நெடுங்கேணி: திருத்தப்படாத வீதிகளால் உற்பத்திப் பொருட்களை விற்க முடியவில்லை
[ புதன்கிழமை, 30 நவம்பர் 2011, 07:56 GMT ] [ நித்தியபாரதி ]
சேதமடைந்துள்ள இவ்வீதியின் ஊடக நெல்லை எடுத்துச் செல்வதில் சிரமங்கள் காணப்படுவதால் நெடுங்கேணி விவசாயிகளால் தமது நெல்லிற்கான உயர்ந்த பட்ச விலையைக் கோரமுடியாதுள்ளது.
இவ்வாறு IPS இணையத்தளத்திற்காக Amantha Perera எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகை்ககாக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.
அக்கட்டுரையின் முழுவிபரமாவது,
மண்குடிசைகள் மற்றும் நிர்மூலமாக்கப்பட்ட கட்டடங்கள் மத்தியில் அமைந்திருந்த அக்கிராமத்தின சேதமடைந்திருந்த வீதியை இனங்காண்பது கடினமாக இருந்தது. இரு ஆண்டுகளிற்கு முன்னர் நிறைவடைந்திருந்த சிறிலங்காவின் வன்முறை நிறைந்த உள்நாட்டுப் போரின் போது ஏவப்பட்ட எறிகணைகளால் ஏற்பட்ட அழிவுகள் தற்போதும் இக்கிராமத்தில் மறையாது உள்ளன.
நெடுங்கேணிக் கிராமத்தை ஏ-09 நெடுஞ்சாலையுடன் இணைக்கின்ற 50 கிலோ மீற்றர் நீளமான வீதியைத் திருத்துவதற்காக தற்போது சீன நாட்டின் பொறியியலாளர்கள் இதனை மேற்பார்வை செய்து வருகின்றனர்.
இக்கிராமத்திலுள்ள பாலங்கள் தற்போது மீளத்திருத்தப்படுகின்றன. யுத்தம் நிறைவுற்று இரண்டரை ஆண்டுகள் கடந்த நிலையிலும் கூட போக்குவரத்துப் போன்ற அடிப்படை வசதிகள் இந்தக் கிராமத்து மக்களின் பயன்பாட்டிற்காகச் செய்து கொடுக்கப்படவில்லை என்பதற்கு நெடுங்கேணிக் கிராமத்திற்கு ஊடாகச் செல்லும் சேதமடைந்த வீதி சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது.
இவ்வீதி நேர்த்தியான முறையில் திருத்தப்பட்டு பொருட்களுடன் வாகனங்கள் வருவதற்கான அனுமதிகள் வழங்கப்படும் போதே தாம் மகிழ்ச்சியடைவோம் என வவுனியா வடக்கு பல்நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தில் பொதுமுகாமையாளராகப் பணியாற்றும் கனகசபை உதயகுமார் தெரிவித்தார். "இந்த வீதி செப்பனிப்பட்டு பயன்பாட்டிற்கு விடப்படும் தினமன்று நாம் மகிழ்வாக இருப்போம்" எனத் தெரிவித்தார்.
சிறிலங்காவின் யுத்தம் இடம்பெற்ற வடக்குப் பகுதியில் அதாவது வன்னி என நன்கறியப்பட்ட பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு கிராமமே நெடுங்கேணி ஆகும்.
யுத்தம் தீவிரமடைந்திருந்த காலத்தில் இக்கிராமத்து மக்கள் வேறிடங்களிற்குத் தப்பிச் சென்று வாழ்ந்ததால் யுத்தப் பாதிப்புக்கள் ஒப்பீட்டளவில் இங்கு குறைவாகவே உள்ளன. எனினும் இந்தக் கிராமத்தில் எஞ்சியுள்ள ஒவ்வொரு சுவர்களிலும் துப்பாக்கி ரவைகளின் அடையாளங்கள் பதிந்து போயுள்ளன.
