Sunday 11 September 2011

பயங்கரவாத தடைச்சட்ட விதிகளை குற்றவியல் தண்டனையின் கீழ் கொண்டுவர முயற்சி: தயாசிறி

* பொது மக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நீக்கப்பட்ட சரத்துகளையும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழான விதிகளையும் குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் கீழ் உள்ளடக்குவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது என்று ஐ.தே.க. எம்.பி. யான தயாசிறி ஜயசேகர நேற்று சபையில் குற்றஞ்சாட்டினார்.

 * வடக்கு , கிழக்கில் மட்டுமே மேற்கொள்ளப் பட்டிருந்த இராணுவ மயம் இன்று நாடளாவிய ரீதியில் வியாபிக்கப் பட்டுள்ளது

என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.


பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர்மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டமைக்காக நாம் ஒருபுறத்தில் நன்றியை தெரிவித்து கொள்கின்றோம். மறுபுறத்தில் கவலை கொள்கின்றோம். ஏனெனில் 30 ஆம் திகதி அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டது. எனினும் செப்டம்பர் 6 ஆம்திகதி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலமாக "இராணுவ மயப்படுத்தலே' மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மனித உரிமை பேரவையில் எதிர்வரும் 12 ஆம்திகதி நடைபெறவிருக்கின்ற கூட்டத் தொடரை அடிப்படையாகக் கொண்டே அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டது. எனினும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் பொது மக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் விசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக கொண்டு வரப்பட்டுள்ளது.

அவசரகாலச் சட்டத்தின் கீழ் பொலிஸாருக்கே அதிகாரம் இருந்தது. எனினும் இன்று இராணுவத்தினர் நாடளாவிய ரீதியில் வியாபிக்கப்பட்டுள்ளனர். இது அவசரகாலச் சட்டத்தையும் விடவும் அபாயகரமானதாகும்.

அவசரகாலச் சட்டத்தை நீக்கி பொலிஸாரின் அதிகாரத்தை ஒரு பக்கத்திற்கு வீசிவிட்டு வடக்கு கிழக்கை மட்டுமல்ல முழுநாடும் இராணுவ மயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக நன்றி கூற வேண்டிய தேவையில்லை. மக்களை அணிதிரட்டி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் அதிகாரம் யார் கைகளில் இருக்கின்றது என்பது புரியும்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சோதனை செய்தல், விசாரித்தல், நீதிமன்றில் அமுல்படுத்திடலை 72 மணி நேரம் தடுத்து வைத்தல், கைது செய்தல், நடமாடும் சுதந்திரத்தை கட்டுப்படுத்தல் போன்றவை இருக்கின்றன.

பொது மக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நீக்கப்பட்ட சரத்துகளையும் மேலே குறிப்பிடப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழான விதிகளையும் குற்றவியல் தண்டனைக் கோவை சட்டத்தின் கீழ் உள்ளடக்குவதற்கு சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.


தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழர்களின் விபரங்கள் சரியாக இன்னும் வெளியிடப்படவில்லை. அந்த தகவலை வழங்குவதற்கு மறுக்கப்படுகின்றது. எனினும் கிறீஸ் மனிதனை கொண்டு சாதாரண மக்கள்அச்சுறுத்தப்படுகின்றனர். கிறீஸ் மனிதனை கைது செய்வதற்கு இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். சட்டத்தையும் ஒழுங்கையும் பொலிஸாரே பாதுகாக்க வேண்டும். எனினும்இராணவத்தினர் இன்று அழைக்கப்படுவது ஏன்?


இரத்தினபுரியில் கிறீஸ் மனிதன் அட்டகாசம் புரிகையில் அங்கு பொலிஸாரை வேண்டாம் என்றனர். மக்களின் வேண்டுகோளுக்கு அமைவாக இராணுவத்தினர் அழைக்கப்பட்டனர். எனினும் யாழ்ப்பாணத்தில் கிறிஸ் மனிதனை அடக்குவதற்கு இராணுவம் தேவையில்லை, பொலிஸாரை ஈடுபடுத்த வேண்டும் என்று கோருகின்றனர்.

வடக்கு கிழக்கில் மட்டுமே நிலை கொண்டிருந்த இராணுவ மயம் இன்று நாடளாவிய ரீதியில் சேவைக்காக அழைக்கப்பட்டுள்ளமை இது முழு நாட்டையும் இராணுவ மயப்படுத்தும் செயற்பாடாகும்.

இவ்வாறான நிலையில் சுவரொட்டிகளை கூட ஓட்ட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

கோட்டை நீதிவான் நீதிமன்றத்தின் ஊடாக பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட ஒருவர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுடன் கைலாகு கொடுத்து கொண்டிருக்கின்றார்.

பாதுகாப்பு செயலாளரை சுற்றி இருக்கின்ற பொலிஸ் அதிகாரிகளினால் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட ஒருவரை கைது செய்ய முடியாத அளவிற்கே சட்டம் இன்றிருக்கின்றது.


தயா மாஸ்டர், ஜோர்ஜ் மாஸ்டர், கருணா, கே.பி. போன்றவர்கள் தொடர்பில் சட்டம் நடவடிக்கை எடுப்பதில்லை. எனினும் சாதாரண பொது மகனுக்கு பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டால் பொலிஸார் வீட்டிற்கு தேடி சென்று இன்றேல் வீதியோரம் நின்று கொண்டிருந்தாலும் பிடித்து சென்று விடுவர். இவ்வாறான நிலைமையே நாட்டில் இன்னும் இருக்கின்றது என்றார்.

No comments:

Post a Comment

அநுரா ஆட்சியில் செல்வினின் பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பொறுப்பு பறிப்பு!

அநுரா ஆட்சியில் செல்வினின் பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பொறுப்பு பறிப்பு! பனை அபிவிருத்தி சபைத் தலைவராக இரானியேஸ் செல்வின் அவர்களைப் பொறுப்ப...