை ஆறாவது அறையை திறக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

பலத்த பாதுகாப்பு கண்காணிப்பில் இருக்கின்ற இந்தக் கோயில் உலகிலேயே மிகச் ‘செல்வந்தமான’ மதத்தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

மதிப்பிடுவதில் சிரமம்

இந்த ஐந்து அறைகளிலிருந்த பொக்கிஷங்களும் இந்திய மதிப்பில் சுமார் 900 பில்லியன் ரூபாய் பெறுமதி கொண்டவையாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

கோயில் பொக்கிஷங்களையும் புதையல் தொல்பொருட்களையும் ஆவணப்படுத்துவதற்காக நவீனமுறையில் வடிவமைக்கப்பட்ட கருவியொன்றின்மூலம் இந்தப் பொருட்கள் இன்று திங்கட்கிழமை முதல் டிஜிட்டல் முறையில் பட்டியல்படுத்தப்படும் என்று கூறப்படுகின்றது.
இரத்தினக் கற்கள், பழங்கால நாணயங்கள், தங்கம் மற்றும் தொல்லியல் துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் இந்த ஆவணப்படுத்தும் பணியில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆனால் இந்தப் பொக்கிஷங்களின் பெறுமதியை மதிப்பிடுவது தான் மிகச் சிரமமான காரியமாக இருக்கும் என்று வரலாற்றாய்வாளர்கள் கருதுகின்றனர்.
ஒவ்வொரு பொருளாக ஆராய்ந்து விபரங்களை பதிவு செய்ய வேண்டியுள்ளதால், இந்த பணி பூர்த்தியடைய பலமாதங்கள் எடுக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.

இந்த வேலைகள் நடந்துகொண்டிருக்கும் அதேவேளை, வழமையான வழிபாடுகளும் சடங்குகளும் எவ்வித தடங்கல்களுமின்றி நடைபெறுமென்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதேவேளை, இந்தப் பொக்கிஷங்கள் கண்டுபிடிக்கப்பட்டமை பொதுமக்கள் மத்தியல் பல்வேறு வாதப்பிரதிவாதங்களையும் ஏற்படுத்தியது.

இந்தப் பொக்கிஷங்கள் அருங்காட்சியங்களில் வைக்கப்பட வேண்டும் அல்லது அவை விற்கப்பட்டு அதில்வரும் பணத்தை பொதுநலன்களுக்காக செலவிட வேண்டும் என்றும் பலர் வாதிடுகின்றனர்.
==============
குறிப்பு: விவசாயிகளின் கலகங்களில் இருந்தும், அண்டை நாட்டுப் படையெடுப்புக்களில் இருந்தும் நிலப்பிரப்புத்துவச் செல்வங்களைப் பாதுகாக்க மன்னர்கள் கட்டிய பாதாள வங்கிகளே இந்துப் பெருங்கோவில்கள்.

No comments:

Post a Comment

How Nato is preparing for war in the Arctic

How Nato is preparing for war in the Arctic  Nordic nations hope US fixation on Greenland will spur alliance to catch up with years of Russi...