அன்று கிளிநொச்சி இன்று அலரி மாளிகை!
எம் பிள்ளைகளை விடுவிக்க கோரி அன்று கிளிநொச்சிக்குப் போனோம்; இப்போது அலரி மாளிகைக்குப் போகிறோம் - ஒரு சிங்களத் தாய்
[ செவ்வாய்க்கிழமை, 09 மார்ச் 2010, 12:29 GMT ] [ தி.வண்ணமதி ] புதினப் பலகை
“புலிகளால் கைதுசெய்யப்பட்ட படையினரை விடுவிப்பதற்காக அன்று கிளிநொச்சிக்குப் போனோம். இப்போது, எங்களது படைவீரர்களை விடுவிப்பதற்கு நாங்கள் அலரிமாளிகைக்குப் போகிறோம்” என விசாக தர்மதாச தெரிவித்தார்.
சர்வதேசப் பெண்கள் தினத்தின் 100வது ஆண்டு நிறைவினைக் கொண்டாடும் முகமாக கொழும்பிலுள்ள ஜே.ஆர் ஜெயவர்த்தன மையத்தில் இடம்பெற்ற கூட்டத்திலேயே விசாக தர்மதாச இந்தக் கருத்தினை வெளியிட்டிருந்தார்.
போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பெண்களும் பெண்கள் அமைப்புக்களது பிரநிதிநிகளும் இந்தக் கூட்டத்தில் பங்குபற்றியிருந்தார்கள்.
ராஜபக்சவினது நிர்வாகத்தினால் கைதுசெய்யப்பட்ட படைவீரர்களை விடுவிப்பதற்கு ஏற்ற பிரசாரங்களைத் தாம் முன்னெடுத்து வருவதாக போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பின் [Association of War Affected Women -AWAW] மூத்த பணியாளரான விசாக தர்மதாச குறிப்பிட்டார்.
பெண்ணுரிமை அமைப்புக்கள் பல இணைந்து ஒழுங்குசெய்திருந்த இந்தக் கூட்டத்தில், ஊடக சுதந்திரம், நாட்டில் சனநாயகம் மீண்டும் நிலைநாட்டப்படுதல் மற்றும் பாராளுமன்றில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்படவேண்டும் போன்ற அழைப்புக்கள் விடுக்கப்பட்டன.
தமக்காகப் போராடியோரையே அரசு பிடித்து வைத்துள்ள போது, தமக்கு எதிராகப் போராடியவர்களைப் பிடித்து வைத்திருந்த புலிகளிடம், அவர்களை விடுவிக்குமாறு நாம் கேட்டது நியாயம் இல்லை.
அரச படையினர் விடுதலைப் புலிகளை வீழ்த்தி வெற்றிகளைத் தமதாக்கிக்கொண்டிருந்த காலப்பகுதியில்தான் அரசியல்வாதிகள் படைவீரர்களின் நலன்களில் அக்கறைகொண்டு செயற்பட்டதாகவும் தர்மதாச தெரிவித்தார்.
“படைவீரர்கள் தோல்விகளைச் சந்தித்துக்கொண்டிருந்த வேளையில், எமது பிள்ளைகள் தங்களது உயிர்களை விட்டுக்கொண்டிருந்த வேளையில், எங்களது துயராற்றுவதற்கு எவரும் வரவில்லை” என அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment