SHARE

Friday, September 20, 2024

போலித் தேர்தலையும் பொது வேட்பாளரையும் புறக்கணிப்போம்! ஈழப்படுகொலைப் பொதுவாக்கெடுப்புக்குப் போராடுவோம்!!

போலித் தேர்தலையும், பொது வேட்பாளரையும் புறக்கணிப்போம்!

ஈழப்படுகொலைப் பொதுவாக்கெடுப்புக்குப் போராடுவோம்!!

சிறீ லங்கா ஜனநாயக சோசலிசக் குடியரசு-ஜனாதிபதித் தேர்தல் 2024.

இலங்கை ஏறத்தாழ 2 கோடி  (21,018,859 as of Feb. 8, 2019) குடிமக்களையும், ஒன்றரைக் கோடி (16,263,885 Registered Voters (as of Nov. 30, 2020) வாக்காளர்களையும் கொண்ட ஒரு சிறிய இந்து சமுத்திர தீவும் நாடும் ஆகும்.சட்டபூர்வமாக இந்நாடு `சிறீ லங்கா ஜனநாயக சோசலிசக் குடியரசு` என அழைக்கப்படுகின்றது.இந்த நாட்டின் ஆட்சிமுறை இரு படித்தானது. அரசதிகாரம் அனைத்தும் ஜனாதிபதி என்கிற ஒரு தனி நபரிடம் குவிக்கப்பட்டுள்ளது. சட்டமன்றம் -நாடாளமன்றம்- அவருக்கு கட்டுப்பட்டதாக உள்ளது, அதாவது அரசாங்கமும் அவரது கட்டுப்பாட்டிலேயே உள்ளது.சுருங்கச் சொன்னால் அரசும், அரசாங்கமும் ஜனாதிபதி என்கிற ஒரு தனி நபரின் அதிகாரத்திற்கு கட்டுப்பட்டிருக்கின்ற ஒரு பாசிச சர்வாதிகார ஆட்சிமுறையை அந்நாடு கொண்டிருக்கின்றது.

மேலும் அந்நாடு இரு தேசங்களைக் கொண்டதாகும்.ஆனால் ஒடுக்கப்படும் ஈழ தேசத்தின் சுய நிர்ணய உரிமை சட்டவிரோதமாக்கப்பட்டுள்ளது.

1978 அரசியல் அமைப்பும், அதன் ஆறாவது திருத்தமும் இந்தப் பாசிச ஆட்சி முறையை சட்டபூர்வமாக்கியுள்ளது.

பொதுவாக அரசியல் அமைப்பு அனைத்து மக்களையும் ஒடுக்குகின்றதென்றால்,  குறிப்பாக ஆறாவது திருத்தம் ஒடுக்கப்படும் ஈழ தேசத்தை ஒடுக்குகின்றது.

ஜனநாயகம் பற்றிய எல்லாப் பேச்சும் இந்த அடிப்படைக் கட்டமைப்புக்கு உட்பட்டுத்தான் பேசப்படுகின்றது.

இதில் சுவாரசியம் என்னவென்றால் இந்த (ஜனாதிபதி மற்றும் பொதுத்) தேர்தல் என்பது இந்த பாசிச ஆட்சி முறையை இயக்குவதற்கான நபர்களை -கட்சிகளை- தெரிவு செய்வதற்காகத்தான் நடத்தப்படுகின்றது! அதற்குத்தான் மக்கள் தமது `புனிதமான` வாக்குரிமையை பயன்படுத்துகின்றார்கள்.கடந்த 77 ஆண்டுகளில் (கிராமிய,மாவட்ட,மாகாண தேர்தல்கள் தவிர) இது 26வது தேர்தல் ஆகும்! 25வது தேர்தலில் நாடு வங்குரோத்தானது.26 வது தேர்தல் மீண்டும் நாட்டைக் கட்டியெழுப்ப நடக்கிறது!

சராசரியாக இலங்கையின் வாக்களிப்பு 75 வீதம் ஆகும்.ஆக வாக்காளார்களுக்கு பஞ்சம் இல்லாத நாடு! அதனால் தானோ என்னவோ வாக்குறுதிகளுக்கும் பஞ்சம் இல்லை. (அத்தகைய தேர்ந்தெடுக்கப்பட்ட வாக்குறுதிகள் இக்கட்டுரையின் இடை இடையே கொட்டை எழுத்தில் சொருகப்பட்டுள்ளன).

இவை தேர்தல் காலத்தில் வாக்கு வேட்டைக்காக சொல்லப்படுபவையே அல்லாமல், நிறைவேற்றுகிற எண்ணமோ சாத்தியமோ கொண்டவை அல்ல என்கிற உறுதியான நம்பிக்கை வாக்காளப் பெருமக்களுக்கும், பிடரியில் துப்பாக்கி வைக்காத குறையாக அவர்களை அமைதியாக வாக்களிக்கக் கோருகின்ற ஊடக சிறு மக்களுக்கும் உண்டு.

இவை பெரும்பாலும் உண்மைதான். விஞ்ஞாபனங்களுக்கும் சமூக விஞ்ஞானத்துக்கும் சம்பந்தமே இல்லை என்பதும் உண்மைதான்.

ஆனால் இதிலிருந்து, இங்கு களமாடும் வீரர்களுக்கு கொள்கை கோட்பாடே இல்லை, அவர்கள் வெறும் கோமாளிகள் என்று முடிவுகட்டிவிடக் கூடாது.

சொன்னது பாதியும் சொல்லாதது மீதியுமாய் அவர்களுக்கு கொள்கை கோட்பாடுகள் உண்டு. அவை ஆங்காங்கே விஞ்ஞாபனங்களில் வெளியீடு செய்யப்படுவதும் உண்டு. 

அவை அவர்கள்-கட்சி-பிரச்சனை என்று எவற்றை சொல்ல விரும்புகின்றார்களோ, அல்லது பிரச்சனைகளை எந்தளவுக்கு குறுக்கி திரித்து காட்ட முயலுகின்றார்களோ அவையும், அவைக்கான அவர்களது தீர்வும் சம்பந்தமானவை.நாடாளமன்ற ஜனநாயக சம்பிரதாயம் இவ்வாறு ஒழுங்கமைக்கப்பட்டிருக்கின்றது. உலகம் முழுமையிலும் இவ்வாறு தான்.

