வாக்குக் கடதாசியைச் சரிவரப் பயன்படுத்துவது எப்படி?
அந்தக் கடதாசியை எப்படிப் பயன்படுத்தினாலும்
எதுவுமே மாறாது என்று
அவர்கள் எல்லாருக்கும் தெரியும்.
என்றாலும்
அந்தக் கடதாசி பெறுமதி மிக்கது என்பதால்
அதை வீணாக்கக் கூடாது என்று
அவர்கள் சொல்லுகிறார்கள்.
அதை எப்படிப் பயன்படுத்துவது என்று
சொல்ல மாட்டார்கள்.
பயன்படுத்தத் தெரியவில்லை என்று
உங்கள் பாட்டில் வீட்டில் இருந்து விடாதீர்கள் என்றும்
எப்படியாவது சரியாகப் பயன்படுத்தும்படியுமே
அவர்கள் சொல்லுகிறார்கள்.
அதை விடவும்,
எவரேன் பயன்படுத்த மாட்டார;
என்று அறியும் எவரும்
அதை எடுத்துப் பயன்படுத்தவும் இயலும் என்பதால்
அந்தக் கடதாசியை எப்படிப் பயன்படுத்துவது என்று
ஆராயத் தொடங்கினேன்.
சில கேள்விகளுக்குச்
சரியான ஒரு மறுமொழி மட்டுமே உண்டு.
சில கேள்விகளுக்குச் சரியான மறுமொழி ஒன்றுமேயில்லை.
சில கேள்விகட்குச் சரியான மறுமொழிகள் பல உள்ளன.
வாக்குச் சீட்டைச் சரிவரப் பயன்படுத்துவது
எப்படி என்ற கேள்விக்குப் பல மறுமொழிகள் உள்ளன.
அந்தக் கடதாசியில் உள்ள
சதுரமான சிறிய பெட்டிகளில் ஒன்றிற்குள்
பெருக்கல் அடையாளம் இடுவதோ
இலக்கம் எதையாவது எழுதுவதோதான்
சரியான மறுமொழி என்று சொல்கிற பலர்
எந்தப் பெட்டி என்று சொல்லுவதில்லை.
சொல்லுகிறவர்கள் ஆளுக்காள்
வேறு விதமாகச் சொல்லுகிறார்கள்.
எனவே
அவற்றை விடச் சரியான
வேறு மறுமொழிகளும் உள்ளன என்று
உறுதியாக நம்புகிறேன்.
வரிசையில் நின்று
உங்கள் கைவிரலை அசிங்கப்படுத்தி வாங்குகிற
அந்த வாக்குக் கடதாசியை வீணாக்கலாமோ?
எனவே தான்
வேறு நல்ல பயன்பாடுகளைச் சொல்லுகிறேன்.
தெரிவு உங்களுடையது.
தாள் சதுரமாக இருந்தால்
அதை மடித்துக்
காகிதக் கப்பல், பறவை, தவளை, கடகம், குதிரை
என்று பலவுஞ் செய்யலாம்.
சற்று நீள் சதுரமாக இருந்தால்
ராக்கெட் செய்து வீசி விளையாடலாம்.
இன்னும் நீளம் என்றால்
நீளத் தோணி ஒன்று செய்து தண்ணீரில் விடலாம்.
தாளைக் கசக்கிப் பந்தாக்கி வீசி விளையாடலாம்.
கெட்டியான பற்களும்
வாயில் உமிழ்நீரும் இருந்தால்
வாயிற் போட்டுச் சப்பி உருண்டையாக்கி
ஒரு தேர்தல் சுவரொட்டி மீது எறியலாம்.
தெருவிற் கிடக்கும்
கோழி மலத்தையோ நாய் மலத்தையோ எடுத்து
ஓரமாகப் போடப் பாவிக்கலாம்.
ஆனால் தேர்தல் அதிகாரிகள்
அதற்கெல்லாம் அனுமதிக்க மாட்டார்கள்.
வீட்டுக்குக் கொண்டு செல்லவும் முடியாது.
கிழித்துக் குப்பைத் தொட்டியில் இடலாம்.
கிழிக்க விடமாட்டார்களென்றால் கிழிக்காமலே இடலாம்.
ஆனாற் குப்பைத் தொட்டியெதுவும் அயலில் இராது.
கோவில் உண்டியல் மாதிரி ஒரு பெட்டி.
அதிலுள்ள நீண்ட துவாரத்தின் வழியே தான் போடலாம்.
நேரமிருந்தால்
எல்லாச் சதுரங்களிலும் பெருக்கல் அடையாளமிடலாம்.
அல்லது தாளுக்குக் குறுக்காகப்
பெருக்கல், வகுத்தல், கூட்டல், கழித்தல்
அடையாளம் ஒன்றை இடலாம்.
ஒரு அரிவாளும் சம்மட்டியும் வரையலாம்.
நீளமாக ஒரு கவிதை எழுதலாம்.
வாக்குகளை எண்ணுவோர் தேநீர் பருகும்போது
படிக்கும் வாய்ப்புண்டு.
பட்டியலில் உள்ள எதுவுமே
உங்கள் விருப்பிற்குரியதல்ல என்று சொல்ல
அக் கடதாசியைப் பயன்படுத்த
எத்தனையோ வழிகள் உள்ளன.
வாக்குக் கடதாசியைச் சரிவரப் பயன்படுத்தும்
தெரிவு நிச்சயமாக உங்களுடையது.
- சி. சிவசேகரம் -
No comments:
Post a Comment