SHARE

Monday, September 26, 2016

எழுக தமிழ்ப் பேரவையின் அரசியல் கோரிக்கைகள்

யாழ்-முற்றவெளி மைதானத்தில் முள்ளிவாய்க்காலுக்குப் பின்னால், அரசியல் விடுதலை வேண்டி, திரண்டெழுந்த பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழ் மக்கள் சார்பில் ,



எழுக தமிழ்ப் பேரவையின் அரசியல் கோரிக்கைகள்

2016  செப்ரெம்பர் 24, யாழ்ப்பாண முற்றவெளி

1. வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தை வலிந்து பௌத்த சிங்கள மயமாக்கும் நோக்குடன் சிங்களக் குடியேற்றங்களும், பௌத்த  விகாரைகளும், புத்தர் சிலைகளும் இவ்வாட்சியிலும் அரசின் அனுசரணையுடனும், ஆக்கிரமிப்பு இராணுவத்தின் உதவியுடனும்; உருவாக்கப்பட்டு வருகின்றன. தமிழர்களுடைய  இன அடையாளத்தை அழிக்கவும்; வட கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசங்களின் குடிப்பரம்பலை வலிந்து மாற்றவும் அரசு எடுத்து வரும் இவ்வாறான சகல நடவடிக்கைகளையும் உடன் நிறுத்துமாறு  இம் மக்கள் பேரணி வலியுறுத்துகின்றது.

2. யுத்தம் நிறைவடைந்து ஏழு வருடங்கள் ஆகிய நிலையிலும் ஆக்கிரமிப்பு இராணுவம்  மிகச் செறிவாக வட கிழக்கில் குவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்பு இராணுவம் தமிழர் தாயக பிரதேசங்களில்; ஆயிரக்கணக்கான ஏக்கர் காணியை சுவீகரிப்பு  செய்தது மாத்திரமல்லாமல், தொடர்ந்தும், தமிழ் மக்களின் காணிகளை கையகப்படுத்தும் நடவடிக்கையிலும்  ஈடுபட்டு வருகின்றது. மேலும் உல்லாச விடுதிகள், விவசாய பண்ணைகள்;, இதர வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதுடன்; வடக்கு – கிழக்கு நிர்வாகத்திலும் தொடர்ந்தும் தலையிட்டு வருகின்றது. வட கிழக்கு தமிழர் தாயக பிரதேசங்களில் தமிழர் தமது வாழ்வாதாரத்திற்காக தொடர்ந்தும் ஆக்கிரமிப்பு இராணுவத்தில் தங்கி தமது  பொருளாதாரத்தை தாமே பொறுப்பேற்க முடியாத நிலையையும்,  இராணுவமயமாக்கலினூடு தமிழ்  சமூகத்தினை பிளவுபடுத்தி, சமூக உறவுமுறைகளை சிதைத்து,  தமிழர் கூட்டாக சனநாயக ரீதியில் அணி திரள்வதற்கு இடையூறாகவும் இராணுவம் நிலவி வருகிறது. பெண்கள் சிறுவர்களுக்கெதிரான இராணுவத்தினரின் பாலியல் வன்முறை சம்பவங்களும் தமிழ் தேசத்தின் இருப்பை சிதைக்கும் வழி வகைகளே.

இதனால் 

வட- கிழக்கு தாயகத்திலிருந்து உடனடியாக இராணுவத்தை வெளியேற்றுமாறு இப்பேரணி வலியுறுத்துகின்றது.

3.   தமிழ் மக்கள் மிகத் தெளிவாக உள்ளகப் பொறிமுறையை  நீதிக்கான தேடலில் பிரோயோசனமற்ற ஒன்று என தொடர்ந்தேர்ச்சியாக வெளிப்படுத்தி வந்துள்ளனர். ஐ  நா மனித உரிமை ஆணையாளரின் செப்டம்பர் 2015 அறிக்கை மிகத் தெளிவாக இலங்கையின் நீதித்துறை யுத்தத்தின் போது இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு நீதி வழங்க தகமையற்றது எனக் கூறியது. இருப்பினும் ஐ. நாவின் அங்கத்துவ நாடுகள் இணைந்து கலப்பு பொறிமுறை ஒன்றை இலங்கைக்கு பொருத்தமானது என தமது செப்டம்பர் 2015 பிரேரணை மூலம் விதந்துரைத்தனர். அதனை ஆரம்பத்தில் ஏற்றுக் கொண்ட இலங்கை அரசாங்கம் தற்போது வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்க முடியாது எனத் தெளிவாக அறிவித்துவிட்டது. கலப்பு பொறிமுறையை நிராகரித்து மீள உள்ளகப் பொறிமுறையை மட்டுமே முன்வைக்கின்றது. இச்சூழலில் இப்பேரணி சர்வ்தேச விசாரணைக்கான தமிழ் மக்களின் ஏகோபித்த நிலைப்பாட்டை வலியுறுத்தி நிற்கின்றது.