மேலும் ஒரு ஜனாதிபதியைத் தெரிவு செய்ய 38 வேட்பாளர்கள் கட்டுப் பணம் செலுத்தியது, சுமார் 30 பேர் காணாமல் போனது, வாக்காளர் சீட்டு நெடுஞ்சாலை போல நீண்டது, காக்க காவ கட்டணம் உயர்ந்தது, மொத்தம் தேர்தல் செலவு 3 மடங்கானது, சூட்கேசுகள் பரிமாறப்பட்டது, வீட்டுக்கு வீடு நோட்டுக்கள் பறந்தது, அம்பியூலன்ஸ் மது-பண மூட்டை காவுவது, போதை வஸ்து மாபியாக்கள் தேர்தல் செலவைப் பொறுப்பேற்பது, இதற்கு மத்தியில் `கண்காணிக்க` அந்நிய அதிகாரிகள் குழு வருவது, ஆயிரக்கணக்கில் `முறைகேடுகள்` பதிவு செய்யப்படுவது, வன்முறை கொலை அச்சுறுத்தல் தொடுக்கப்படுவது, வெளிநாட்டு பயண எச்சரிக்கை விடுக்கப்படுவது, ஊரடங்குச்சட்டம் இராணுவம் தயார் நிலையில் இருப்பது, இப்படியாகத்தானே இறுதியில் ``ஒப்பீட்டில் அமைதியாக தேர்தல் நடந்து முடிந்ததாக`` அறிக்கை வருவது, வென்ற உறுப்பினர் தான் 50 வாக்குகள் போட்டதாக நாடாளமன்றத்திலேயே பிரகடனம் செய்வது, இவை அனைத்தும் கூட நாடாளமன்ற ஜனநாயக சம்பிரதாயத்தின் அங்கமாக  ஒழுங்கமைக்கப் பட்டிருக்கின்றது. 

எல்லாப் புகழும் ஜனநாயகத்துக்கே!

ஆனால் மக்களுடைய-நாட்டினுடைய பிரச்சனையும் தீர்வும் வேறொன்று.அது ஒரு தனி வேறான உலகம். இவர்களுக்கு தெரியாதது அல்லது அந்நியமானது.

ஆதலால் மக்களுடைய பிரச்சனையில் இருந்துதான் விஞ்ஞாபனத்தை ஆராய வேண்டுமே தவிர விஞ்ஞாபனத்தில் இருந்து பிரச்சனையை ஆராயக்கூடாது. அது அவர்களது பொறிக்குள் நம்மை வீழ்த்திவிடும்.இவ்வாறு மக்களை வீழ்த்துவதற்காக நாடாளமன்ற சந்தர்ப்பவாதிகள், சமரச சக்திகள் அவ் வழியை பெரிதும் விரும்பி பயன்படுத்துகின்றார்கள்.

உலகளாவிய நிலைமை:

அ) பொதுவான நிலைமை

1) உலகளாவிய, மீள இயலாத ஒரு மிகை உற்பத்தி பொருளாதார நெருக்கடி குறைந்த பட்சம் 2008 இலிருந்து தொடர்ந்து நிலைத்து நீடித்து வருகின்றது;

2)ஏகாதிபத்திய மேலை நாடுகள் உலகமயத்தில் இருந்து பகுதி பகுதியாக பின்வாங்கி நாடுகளுக்குள் முடங்கிய, நாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கும் நிலைமை ஒரு போக்காக வளர்ந்து விட்டது;

3) இதன் விளைவாக மூலப் பொருள்,தொழில் நுட்பம்,பண்ட உற்பத்தி,பண்ட விநியோகம் சம்பந்தப்பட்ட வர்த்தகப் போர்கள் மூளுகின்றன; 

4) தேசிய எல்லைகள் மீறப்பட்டு மீள வரையப்படுதல், தேசங்களுக்குள் தலையீடுகள் இரத்தம் சிந்தியும் சிந்தாமலும் நிகழ்தல், ஆட்சிக் கவிழ்ப்புகள், பொம்மை அரசுகள் என ஜனநாயகமற்ற ஆட்சி முறைமைகள் நிறுவப்படுதல், இதன் நேரடி விளைவாக தேசிய முரண்பாடுகள் கூர்மையடைந்து தேசியப் போர்கள் வெடித்தல்;

5) அவை பிராந்தியப் போர்களாக விரிவடைதல்; 

6) இலட்சோப இலட்சம் மக்கள் தம் சொந்த தேசங்களை விட்டு வெளியேறி அரசியல் பொருளாதார அகதிகளாக உலகப் பரப்பெங்கும் அலைந்து திரிந்து, அவமானப்படுதல், நவீன அடிமைகளாக சுரண்டப்படுதல், மாண்டு மடிதல்;

7) இவை உள்நாட்டில் பாசிசத்தைக் கட்டியமைப்பதற்கான சாதனமாக மாற்றப்படுதல் என்பன பொதுவாக, அன்றாடம் நிகழ்ந்த வண்ணம் உள்ளன.

ஆ) குறிப்பான நிலைமை

இவற்றுக்கு மத்தியில் அண்மைக்காலமாக சில புதிய போக்குகள் தோன்றி உலக வரைபடத்தை மாற்றியமைத்து வருகின்றன. அவற்றில் மிக முக்கியமானவை;

1) இரண்டாம் உலகப் போருக்குப் பிந்திய உலக ஒழுங்கமைப்பு அனைத்தும் தகர்தல்.

2) உலகெங்கும் பாசிசம் முதன்மை அதிகார நிலையை எட்டுதல்.