உதயகுமார் தனது பணியகமாகப் பயன்படுத்துகின்ற அறையின் கூரையில் உள்ள பெரிய துவாரத்தின் ஊடாக சூரிய ஒளிக்கற்றைகள் அவரது அறைக்குள் பட்டுத் தெறிக்கின்றன. "இது எறிகணை வீச்சால் ஏற்பட்ட துவாரமாகும்" என அவர் விளக்கினார்.
அவரது பணியக அறையின் சுவரில், சிறிலங்காவில் நிலைகொண்டிருந்த பிரிவினைவாத இராணுவக் குழுவைத் தோற்கடித்த புகழைக் கொண்டுள்ள அந்நாட்டின் அதிபரான மகிந்த ராஜபக்சவின் படம் மாட்டப்பட்டுள்ளது.
டிசம்பர் 2009ம் ஆண்டிலிருந்து வன்னியில் மீள்குடியேற்றப்பட்டு வரும் கிராமங்களில் நெடுங்கேணியும் ஒன்றாகும். நெடுங்கேணியை மிகப் பெரிய கிராமமாகக் கொண்டுள்ள வவுனியா வடக்கு பிரேதச செயலர் பிரிவில் 3700 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு மீள்குடியேறிய மக்கள் தமது வாழ்வாதார மேம்பாட்டுக்காக விவசாயம் மற்றும் குடிசைக் கைத்தொழில்களில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் நெடுங்கேணி மக்களின் பொருளாதார மையமாக உள்ள வவுனியாவை மிக விரைவில் அடைவதற்கு இக்கிராமம் ஊடகச் செல்லும் வீதியை செப்பனிடுவது மிகவும் அத்தியாவசியமாகும்.
பல பத்தாண்டுகளின் பின்னர் இவ்வாண்டு முதன்முறையாக நெடுங்கேணியில் பாரியளவிலான நெற்பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாண்டில் சிறிலங்காத் தீவில் மேற்கொள்ளப்பட்ட நெற்பயிர்களின் 20 சதவீதம் வெள்ளப் பெருக்கால் அழிவடைந்த பின்னர் தற்போது நெல்லிற்கான விலை அதிகரித்துள்ளது.
ஆனாலும் நெடுங்கேணியில் விளைந்த நெல்லிற்கான விலை அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட இழிவு விலையிலும் குறைவாகவே காணப்படுகின்றது. இக்கிராமத்திலுள்ள வீதி முற்றாக சேதமடைந்திருப்பதே இதற்கான பிரதான காரணமாக உள்ளது.
சேதமடைந்துள்ள இவ்வீதியின் ஊடக நெல்லை எடுத்துச் செல்வதில் சிரமங்கள் காணப்படுவதால் நெடுங்கேணி விவசாயிகளால் தமது நெல்லிற்கான உயர்ந்த பட்ச விலையைக் கோரமுடியாதுள்ளது.
அத்துடன் நெல்லை களஞ்சியப்படுத்தி வைப்பதற்கான வசதிகளும் இக்கிராமத்தில் காணப்படவில்லை. "இங்கு நெல்லைக் கொள்வனவு செய்பவர்கள் கிலோ ஒன்றிற்கு ரூபா 21 ஐச் செலுத்தியுள்ளனர். ஆனால் பல்நோக்குக் கூட்டுறவுச் சங்கம் ஒரு கிலோ நெல்லை ரூபா 27 இற்குப் பெற்றுள்ளனர்" என உதயகுமார் தெரிவித்தார்.
சில உற்பத்திப் பொருட்கள் அதாவது மரக்கறிப் பயிர்ச்செய்கை, பால் உற்பத்தி, கோழி உற்பத்தி போன்றன பழுதடையும் இயல்பைக் கொண்டுள்ளதால் சிலவேளைகளில் இவற்றின் விலையும் வீழ்ச்சியடைகின்றன.
