SHARE

Wednesday, February 28, 2018

ENB- சிங்களத்தின் இஸ்லாமியத் தமிழர்கள் மீதான தொடர் தாக்குதலை கண்டிப்போம்!

ENB-புதிய ஈழப்புரட்சியாளர்களின் கண்டன அறிக்கை

அம்பாறையில் இஸ்லாமியத் தமிழர்களின் வர்த்தக நிலையங்கள் தீக்கிரை! பள்ளிவாசல் மீது தாக்குதல்!!


லங்கையின் கிழக்கு மாகாண, அம்பாறை நகரில் சிங்களக் காடையர்கள் ஒன்று கூடி பொலிஸ் நிலையத்துக்கு அருகாமையில் உள்ள  முஸ்லிம்களுக்கு சொந்தமான  கடைகளை தீக்கிரையாக்கியுள்ளனர்.  பள்ளிவாசல் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.இந்த சிங்களப் பேரின பெளத்த மதவெறித் தாண்டவம் 26-02-2018 அன்று அரங்கேறியுள்ளது.



அன்று முன்னிரவு முஸ்லிம்களின் உணவு விடுதி ஒன்றுக்கு வந்த சிங்களவர்கள் சிலர், உணவு அருந்திவிட்டு, உணவில் இருந்த கோதுமை மாவின் அவியாத சில பகுதிகளை காண்பித்து "கடைக்காரர்கள் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் மருந்தை-"sterilization pills" - கலந்திருப்பதாக" கூறி குற்றஞ்சாட்டினர் என அப்பகுதி முஸ்லிம்கள் BBC தமிழோசைக்கு தெரிவித்துள்ளனர்.


இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து காடையர்கள் அந்தக் கடையை மட்டுமல்லாமல் வேறு சில கடைகளையும், அங்கிருந்த பள்ளிவாசல் ஒன்றையும் முற் காலை ஒரு மணி வரை தாக்கி சேதமாக்கியுள்ளனர்.

சுற்றுப்புறங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் வாகனங்கள்,மோட்டார் சைகிள்கள் என வாகனங்கள் பலவற்றையும் தீக்கிரையாக்கியுள்ளனர்.

பொலிசாருக்கு உடன் தகவல் தெரிவிக்கப்பட்டும், கோடம்பாக்க தமிழ்ச் சினிமாப் பாணியில் இந்த வெறியாட்டம் ஓய்ந்து காடையர்கள் கலைந்த பின்னர் தான் பொலிஸ் ஸ்தலத்துக்கு ``விரைந்தது``!

இதைத் தொடர்ந்து காடையர்களின் வெறியாட்டத்துக்கு ஆதரவாக ஏராளமான `சிங்கள பொது மக்கள்`திரண்டனர்.இவர்களை கலைந்து செல்லுமாறு கோரிய பொலிசாரை எச்சரித்த  `சிங்கள பொது மக்கள்`, `` எங்களைப் போகக் கேட்க வேண்டாம், அவர்களை வெளியேறச் சொல்லுங்கள்`` என சிங்கள மொழியில் கூச்சலிட்டனர்.



ஒரு பெட்டிக்கடை உணவு வியாபாரி தனது விற்பனைப் பண்டமான உணவில் மருந்து கலந்து அம்பாறை நகரில் சிங்களவருக்கு மட்டும் மலட்டுத் தன்மையை ஏற்படுத்த திட்டமிடுவான் என்பது கற்பனைக்கும் எட்டாத கற்பனை! சிங்களத்துக்கு மட்டுமே சாத்தியம்!!

அம்பாறைத் தாக்குதலின் பின்னணி

அம்பாறை மாவட்டத்தின் இன விகிதாசார சனத்தொகை 2015இல், சிங்களவர் 34.43%,தமிழர்15.46%,இஸ்லாமியத் தமிழர்38.75% ஆகும்.(ஆதாரம் ANNUAL PERFORMANCE REPORT & ACCOUNTS 2015-Amparai District).எனினும் அம்பாறை மாவட்டத்தின் தலை நகரான அம்பாறையில் சிங்களவரே அதிகம் வாழ்கின்றனர்.