3) நாடாளமன்ற முறைமை நடைமுறையிலும்  காலாவதியாகி பாசிசத்துக்கான படிக்கல்லாக மாறுதல்,

4) மரபு ரீதியான பழைய கட்சிகள் புதிய உள்ளடக்கத்தைப் பெறுதல் அல்லது முழுதாக அழிந்தொழிந்து புதிய கட்சிகள் தோன்றுதல்,

5) தகரும் பழைய உலக ஒழுங்கமைப்பைப் பிரதியீடு செய்யும் புதிய உலக ஒழுங்கமைப்புக்கள் கருவாகுதல்,

6) உலகம் மறு உருவாக்கம் பெறுதல், மறு பங்கீடு செய்யப்படுதல், மறு பங்கீட்டுப் போர்கள் தீவிரமடைதல்

7) இறுதியாக, ஒட்டுமொத்த விளைவாக மூன்றாம் உலகப் போருக்கான தயாரிப்புகள் முனைப்புப் பெறுதல்

இந்நிலைமைகளின் குறிப்பான அரசியல் விளைவுகள்:

1) சோவியத் சமூக ஏகாதிபத்தியத்தின் வீழ்ச்சிக்குப் பிந்திய, ஒற்றைத் துருவ அமெரிக்க ஏகாதிபத்திய ஒழுங்கமைப்பு தகர்தல்,

2) ரசிய, சீன ஏகாதிபத்தியங்கள் எழுந்து வளர்ந்து இரட்டைத் துருவ (அல்லது பல் துருவ) உலக  ஒழுங்கமைப்பு உருவாதல்.

3) இதைச் சார்ந்து பிராந்திய ஆதிக்க நாடு-வல்லரசு- களின் கூட்டில் மாற்றம் ஏற்படுதல்,

4) இந்தக் கூட்டு பிராந்திய நாடுகளுக்கிடையேயான உறவைத் தீர்மானிக்கும் முக்கிய விதியாக மாறுதல்.

5) நாடுகளுக்கிடையேயான உறவில் `இராணுவ பாதுகாப்பு` அம்சம் முதன்மை பெறுதல்,

6) உலகம் போரும், கொதிப்பும்,கொந்தழிப்பும் மிக்க பூமியாக மாறுதல்,

இந்த இருபது நிலைமைகளைச் சார்ந்துதான் வர்க்க அணி சேர்க்கை-நாடுகளுக்கு உள்ளேயும் வெளியேயும் இடையேயுமான உறவு- கட்டியமைக்கப்படுகின்றது.

இதற்கு எம் தாய்த் திரு நாடு இலங்கையும் விதி விலக்கல்ல!

இலங்கையில் இதன் விளைவுகள்:

1) இந்த அணிசேரா நாடு என்கிற புலுடா ஒருபோதும் எந்த நாட்டுக்கும் உண்மையல்ல. அப்படி ஒரு நாடும் இருந்ததில்லை இருக்கவும் முடியாது.

2) இலங்கையின் ஆளும் வணிகத் தரகு வர்க்கங்கள் எப்போதும் அமெரிக்க சார்புடையவை.

3) 2002-2006 வரை இந்த நிலைமை தான் நீடித்தது. ஆனால் 2006 இல் மீண்டும் போரை ஆரம்பித்தபோது, யுத்தத்துக்கு சீன ஆதரவை நாடியது முதல் இலங்கையில் சீனத் தலையீடு ஆரம்பமாகி அது முள்ளிவாய்க்காலுக்குப் பின்னாலும் தொடர்ந்து சீன ஏகாதிபத்தியம் இலங்கையில் வலுவாக காலூன்ற வழி வகுத்தது.

4) புதிய உலகச் சூழலில் இந்தியா அமெரிக்காவின் யுத்த தந்திரக் கூட்டாளியாக உள்ளது. தனது விரிவாதிக்க நலனின் பேரால் மட்டுமல்ல அமெரிக்காவின் காவல் நாய்ப் பாத்திரத்தின் காரணமாகவும் இலங்கையில் பிரகடனப்படுத்தப்படாத ஒரு இந்திய சீன `பிராந்திய பனிப் போர்`, நடந்து வருகின்றது.

5) சீன சாய்வு ராஜபக்சக்களின், பெரும்பான்மையான சிங்கள மக்கள் `தேர்தலில் தெரிவு செய்த` இரண்டு ஆட்சிகள் இந்தியாவால் கவிழ்க்கப்பட்டது.

இலங்கைப் பொருளாதாரம் வங்குரோத்தடைந்தது குறித்த அனைத்து மயிர் பிடுங்கி விவாதங்களும் யுத்தக் கடனை வசதியாக மறைத்துவிட்டன.கோவிட்டும் வங்குரோத்தும் இந்தியத் தலையீட்டுக்கு வசதியாக வழி திறந்து விட்டன.

6) `ரணிலும் 125 திருடர்களும்` இலங்கையில் `IMF அதானி ஆட்சியின்` அதிபதியும், சட்டபூர்வ அதிகாரிகளும் ஆகினர்.

7) இந்த ஆரவாரத்துக்கு ஆதரவாக ஈழ தேசியப் பிரச்சனை வியாக்கியானப்படுத்தப்பட்டன.

எனினும் இலங்கை ஒரு ஜனநாயக சோசலிச க் குடியரசு என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது அல்லவா,

அரசியல் சட்டப்படி புதிய அதிபதியும், புதிய அதிகாரிகளும் `மக்களால் தெரிவு` செய்யப்படவேண்டும். 

செப்டெம்பர் 21 2024 இல் ஜனாதிபதித் தேர்தலும் தொடர்ந்து பொதுத் தேர்தலும் வரவுள்ளன.

``வீட்டுக்குப் போக வீட்டுக்குப் போடுங்கள்!``, ``உலகுச் சொல்ல சங்குக்கு போடுங்கள்!!`` என இனத்துவம் பணிவுடன் இதைப் பின் தொடருகின்றது! 

தேர்தல் விஞ்ஞாபனங்கள்;

இனிமேல் தேர்தல் விஞ்ஞாபனங்கள் மீது நமது பார்வையைச் செலுத்தலாம்.

சர்வதேசிய உலக மறுபங்கீட்டுப் பிரச்சனை.
IMF நிதி மூலதன ஆதிக்கப் பிரச்சனை.
இந்திய விரிவாதிக்க தலையீட்டுப் பிரச்சனை.
ஈழ தேசியப் பிரச்சனை.
வாழ்வாதாரப் பிரச்சனை.

இவை தான் இலங்கை மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படையான பிரச்சனைகள். இவை தொடர்காலனியத்தில் தொப்புள் கொடி கொண்டவை.

ஒரு புதிய அதிபதியிடம், ஒரு புதிய அரசாங்கத்திடம், ஒரு புதிய ஆட்சியிடம் மக்கள் எதிர்பார்ப்பது இப்பிரச்சனைகளுக்கான தேசிய நலன் சார்ந்த ஜனநாயகத் தீர்வுகள் ஆகும்.

