SHARE

Saturday, October 28, 2017

'உரு` ஈழக் கலைப்பட கலந்துரையாடல் - லண்டன்




“உரு” என்றால் சாமியாடல், ஒரு மாதிரிச் சாமிப்போக்கு, இலேசான மனோவியாதி என்றெல்லாம் பொருள் கொள்வர்.
உருக்கொள்ளல் என்றால் உன்னதமான ஆவேசம் , உண்மையின் சுடர் தேடி ஓடும் ஒரு ஆவேச ஓட்டம் என்றே பொருள் கொள்ளவேண்டும்.

“ஆட்கொணர்வு மனு” என்ற சட்டவாதம் செல்லாக்காசாகிய ஒரு நிலத்தில் “உருக்கொள்ளல்” தவிர்க்கமுடியாத ஒன்றாகும்.
சர்வதேச யுத்த நியமங்களை அலட்சியப்படுத்திய யுத்த வெறியர்களின் ஆட்சி மக்களை உருக்கொள்ளவே தூண்டும்.

யுத்தக்குற்றவாளிகள் ஆட்சிபீடங்களை அலங்கரிக்கின்ற
நாட்டில் தாய்மாரின் கண்ணீர்  நதிக்கு அணை கட்ட வெகுசனங்களின் எழுச்சியே ஒற்றைப்பாதை.....

ஈழதேசம் எங்கும் கேட்கப்படும்

“இராணுவத்திடம் கையளிக்கப்பட எம் உறவுகள் எங்கே”
என்ற கேள்விக்கான பதில் இன்னமும்

“அவர்கள் விடுதலைப்புலிகள் அவர்களை விடுதலை செய்யமுடியாது”

என்ற யுத்தக் குற்றவாளிகளின் வெறிக்கூச்சலாகவே இருக்கின்றது.

இரஞ்சகுமாரின் “கோசலை” சிறுகதை, வீட்டை மறந்து , நாட்டு மக்களுக்காய் காணாமல் போன பிள்ளைகளை வீடு என்ற குருவிக்கூட்டில் குஞ்சுகள் கூடி வாழ்ந்த நினைவுகளின் தாலாட்டில் மீளக் கண்டு தாயானவள் நாட்கள் நடைபோடும்.

“உரு” மகனின் மாறா நினைவுகளின் தடங்களில் தொடங்குகின்றது.
தாயன்பு உலகை எனக்கு காட்டிய ஒளிவிளக்கு என்று கொண்டாடிய பிள்ளையின் கவிவரிகள் இப்போது அன்னையின் கண்ணீர்த் தணல்கள்.

பிதிர்க்கடன்கள் மீதான நம்பிக்கை காலங்காலமாக வழங்கி வந்த மண்ணில் ,
“வீழ்ந்தது உன் கர்ப்பத்தவம்” என்ற செய்தியைக்கூட சொல்ல எல்லாம் வென்ற அரசு மறுக்கின்றது.

யுத்தம் வெல்லப்பட்டு கிட்டத்தட்ட பத்தாண்டுகள் ஆன பின்பும் துட்டகெமுனுக்களுக்கு எல்லாளர்களுக்கு ஒரு வணக்கம் வைக்கக்கூட மனசில்லை அவ்வளவு கர்வம். அத்துணை அகங்காரம்.

“வென்றிலன் என்ற போதும் வேதமுள்ளளவும் யானும் நின்றுளன் அன்றோ”
என கம்பராமாயண யுத்த காண்டத்தில் இராவணன் இறுமாந்தது போல

ஈழதேசத்தவரும்
நச்சுவாயுத் தாக்குதலாலும், நரக வேதனைகளாலும் தங்களது கோரிக்கையின் நியாயம் சற்றேனும் குன்றிவிடாத வைராக்கியத்தில் காலூன்றி நிற்பதனால் வந்த கோபாக்கினியோ என்னவோ?

அரசு தனது பொறுப்பில் நின்று வழுவி நிற்பதானால் கால ஓட்டம் நின்று விடுமா என்ன? 

வாழ்வின் ஓட்ட த்துக்கும் தேடல்கள், ஆசுவாசங்கள் அவசியம்தானே...? சர்வரோக நிவாரணியாக விபூதியும், பக்தர்கள் முகம் பார்த்தே துயரறியும் 
மனோதத்துவ பூசாரிகளும் தங்கள் கடமையை நிறைவேற்றவே செய்வர்.

அதிரடியாக கிளம்புவது
“பனையாலை விழுந்தவனை மாடேறி மிதிச்ச கதை”

குருதிப்புனலில் கூட குன்றிமணி தங்கம் காண ஈனர்கள் புறப்பட்டால்
தாய்மனசு அதற்கும் தங்கம் கொடுக்கும் அன்றோ...

ஆனால் “தாயறியாத சேயுமுண்டோ”

என்ற மகுட வாக்கியத்தை மண் தின்னிகள் கொள்ளைவெறியில் மறந்துவிடுவதே அந்தக் குடும்பத்தின் எஞ்சிய சேகரங்களை
காக்கும் கவசமாகின்றது.

இத் திரைக் கதறலை காண்பதுவும்
பரப்புவதும், பரம்புவதும்

“அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு” என்று காணாமல் போன உங்கள் காவல் தெய்வங்களுக்காய் அணி நிரை தோற்பதும் உங்கள் கடன்... காலம் உங்களிடம் கையளித்த மணிவிளக்கு...
“உரு” க் கொள்ளுங்கள்.
“உரு” ப் படுங்கள்.
--------------------------------------------------------------
'உரு` வாகுங்கள்
---------------------------------------------------------------

No comments:

Post a Comment

Moody's may raise credit rating, SL achieves significant step forward in EDR- IMF

  Moody's may raise Sri Lanka's credit rating Moody's may raise Sri Lanka's 'Ca' long-term foreign currency rating, ...