ஜனாதிபதித் தேர்தல்: இரு தரப்புகளும் தமிழ்க் கூட்டமைப்புக்கு வலைவீச்சு...
2009-12-08 06:29:53 யாழ் உதயன்
பஸில் சுரேஸுடன்; சரத் சம்பந்தனுடன் பேச்சு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமக்கு ஆதரவு வழங்குமாறு கோரி இரு பிரதான வேட் பாளர்களின் தரப்புகளில் இருந்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத் தொடர்ந்து வலை வீசப்பட்டு வருகின்றது.
நேற்றுமுன்தினம் இரவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தனுடன் எதிரணியின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவும், அதே வேளை கூட்டமைப்பின் மற்றொரு சிரேஷ்ட தலைவரான சுரேஷ் பிரேமச்சந்திரனுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரதம ஆலோசகரும் சகோதரருமான பஸில் ராஜபக்ஷ எம்.பியும் பேச்சு
நடத்தியிருக்கின்றனர்.
தமிழ்க் கூட்டமைப்பின் சார்பில் பொது வேட்பாளராகத் தமிழர் ஒருவரை நிறுத்தும் திட்டம், கூட்டமைப்புக்குள் ஆதரவு இழந்து போன நிலையில், இரு பிரதான வேட்பாளர்களில் யாரை ஆதரிப்பது என்ற வினாவே கூட்டமைப்பு வட்டாரங்களில் முக்கியமாக ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றது. இத் தேர்தலில் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் விடயமாகத் தமிழர்களின்
வாக்குகள் மாறலாம் என்று கணிப்பிடப்படும் சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைப் பெறும் தீவிர முயற்சியில் இரு பிரதான வேட்பாளர்களின் தரப்புகளும் ஈடுபட்டுள்ளன.
கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தனுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் ஏற்கனவே இத் தேர்தல் தொடர்பாகத் தனித்தனியே பேசியிருந்தனர் என்பது தெரிந்ததே. நேற்று முன்தினம் இரவு இரா. சம்பந்தனுடன் ஜெனரல் பொன்சேகா விரிவான பேச்சுகளில் ஈடுபட்டார். இரவு எட்டு மணிமுதல் நள்ளிரவு பன்னிரண்டு மணிவரை நீடித்த இந்தப் பேச்சுகளின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பியான கரு ஜயசூரியவும் உடனிருந்தார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தப் பேச்சுகள் எதிர்பார்த்ததை விட மிகவும் நம்பிக்கை ஊட்டுவனவாக இருந்தன என்ற சாரப்பட இரா.சம்பந்தன் தமது கூட்டமைப்பின் ஏனைய முக்கிய தலைவர்களிடம் தகவல் வெளியிட்டார் என அறியவந்தது. சம்பந்தர் எழுப்பிய பல்வேறு வினாக்கள் தொடர்பில் சரத் பொன்சேகா அளித்த பதில்களும் உறுதிமொழிகளும் சம்பந்தருக்குத் திருப்தி தருவனவாக
அமைந்தன என்று குறிப்பிட்டு அவற்றைப் பட்டியலிட்டன கூட்டமைப்பு வட்டாரங்கள்.
இதேவேளை, கடந்த வாரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துப் பேசியிருந்த சம்பந்தன் எம்.பி., அச்சந்திப்பின் பெறுபேறுகள் தொடர்பில் தமது சகாக்களிடம் சற்று அவநம்பிக்கை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேசமயம், மறுபுறத்தில் , நேற்று முன்தினம் இரவு தமிழ்க் கூட்டமைப்பின் மற்றொரு தலைவரான சுரேஷ் பிரேமச்சந்திரனுடன் பஸில் ராஜபக்ஷ
எம்.பி. சுமார் ஒன்றரை மணி நேரம் பேச்சு நடத்தினார் என அறியவந்தது. இந்தச் சந்திப்பின்போது இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான்,
அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் இரா. யோகராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்த அரசுத் தலைமை தொடர்பாகவும், அதன் போக்குத் தொடர்பாகவும் தமிழ் மக்களுக்கும் கூட்டமைப்புக்கும் உள்ள ஆதங்கங்கள், அதிருப்திகள், கோபங்கள் குறித்து இந்தச் சந்திப்பின்போது சுரேஷ் பிரேமச்சந்திரன் பஸிலிடம் விரிவாக விளக்கினார் எனத் தெரிகின்றது.
யுத்த வெற்றியின் பின்னர் சாந்தி, சமாதானம், சமரசம் ஆகியவற்றை வலியுறுத்திய அசோக மன்னன் போல ஒரு சகாப்தத்தின் உன்னத தலைவராக மிளிரவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விரும்புகிறார் என்று இந்தப் பேச்சுகளின்போது குறிப்பிட்ட அவரின் சகோதரர் பஸில் ராஜபக்ஷ, இந்தத் தேர்தலிலும் வென்று அதன் மூலம் தமிழர்களுக்கு உரியதைத் தாமே வழங்கி செய்து காட்ட ஜனாதிபதி விரும்புகின்றார் என்றும் குறிப்பிட்டார் எனத் தெரிகின்றது. அதற்காக, ஜனாதிபதிக்கு வாய்ப்பு வழங்கி ஒத்துழைக்கக் கூட்டமைப்பு முன்வரவேண்டும் என்றார்
பஸில்.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உடனடியாகவும், நீண்டகால அடிப்படையிலும் எவையெவற்றைச் செய்யவேண்டும் எனத் தமிழ்க் கூட்டமைப்பு எதிர்பார்க்கின்றதோ அவற்றையெல்லாம் பட்டியலிட்டுத் தருமாறும் தாம் ஜனாதிபதியுடன் நேரடியாகப் பேசி அவற்றில் செய்யக்கூடியவை பற்றிய தகவலைக் கூட்டமைப்புக்குத் தெரியப்படுத்துவார் எனவும் பஸில் ராஜபக்ஷ, சுரேஷ் பிரேமச்சந்திரனிடம் கூறியிருக்கின்றார். இவைபற்றித் தொடர்ந்து பேச்சு நடத்தவும் இந்தச் சந்திப்பில் தீர்மானிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை! -ஆங்கிலக் குறிப்புடன் தமிழ் சிங்கள வீடியோக்கள்.
அநுரவின் உரையின் முக்கிய பகுதி தமிழில் LINK அநுரவின் உரையின் முழுப்பகுதி சிங்களத்தில் ...
-
தமிழகம் வாழ் ஈழத்தமிழர்களை கழகக் கண்டனப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளக் கோருகின்றோம்!
-
சமரன்: தோழர்கள் மீது எடப்பாடி கொலை வெறித்தாக்குதல், கழகம்...
No comments:
Post a Comment