துரதிஸ்டவசமாக அத்தகைய தீர்வு இந்த மூன்று பிரகிருதிகளிடமும் இல்லை என்பது மட்டுமல்ல, எதிர்மறையான தீர்வையே இவர்கள் மூவரும் கொண்டுள்ளனர்.

நாடாளமன்றத் தேர்தலும் இதற்கு விதிவிலக்கல்ல.

ஒரு வேறுபாடு இவர்களில் ரணில் இத் தொடர்காலனிய அடிமைத்தனத்தை நிலை நிறுத்துவதில், பாசிச பயங்கரத்தைக் கட்டவிழ்ப்பதில் தீர்க்கமான பார்வையும் திடமும் திண்ணியமும் கொண்டவர்.

அதிகாரக் கைமாற்றத்தை அண்மித்த காலத்திலேயே (1950) இலங்கைப் பொருளாதாரம் உலக வங்கியால் வழி நடத்தப்பட ஆரம்பித்து விட்டது. எழுபதுகளில் ஜே.ஆர். திறந்த பொருளாதாரக் கொள்கையைக் கட்டவிழ்த்தார், ஆனால் அதே காலத்தில்,ஜே.ஆர் `அப்படியொன்று இல்லவே இல்லை` என்று அடம்பிடித்த ஈழ தேசியப் பிரச்சனை வன்முறை வடிவத்தை எடுத்து 1983 இல் உள்நாட்டு யுத்தமானது.யுத்தம் 2002 வரை தொடர்ந்தது.ஆக ஜே.ஆரின் திட்டம் நாடு முழுவதும் அமைதியாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. 2002 பேச்சுவார்த்தைக் காலத்தில் ரணில் பிரதமராக இருந்தார். முதல் வேலையாக யுத்தம் ஓய்ந்த இலங்கையின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய உலக வங்கியிடம் திட்டம் கோரப்பட்டது.அந்தத் திட்டம் இலங்கை அரசாங்கத்தின் திட்டமாக Regaining Sri Lanka என்ற பெயரில் 225 பக்க ஆய்வறிக்கையாக வெளியிடப்பட்டது.

ஒரு வரியில் சொல்வதானால் இலங்கைப் பொருளாதாரத்தை 10% வளர்ச்சியை எட்ட வைக்க இத்திட்டம் வழி வகுக்குமென பிரகடனம் செய்யப்பட்டது.

இவ்வறிக்கையின் முன்னுரையில் மே மாதம் 5ஆம் திகதி 2003 இல் பிரதமர் ரணில் கையொப்பமிட்டிருந்தார்.

ஆனால் 2006 இல் மீண்டும் யுத்தம் ஆரம்பித்துவிட்டது. Regaining Sri Lanka நடைமுறைப்படுத்தப்படவில்லை.

2009 இல் யுத்தம் ஓய்ந்தது. ராஜபக்சக்களின் ஆட்சி,சீனச் சாய்வு, இந்தியத் தலையீடு, அறக்கலய, கோத்தா கலைப்பு, இவ்வாறு நாடு அல்லோல கல்லோலப் பட்ட போதும் Regaining Sri Lanka நடைமுறைப்படுத்தப்படவில்லை.

ஆக ஒரு 50 ஆண்டுகள் இந்த திறந்த பொருளாதாரத்திட்டம் முழு வீச்சுடனும், முழுத் திறனுடனும் முழு நாட்டையும் ஒட்டச் சுரண்டும் வண்ணம் நடைமுறைப் படுத்த புற நிலைமை அனுமதிக்கவில்லை.

அதற்கான சந்தர்ப்பம் இப்போதுதான் மீண்டும் ரணிலுக்குக் கிடைத்திருக்கின்றது. அவர் பேசுவது முழுவதும் Regaining Sri Lanka இன் விஸ்தரிக்கப்பட்ட இன்றைய வடிவமே.

ரணில் இதனை தன் வாழ் நாட்பணியாக சிரமேற் கொண்டிருப்பதில் வியப்பில்லை.


அதிஸ்ரவசமாக ஜனாதிபதியான ரணிலுக்கு, ஏற்பட்டுள்ள துரதிஸ்டம் என்னவென்றால், அறக்கலய மாலை போட்டு ஆளவந்த ரணில், இரண்டு வருடம் IMF இன் Austerity திட்டத்தை அமுலாக்கிக் கொண்டு தொடர்வதற்கு ஆணை கேட்கின்றார்! 

ஏனையோர் பூசி மழுப்பி புதிதாக கேட்கின்றனர்!

நிறைவேறப் போவது என்னவோ IMF இன் Austerity திட்டம் தான்.

இந்தியக் குகைக்குள் இருக்கின்ற இனத்துவ நரிகள் இதைக் கண்டும் காணாதது மாதிரிக் காட்டி ஆதரவு வழங்குகின்றனர்.

தேர்தலுக்குப் பிந்திய மக்களின் வாழ்க்கையை இது தான் தீர்மானிக்கப் போகின்றது.

இனி வாருங்கள் சங்கின் சங்காரம் கேட்போம்!

விடுதலைப் புலிகள் அமைப்பு, தேசியப் புரட்சிகளின் சரித்திரத்தில் குறிப்பிடத்தக்க ஒரு அமைப்பாகும். அந்த முப்பது ஆண்டுகளும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டியவை.குறிப்பாக அதன் தலைவர் நமது கால ஈழத்தின் `சோழ மகா ராசன்` என்பதில் சந்தேகமேயில்லை.

எங்கும் எப்போதும் போலவே நம்மிடம் கையளிக்கப்படுகிற வரலாற்றைத் தான் நாம் கையெடுத்து முன்னெடுத்து செல்கின்றோம். அதன் குற்றம் குறைகளும், பெருமையும் சிறுமையும் சேர்ந்துதான் அவை கையளிக்கப்படுகின்றன.

இவை நாட்டுக்கு நாடு புரட்சிக்கு புரட்சி தனித்துவமானவை.

