SHARE

Tuesday, February 23, 2016

கரிஸ்ணவியின் படுகொலைக்கு நீதி கேட்டு வடக்கு முழுவதும் ஹர்த்தால்!

வவுனியாவில் படுகொலை செய்யப்பட்ட மாணவி ஹரிஸ்ணவி

விவசாய வர்த்தக சங்கங்களின் ஆதரவில் கரிஸ்ணவியின் படுகொலைக்கு நீதி கேட்டு வடக்கு முழுவதும் ஹர்த்தால்! 

கடந்த 16 ஆம் திகதி வவுனியாவில் படுகொலை செய்யப்பட்ட மாணவி ஹரிஸ்ணவிக்கு நீதி வேண்டியும், குற்றவாளிகளை கைது செய்யக் கோரியும் நாளைய தினம் (24-02-2016)  யாழ். திருநெல்வேலி பொதுச்சந்தை வியாபார நடவடிக்கை அனைத்தும் முற்றாக நிறுத்தி ஹர்த்தால் அனுஸ்டிக்கிறோம். எனக்கோரி துண்டுப்பிரசுரங்கள் இன்று திருநெல்வேலி சந்தையில் ஒட்டப்பட்டுள்ளது.



குறித்த மாணவியின் படுகொலையை கண்டித்து நாளைய தினம் ஹர்த்தாலுக்கு வியாபாரிகள் சங்கமும் தமது ஒத்துழைப்பை வழங்கியுள்ள நிலையில் நாளைய தினம் வடமாகாணம் முழுவதுமான முழுநேர
ஹர்த்தாலுக்கு அனைத்து தரப்பினரையும் ஒத்துழைப்பு வழங்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம், மற்றும் பொதுஅமைப்புக்கள் என்பன கோரிக்கை விடுத்துள்ளன.

பகிஸ்கரிப்பில் ஈடுபடுமாறு பாடசாலைகளுக்கு அழைப்பு!
வவுனியா உக்குளாங்குளத்தில் 14 வயது மாணவியொருவர் வன்புணர்வுக்குட்படுத்தி கொலை செய்யப்பட்டமையைக் கண்டித்து, வடமாகாண அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் நாளை இரண்டு மணிநேரம் பகிஸ்கரிப்பில் ஈடுபடுமாறு இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பில் அந்தச் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

'எமது பிரதேசங்களில் நடைபெறும் வன்முறைகளுக்கும், கொடுமைகளுக்கும், அரக்கத்தனங்களுக்கும் இதுவரை எந்த நீதியும் கிடைத்ததில்லை. அஹிம்சை வழியில் நாம் செய்கின்ற எந்த எதிர்ப்பு நடவடிக்கைகளும் இதுவரை பயன் தந்ததில்லை. 

காலங்காலமாக நாம் அனுபவித்து வருகின்ற துன்பங்களும் துயரங்களும் சொல்லில் அடங்காதவை. இதற்காக நாம் எத்தனை வடிவமான போராட்டங்களை முன்னெடுத்தோம். அவற்றுக்கெல்லாம் இன்றுவரை
நீதியான எந்தத் தீர்வுகளும் கிடைக்கவில்லை.

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலையைக் கண்டித்தும், நீதி வழங்குமாறு கோரியும் பிரமாண்டமான ஒன்றுகூடலை இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் முன்னெடுத்தது. பல ஆயிரக்கணக்கானவர்கள்
அதில் பங்கேற்றனர்.

வடபுலம் முழுவதும் ஸ்தம்பித்து நீதி கேட்டு ஆர்ப்பரித்தனர். ஆனால், இன்றுவரை அதற்கான நீதி கிடைக்கவில்லை. மாணவர்கள் மீதான வன்புணர்வு கொலைகள் நடந்தவண்ணம் உள்ளன.

சட்டத்தையும், சமூகத்தையும் ஏமாற்றி தாம் நினைத்ததைச் செய்யும் துஷ்டர்கள் இந்த நாட்டில் உள்ள வரை எமக்கு நீதி கிடைக்கப்போவதில்லை. ஆனாலும், அஹிம்சை வழியை நாம் கைவிடக்கூடாது. 

 நாளை நடைபெறவுள்ள ஹர்த்தாலுக்கு எமது சங்கம் முழு ஆதரவை வழங்குவதோடு அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விசார் ஆளணியினர், மாணவர்கள் பாடசாலை வளாகத்தில் காலை இரண்டு மணிநேரம் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தவும்.

என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
=============

No comments:

Post a Comment

இந்தியாவின் பாதுகாப்புக்கு பாதகமான செயல்பாட்டுக்கு இலங்கைக்குள் இடமளியோம்.

இந்தியாவின் பாதுகாப்புக்கு பாதகமான செயல்பாட்டுக்கு இலங்கைக்குள் இடமளியோம். ஏப்ரல் 5, 2025 ஜனாதிபதி ஊடகப் பிரிவு அதிமேதகு பிரதமர் ஸ்ரீ நரேந்த...