Friday, 13 November 2009

பிரணாப் முகர்ஜி நாளை இலங்கை வருகை

பிரணாப் முகர்ஜி நாளை இலங்கை வருகை : இந்தியச் செய்திகள் தகவல் வீரகேசரி இணையம் 11/13/2009 3:35:08 PM - மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி நாளை 2 நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு கொழும்பு வருகின்றார் என இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

சரத் பொன்சேகா, ராஜபக்ஷவை எதிர்த்து அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாகச் செய்திகள் வெளிவரும் நிலையில் பிரணாப் இலங்கை வருவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது என்றும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும்,

"மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இதுவரை கொழும்பு செல்லாத நிலையில், நிதியமைச்சராக இருக்கும் பிரணாப் முகர்ஜி கொழும்பு செய்வதும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

பிரணாப் முகர்ஜி, நாளை டில்லியிலிருந்து பகல் 11.30 மணியளவில் சென்னை வந்து, பின்னர் 12.30 மணிக்கு விமானம் மூலம் கொழும்புக்கு புறப்பட்டுச் செல்கிறார்.

முதல்வருடன் சந்திப்பு

சென்னையில் அவர் முதல்வர் கருணாநிதியைச் சந்தித்துப் பேசலாம் என்றும் எதி்ர்பார்க்கப்படுகிறது.

இலங்கையில் பெரும் குழப்பம் நிலவுவதாக சமீபத்தில் இந்தியா வந்திருந்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கூறியிருந்தார். மேலும், ராஜபக்ஷவை எதிர்த்து அதிபர் தேர்தலில் பொன்சேகாவை நிறுத்த எதிர்க்கட்சிகள் முயன்று வருகின்றன.

இந்தப் பின்னணியில் பிரணாப் முகர்ஜியின் கொழும்புப் பயணம் அமைகிறது. தனது பயணத்தின்போது ராஜபக்ஷ, வெளியுறவு அமைச்சர் ரோஹித பொகல்லகம, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை பிரணாப் முகர்ஜி சந்திப்பார். பொன்சேகாவையும் அவர் சந்திக்கக் கூடும் என்றும் ஒரு தகவல் கூறுகிறது.

ராஜபக்ஷ - பொன்சேகா இடையே சமரசம் ஏற்படுத்த பிரணாப் செல்வதாகவும் ஒரு கூற்று உள்ளது.

இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்ஷவே மீண்டும் வெல்ல வேண்டும் என இந்திய அரசு விரும்புவதாகத் தெரிகிறது. இதற்காகத்தான் சமீபத்தில் ரணில் விக்கிரமசிங்கவை காங்கிரஸ் கட்சி டில்லிக்கு அழைத்து ராஜபக்ஷவுக்கு எதிராகத் தீவிரமாக செயல்படவேண்டாம் எனக் கேட்டுக் கொண்டதாகவும் ஒரு தகவல் உள்ளது.

சரத் பொன்சேகா அதிபரானால் அது இந்தியாவுக்கு நல்லதல்ல. அவர் சீனா மற்றும் பாகிஸ்தானின் கைப்பாவையாக செயல்படுவார் என இந்தியாவுக்கு அச்சம் உள்ளது. இதனால்தான் பொன்சேகாவின் எழுச்சியை இந்தியா விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதுதவிர, சமீப காலமாக சீனா, பாகிஸ்தானுடன் படு தோழமையாக உள்ளது இலங்கை.

இலங்கைக் கடற்படையுடன் சேர்ந்து சீன வீரர்களும் தற்போது கச்சத்தீவு பகுதியில் நடமாடி வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் குவிந்து வருகின்றன.

இதுகுறித்தும் பிரணாப் முகர்ஜி இலங்கையுடன் பேசுவார் எனத் தெரிகிறது. தமிழர் மறு குடியேற்ற நடவடிக்கைகள் குறித்தும் அவர் பேசக் கூடும் என்று தெரிகிறது." இவ்வாறு அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை! -ஆங்கிலக் குறிப்புடன் தமிழ் சிங்கள வீடியோக்கள்.

அநுரவின் உரையின் முக்கிய பகுதி தமிழில் LINK அநுரவின் உரையின் முழுப்பகுதி சிங்களத்தில்                                                       ...