4.   கடந்த 35 வருடங்களுக்கு மேலாக நிலவி வரும்; பயங்கரவாத தடைச்சட்டதின் கீழ் ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களும் யுவதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுள் சிலர் 15 – 20 வருடங்களுக்கு மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வந்தனர். 2015 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும் என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்திற்கு உறுதி மொழி கொடுத்தும்  இதுவரை பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவில்லை என்பதுடன் தொடர்ந்தும் பல இளைஞர்கள் அச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைகளில் வாழும்  அரசியல் கைதிகள் அனைவரும் நிபந்தனையின்றி உடனடியாக விடுவிக்கப்பட வேண்டுமென்பதுடன்பயங்கரவாத தடைச்சட்டம் உடனடியாக விலக்கிக் கொள்ளப்பட வேண்டுமெனவும் இப்பேரணி வலியுறுத்துகின்றது.

5. போர் நிகழ்ந்த கால கட்டத்திலும், அரசியற் காரணங்களுக்காகவும்  கடத்தப்பட்டும், சரணடைந்த பின்பும் காணாமல் போகச்செய்யப்பட்ட ஒவ்வொரு தமிழ் மகனும், தமிழ் மகளும் எங்கு இருக்கின்றார்கள் , அல்லது அவர்களுக்கு என்ன நடந்தது என உடனடியாகக் கண்டறிந்து பகிரங்கப்படுத்தப்படுவதுடன் அவர்களுக்கு நீதி வழங்கப்படவும் வேண்டும்.

6.  யுத்தம் நடந்த காலகட்டங்களில் கடற்படையினரின் தடை உத்தரவு காரணமாக வடக்கு – கிழக்கு மீனவர்கள் தமது வாழ்வாதாரங்களை இழந்திருந்தனர். ஆனால் யுத்தம் நிறைவடைந்து ஏழு வருடங்கள் ஆகிய நிலையிலஇ; இன்றும் கூட வடக்கு – கிழக்கு மீனவர்கள் தொடர்ச்சியான பாதிப்புக்குள்ளாக்கப்;பட்டு வருகின்றனர். தென்னிலங்கை மீனவர்கள் வட கிழக்கு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைவது மாத்திரமின்றிஇ வடக்கு, கிழக்கு மீனவர்களின் படகுகளை சட்ட விரோதமாக கைப்பற்றுவதாலும்இ நிரந்தர தங்குமிடங்களை அத்துமீறி அமைப்பதனாலும்; தமிழ் மீனவர்கள் தமது சொந்த மீன்பிடி இடங்களில் இருந்தே விரட்டப்படுகின்ற சூழல் உருவாகி வருகின்றது. மேலும் தென்னிலங்கை மீனவர்கள், வட – கிழக்கு கடற் பிரதேசங்களில் சட்ட விரோதமான மீன்பிடி முறைகளை கையாள்வதால் தமிழ் மீனவர்கள் தமது வாழ்வாதரங்களை இழந்தும் வருகின்றார்கள்.  இதன் காரணமாக ஒட்டு மொத்தமான தமிழ் மக்களின் பொருளாதாரமும் பாதிக்கப்படுகின்றது. இவ்வாறான நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பேரணி வலியுறுத்துகின்றது.

இந்திய மீனவர்களின் சட்ட விரோத மீன்பிடி முறைகளாலும் தமிழ் மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர்;.  அன்றாடத் தொழில் செய்து பிழைக்கும் மீனவர்களின் வாழ்வாதார உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டுமென்பதுடன், தமிழ் மீனவர்களின் கடல் வளங்கள்; அத்துமீறி, சட்டத்துக்கு புறம்பாக சூறையாடப்படுவதை இப்பேரணி வன்மையாகக் கண்டிப்பதுடன்

7.   விடுதலைக்காக போராடிய தேசிய இனங்கள் மத்தியில் அவர்களின் விடுதலை வேட்கையை அழிக்கும் பொருட்டு போதை வஸ்துக்களை இளைஞர்கள், யுவதிகள் மத்தியில் பரப்பும் வழிமுறைகளை பல நாடுகளின் அரசுகள் கையாண்டுள்ளன. தமிழர் தாயகத்தை  ஆழமான இராணுவ கண்காணிப்புக்குள் வைத்திருக்கின்ற போதிலும் பெருமளவான போதைவஸ்துப் பொருட்கள் எமது பிரதேசங்களினுள் ஊடுருவ விடப்படுகின்றன. மேலும்இ கிரோயின் போன்ற போதைப் பொருட்களும், வடக்கு – கிழக்கில் வேகமாகப் பரவி வருவதுடன், வட- கிழக்கில் இராணுவத்தினால் நடாத்தப்படும் விளையாட்டு விழாக்களின் போது தமிழ்  இளைஞர்களிடையே மது பாவனையை இராணுவம் நேரடியாக ஊக்கப்படுத்துவது  ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில்; இவை அனைத்தும் எமது இளம் சந்ததியின் எதிர்காலத்தை திட்டமிட்டு அழிக்கும் நடவடிக்கைகளாகவே நோக்க வேண்டியுள்ளது. இவற்றை நிறுத்தவும், கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டுமென இப்பேரணி வலியுறுத்துகின்றது.

அரசியல் தீர்வு சம்பந்தமாக

இன்னமும் தீர்வு காணப்படாத தமிழ் தேசிய இனப் பிரச்சனையினதும்,  நடந்து முடிந்த போரினதும் - நேரடி மற்றும் நேரடியற்ற விளைவுகளான - மேற்கூறப்பட்ட அரசியற்-பாதகங்கள் எதுவும் மீண்டும் நிகழாதவாறு — தமிழ் மக்கள் பேரவையினால் முன்வைக்கப்பட்ட அரசியற் தீர்வு முன்மொழிவின் அடிப்படையில் 

ஒரு சுயாட்சித் தீர்வு காணப்பட வேண்டும் என்று இந்தப் பேரணி பிரகடனம் செய்கின்றது.

தமிழர்களின் தேசிய பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் எனும் நோக்கில் 3ஆவது குடியரசு அரசியல் யாப்பை கொண்டு வருவோம் என்று இவ்வரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு கூறி வருகின்றது.

ஆனால் இலங்கை அரசின் சனாதிபதியும், பிரதமரும் ஒற்றையாட்சிக்குள்ளேயே தீர்வு வரும் எனவும் பௌத்தத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள முன்னுரிமையில் மாற்றம் வராது எனவும் தொடர்ந்தேர்ச்சியாக கூறி வருகின்றனர்.

ஒற்றையாட்சிக்குள் ஒரு குறைந்த பட்ச அதிகாரப்பகிர்வை தமிழருக்கான தீர்வாக திணிக்க இவ்வரசாங்கம் முயற்சிக்கின்றது.

அவசர அவசரமாக ஓர் அரசியலமைப்பை பாராளுமன்றில் நிறைவேற்றி பொதுசன வாக்கெடுப்பு ஒன்றின் மூலம் புதிய அரசியலமைப்பு ஒன்றிற்கு அங்கீகாரம் கிடைக்கப்பெற அரசாங்கம் முயற்சிக்க இருக்கின்றது.

தமிழ் மக்களில் பெரும்பான்மையினரின் வாக்கு புதிய அரசியலமைப்பிற்கு கிடைத்தால் அதை வைத்து தமிழ் மக்களிற்கு அரசியல் தீர்வொன்றை வழங்கி விட்டதாக அர்த்தப்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம்.

புதிய அரசியலமைப்பு தமிழ் மக்களின் அபிலாஷைகளை அங்கீகரிக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கை.

