SHARE

Wednesday, March 16, 2016

வெற்றிச் செல்வி: போராளியின் காதலி


நாவல் குறித்து DJThamilan  குறிப்பு:

இறுதி ஆயுதப்போராட்டம் வன்னிக்குள் உக்கிரமாகின்ற காலத்தில் (முதல் ஈழப்போரின் இறுதி நாட்களில் ENB), வைத்தியசாலையில் வேலை செய்கின்றவர்களின் மிகவும் துயராந்த வாழ்வு முறையும், காயப்பட்டும், இனித் தப்பவேமுடியாதென குற்றுயிராய் வருகின்ற உடல்களோடும் போராடுகின்ற -நாம் நம் கற்பனைகளில் வரைந்து பார்க்கவே முடியாத- பல இடங்கள் இந்நாவலில் வருகின்றன. 2009ல் யுத்தம் முடிந்து தடுப்பு முகாமில் இருந்தபோது எழுதப்பட்ட நாவல் இதென நினைக்கின்றேன். எனவே அதற்குரிய பலவீனங்கள் பல இருந்தாலும், நாம் கடந்து செல்ல முடியாத ஒரு புதினமாகவே கொள்கின்றேன்.

முக்கியமான வைத்தியசாலைகளில் கொண்டுவரப்படும் காயப் பட்டவர்களைப் பற்றிய சித்தரிப்புக்களை அவ்வளவு எளிதில் எவராலும் கடந்துவரமுடியாது.

வாசித்துக்கொண்டிருந்த ஒருகட்டத்தில் உடல் முழுதும் வியர்த்து, வயிறெல்லாம் பிரட்டுகின்ற நிலைமையில், இந்நூலை வாசிக்காது இரண்டு நாட்களுக்கு தவிர்த்துமிருந்தேன். பிறகு தொடர்ந்த வாசிப்பிலும் இவ்வாறான சம்பவங்கள் எழுதப்பட்ட இடங்களை மேலோட்டமாய் வாசித்து தாண்டிச் சென்றிருக்கின்றேன். 
அந்தளவிற்கு கோராமான, எழுத்தில் வைக்கப்பட்டபோதுகூட மிக உக்கிரமான பகுதிகள் அவை.

இந்நாவலின் ஆசிரியரான வெற்றிச்செல்வி, 90களில் புலிகளோடு இணைந்து அவரது 19வது வயதில் வெடிவிபத்தொன்றில் வலது கையையும், கண்களில் ஒன்றையும் இழந்தவர். முள்ளிவாய்க்காலில் முடிவுற்ற ஆயுதப் போராட்டத்தின் இறுதிநாட்கள் வரை இருந்து, ஒன்றரை வருடத்திற்கு மேலாய் இலங்கையரசின் 'புனர்வாழ்வு' மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர். இன்று தனது சொந்த ஊரான மன்னாரில்(?) (மன்னார் நகரின் அடம்பன் கிராமத்தில் ENB) வசித்துக்கொண்டு மாற்றுத் திறனாளிகளோடு இணைந்து பணியாற்றுவதும், எழுதுவதுமாய் இருப்பதாய் அவரைப் பற்றிய குறிப்புகள் கூறுகின்றன.

இன்று ஈழத்திலும் புலம்பெயர்ந்தும் எழுதப்பட்ட புதினங்களின் பெரும்பாலானவற்றை வாசித்தவன் என்ற அடிப்படையில் ஒன்றையே மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்ட விழைகின்றேன்.
இவ்வளவு மிகக்கொடுரமான காலத்தின் நேரடியாகவோ/நேரடியற்றோ சாட்சியங்களாக இருக்கும் நாம் எந்தவகையான அரசியலைப் பேசுவதாயினும் மிகநிதானமாவும், மிகுந்த பொறுப்புணர்வுடன் நம் ஒவ்வொரு வார்த்தைகளையும் பேசவேண்டும் என்பதையே.
 (ஆடி 27, 2015)

http://djthamilan.blogspot.co.uk/2015/09/blog-post.html

No comments:

Post a Comment

How Nato is preparing for war in the Arctic

How Nato is preparing for war in the Arctic  Nordic nations hope US fixation on Greenland will spur alliance to catch up with years of Russi...