தினக்குரல்-18-02-10
இராமேஸ்வரம்: இராமேஸ்வரம் கடலில் சேது சமுத்திர மாற்றுவழி குறித்த ஆய்வுப்பணி தொடங்கியது.ஒளிரும் மிதவைக் கருவியின் அடிப்பகுதியில் கடலுக்குள் இணைக்கப்பட்டுள்ள கேமரா மற்றும் கருவிகள் மூலம் பெறப்படும் விபரங்கள், இராமேஸ்வரம் சேது சமுத்திர திட்ட கழக அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆன்டெனா மூலம் மொனிட்டரில் பதிவாகிறது. தனுஷ்கோடி கடலில் சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை செயல்படுத்துவதற்கு எதிர்ப்புக் கிளம்பியதை தொடர்ந்து, உச்சநீதிமன்றம் இதற்கான மாற்றுப் பாதை குறித்து ஆய்வு செய்யுமாறு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து பச்சோரி தலைமையில் ஆய்வுக்குழு அமைக்கப்பட்டும் மாற்று வழி குறித்த பணிகள் நடைபெறாமல் இருந்தது.
தற்போது சேது சமுத்திர திட்டம் செயல்படுத்தப்படவுள்ள மன்னார் வளைகுடா மற்றும் பாக்குநீரிணை கடல் பகுதியில் மாற்றுவழிக்கான கடல் பகுதியில் கடல் சார்ந்த சுற்றுச்சூழல் குறித்த ஆய்வுப்பணி துவங்கப்பட்டுள்ளது. பாம்பன் முதல் கோடியக்கரை வரையிலான கடல் பகுதியில் எட்டு மையங்களில் இதற்கான ஆய்வுக்கருவிகள் ஒளிரும் மிதவைகளின் உதவியுடன் கடலில் நிறுவப்பட்டுள்ளன. இராமேஸ்வரம் கடல் பகுதியில் கிழக்கே 6 கி.மீ.தூரத்தில் நடுக்கடலில் ஆய்வுக்கருவி ஒன்று நிறுவப்பட்டுள்ளது. இக்கருவியை பாதுகாக்க அருகிலேயே மீனவரின் படகு ஒன்றும் நிறுத்தப்பட்டு இப்பகுதியில் மீன்பிடிக்க வரும் மீனவர்களுக்கு எச்சரிக்கை செய்யப்படுகிறது.
மிதக்கும் கருவியின் அடிப்பகுதியில் கடலுக்குள் இணைக்கப்பட்டுள்ள கேமரா மற்றும் கருவிகள் மூலம் பெறப்படும் விபரங்கள், இராமேஸ்வரம் சேது சமுத்திரத் திட்ட கழக அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மானிட்டரில் பதிவாகும். இதுபோல் எட்டு மையங்களில் இருந்தும் பெறப்படும் தகவல்களின் அடிப்படையில், கடல் சுற்றுச்சூழல் பாதிப்பு, சீதோஷ்ண நிலையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆய்வு நடத்தப்படும். ஓர் ஆண்டு காலம் நடைபெறும் இந்த ஆய்வுப்பணியில், கொச்சியிலுள்ள தேசிய கடல் ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment