டிட்வா மலையக அனர்த்தம்- அம்பாறை மாவட்டத்தில் உதவி நிவாரணம்.
டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்காக அம்பாறை மாவட்டத்திலிருந்து நிவாரண உதவி:
இந் நிவாரணப் பணியானது அம்பாறை மாவட்ட மனித அபிவிருத்தி ஸ்தாபனத்தின் உத்தியோகஸ்தர்கள், நண்பர்கள்,தொண்டர்கள், வேள்விப் பெண்கள் அமைப்பினர், முன்பள்ளி ஆசிரியர்கள், இளைஞர் அமைப்புகள் மற்றும் நலன் விரும்பிகள் ஆகியோரது அயாராத பங்களிப்பின் பயனாகும்.
இப்பணியில் வேள்வி பெண்கள் அமைப்பினர், கிராமமட்ட மகளிர் குழுவினரிடம் சேகரித்த `சிறு துளிகள்` பெரும் முக்கியத்தும் உடையவை. மேலும் மிக மிக குறைந்த வருமானம் பெறும் முன்பள்ளி ஆசிரியர்களின் நிதி உதவி அளப்பரியதாகும். இத்துடன் உள் நாட்டிலும், வெளி நாட்டிலும் வாழும் அனுதாபிகளின் உதவி பேருதவியாகும்.
டிட்வா சூறாவளி நாடு தழுவிய அனர்த்தம் என்ற போதிலும் இது மலையகத்தைப் பாதித்தவிதம் முற்றிலும் வேறானது.மலையகத்தின் கதை பூமி பிழந்த கதையாகும். மலையகமே சாய்ந்து சரிந்த கதையாகும்.மீள் கட்டுமானம் என்பது நீண்ட நெடிய பாரிய பணியாகும்.
ஆதலால் வேள்வியின் மலையகப் பணியானது இந் நிவாரணப் பணியோடு நிறுத்தப்படப் போவதில்லை. எமது மலையகப் பயணம் அம்மக்களோடு தொடர்ந்து பயணிக்கும்.
இந் நிவாரணப் பணியில் தோளோடு தோள் கொடுத்து நின்ற அனைத்து அன்பர்கள், ஆதரவாளர்கள், தொண்டர்கள், தோழர்கள், வளமானோர், வணிகர்கள் அனைவருக்கும் நமது மனமார்ந்த அன்பையும் நன்றியும் தெரிவித்து நிற்கின்றோம். மேலும் இவ்வேளையில் நமது தொடர்ந்த பயணத்துக்கு தங்கள் உதவியையையும் ஒத்துழைப்பையும் வேண்டி நிற்கின்றோம்.
வேள்வி பெண்கள் அபிவிருத்தி அமைப்பு
Velvi Women Development Organization
நிதி கையளிப்பு
ஆடைகள் தரம் பிரிப்பு
லேபிலிடத் தயாராக

லேபிலிடப்பட்ட பொதிகள்
நிவாரணப் பயணம்:
மலையகத்தை நோக்கிய எமது நிவாரணப் பயணம் 23-12-2025 அதிகாலை 4.00 மணியளவில் ஆரம்பித்தது. அன்று காலை நாம் கல்முனையில் இருந்து புறப்பட்டோம். முற்பகல் 11.00 மணியளவில் கண்டிக் காரியாலயத்தைச் சென்றடைந்தோம்.
நமக்காக ஒதுக்கப்பட்ட இடைத்தங்கல் முகாம் மண்சரிவு அபாயம் காரணமாக பல பகுதிகளில் சிறிய சிறிய அலகுகளாக பிரிக்கப்பட்டிருந்தது. இதனால் எல்லாப் பகுதிக்கும் செல்வது சாத்தியமற்றதாய் இருந்தது.
அதனால் நாம் முடிந்த சில பகுதிக்கு செல்வதோடு, மிகுதிப் பகுதிகளுக்கு விநியோகிக்கும் பொறுப்பை கண்டி நிர்வாகத்தினருக்கு கையளித்தோம்.
| கண்டி அலுவலகம் |

சாத்தியமான பகுதிகளில் மக்களை நேரடியாகச் சந்தித்து உதவிகளை வழங்கினோம்.
பேரிடரின் அனர்த்தம் நேரில் பார்ப்பதற்கு நெஞ்சைப் பிளப்பதாக இருந்தது.
அண்மைய பகுதிகள் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகள், நிலம் கீழே போவதைப் பார்க்க முடிந்தது.
செல்லவேண்டிய இடத்துக்கு வாகனத்தில் செல்ல இயலவில்லை. பொதிகளை நாமே தூக்கிச் செல்ல வேண்டியிருந்தது.
நாம் ஏற்கெனவே களைத்துப் போய்விட்டோம்.
ஒரு பகுதிக்கு ஓட்டோ மூலம் எடுத்துச் செல்ல வாய்ப்புக் கிட்டியது.

சிறார்களின் கல்வி தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்படல் வேண்டும். இடைத்தங்கல் முகாமாக பெரும்பாலும் பாடசாலை பயன்படுத்தப்படுவதால் அந்தப் பாடசாலையின் மாணவர்கள் மற்றும் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருக்கும் மாணவர்கள் தொடர்பில் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
அங்கு பேசிய மக்களின் - பெண்களின் கருத்திற்கமைவாக இப்பிரதேசம் ( தெல்தோட்டை-அப்பகலகா தோட்டம்), 2016 ஆம் ஆண்டிலேயே சமூக சேவை நிறுவனங்களின் நிலவள ஆய்வு அறிக்கையூடாக அன்றைய அரசுக்கு, சிவப்பு எச்சரிக்கை பகுதியாகவும் எந்த நேரத்திலும் அனர்த்தம் நிகழலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டதை அறிய முடிந்தது.
இது அதிர்ச்சி அளிக்கும் உண்மையாகும்.
அன்றைய மக்கள் தலைவர்களுக்கு, ஆட்சியாளர்களுக்கு, மக்களைப் பற்றிய கரிசனை, தன் கடமையை செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஒரு சிறிய அளவிலாவது இருந்திருந்தால் இன்றைய அவலநிலை கணிசமான அளவு தவிர்க்கப்பட்டிருக்கும்.
இதற்கு யார் பொறுப்பு?
- இது உடனடி எதிர்காலத்தில் தீர்வு காணக்கூடிய பிரச்சனை இல்லை என்பது மட்டும் உறுதி.
- இந்தப் பகுதிகளில் இனிமேல் மக்கள் மீளக் குடியமர்வது என்ற பேச்சுக்கே இடமில்லை.
- வேள்வியின் தொடர்ந்த பணியின் அவசியத்தை இந்தப் பயணம் நன்கு உணர்த்தியது.
நிவாரணப் பொதிகளை இறக்கி விட்டு, எதிர்காலப் பணியின் சுமையோடு அன்று பிற்பகலே கனத்த மனத்தோடு கல்முனை நோக்கிப் புறப்பட்டோம். மீண்டும் மறு நாள் அதிகாலை வந்தடைந்தோம்.
எமது பயணத்தில் ஒத்துழைத்த அனைவருக்கும் குறிப்பாக நமது வாகன சாரதிக்கும் எமது மனமார்ந்த நன்றி. 24-12-2025
நன்றி
மூலம்: சமூக ஊடகம்