பிரபாகரன் அவர்கள் விடுதலைப் புரட்சியைக் கையேற்றதும், கையளித்ததுமான சுமார் 30 ஆண்டு காலம் `சிலுவை சுமந்த` கதையாகவே இருந்தது.நாடாளமன்ற சமரசவாதப் பாதையில் இருந்து ஆயுதப் போராட்டப் பாதைக்கு புரட்சியை திருப்பியது, இந்திய ஆக்கிரமிப்புப் படையை விரட்டியடித்தது, 2002 இல் நோர்வே பேச்சு வார்த்தைக்குச் சென்றது, முள்ளிவாய்க்காலில் மீண்டும் போராட முடிவெடுத்தது ஆகிய நான்கு முக்கிய திருப்பங்களிலும் `வரலாற்றில் தனி மனிதனின் பாத்திரம்`  என்கிற வகையில் அவரின் பாத்திரம் இவ்வாறு தான் அமைந்திருந்தது.

இது கீர்த்திமிக்க பாத்திரம் ஆகும்.

இவை எப்பேறு பெற்றவையாக இருப்பினும், தத்துவார்த்த ரீதியிலும், அரசியல் போர்த்தந்திர நோக்கிலும் விடுதலைப் புலிகளின் தமிழீழம், சமஸ்டிக் கட்சியின் `தனி நாட்டின்` சுற்று வட்டத்தை விட்டு வெளியே வரவில்லை.   

இது சித்தாந்தத் துறையில் சிறு உடமை வர்க்கத்துக்கு பெரு உடமை வர்க்கத்திலிருந்து தனித்த ஒரு தத்துவம் இல்லை என்பதில் அடங்கியிருக்கின்றது.

இதனால் புலிகளோடு அக்கம் பக்கமாக, வலது சாரி விதேசிகள் சமாதான சகவாழ்வு நடத்த இயலுமாக இருந்தது.இந்த ஏகாதிபத்திய தாசர்கள், இந்திய விரிவாதிக்க நீசர்கள் பல தளங்களில் இருந்து இயங்கி வந்தார்கள்.

பன்மைத்துவ பலவந்தத்துக்குப் பதிலளிக்கும் முகமாக, -TNA- கூட்டமைப்பை புலிகளே உருவாக்கி விட்டார்கள்!

 தமிழ்நாட்டில் நெடுமாறன், வை.கோபாலச்சாமி, கொளத்தூர்மணி, சீமான், கா.சி.ஆனந்தன் என ஒரு கும்பல், புலம் பெயர் நாடுகளில் நாடு கடந்த அரசாங்கம், நாட்டுக்கு நாடு பேரவைகள், என இக் கிருமிகள் பல்கிப் பெருகிப் பரந்து விரிந்து ஆனால் பதுங்கி இருந்தன முள்ளிவாய்க்கால் வரை. 

இவர்கள் மத்தியில் தான் தாயகத்தில் சிலர் புலிகளுக்குள்ளும் வெளியிலுமாக செயற்பட்டு வந்தனர்.பெரும்பாலும் புலி ஆதரவு பிரச்சாரகர்களாகவும், பத்தி எழுத்தாளர்களாகவும், புனைவு இலக்கியம் எழுதுபவர்களாகவும், புலிகள் தீண்டத்தகாத பயங்கரவாதிகளாக இருந்ததால் சட்டபூர்வ காரியங்களில் ஈடுபடுபவர்களாகவும், பாலசிங்கத்துக்கு பக்கத் துணையாளர்களாகவும் இருந்துவந்தனர்.

இவர்களுள் முக்கியமானவர் (கட்டைத் திருநா என செல்லமாக அழைக்கப்பட்ட) மு.திருநாவுக்கரசு.சிந்தனா பூர்வமாக ஏகாதிபத்திய, இந்திய விரிவாதிக்க அடிமை.இவர் -ஏகாதிபத்திய-அன்ரன் பாலசிங்கத்துக்கு அடுத்த இரண்டாம் நிலை -இந்திய இனத்துவ-தத்துவ ஆசிரியராக இருந்தார். பல்கலைக் கழக உறவும் சேர்ந்து- இவரைச் சுற்றி ஒரு சீடர் குழாம் உருவாகிக் கொண்டது.இவர்களில் பலர் மே வரை  முள்ளிவாய்க்காலில் நின்று கொள்ளி வைத்து விட்டு பாதுகாப்பாக வெளியேறி வந்தவர்கள்! 

2002 பேச்சுவார்த்தையை கையாண்ட முறையில் புலிகள் அரசியல் தவறு இழைத்திருந்தாலும் அதிலிருந்து மீண்டு வந்து போரைத் தொடர அவர்கள் கடைசிக் கணம் வரையிலும் முயன்றார்கள். முழு முற்றுகையிலும் கூட உடைத்து வெளியே வர திட்டம் தீட்டினார்கள். அதற்கு தீ மூட்டியது இந்தியாவின் ஆனந்த புர விச வாயுத் தாக்குதல்.அதனால் தான் ஆயுதங்கள் மெளனித்தது. ( ``இல்லையென்றால் நிலைமை வேறு திசையில் சென்றிருக்குமென`` டி.பி.எஸ்.ஜெயராஜ் பதிவு செய்துள்ளார்.)

அப்போது  ``போராடும் முறை மாறலாம்,ஆனால் போராட்ட இலட்சியம்-தமிழீழம்-மாறாது`` என்று கூறப்பட்டது, கூடவே ஏதோ ஆயுதப் போராட்டம் என்றால் ஜனநாயகமற்றது போலவும், நாடாள மன்றம் ஒன்றே ஜனநாயகப் பாதை போலவும், இனிமேல் `` ஜனநாயகப் பாதையில் போராட்டம் தொடரும்`` என்றும் ஒரு சேர  அறை கூவல் விடுக்கப்பட்டது.

15 ஆண்டுகளுக்குப் பின்னால் நடந்திருப்பது என்ன?

இரண்டு அவமானச் சின்னங்கள் எஞ்சி இருக்கின்றது...நேத்திரன், சிறீதரன்!

இந்த ஜனநாயக அரசியல் போராட்டம், இவ்வாறு மெளனித்தது -உண்மையில் மரணித்தது எவ்வாறு? அதற்கு யார் பொறுப்பு? பொறுப்புக் கூறுவார் யார்?