எனவே நகர்ப்புற வர்த்தகத்தை தமது ஏகபோகமாக்கவும், படிப்படியாக அம்பாறை மாவட்டத்தையே சிங்கள மயப்படுத்தவுமான திட்டத்தின் ஒரு பகுதியே அம்பாறைத் தாக்குதல் ஆகும்.


முள்ளிவாய்க்காலுக்குப் பின்னால் விடுதலைப்புலிகள் அழித்தொழிக்கப்பட்டு தமிழர்கள் நிராயுதபாணிகள் ஆக்கப்பட்டதற்குப்பின்னால் சிங்களம் இஸ்லாமியத் தமிழர்கள் மீது `பெளத்த படையை` ஏவி தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றது.


மேலும் இது தேசிய இனப்பிரச்சனையை மத மோதல்களைத் தூண்டி சீரழிக்கும் திட்டத்தின் பகுதியுமாகும்.

இந்திய விரிவாதிக்கத்தின் மோடி ஆட்சி இதற்கு பக்கபலமாக இருக்கின்றது.

அம்பாறைச் சம்பவம் நடந்த அதே சமயத்தில் மன்னாரில் இந்து விக்கிரகங்கள் `தொடர்ந்து தாக்கி அழிக்கப்படுவதாக` குற்றம் சாட்டி, இலங்கையின் `இந்து முன்னணி` எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

சிங்களத்துக்கு துணை போகும் ``தமிழ் ஊடகங்கள்``

சிங்களக் காடையர்களின் சிங்களப் பேரின பெளத்த மதவெறித் தாண்டவத்தை நியாயப்படுத்த உணவு விடுதி ஊழியன் ஒருவனை புடை சூழ்ந்து மிரட்டி அச்சுறுத்தி, உணவில் மலட்டுத்தன்மை மருந்து கலந்ததாக அவனிடம் ஒப்புதல் வாக்குமூலம் பெற்ற வீடியோ ஒன்று பரப்பப்பட்டு வருகின்றது.

இந்த வீடியோ நமது (Investigative Journalists) ஊடறுப்பு ஊடகவாதிகளுக்கு உடனே ஆதாரம் -Evident- ஆகிவிட்டது! IBC தமிழ் ஆரம்பித்து வைக்க ஊளையிட்டன ஊடகங்கள்!

IBC ஊழியர் ஒருவர் Mc Donalds இல் வாங்கிய உணவில் மலட்டுத்தன்மை மருந்து இருப்பதாகக் கண்டுபிடித்தால் முதலில் Trading Standard Department க்கு தெரியப்டுத்தி உணவுப் பரிசோதனை மூலம் அல்லவா நிரூபிக்க வேண்டும்.இது தானே இலங்கையிலும்
உலகத்திலும் உள்ள வழக்கு.

இதுவரையில் அம்பாறைப் பிரச்சனையில் உணவுப் பரிசோதகர் சம்பந்தப்பட்ட ஒரு பரிசோதனை நடக்கவில்லையே ஏன்?

இந்த எளிமையான கேள்வி நமது தமிழ் ஊடகங்களுக்கு எழவில்லையே ஏன்?

அந்தளவுக்கு கண்ணை மறைத்திருக்கின்றது குறுந் தமிழின வெறி.

இந்த மலட்டுத் தன்மையை என்னவென்று சொல்வது!



சமரசவாத முஸ்லிம் தரகுத் தலைமைகளின் பித்தலாட்டம்:

அமைச்சர் ரவூப் ஹக்கீம், அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த பிரதி அமைச்சர்களான எச்.எம்.எம். ஹரீஸ், பைசால் காசிம், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம். மன்சூர், ஏ.எல்.எம். நசீர் கூடவே மனோ கணேசன் அடங்கிய துணை ஆளும் கும்பல்கள், தாக்குதல்
சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதியும், பிரதமரும் உறுதியளித்துள்ளனர் என உறுதியளிக்கின்றனர்.  முஸ்லிம் மக்கள் மிகவும் நிதானமாக நடந்துகொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறுகின்றனர்.

