SHARE

Tuesday, December 06, 2011

கடற்படையை எதிர்த்த மாதகல் மக்கள் போராட்டம் வெல்க!

"மீன்பிடியையும் விவசாயத்தையுமே நாம் வாழ்வாதாரமாகக் கொண்டவர்கள். எனவே எமது காணிகளை நாம் விட்டுத்தர மாட்டோம். அவை எமக்கு வேண்டும்''
மாதகல் மக்கள்

கடற்படையை எதிர்த்து மக்கள் போர்க்கொடி; மாதகலில் பறிக்கப்படும் தங்கள் வாழ்விடங்களுக்காக உரத்துக் குரல்கொடுக்க சர்வதேசத்திடம் முறையீடு
(யாழ் உதயன் 06 12 2011)

கடற்படையினருக்கு எதிராக மாதகல் மக்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமது காணிகளைச் சுவீகரிப்ப தற்குக் கடற்படை திட்டமிட்டிருப்பதைக் கண்டித்த மக்கள் தமது காணிகளைத் தம்மிடம் ஒப்படைக்கும்படி வலியுறுத்தினர்.

மாதகல் மேற்கைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் கைகளில் சுலோக அட்டைகளைத் தாங்கியபடி இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். வலி.தென்மேற்குப் பிரதேச சபைக்கு சற்றுத் தூரத்தில் திரண்ட மக்கள் அங்கிருந்து பேரணியாகப் பிரதேச சபைக்குச் சென்று மனுவைக் கையளித்தனர். பின்னர் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்கும் சென்று மனுவைக் கையளித்தனர்.


* "மக்கள் குடியிருப்புகளை இராணுவ முகாமாக்காதே'',
* மஹிந்த அரசே! மாதகல் மக்களின் நிலங்களை மக்களுக்கே வழங்கு'',
* "உலக மக்களே! பறிக்கப்படும் எமது வாழ்விடங்களுக்காகக் குரல் கொடுங்கள்''

என்று பேரணியில் சென்றவர்கள் முழக்கமிட்டனர். வயது வேறுபாடு இன்றி ஆண்களும் பெண்களும் சிறுவர்களும் உரத்துக் கோஷமிட்டவாறே பேரணியில் சென்றனர்.


ஆர்ப்பாட்டம் குறித்து முன்கூட்டியே அறிந்திருந்த பொலிஸார், அதிகாலை தொடக்கம் பிரதேச சபை, பிரதேச செயலகம் என்பவற்றில் காவலைப் பலப்படுத்தி இருந்தனர். அந்தப் பகுதி எங்கும் பொலிஸார் குவிக்கப்பட்டும் இருந்தனர். இதனால் காலை முதல் அங்கு பதற்றம் நீடித்தது. எனினும் குழப்பங்கள் எதுவும் நிகழவில்லை. 


மாதகல் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இருந்து 1992ஆம் ஆண்டு மக்கள் வெளியேறி இருந்தனர். படையினர் முன்னேறியதை அடுத்து அவர்கள்தமது இருப்பிடங்களை இழக்க வேண்டியதாயிற்று. அதன் பின்னர் கடந்த இரு தசாப்த காலமாக அந்தப் பகுதி உயர் பாதுகாப்பு வலயம் என்ற அறிவிப்புடன் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்தது.


சுற்றியுள்ள பல இடங்களில் மீள்குடியமர்வுக்கு அனுமதி வழங்கப்பட்டபோதும் மாதகல் மேற்குப் பகுதியில் மட்டும் மீள்குடியமர்வுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இப்போது இவர்களின் காணிகளை முகாமுக்காகச் சுவீகரிக்க கடற்படையினர் முயற்சிக்கின்றனர். இதனை எதிர்த்தே நேற்றைய போராட்டம் நடைபெற்றது. "மீன்பிடியையும் விவசாயத்தையுமே நாம் வாழ்வாதாரமாகக் கொண்டவர்கள். எனவே எமது காணிகளை நாம் விட்டுத்தர மாட்டோம். அவை எமக்கு வேண்டும்'' என்று மக்களால் கையளிக்கப்பட்ட மனுக்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment

Israel kills 28 Palestinians in Gaza on New Year’s Day

  Israel kills 28 Palestinians in Gaza on New Year’s Day At least 28 Palestinians, including children and women, are killed throughout Gaza ...