இதற்குக் காரணம் மேலே விளக்கிய இந்த தேசத்துரோக அந்நியக் கைக்கூலி விதேசிகள் தான்.




முள்ளிவாய்க்காலுக்குப்பின்னால், தமிழ், தமிழ் இனம், தமிழ்த் தேசியம், தமிழ்க் கட்சிகள், வெல்க தமிழ் ( கவனியுங்கள் இங்கு தமிழ் தான் உள்ளது, தமிழீழம் இல்லை!) என்று ஏமாற்றி இந்த விதேசியக் கும்பல் தமிழீழப் போராட்டத்தைக் கையிலெடுத்தது. 

இவ்வாறு தமிழீழ அரசியல்,அமைப்பு,தலைமை,தலைவன் என்று எல்லாவற்றையும் சிதைத்து சீரழித்து சின்னாபின்னமாக்கி அழித்தொழித்து சுமந்திரனின் கையில் காவு கொடுத்தது இந்தக் கும்பல்தான்.

ஆக தமிழ்த் தலைமை என்று எஞ்சியது  ஒரு கருணா கும்பல்.

இனிமேல் எதுவும் இல்லை என்று ஆக்கிய பிறகு  இன்னும் பிரச்சனை- இருக்கின்றது என்று சொல்லி- என்று சொல்ல, `பொதுக் கட்டமைப்பு, பொது வேட்பாளர்` என்று வருகின்றது  திருநா கும்பல்.

முன் கதவால் கூட்டமைப்பு ஒழிய, பின் கதவால் கட்டமைப்பு நுழைகின்றது.

சம்பந்தனோடு அது பாடையேற, சந்திரனோடு இது மேடையேறுகின்றது.

திருநா கும்பல் கூறுவது ஆக 3 விடயம் தான்.

1) பொதுக்கட்டமைப்பு என்பது 7 தமிழ்க் கட்சிகளினதும், 83 சிவில் அமைப்புக்களினதும் சங்கமம்.

2) தமிழர்களுடைய பிரச்சனை இன்னமும் தீர்க்கப்படாமல் உள்ளதை உலகுக்கு சொல்வது.

3) பொது வேட்பாளர் இந்தச் சங்கமச் சங்கத்தினதும், பிரச்சனைக்கு உள்ளாகியிருக்கும் சனங்களதும் அடையாளச் சின்னம்.

கடந்த 15 ஆண்டுகளாக '7 தமிழ்க் கட்சிகளும், 83 சிவில் அமைப்புக்களும்` தமிழர் பிரச்சனைக்காக செயல்பட்டதற்கான தடயம் எதுவும் இலங்கையில் இல்லை. தமிழ்க் கூட்டமைப்பும், காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கமும்,கடற்தொழிலாளர் அமைப்பும்,பல்கலைக் கழக மாணவர் அமைப்புக்களும் என ஆக நான்கே நான்கு அணிகள் தான் செயற்பட்டுவந்தன.அதிலும் காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் பொதுக்கட்டமைப்பில் இணையவில்லை,கடற்தொழிலாளர் பிரச்சனையை ``தவறுதலாக`` பொதுக்கட்டமைப்பு மறந்து விட்டது.ஆக இந்த எண்ணிக்கையும் இதைப் `பொது` என்பதும் தவறு,மேலும் சேனாதியின் `குளம் கரை விளையாட்டும்`, டெலோ புளட்டின் ரணில் சந்திப்பும் இதை ஒரு `கட்டமைப்பாக`க் காட்டவில்லை.

ஆரம்பத்திலேயே இது ஏன் இவ்வளவு அலங்கோலமாக காட்சியளிக்கின்றது என்றால் இந்த 3 விடயமும் ஏதோ ஒன்றை மூடி மறைக்க இவர்கள் உருவாக்கிய கட்டுக்கதை. 

மூடி மறைக்க முயலும் அந்த விடயம் என்ன? அது தான் முக்கியமானது.

``தமிழர் பிரச்சனை தீர்க்கப்படாமல் இருக்கின்றது`` என்று தொடர்ந்து அமைப்பாக சொல்லிக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் யாருக்கு இருக்கின்றதோ அவர்களுக்கு சேவகம் செய்வதே இந்த கட்டழகர்களின் நோக்கம்.

அது இந்தியா என்பது  தெரியாதவர் யார்? 

இனி தலை கீழாகப் பாருங்கள் அனைத்தும் ஒரு நேர் கோட்டில் வந்து நிற்கும்.

1) 1983 ஜூலை படுகொலையை சாட்டித்தான் இந்தியா இலங்கையில் தலையிட்டது.

2) தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு என்று சொல்லித்தான் இந்திய இலங்கை விரிவாதிக்க ஒப்பந்தத்தைச் செய்து கொண்டது.

3) தமிழர்களைக் காக்கவென்றுதான் இந்திய ஆக்கிரமிப்புப் படையை அனுப்பி வெறியாட்டம் ஆடியது.

4) எனினும், இன்னும் இலங்கையில் ஒரு நிலையான இந்திய சார்பு அரசு அமையவில்லை, சீனப் பிரச்சனையும் அகலவில்லை.மேலும் கூர்மை அடைகின்றது.

5) ஆக தமிழர் பிரச்சனை தீர்க்கப்படாமல் தொடர்வது, தலையீட்டைத் தொடர்வதற்கான முன் அவசியம் ஆகும்.

6) கட்டமைப்பின் கட்சிகள்-கருங்காலிகள்- அனைவரும் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை ஏற்று அந்நிய ஆக்கிரமிப்பு ராணுவத்துடன் கூடி கொலைவெறித் தாண்டவமாடிய இரத்தக் கறை படிந்தவர்கள். சுரேஸ் பிரேமச்சந்திரன் மண்டையன் குழுத்தலைவன்.

7) திருநா இந்திய அடிமை,பேராசிரியர், நிலாந்தன்,சோதி லிங்கம்(இது இல்லாத கட்சியும் இல்லை, இருந்த கட்சியும் இல்லை!) வகையறாக்கள் பதுங்கு குழி விதேசிகள்.

8) கூட்டமைப்பின் அந்திமத்துக்குப் பின்னால் இந்தியாவுக்கு ஊளையிட - ``தமிழர் பிரச்சனையை உரத்துச் சொல்ல``- இலங்கையில் ஒரு அரசியல் ஸ்தாபனம் இல்லை. 