அமைச்சரவை கூட்டத்தில் ஹக்கீம் கூறுகின்றார் '`நள்ளிரவு நேரத்தில் பள்ளிவாசல் தாக்கப்பட்டுள்ளது. வர்த்தக நிலையம் தீவைக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் எரிக்கப்பட்டுள்ளன. இவ்வளவு கலவரங்கள் நடைபெற்று முடியும் வரைக்கும் பொலிஸார் தலையிடாமல் இருந்தமைக்கு கண்டனம் தெரிவிக்கிறோம். உளவுப்பிரிவுக்கு தெரியாமல் இந்த விடயங்கள் நடந்திருக்காது. ஆனால், உளவுப்பிரிவும் இந்த விடயத்தில் அவதானம் செலுத்த தவறியுள்ளது``.மேலும்  இதில் கைதுசெய்யப்படுபவர்கள் மீது பிணை வழங்குவதில் இறுக்கமான நிலைப்பாட்டைக் கொண்டுள்ள “சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கை” (International Convention Civil and Political Rights) சட்டத்தின் கீழ், உயர் நீதிமன்றத்தில் A Grade வழக்கு தொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதி பொலிஸ் மா அதிபருக்கு கூறியுள்ளதாக சட்டவாதம் புரிகின்றார்.

தாக்குதலுக்குள்ளான பள்ளிவாசல், வர்த்தக நிலையம் போன்றவை அரச செலவில் புனரமைக்கப்பட வேண்டும். அத்துடன் எரியூட்டப்பட்ட வாகனங்களுக்கும் நஷ்ட  ஈடு வழங்கப்படவேண்டும் என்று  அமைச்சரவையில் வலியுறுத்தினார்.

``இனவாதத்தை ஏற்படுத்தி, மக்களை குழப்பும் நோக்கில் சில குழுக்கள் வன்முறையில் இறங்கியிருப்பதானது மிகவும் கண்டிக்கத்தக்க விடயம். அண்மையில் வெளியான தேர்தல் முடிவுகளால் இந்த இனவாதக் குழுக்கள் உற்சாகமடைந்திருக்கலாம். இந்த நேரத்தில் எல்லா தலைமைகளும் ஒற்றுமையாக செயற்பட்டு தீர்வுகாண முன்வரவேண்டும். இப்பிரச்சினைக்கு நடவடிக்கை எடுப்பதாக அரசாங்கம் உத்தரவாதம் தந்துள்ளதால், முஸ்லிம் மக்கள் மிகவும் நிதானமாக நடந்துகொள்ள வேண்டும் என்றும் ரவூப் ஹக்கீம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் சில தீவிர சமரசவாதிகள், நாடு பிரிய வழி கோலும், முஸ்லிம்களை ஆயுதம் ஏந்தத் தள்ளும் என தமது எஜமானர்களுக்கு ஆலோசனை வழங்குகின்றனர்.

ஆக இவர்கள் விளக்கப்படி;  சில குழுக்கள் இனவாத வன்முறையில் இறங்கியிருப்பதும், பொலிசும் உளவுப் பிரிவும் தலையிடாமல் இருந்தமையுமே இப்பிரச்சனைக்கு காரணம். 1) சந்தேக நபர்கள் மீது A Grade வழக்கு தொடுப்பது, 2) அழிவுக்கு அரசு இழப்பீடு செய்வது
3)முஸ்லிம் மக்கள் மிகவும் நிதானமாக நடந்துகொள்வது, இவையே தீர்வாகும்.
இதன் மூலம் 1) ஒட்டுமொத்த நாட்டையும் அந்நிய நிதி மூலதனத்துக்கு விற்றுத் தொலைத்து 2) உலக மறுபங்கீட்டு யுத்தத்தில் அமெரிக்க இந்திய இராணுவக் காலனியாகும் நிர்ப்பந்தத்துக்கு உள்ளாகிவிட்ட 3) இன ஒடுக்குமுறையின் மீது கட்டப்பட்ட சிங்கள அரசு தனது இருப்பைத் தற்காத்துக் கொள்ள இன மத பூசல்களை தணியவிடாது, ஓயாது தூண்டிக் கொண்டே இருக்கும் என்கிற ஆதார உண்மையை மூடி மறைக்க முயல்கின்றனர்.
முஸ்லிம் துணை ஆளும் கும்பல்கள், வணிகத் தரகு வர்க்கம் என்கிற முறையில் ஆற்றுகின்ற வரலாற்றுப் -பிற்போக்கு எதிர்ப் புரட்சிப் - பாத்திரம் இதுவாகும்.

