Saturday 24 June 2017

13 ஆவது திருத்தத்துக்குக் குறைந்த அதிகாரமே நமது கோரிக்கை-சம்பந்தன்

 

13ஆவது திருத்தத்தை நாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனை பலமுறை தெரியப்படுத்தியும் உள்ளோம். மங்கள முனசிங்க அறிக்கை, சந்திரிக்கா அம்மையாரின் தீர்வுப் பொதி, மகிந்த காலத்தில் அமைக்கப்பட்ட சர்வகட்சிக் குழு, இவற்றில் அதிகாரப்பகிர்வு தொடர்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இவற்றின் அடிப்படையிலான அதிகாரப் பகிர்வை நாம் ஏற்கத் தயாராக இருக்கின்றோம் என்று இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்புடன் சு.க. நேற்றிரவு முக்கிய பேச்சு

அரச தலைவர் மைத்திரிபால சிறி சேன தலைமையிலான சிறி லங்கா சுதந்திரக் கட்சிக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கும் இடையே நேற்றிரவு இரண்டரை மணி நேரம் நடை பெற்ற பேச்சு சுமுகமாக - இணக்க மாக முடிவடைந்துள்ளது. புதிய அரசமைப்பு உருவாக்க விடயத்தில் முன்னேற்ற கரமான நிலைப்பாடு எட்டப்பட்டுள்ளதுடன், இரு தரப்பும் பேச்சுக்களில் திருப்தி வெளியிட்டுள்ளன.

புதிய அரசமைப்பு உருவாக்க விவகாரத்தில் ஏற்பட்டுள்ள தேக்க நிலை - தடங்கலைச் சீர் செய்வதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்துவதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி கோரிக்கை விடுத்திருந்தது. இதற்கமைவாக நேற்றுப் பேச்சு நடைபெற்றது. அரச தலைவரின் இல்லத்தில் நேற்றிரவு 8 மணிக்கு ஆரம்பமான பேச்சுக்கள் இரவு 10.30 மணி வரை நீடித்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வழிநடத்தல் குழுவில் பங்குபெறும், கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். சிறிலங்கா சுதந்திரக் கட்சி சார்பில், அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, அமைச்சர்களான நிமல்சிறிபால டி சில்வா, சுசில் பிரேமஜயந்த, தயாசிறி ஜயசேகர, துமிந்த திசாநாயக்க, மகிந்த அமரவீர, லக்ஸ்மன் யாப்பா அபேவவர்த்தன, டிலான் பெரேரா, வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

பண்டா - செல்வா உடன்பாடு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கூட்டத்தின் ஆரம்பத்திலேயே சில விடயங்களைச் சுட்டிக்காட்டினார். பண்டா - செல்வா உடன்பாடே, தமிழர் பிரச்சினை குறித்து முதலாவதாகச் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கை என்பதை அவர் தெரிவித்துள்ளார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நிறுவுனரான பண்டாராநாயக்கா, தந்தை செல்வாவுடன் செய்து கொண்ட உடன்படிக்கையை நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் இன்று இவ்வளவு தூரம் நாட்டில் பிரச்சினை ஏற்பட்டிருக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

13ஆவது திருத்தத்தை நாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனை பலமுறை தெரியப்படுத்தியும் உள்ளோம். மங்கள முனசிங்க அறிக்கை, சந்திரிக்கா அம்மையாரின் தீர்வுப் பொதி, மகிந்த காலத்தில் அமைக்கப்பட்ட சர்வகட்சிக் குழு, இவற்றில் அதிகாரப் பகிர்வு தொடர்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இவற்றின் அடிப்படையிலான அதிகாரப் பகிர்வை நாம் ஏற்கத் தயாராக இருக்கின்றோம் என்று இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ஒற்றை ஆட்சி இல்லை

புதிய அரசமைப்பு ஒற்றை ஆட்சி என்ற சொல் நீக்கப்படக் கூடாது என்று வழிநடத்தல் குழுவில் வலியுறுத்தியிருந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சி நேற்றைய பேச்சுக்களின் போது தனது நிலைப்பாட்டில் தளர்வை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கூட்டாட்சி என்ற சொல் பதத்தை புதிய அரசமைப்பில் உள்ளடக்க வேண்டும் என்பதைக் கைவிடுவதால், ஒற்றை ஆட்சி என்ற சொல் உள்ளடக்கப்படுவதை கைவிடுவதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

ஆங்கிலத்தில், யுனைர்ரரி என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏக்கிய ராஜ்ஜிய என்பது ஒரு பிளவுபடாத - பிரிக்கமுடியாத நாட்டை மாத்திரமே குறிக்கும். அது ஆட்சிமுறையைக் குறிக்காது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இடைநடு நிலைப்பாடு தேர்தல் முறைமை கலப்பு முறையாக இருக்க வேண்டும் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்தியுள்ளது. தேர்தல் முறைமை தொடர்பில் கூட்டமைப்புக்கு ஆட்சேபனை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறைவேற்று அரச தலைவர் அதிகார முறைமை தொடர்பிலேயே நீண்ட நேரம் பேச்சு நடத்தப்பட்டுள்ளது. அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன,
 
“நிறைவேற்று அதிகார அரச தலைவர் முறையை நீக்குவதாக மக்களுக்கு நான் வாக்குறுதி கொடுத்துள்ளேன். எனது நிலைப்பாடும் அதுதான். ஆனால் கட்சி, இதற்கு எதிர்மாறான நிலைப்பாட்டில் உள்ளது. நிறைவேற்று அரச தலைவர் முறையை நான் நீக்க முடியாது. மக்களும், நாடாளுமன்றமுமே அதனைச் செய்ய முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அரச தலைவர் முறைமை என்ற ‘லேபிள்’ தேவையா? என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேட்டுள்ளார். அதற்கு சுதந்திரக் கட்சியினர் அப்படித் தேவையில்லை. அரச தலைவரிடம் சில அதிகாரங்கள் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இறுதியில், நிறைவேற்று அரச தலைவர் முறைமையை முற்றாக நீக்குவது என்றும் இல்லாமல், தொடர்ந்து அதனை அதே வடிவத்தில் வைத்திருப்பது என்றும் இல்லாமல், இரண்டுக்கும் இடைப்பட்ட - நடு நிலைப்பாட்டை எடுப்பதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி இணங்கியுள்ளது.

யு.என்.பி, ஜே.வி.பி பேச்சு

புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான இடைக்கால அறிக்கையில், நிறைவேற்று அதிகார அரச தலைவர் முறைமை தொடர்பில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு உள்ளடகப்பட வேண்டும் என்று அந்தக் கட்சி தெரிவித்துள்ளது. அதற்கு கூட்டமைப்பு இணக்கம் தெரிவித்துள்ளது.

இதற்கு அமைவாக, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைவில் பேச்சு நடத்தவுள்ளது. பெரும்பாலும் வழிநடத்தல் குழுவின் அடுத்த அமர்வுடன், இடைக்கால அறிக்கை நாடாளுமன்றில் சமர்பிக்கப்படும் என்று தெரிய வருகின்றது.

நன்றி:உதயன் 24-06-2017

No comments:

Post a Comment

உல்லாச புரியாகும் மைய மலையகமும், Spain இல் உல்லாசத் துறை எதிர்ப்பும்.

Thousands protest in Spain's Canary Islands over mass tourism By  Borja Suarez    April 21, 2024   SANTA CRUZ DE TENERIFE, Spain, April ...