Monday 28 December 2009

மாத்தையாவும் 300 போராளிகளும்- 15 ஆம் ஆண்டுநிறைவு.

மாத்தையாவும் 300 போராளிகளும்- 15 ஆம் ஆண்டுநிறைவு.

மாத்தையா தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை கட்டியெழுப்பிய ஆரம்பகால அமைப்பாளர் ஆவர்.குறிப்பாக பிரபாகரன் அவர்கள் இந்தியாவில் இருந்தகாலத்தில் மாத்தையாவே நாட்டில் அமைப்புக்குப் பொறுப்பாக இருந்து அமைப்பைக் கட்டியெழுப்பியவர். இந்திய இலங்கை அரசுகள் திம்புக்கோரிக்கைகளை ஏற்கமறுத்து விடுதலைப்புலிகளை நிராயுதபாணிகளாக்கி ஒரு அடிமைத்தனமான சமரசத் தீர்வை இராணுவ பலம் கொண்டு தமிழ் மக்கள் மீது திணிக்கத் தயாராகிவந்த 1985-1987 சூழ்நிலையை முன்னுணர்ந்து சரியான அரசியல் இராணுவ செயல் தந்திரங்களை வகுத்து தமிழீழமக்களையும் விடுதலைப் புலிகள் அமைப்பையும் இந்திய ஆக்கிரமிப்புப் போரை எதிர்கொள்ள அடித்தளமிட்டவர்.இதனை அறிந்து கொண்ட இந்திய விஸ்தரிப்புவாத அரசு விடுதலைப் புலிகளின் மன நிலையையும் போர்த் திட்டமிடலையும் கண்டறிய, தனது உளவு ஊடகவியலாளன் டி.பி.எஸ்.ஜெயராஜ்ஜை இந்து (The Hindu) பத்திரிகையாளானாக அனுப்பி மாத்தையாவைப் பேட்டிகண்டது.( இந்த ஆவணம் இன்று எல்லாச் சக்திகளாலும் இருளில் புதைக்கப் பட்டுவிட்டது.) அதில் டி.பி.எஸ்.ஜெயராஜ் மாத்தையாவிடம் கேட்கிறார், '' உலகின் நான்காவது பெரிய இராணுவத்தை எதிர்த்து போராடி தங்களைப் போன்ற ஒரு சின்னஞ்சிறு கெரில்லா அமைப்பால் வெற்றி கொள்ளமுடியும் என நம்புகிறீர்களா? எமது தேசத்தின் ஒவ்வொரு அங்குல நிலமும் எமக்குத்தெரியும் வந்து மோதிப் பார்க்கச் சொல்லுங்கள், எனப் பதிலளித்தார் மாத்தையா.அநீதியான யுத்தத்தை நீதியான யுத்தம் வெல்லும், இதனால் பெரிய ஆக்கிரமிப்பு இரானுவத்தை சிறிய விடுதலை இராணுவம் வெல்லும் என்ற மிகச்சரியான இராணுவ செயல் தந்திரத்தை வகுத்து இயக்கத்தை வழி நடத்தினார்.அதேவேளயில் இந்திய ஆக்கிரமிப்பை எதிர்த்து புலிகள் ஆரம்பித்த விடுதலை யுத்தம் சிங்கள தேசத்திலும் புரட்சியைத் தூண்டியது.இது இலங்கையின் அகச் சூழலில் மாற்றத்தை ஏற்படுத்தியது.பிரேமதாசா அரசு இனிமேலும் ஒட்டுமொத்த மக்களின் ''இந்திய இராணுவமே வெளியேறு'' என்கிற கோரிக்கைக்கு எதிராக நின்றால் தனது அரசுமுறை தகர்ந்து போய்விடும் என்பதை உணர்ந்து கொண்டு பேச்சுவார்தைக்கு அழைப்புவிட்டது.இப் புதிய அரசியல் சூழ்நிலையில் மாத்தையா பிரேமாதாசவுக்கு பின்வரும் நிபந்தனைகளை இட்டார்.
1) இந்திய ஆக்கிரமிப்புப்படைகளை நாட்டை விட்டு வெளியேற்றினால் இலங்கை அரசபடைகளுடன் யுத்த நிறுத்தம் செய்ய முடியும்.
2)இந்தியப் படைகளின் வெளியேற்றத்தின் பின்னால் தமிழர் பிரச்சனைக்கான தீர்வு குறித்துப் பேச முடியும்.
உடன்பாடு எட்டப்பட்டு இந்திய ஆக்கிரமிப்புப் படை அவமானகரமான தோல்வியைத் தழுவி இலங்கை மண்ணிலிருந்து வெளியேறியது.
3)பிரேமதாசா அரசுடனான பேச்சுவார்த்தையில் '' வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகம், திருகோணமலை தமிழரின் துறைமுகம்'' என்கிற அடிப்படைக் கோட்பாடுகளை விட்டுக்கொடுக்க மறுத்து நடத்திய அரசியல் பேச்சுவார்த்தை -தோல்வியில் முடிந்து- அடுத்த கட்ட யுத்தத்திற்கு நீதியான அரசியல் அடிப்படையை இட்டது.சுருங்கச்சொன்னால் வெறுமனே இலங்கை அரசை எதிர்த்ததே என நம்பி ஆரம்பித்து நடத்தப்பட்ட ஈழவிடுதலை யுத்தம் 80 களின் பிற்பகுதியில் அமெரிக்க,ரசிய சமூக ஏகாதிபத்தியவாதிகளினதும் இந்திய விஸ்தரிப்புவாத அரசினதும் தலையீட்டை தவிர்க்க இயலாமல் சந்தித்தது.இதனை அரசியல் இராணுவ ரீதியாகவும் 'ராஜதந்திர' ரீதியாகவும் சரிவரக் கையாண்டு தமிழீழப் புரட்சியைக்காத்து மக்களிடம் பத்திரமாக கையளித்த தவப் புதல்வன் பிரதித் தலைவர் மாத்தையா அவர்கள்.
இக்காலத்தில்தான்
மாத்தையாவும் அவருக்கு ஆதரவான 300 போராளிகளும் '' ஈழப்போராட்டத்தை இந்தியாவுக்கு காட்டிக்கொடுத்த துரோகிகள்" என்ற விசாரிக்கப்படாத, நிரூபிக்கப்படாத;குற்றவாளிகளின் குரல் வெளிப்படுத்தப்படாத ஒரு தலைப் பட்சமான குற்றச்சாட்டின் பேரில்மரண தண்டனை விதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
தேசப் புதல்வன் மாத்தையாவும் அவன் மாவீரத் தோழர்கள் 300 பேரும் மரணித்து இன்று 15 ஆண்டுகள் ஆகும்,
தாய்த் திரு நாட்டின் தங்கப் புதல்வர்களே தாங்கள் புதைக்கப்படவில்லை விதைக்கப் பட்டிருக்கிறீர்கள்! இருட்டில் உள்ள தங்கள் நியாயம் வெளிச்சத்தில் விவாதத்திற்குள்ளாகும். வரலாறு உங்களை விடுதலை செய்யும்

No comments:

Post a Comment

அநுரா ஆட்சியில் செல்வினின் பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பொறுப்பு பறிப்பு!

அநுரா ஆட்சியில் செல்வினின் பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பொறுப்பு பறிப்பு! பனை அபிவிருத்தி சபைத் தலைவராக இரானியேஸ் செல்வின் அவர்களைப் பொறுப்ப...