Tuesday 13 September 2011

விசாரணைகளை முன்னெடுப்பதற்கும் புலிகள் மீதான தடைக்கும் அவசரகால விதிகள் அவசியம்: ஹக்கீம்

நீதி செலுத்துங்கள்

* இறைவன் கூறுகின்றான்: (நீதி செலுத்துங்கள்) நீதி உங்களுக்கோ, உங்களின் பெற்றோருக்கோ, நெருங்கிய உறவினருக்கோ பாதகமாக இருந்தாலும் சரியே... எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள பகை உங்களை நீதியிலிருந்து பிறழச் செய்துவிடக் கூடாது.


(திருக்குர்ஆன் 4:135, 5)


விசாரணைகளை முன்னெடுப்பதற்கும் புலிகள் மீதான தடைக்கும் அவசரகால விதிகள் அவசியம்: ஹக்கீம்


நிலுவையிலுள்ள விசாரணை நடவடிக்கைகளை இறுதி செய்வதற்கும் அதே நேரம் வழக்கு விசாரணைகளை முன்னெடுப்பதற்கும் மேலும் புலிகள் மீதான தடையை நீடிப்பதற்குமென அவசரகாலச் சட்டத்தின் சில விதிகள் பயங்கரவாத தடைச் சட்டத்தில் உள்வாங்கப்பட்டிருப்பதாக நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் நேற்று (08-09-2011) சபையில் விளக்கமளித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை கொண்டுவரப்பட்ட அவசரகாலச் சட்ட நீக்கத்துக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் ஹக்கீம் இங்கு மேலும் கூறுகையில், அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டிருக்கின்ற போதிலும் அதிலுள்ள கெடுபிடிகளை நீடிப்பதற்கான மறைமுக செயற்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் இங்கு கூறுகின்றன.

எனினும் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லாத வகையில் நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்பதாலும் அதேநேரம் யுத்தத்தின் பின்னரான அனைத்துப் பிரச்சினைகளுக்கும் சுமுகமான தீர்வினை எட்டுவதற்கும் இந்த விதிகள் உள்வாங்கப்பட்டிருக்கின்றன என்பதை கூறி வைக்க விரும்புகின்றேன். நீதி அமைச்சர் என்ற வகையில் அரசாங்கத்தின் சார்பில் இதனை தெளிவுபடுத்த வேண்டியவனாக இருக்கின்றேன்.

அவசரகாலச் சட்டமானது கடந்த 30 வருடங்களாக அமுலில் இருந்து வந்தது. இந்த சட்டம் அமுலில் இருந்தமையால் சாதாரண சட்டம் என்றால் என்னவென்றே தெரியாத நிலையில் பொலிஸார் பலர் இருந்தனர்.

தற்போது அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டிருக்கின்றது. இது தொடர்பில் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றன.

அவசரகாலச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களின் விசாரணைகள் இன்னும் முடிவுறாத நிலையில் இருக்கின்றன. இது தொடர்பான வழக்கு விசாரணைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது. இதற்கென அவசர காலச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள சில விதிகளை கடைப்பிடிக்க வேண்டியுள்ளது.

அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டிருக்கின்ற போதிலும் இழைக்கப்படுகின்ற குற்றச்செயல்கள் தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது பெருமளவான புலி உறுப்பினர்கள் படையினரிடம் சரணடைந்தனர். சரணடைந்த இவர்களுக்கு தற்போது புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வருகின்றது. இதற்கென புனர்வாழ்வு ஆணையாளரும் நியமிக்கப்பட்டுள்ளார். அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதன் பிரகாரம் மேற்படி புனர்வாழ்வு ஆணையாளர் பதவியும் இரத்துச் செய்யப்பட வேண்டும். ஆனாலும் புனர்வாழ்வு நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டும். ஆதலால் புனர்வாழ்வு ஆணையாளர் பதவியும் இருத்தல் அவசியமாகின்றது. இதனைக் கருத்திற் கொண்டு அவசரகாலச் சட்ட விதிகள் தொடர்ந்தும் பேணப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் விடுதலைப் புலிகள் மீதான தடையை தொடர்ந்தும் பேணுவதற்கும் மேற்படி அவசரகாலச் சட்ட விதிகள் அவசியமாக அமைகின்றமை இவ்வாறான காரணங்களையிட்டே நீக்கப்பட்டுள்ள அவசரகாலச் சட்டத்தின் சில விதிகளை பேணுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
==========================================
பெருமதிப்பிற்குரிய நீதி அமைச்சர் அவர்களே!
``அவசரகாலச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களின் விசாரணைகள் இன்னும் முடிவுறாத நிலையில் இருக்கின்றன. இது தொடர்பான வழக்கு விசாரணைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது. இதற்கென அவசர காலச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள சில விதிகளை கடைப்பிடிக்க வேண்டியுள்ளது.``

தங்கள் மாபெரும் ஜனநாயக நாடு 30 வருடங்களாக சாதாரண சட்டம் என்றால் என்னவென்றே தெரியாத வழி நடந்துவந்துள்ளது என்று 30 ஆண்டுகளுக்கு பின்னால் கண்டுபிடித்துள்ளீர்கள்!
இருக்கட்டும், காலந்தாழ்த்திய நீதிக்கு நன்றி!

ஆனால் அவசரகாலச்சட்டமே நீக்கப்படுகிறதென்றால் அதன்மீது தொடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் தானே நீக்கப்படவேண்டும்.
அவசரகாலச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களின்
விசாரணைகள் இன்னும் முடிவுறாத நிலையில் ஏன் இருக்கின்றன?
எப்படி இருக்கமுடியும்?

சட்டத்தை நீக்குகிறபோது, அச்சட்டம் இழைத்த குற்றத்தையும் கூடவே நீக்குவதுதானே நீதி!

தாங்கள் குற்றத்தை தொடர்ந்து கொண்டு சட்டத்தை நீக்கியதாக    ஆடுகிற நாடகம் அநீதி!!

முற்போக்கு உணர்வுள்ள மக்கள் திரளே,
மீண்டும் பாருங்கள் வர்க்க சமுதாயத்தில்,எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள பகை உங்களை நீதியிலிருந்து பிறழச் செய்துவிடக் கூடாது. என்கிற பொது நீதிகள், பொது மறைகள் எவ்வாறு புறந்தள்ளப்பட்டு செல்லாக்காசாகி விடுகின்றன என்று!

No comments:

Post a Comment

அநுரா ஆட்சியில் செல்வினின் பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பொறுப்பு பறிப்பு!

அநுரா ஆட்சியில் செல்வினின் பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பொறுப்பு பறிப்பு! பனை அபிவிருத்தி சபைத் தலைவராக இரானியேஸ் செல்வின் அவர்களைப் பொறுப்ப...