9) சங்கூதுகின்றது பொதுக்கட்டமைப்பு.

10) எங்கள் பகைவர் இன்னும் மறையவில்லை!

நிலாந்தன் எழுதுகின்றார்:

`` பொது வேட்பாளர் என்ற கருத்துருவத்தை முதலில் முன்வைத்த மு.திருநாவுக்கரசு தமிழகத்தில் தங்கியிருப்பதனால்,அவர் இந்தியாவின் ஆள் என்ற சந்தேகம்.அதனால்,பொது வேட்பாளரை இந்தியாவின் ப்ரொஜக்ட் என்று சந்தேகித்தார்கள். அவருக்கு நெருக்கமாக இருந்தவர்கள் பொது வேட்பாளர் என்ற கருத்துருவத்தை தொடர்ந்து வளர்த்துச் சென்றபடியால் அதுவும் இந்தியாவின் வேலையாக இருக்கலாம் என்ற சந்தேகம்.இம்முறை தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னரே சுரேஷ் பிரேமச்சந்திரன் அந்த விடயத்தை கையில் எடுத்தார்.அதனால் அது இந்தியாவினுடைய  வேலையாகத்தான் இருக்கலாம் என்ற சந்தேகத்தை முன்வைத்தவர்கள் மேலும் உஷாரானார்கள்.அதன்பின் யாழ்ப்பாணத்தில் இயங்கும் ஒரு காணொளி ஊடகத்தின் அனுசரணையோடு இயங்கிய ஒரு குடிமக்கள் சமூகம்  பொது வேட்பாளர் தொடர்பாக கருத்தரங்குகளை நடத்தியது.அக்குடிமக்கள் சமூகத்தின் பிரதானியாக இருப்பவர் 13ஆவது திருத்தத்தை தொடர்ச்சியாக ஆதரித்து வருபவர். அவர் அதை வெளிப்படையாகத்தான் செய்கிறார். எனவே அந்தச்சிவில் சமூகம் இந்த விடயத்தைக் கையில் எடுத்த காரணத்தால் அது இந்தியாவினுடைய வேலையாகத்தான் இருக்க வேண்டும் என்ற சந்தேகம் மேலும் அதிகரித்தது.முடிவில் பொது வேட்பாளரை முன்னிறுத்துவதற்கு ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்கிய பொழுது,அதில் உள்வாங்கப்பட்ட பெரும்பாலான கட்சிகள் இந்தியாவுக்குக் கடிதம் எழுதியவை.அதனால்  சந்தேகம் மேலும் கூடியது.

மேற்சொன்ன  சந்தேகங்கள் அவ்வளவும் போதும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு. எதுக்கெடுத்தாலும் இந்தியாவின் சதி என்று குற்றஞ்சாட்டும் அக்கட்சியானது,பொது வேட்பாளர் என்ற விடயம் இந்தியாவின் அனுசரணையோடு மேடையேற்றப்படும் நாடகம் என்று கூறிவருகிறது``. 

nillanthan.com

ஒப்புதல் வாக்கு மூலத்துக்கு நன்றி.ஆனால் இது சந்தேகம் அல்ல உண்மை. ஒரு வேளை சந்தேகமாக இருந்தாலும் அவ்வாறு சந்தேகிக்க எமக்கு முழு உரிமையும் ஆதாரமும் உண்டு.``எதையும் சந்தேகி``!

மேலும் கூறுகின்றார்:

``ஜனாதிபதி தேர்தல் காலத்தில் இலங்கைக்கு வந்த எந்த ஒரு இந்திய பிரதானியும் இதுவரை பொது வேட்பாளருக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கவில்லை என்பதே தொகுக்கப்பட்ட அவதானிப்பு ஆகும்.'`

இந்தப் பிராணிகளில் மிக முக்கியமானவர் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல்.

அவருடைய இலங்கை வருகை குறித்த வீரகேசரி பத்திரிகைக் குறிப்பு வருமாறு:

ஒருமித்து நின்று தமிழர் வாக்குகளை உபயோகமாக பயன்படுத்துவதே சிறந்தது.

தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் இந்திய தேசிய ஆலோசகர் எடுத்துரைப்பு.

நா. தனுஜா

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலுக்கும் தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று நடைபெற்ற சந்திப்பின் போது,  தமிழ் பொது வேட்பாளர் விவகாரம் , தேர்தல் புறக்கணிப்பு , கோஷம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், இம்முறை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது குறித்து, தான் எதையும் கூறப்போவதில்லை எனவும் ,  இருப்பினும் அனைவரும் ஒற்றுமையாக ஒருமித்து நின்று, தமிழ் மக்களின் வாக்குகளை உபயோகமான முறையில்  பயன்படுத்துவதே சிறந்த தீர்மானமாக அமையும் என்று தான் கருதுவதாகவும் தெரிவித்தார்.

இலங்கைக்கு வருகை தந்திருக்கும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலுக்கும் தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று வியாழக்கிழமை கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில் நடைபெற்றது. 

இச் சந்திப்பில் கலந்து கொள்வதற்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ். சிறிதரன், மற்றும் எம். ஏ.  சுமந்திரன் , டெலோவின் சார்பில் அதன் தலைவரும் , பாராளுமன்ற உறுப்பினருமான  செல்வம் அடைக்கலநாதனுக்கும், புளொட் சார்பில் அதன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தனுக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அதன்படி சந்திப்பில் சிறிதரன் , சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், மற்றும் கஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்த போதிலும் , வெளிநாட்டு பயணமொன்றிற்கு செல்ல வேண்டியிருந்தன் காரணமாக சந்திப்பின் தொடக்கத்திலேயே சிறிதரன் வெளியேறினார்.

சந்திப்பில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு,  மற்றும் ஜனாதிபதி தேர்தல் நிலவரம் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது. இதன் போது கடந்த 75வருட கால அனுபவத்தில் தமிழ் மக்களால் ஒற்றை ஆட்சியின் கீழ் வாழமுடியாது  என்பதை நாம் புரிந்துகொண்டிருப்பதாகவும்,  அதே போன்று அரசியல் அமைப்புக்கான 13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக தோல்வியடைந்திருப்பதன் காரணமாக அதனூடாக தமிழ் மக்களால் முன்னோக்கி செல்ல முடியாது எனவும் தமிழ் மக்கள் தேசிய முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் அஜித் டோவலுக்கு எடுத்துரைத்தார்.