 தமிழர்கள் புதிய அரசியலமைப்பு எப்படியாக இருக்க வேண்டும் எனக் கருத்துக் கூறுவதோ, கூட்டாக நிலைப்பாடு எடுப்பதோ, அது தொடர்பில் சனநாயக ரீதியாக அணிதிரள்வதோ அரசியலமைப்பாக்க முயற்சியை குழப்ப எடுக்கும் நடவடிக்கையாக சித்தரிப்பதை நாம் கண்டிக்கின்றோம்.

அந்த வகையில் பின்வரும் நிலைப்பாடுகளை இப்பேரணி எடுக்கின்றது:

எனவே,

அ. தற்போதைய அரசியலமைப்பின் 13ஆம் திருத்தம் எமக்கு தந்த படிப்பினையின் அடிப்படையிலும், இலங்கை அரசியலின் சிங்கள பௌத்த  மேலாதிக்க அரசியல் கலாசாரத்தில்த தமிழர்களின் கடந்த 68 ஆண்டு கால கூட்டனுபவத்தின் பிரகாரமும் ஒற்றையாட்சிக்குள் அரசியல் தீர்வு எந்த வடிவத்திலும் சாத்தியம் இல்லை என நாம் வலியுறுத்திக் கூறுகின்றோம். 

ஆ. தமிழ் மக்கள் பேரவையினால் தயாரிக்கப்பட்ட தீர்வுத்திட்டத்தின் அடிப்படையில்,  தேசிய இனப்பிரச்சினைக்கான நடைமுறை சாத்தியமான தீர்வு, தமிழர்களை இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கில் ஒரு தேசமாக, அவர்களது சுயநிர்ணய உரிமையை மதிக்கும், தன்னளவில் இறைமை கொண்ட சுயாட்சி ஒன்றை நிறுவும் அரசியலமைப்பு ஏற்பாடுகள் மூலமாகவே அடையப்படும் எனக் கூறுகின்றோம். 

இ.  தமிழர்களின் சுயநிர்ணய உரிமையையும் அதன் வழி தமிழ்த் தேசத்தின் இறைமையையும், நிறுவன ரீதியாக, சமஷ்டி முறைமை ஒன்றின் மூலமாக அடைந்து கொள்ளலாம் என நாம் கூறுகின்றோம். 

ஈ.  தமிழர் தேசத்தின் தனித்துவத்தையோ, தமிழ் மக்களின் சுயநிர்ணயத்தையோ அங்கீகரிக்காத,  உள்ளடக்கத்தில் தெளிவில்லாத அரை குறை தீர்வொன்றை ஏற்றுக் கொள்ள முடியாது என இப்பேரணி கூறுகின்றது. 

உ. புதிய அரசியலமைப்பு மிகவும் இரகசியமான முறையில் உருவாக்கப்படுகின்றது. புதிய அரசியலமைப்பு தொடர்பிலாக நடாத்தப்பட்ட பொது மக்கள் கலந்தாய்வு தொடர்பிலான அறிக்கை தமிழ் மக்களின் முன்வைப்புக்களை புறந்தள்ளியே சமரப்பிக்கப்பட்டுள்ளது.  உருவாக்கப்படுகின்ற அரசியலமைப்பு நகல் தொடர்பிலான மக்கள் வாக்கெடுப்பிற்கு முன்னர் வெளிப்படையானதும், சனநாயக ரீதியதுமான கலந்துரையாடல் ஒன்று மக்கள் மத்தியில் இடம் பெற போதுமான கால அவகாசம் வழங்கப்பட வேண்டும். அடக்குமுறையின் கீழ் அரசியல் தீர்வு தொடர்பிலான கலந்துரையாடலை நடாத்த முடியாது.  வடக்கு கிழக்கில் கருத்துக் சுதந்திரத்துடன் புதிய அரசியலமைப்பு தொடர்பிலான திறந்த விவாதம்  நடைபெற பயங்கரவாதத் தடை சட்டம் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும், இராணுவமயநீக்கம் செய்யப்பட வேண்டும் என நாம் கூறுகின்றோம்

No comments:

Post a Comment

Moody's may raise credit rating, SL achieves significant step forward in EDR- IMF

  Moody's may raise Sri Lanka's credit rating Moody's may raise Sri Lanka's 'Ca' long-term foreign currency rating, ...