SHARE

Sunday, March 31, 2024

ரகு - அண்ணாவுக்கு பிரியாவிடை

 

அன்புள்ள ரகு அண்ணா; 

அண்ணனுக்கு அண்ணனாய், தோழனுக்கு தோழனாய்,  எம்மோடு பயணித்தவா... பிரியாவிடை!

உறவுக்கு ஒரு உயிர் அண்ணனாய் இருந்தவன் நீ!  
நீ அள்ளி தந்த அன்பே தனி! 

மறப்பேனோ உன்னை, 
என் தந்தைக்கு பெறா மகனாய்  நீ  ஆற்றிய பணிவிடை,
இரத்த தானம் கேட்ட போது  நீ கொடுத்த கொடை, 
 “நான், குமாரா, ராஜா, மூவரும் என்றும் பிரியோம்” 
என்று அப்பாவுக்கு நீ கொடுத்த வாக்கு,
............ என, என

பிரியாமல் பயணித்த பயணம் பல, 
பிரிந்தாயோ அண்ணா?

உறவின் அர்த்தம்  புரிந்தவன், வந்த தடைகள் தகர்த்தவன்.

குடும்பச் சுமை  `குழந்தை உழைப்பாளிகளை` கொழும்புக்குத் துரத்திய, 
மலையக சோகத்தின் மற்றொரு சுவடு நீ.

சளைக்கவில்லை நீ சாதித்தாய்!
என்று நீ அயர்ந்தாய்? 

அந்த உலைக்களத்தில் பயின்றாய்,
உன்னத மனிதனாய் உயர்ந்தாய்!

நீதியான சமுதாயத்தை உருவாக்க  நாம் சிறு எறும்புகளாக இணைவோம் என்ற போது நீ தயங்கவில்லை.

அந்நிய ஆக்கிரமிப்பை எதிர்த்த எந்தக் கருத்துக்களும்  வேட்டையாடப்பட்ட அந்நாட்களில், 
துணிந்த  உன் செயல்கள் சிறு  துளிகள் , 
ஆம்
பெரு வெள்ளமான சிறு  துளிகள்!  

வீதியெல்லாம் இராணுவம், விளக்கெரிக்க அஞ்சினோம், 
வீடு தந்த மானுடம் நீ!

விடுதலை விளக்கேற்றும் பிரச்சார இயக்கத்துக்கு 
அடிநாதமாய் இருந்த பிடிவாதம் உனது.

அன்றும், இன்றும் இதை அறிந்தவர் சிலர் ஆயினும் 
இன்று அனைவரும் அறிய உரக்கச் சொல்வோம், 
எம் பாதையில் நீ ஒரு தொடு கல்! எம் பயணத்தில் நீ ஒரு நடுகல்!

அன்புத் தோழனே, இன்று நீ மீளாத்துயிலில் .... நாமோ ஆறாத்துயரில்...

உன் அன்பும், சமூக நேசமும், மக்கள் பாசமும், மனித நேயமும் 
என்றென்றும் எம்மை விட்டு அழியாது, அகலாது.

எப்போதும் உயிர் வாழும்,
எம் உயிரோடு உன் நினைவும் வாழும்.

சென்று வா, 
அன்பு மிகு ரகு அண்ணா சென்று வா!

பிரியாவிடை.

என்றும் உன் அன்பு மறவா சகோதரர்கள், நண்பர்கள், தோழர்கள்.
01-04-2024
இறுதிக்கிரியை அறிவித்தல்

No comments:

Post a Comment

இந்தியாவின் பாதுகாப்புக்கு பாதகமான செயல்பாட்டுக்கு இலங்கைக்குள் இடமளியோம்.

இந்தியாவின் பாதுகாப்புக்கு பாதகமான செயல்பாட்டுக்கு இலங்கைக்குள் இடமளியோம். ஏப்ரல் 5, 2025 ஜனாதிபதி ஊடகப் பிரிவு அதிமேதகு பிரதமர் ஸ்ரீ நரேந்த...