SHARE

Wednesday, June 19, 2024

தமிழ் அரசியல் கைதிகள்: மரணம் வரை தடுத்து வைக்க அரசாங்கம் முயற்சி

தமிழ் அரசியல் கைதிகள்:  

மரணம் வரை  தடுத்து வைக்க அரசாங்கம் முயற்சி


புதிய மகசீன் சிறைச்சாலைக்கு பயணம் செய்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் அங்கு
 தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுடன் நேற்று செவ்வாய்க்கிழமை (18) காலை நேரில் சந்தித்து உரையாடினார். 

குறிப்பாக, புதிய மகசீன் சிறைச்சாலைக்குச் சென்று 15 வருடங்களாக அரசியல் கைதியாக கொடுஞ்சிறையில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுருக்கும் கிருபாகரனுடன் (மொறிஸ்) தமிழ் அரசியல் கைதிகள் முகங்கொடுத்து வருகின்ற நெருக்கடிகள் தொடர்பில் கலந்துரையாடி இருந்தார். 

அதன்பின்னர் செல்வராசா கஜேந்திரன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்:- 


தமிழ் அரசியல் கைதிகள் முகங்கொடுக்கும் நெருக்கடிகள் தொடர்பில் ஆராய்வதற்காக புதிய மகசீன் சிறைச்சாலைக்குச் சென்றிருந்தேன். அங்கு 15ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள கிருபாகரனுடன் உரையாடினேன். 

குறிப்பாக கொடிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்கள் இன்னமும் விடுவிக்கப்படாத நிலைமைகளே நீடிக்கின்றன. 

விசேடமாக,ஒரு வழக்கிற்கு மேலதிகமாக பல வழக்குகளை அவர்கள் மீது தொடுத்து மரணிக்கும் வரையில் அவர்களை சிறைக்குள் தடுத்து வைப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது.  

தமிழ் அரசியல் கைதிகளைப் பொறுத்தவரையில் அவர்கள் இரட்டை ஆயுள்காலத்தினை சிறையினுள் கழித்துள்ள போதும் அவர்களை விடுவிக்காது மேலதிக வழக்குகளை தொடுக்கின்ற நிலைமைகள் துரதிஷ்டமானது.  

சர்வதேச சட்டங்களையும், விதிமுறைகளையும் மீறும் வகையிலான பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குமாறு ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் பேரவையும், ஐரோப்பிய ஒன்றியமும் வலியுறுத்தியுள்ளபோதும் இலங்கை அரசாங்கம் அதனை கருத்தில் கொள்ளாத நிலைமை தொடர்கின்றது. இதனை சர்வதேச சமூகம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார்.⍐

மூலம்:பதிவு.கொம் Wednesday, June 19, 2024 

No comments:

Post a Comment

Moody's may raise credit rating, SL achieves significant step forward in EDR- IMF

  Moody's may raise Sri Lanka's credit rating Moody's may raise Sri Lanka's 'Ca' long-term foreign currency rating, ...