அஞ்சற்க....
வல்லமையின் குரல் நலிந்தால் வளவுக்குயில் பாடாது.
எழுச்சி கொள்க கவிஞர்களே!தாயகமூச்சு எமக்கில்லையா?ஆயிரம் தடைகளை ஆரும் போட்டாலென்ன?உன்னிப் பெருமூச்செடுத்து உறவணைக்க எழுந்திடுக.நோயுண்ணும் உடல் நலித்தும்,பேயுண்ணும் உணர்வொழித்தும்,தாய் நிலத்தின் வேதனையை - எம்தோள் தாங்காதிருக்கும் பாழ்வாழ்வு எங்களது எனவரலாற்று பதிவேட்டில் பதிவிக்கப் போகிறோமா?கூடாது... கூடவே கூடாது.
முற்றத்து மணற்பரப்பில்முழுமதியின் எழிலொளியில்,சுற்றம் சூழப் புற்பாய் போட்டமர்ந்து பேசி,அடிவளவு மூலையிலே படர்ந்தமுல்லைச் சொதி மணக்கும்கவளச் சோறெண்ணி,ஏக்கங்களை மட்டுமே எமதாக்கி,பனிநிலங்களில் உயிர் தொய்ய வாழ்கிறோமே....விட்டுவிடுவோமா?
தாய்நிலத்தில் ஏறி நின்று அந்நியன் கூத்தாடவாயொடுக்கி, மெய் நடுக்கி விதியென்று கிடந்திடவோ?....புலம்பெயர்ந்து கிடந்தாலும் புலன் மாறக்கூடாது.
வலியென்று துடித்தாலும்,'அம்மா" என்றழைத்து விழுந்து புரண்டாலும்எமைத் தாங்கிப் பிடிக்கின்ற தாய்மடியைத்தவிப்பெய்த விட்டிடவோ....தமிழச்சாதியாய் தரணிக்குள் பிறப்பெடுத்தோம்?
வாகை சூழ்ந்திருக்கும்,வன்னிமேனியிலே சோகம் படர்ந்திடுமோ?
வாயாரத் தமிழ் தொடுத்து வல்கவிகள் நல்கும் கவிமுரசுகளே!
காலம் எம் காலடியில் கைகட்டி நிற்கிறது.
வாழ்வை வனைய வல்லமைபூட்டிஎழுதுகோல்கள் எழுந்துதான் ஆகவேண்டும்.
இது காலக்கட்டளையும் கூட..
ஆவி துடித்திருக்கும் விழுதுகளின் ஓரவிழிக்கசிவில்தாயை மீட்கின்ற பாதிப்பலமிருக்கும் சேதியைக் கூவி முழங்குக.
நிமிர்ந்த தானை செருக்கோடு தலைவன் வழி தொடருகையில்மேதினி வாழ் தமிழின் போர் முரசங்கள்மேனி நுடங்குதல் ஆகாது.
சோகச் சுமை ஏந்தலும், ஓர்மக்குரல் அடைத்தலும்எழுதுகோல் வல்லமைக்கு இழிவல்லவா...
வல்லமை நலிந்தால் வளவுக்குயில் பாடாது.
வசந்தம் தாய்மண்ணைத் தழுவி மகிழாது.
முற்றத்து மலர்களால் முகம் சிவக்கமுடியாது.
போர் மூசிய பேய்க்காற்றை எதிர்கொள்ளும்பலம் தர நாமுள்ளோம்.அஞ்சற்க....
என தாயக உறவுகள் நோக்கிஆயிரமாயிரம் கவி படைத்து எழுக எம் கவிஞர்களே.
இன்று,காலக் கட்டளை ஈழத்தமிழரின் திறவுகோல்கள் அற்றஇதயவாசல்களையும் இடித்துப் பெயர்த்துளது.
பழி சூழும் நிலை எங்கள் பரம்பரைக்கு வந்திடுமோ எனஇதுவரை காலமும் விழிமூடி நடித்தோரும் வெம்பி எழுந்துளர்.
உப்புக் காற்றுரசும் ஊர்மடியின் நினைப்பூற,நேற்றுவரை செக்கிழுத்தோரும் சீற்றத்தில் கனல்கின்றர்.
அள்ளிப்பிடித்திருக்கும் ஆவி ஓய்ந்தால் கொள்ளிக்குத்தன்னும்குலந்தழைத்தமண் வேண்டுமென சொல்லித் துடிக்கின்றசொந்தங்களும் எழுந்துளர்.
பள்ளிக் காலத்தில் பதிவிட்ட சித்திரத்தைசில்லுருட்டி விளையாடிய செம்பாட்டுப் புழுதிமண்ணைகல்லுக்குத்தி வைத்த தேர்முட்டி மூலைகளைஎண்ணி மகிழ்வோரும் எழுச்சியுற்று விரிந்துள்ளர்
எனும் சேதிகள் எங்கள் சொந்தங்களைச் சென்றடைய வேண்டும்.
வல்லமையின் குரல் நலிந்தால் வளவுக்குயில் பாடாது.
வசந்தம் தாய்மண்ணைத் தழுவி மகிழாது.முற்றத்து மலர்களால் முகம் சிவக்கமுடியாது.
நோயுண்ணும் உடல் நலித்தும்,பேயுண்ணும் உணர்வொழித்தும்,தாய் நிலத்தின் வேதனையை - எம்தோள் தாங்காதிருக்கும் பாழ்வாழ்வு எங்களது எனவரலாற்று பதிவேட்டில் பதிவிக்கப் போகிறோமா?கூடாது... கூடவே கூடாது.
நன்றி:http://valvaizagara.blogspot.com/
No comments:
Post a Comment