ஆகவே 13 ஆவது திருத்தத்தையும், 2015 ஒற்றையாட்சி முறையையும் உள்ளடக்கி தயாரிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு முறையையும் தாம் நிராகரிப்பதாக தெரிவித்த கஜேந்திரன், வட , கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களுக்கான சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சமஷ்டி முறையை வென்றெடுப்பதற்கு இந்தியா உதவ வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

அதேபோன்று எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்க  வேண்டும் என்ற தமிழ் மக்கள் தேசிய முன்னணியின் கொள்கை குறித்தும், தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கான தமிழ் பொது கட்டமைப்பு தீர்மானம் குறித்தும் இச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.

இத்தகைய மாறுபட்ட நிலைப்பாடுகள் தொடர்பிலும் தமிழ் மக்களின் வாக்குவீதம் குறித்தும் கேட்டறிந்த அஜித் டோவல் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் அனைவரும் ஒற்றுமையாக ஒருமித்து நின்று , தமிழ் மக்களின் வாக்குகளை உபயோகமான முறையில் பயன்படுத்துவதே சிறந்தது என ஆலோசனை வழங்கினார். அத்தோடு தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் எத்தகைய தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும் என தான் கூறப் போவதில்லை  என குறிப்பிட்ட அவர், இருப்பினும் இத் தேர்தலில் அளிக்கப்படும் வாக்குகள் ஜனநாயகத்தில் எவ்வாறு தாக்கம் செலுத்தும் என்பதைக் குறித்து சிந்தித்து செயலாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

வீரகேசரி: 30-08-2024

முக்கியமான 5 வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற ஒரு நாடளாவிய தேர்தலில் ஒருமித்து நின்று ஒரு வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு ஆலோசனை வழங்குவது எப்படி ஜனநாயகமாகும்? 

இப்படி ஒரு தலைவரின் கீழ் ஒருமித்து நின்ற போது அதை சர்வாதிகாரம்-பாசிசம்- பன்மைத் தன்மை வேண்டும் என்றீர்களே அது எப்படி?

இந்த ஒருமித்து நிற்பதைத் தானே நிலாந்தன் `` 7கட்சிகளும் 83 சிவில் அமைப்புகளும் ஒரு புள்ளியில் சந்தித்தது நவீன தமிழர் வரலாற்றில் (!) மகத்தான சாதனை`` என்கின்றார் இல்லையா?

எல்லா(5) இயக்கங்களும் ``ஒருமித்து`` திம்புவில் கோரிக்கை (1985) வைத்தபோது இந்தியா என்ன செய்தது, சகோதரப் படுகொலைகளை ஏவிவிடவில்லையா?

இப்போது மட்டும் ``ஒருமிப்பு`` பேசுவது ஏன்?

இதை நிலாந்தன் அவதானிக்கவில்லையா? இது அறிவியலா?

இது `தமிழ்க் கட்டமைப்புக்கு` தெரியவில்லையா?

இன்று இத்தகைய விசக்கிருமிகள் விளைவதற்கான விளை நிலமாக இனத்துவம் மாறிவிட்டது. அதன் முற்போக்குப் பாத்திரம் முள்ளிவாய்க்காலோடு முடிந்துவிட்டது.

இதை முன்னறிந்து தான் முள்ளிவாய்க்கால் முதல் ஆண்டில் நாம் முன் வைத்த அரசியல் தீர்மானம்-முள்ளிவாய்க்கால் வீரகாவியம்- `` இடைவழிச் சமரசங்களை தோற்கடிப்போம்! இறுதிவரை ஈழம் காண ஊற்றெடுப்போம்!!`` என முழங்கியது.

இந்தப் பதினைந்து ஆண்டுகளில் இந்தச் சமரசம் சரணாகதியில் முடிந்தது நமது தீர்க்க தரிசனத்தை சரியென்று நிரூபித்துள்ளது.

இன்று நிலவும் தொடர் காலனிய இலங்கை அரசு தேசியப் பகைமையின் மீது, தேசிய ஒடுக்கு முறையின் மீது கட்டியமைக்கப்பட்டுவிட்டது. இந்த அரசுமுறைக்குள் தேசிய சமத்துவத்தை அடையமுடியாது. இது தொடர் காலனிய அதிகாரத்தின்,சுரண்டலின் கருவியாக உறிஞ்சு குழலாக உருவாக்கப்பட்டது.அத்தக்கைய ஒரு அரசு முறைக்கு தேசியப் பகைமை ஒரு அடிப்படை நிபந்தனை ஆகும்.இலங்கையைப் போலவே நெரடிக் காலனியாதிக்கத்தில் இருந்து விடுபட்டு தொடர் காலனிகளாக இருக்கும் அனைத்து நாடுகளிலும் தேசியப் பிரச்சனை உண்டு. 

இதன் வேர் உள் நாட்டு அதிகாரத்தில் இல்லை, காலனியாதிக்கத்திலும் அதன் தொடர்ச்சியிலும் இருக்கின்றது.

இதை நாடாளமன்றப் பாதையில் மாற்றமுடியாது. இதற்கு மக்கள் ஜனநாயக இயக்கம் தேவை, அதற்கு தலைமை தாங்க மார்க்சிய லெனினிய கட்சி தேவை.

முள்ளிவாய்க்காலில் இருந்து முன்னேறிச் செல்வதற்கு இது ஒன்றே வழி இதைத் தவிர வேறெந்த குறுக்கு வழியும், விரைவு ரெயிலும் கிடையாது.

போலித் தேர்தலையும் பொது வேட்பாளரையும் புறக்கணிப்போம்!

ஈழப்படுகொலைப் பொதுவாக்கெடுப்புக்குப் போராடுவோம்!!

புதிய ஈழப் புரட்சியாளர்கள்

21-09-2024

No comments:

Post a Comment

Moody's may raise credit rating, SL achieves significant step forward in EDR- IMF

  Moody's may raise Sri Lanka's credit rating Moody's may raise Sri Lanka's 'Ca' long-term foreign currency rating, ...