வவுனியாவிலுள்ள மொத்த விற்பனைச் சந்தைக்கு நெடுங்கேணியிலிருந்து பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனம் ஒன்றிற்கு கிட்டத்தட்ட மூன்று மணித்தியாலங்கள் வரை தேவைப்படும். "ஆனால் தற்போது இப்போக்குவரத்திற்கு ஏழு மணித்தியாலங்களுக்கு மேல் தேவைப்படுகின்றது" என உதயகுமார் தெரிவித்தார்.
"நெடுங்கேணி மண்ணில் எந்தப் பொருட்களும் நல்ல விளைச்சலையே தருகின்றன. ஏனெனில் இது மிகவும் வளமான மண்ணாகும். ஆனால் இங்கு உற்பத்தி செய்யப்படும் எந்தவொரு பொருளும் மிகக் குறைந்த விலையிலேயே விற்கப்படுகின்றமை மிகவும் கவலைக்குரிய விடயமாகும்" என நெடுங்கேணி வீதியால் அடிக்கடி பயணிக்கும் ஐ.நா அமைப்பொன்றின் உள்ளுர் பணியாளரான கிருஜா சிவசுப்ரமணியம் தெரிவித்தார்.
அருகிலுள்ள நகரத்திற்கு தேங்காய்களை எடுத்துச் சென்று விற்பனை செய்து வந்த கணவனை இழந்தவரும் இரு பிள்ளைகளின் தாயுமான விமலாதேவி "நீண்ட நேரத்திற்கு எனது பிள்ளைகளைத் தனிமையில் விட்டுச் செல்வதற்கு நான் மிகவும் அச்சப்படுகிறேன்" எனத் தெரிவித்தார். தற்போது விமலாதேவி நாளாந்தம் கூலி வேலை செய்வதற்காக வயல்களைத் தேடிச் செல்கிறார்.
கடந்த தடவையைப் போலவே இந்த முறையும் மழை நன்றாகப் பெய்தால் சிறந்த நெல் விளையும் என எதிர்பார்க்கப்படுகின்ற போதிலும், நெடுங்கேணியும் அதற்கு அருகிலுள்ள ஏனைய கிராமங்களில் வாழும் மக்களும் வழமைபோல் பெரும் துன்பங்களை அனுபவிக்கின்றனர்.
மழை தொடர்ச்சியாகப் பெய்கின்ற போது இக்கிராமங்களின் போக்குவரத்துப் பாதைகள் மேலும் மோசடைவதாக இறுதியில் வெளியிடப்பட்ட ஐ.நா நிலவர அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இக்கிராமத்தில் தற்போது அரைக்கும் ஆலைகள் போன்ற பல புதிய விடயங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ள போதிலும், இவ்வாறான எந்தவொரு நிலையங்களும் இவ்வீதி திருத்தும் வரை தமது முழுமையான பயனை அக்கிராமத்து வாழ் மக்களுக்கு வழங்க முடியாது என்பதே உண்மையானதாகும்.
"எமது வீதி திருத்தப்படும் போதே எங்களது வாழ்வு சிறப்புப் பெறும்" என இக்கிராமத்துப் பிள்ளைகளின் சார்பாக 10 வயது நிரம்பிய அம்பிகாவதி தெரிவித்தார். இச்சிறுமி தனது தந்தையை ஏப்ரல் 2009ல் இழந்தார். இதன் பின்னர் இவரது தாயார் தனது நான்கு மகள்களையும் பராமரித்து வருகிறார்.
"எமது தோட்டத்திலிருந்து எங்களால் நல்ல அறுவடையைப் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் அதற்குத் தகுந்த நியாயமான விலையை எங்களால் பெற்றுக் கொள்ள முடியாவிட்டால் அதனால் என்ன பயன்?" என அச்சிறுமி வினவுகிறார்.
நன்றி: புதினப்பலகை
No comments:
Post a Comment