எவ்வாறு தமிழ்த்தரகு முதலாளிய வர்க்கம், `இனத்தோல் போர்த்து` தன் வர்க்க இயல்பை மூடி மறைக்க முயன்றதோ, அது போலவே முஸ்லிம் தரகு முதலாளிய வர்க்கமும் `மதத் தோல் போர்த்து` தன் வர்க்க இயல்பை மூடி மறைத்து வருகின்றது.

ஆனால் முரட்டுப் பிடிவாதமுள்ள வர்க்க முரண்பாடு-வரலாறு, இந்த போலித் தோல் போர்வைகளை சற்று முந்தியோ பிந்தியோ நீக்கி இவர்களின் சுய ரூபத்தை வெளிக்காட்டி விடுகின்றது, அல்லது வெளிக்காட்டியே தீரும்.

இவ்வாறுதான் தமிழ்த்தரகு முதலாளிய வர்க்கத்தின் `அதிகாரப் பகிர்வு சமஸ்டி இயக்கம்`, ஒரு முப்பது ஆண்டு காலத்தில் சாயம் வெளுத்துப் போனது.இதுவே முஸ்லிம் தரகு முதலாளிய வர்க்கத்துக்கும் நடந்தேறி வருகின்றது.
எனவே இது 1915 மற்றும், கறுப்பு ஒக்டோபர்1990*, களங்கங்களுக்கு பரிகாரமாக, இஸ்லாமியத் தமிழர்களோடு ஒன்றுபட கரம் நீட்டும் காலமாகும்.

இந்த ஒற்றுமைக்கு குழி பறிக்கும், குறுமினவாத,குறுமதவாத சக்திகளைத் தனிமைப்படுத்தி ஜனநாயக சக்திகளை ஒன்று திரட்டும் காலமாகும்.

சிங்களத்தின் இஸ்லாமியத் தமிழர்கள் மீதான தொடர் தாக்குதலை கண்டிப்போம்!

யுத்த மற்றும் பிற்கால அழிவுகளுக்கு நஸ்ட ஈடு கோருவோம்!

1983 ஜூலைக்கு முன்பிருந்த நிலைக்கு இஸ்லாமியத் தமிழர்களின் மீள் குடியேற்றத்தைக் கோருவோம்!

இஸ்லாமியத் தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளை நிர்வாக ரீதியாக ஒன்றிணைத்த பிரதேச சுயாட்சிக்காகப் போராடுவோம்!

புதிய ஈழப் புரட்சியாளர்கள்.
01-03-2018
==================
  *கறுப்பு ஒக்ரோபர் 1990-தமிழீழ விடுதலைப் புலிகளின், வடமாகாண இஸ்லாமியத் தமிழர் கட்டாய வெளியேற்றம்-சமூக நீக்கம்.

முதலாவது கட்டாய வெளியேற்றம் சாவகச்சேரியில் இடம்பெற்றது. சுமார் 1,500 முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டனர். இதன் பின்னர் கிளிநொச்சி, மன்னார் என தமது பூர்வீக வாழ்விடங்களைவிட்டு பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர். யாழ்ப்பாணத்திலிருந்து 1990 அக்டோபர் 30 இல் வெளியேற்றப்பட்டனர்.  1981 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் படி யாழ்ப்பாணத்தில் 14,844 முஸ்லிம் மக்கள் வசித்து வந்திருந்தனர். வட மாகாணத்தில் இருந்து 14,400 முசுலிம் குடும்பங்கள் (கிட்டத்தட்ட 72,000 பேர்) வெளியேற்றப்பட்டனர். இவர்களில் மன்னாரில் இருந்து 38,000 பேரும், யாழ்ப்பாணம், கிளிநொச்சியில் இருந்து 20,000 பேரும், வவுனியாவில் இருந்து 9,000 பேரும், முல்லைத்தீவில் 5,000 பேரும் அடங்குவர்.

இவர்களில் பலர் புத்தளம் மாவட்டத்திலும், ஏனைய பகுதிகளிலும் குடியமர்த்தப்பட்டனர்.

No comments:

Post a Comment

Moody's may raise credit rating, SL achieves significant step forward in EDR- IMF

  Moody's may raise Sri Lanka's credit rating Moody's may raise Sri Lanka's 'Ca' long-term foreign currency rating, ...