SHARE

Monday, January 30, 2017

ஈழ மொழியுரிமைப் பாடல்


செங்களம் ஆடி வருகிற புகழோடு
சிரிக்க மறப்பேனா ?


பட்டினி கிடந்து பசியால் மெலிந்து
பாழ்பட நேர்ந்தாலும் - எந்தன்
கட்டுடல் வளைந்து கைகால் தளர்ந்து
கவலை மிகுந்தாலும் - வாழ்வு
கெட்டு நடுத்தெரு வோடு கிடந்து
கீழ்நிலை யுற்றாலும் - மன்னர்
தொட்டு வளர்த்த தமிழ்மகளின் துயர்
துடைக்க மறப்பேனா ?

நோயில் இருந்து மயங்கி வளைந்து
நுடங்கி விழுந்தாலும் - ஓலைப்
பாயில் நெளிந்து மரண மடைந்து
பாடையில் ஊர்ந்தாலும் - காட்டுத்
தீயில் அவிந்து புனலில் அழர்ந்து
சிதைந்து முடிந்தாலும் - எந்தன்
தாயில் இனிய தமிழ்மொழியின் துயர்
தாங்க மறப்பேனா ?

பட்டமளித்துப் பதவி கொடுத்தொரு
பக்கம் இழுத்தாலும் - ஆள்வோர்
கட்டி அணைத்தொரு முத்தமளித்துக்
கால்கை பிடித்தாலும் - என்னைத்
தொட்டு விழுந்து வணங்கி இருந்தவர்
தோழமை கொண்டாலும் - அந்த
வெட்டி மனிதர் உடல்களை மண்மிசை
வீழ்த்த மறப்பேனா ?

பொங்கு வெறியர் சிறைமதிலுள் எனைப்
பூட்டி வதைத்தாலும் - எந்தன்
அங்கம் பிளந்து விழுந்து துடிக்க
அடிகள் கொடுத்தாலும் - உயிர்
தொங்கி அசைந்து மடிந்து தசையுடல்
தூள்பட நேர்ந்தாலும் - ஒரு
செங்களம் ஆடி வருகிற புகழோடு
சிரிக்க மறப்பேனா ?


 - காசி ஆனந்தன் -

நன்றி : காசி ஆனந்தன் கவிதைகள்
வெளியீடு : நா. அருணாசலம், (மாணவர் புத்தகப்பண்னை)
26. ச.ப.சாலை, அடையாறு, சென்னை 20

No comments:

Post a Comment

Moody's may raise credit rating, SL achieves significant step forward in EDR- IMF

  Moody's may raise Sri Lanka's credit rating Moody's may raise Sri Lanka's 'Ca' long-term foreign currency rating, ...