அரசியல் பிரச்சாரத்தின் ஆதாரக் கோட்பாடு

========================================================================================================

அரசியல் பிரச்சாரத்தின் ஆதாரக் கோட்பாடு.

'' நீதி, மதம், அரசியல், சமுதாயம் சம்பந்தமான எல்லாவித சொல்லடுக்குகளுக்கும் பிரகடனங்களுக்கும் வாக்குறுதிகளுக்கும் பின்னே ஏதாவதொரு வர்க்கத்தின் நலன்கள் ஒழிந்து நிற்பதைக் கண்டுகொள்ள மக்கள் தெரிந்துகொள்ளாத வரையில் அரசியலில் அவர்கள் முட்டாள்தனமான ஏமாளிகளாகவும் தம்மைத் தாமே ஏமாற்றிக்கொள்வோராகவும் இருந்தனர், எப்போதும் இருப்பார்கள். பழைய ஏற்பாடு ஒவ்வொன்றும் எவ்வளவுதான் காட்டு மிராண்டித் தனமாகவும் அழுகிப் போனதாகவும் தோன்றிய போதிலும் ஏதாவது ஒரு ஆளும்வர்க்கத்தின் சக்தியைக் கொண்டு அது நிலைநிறுத்தப்பட்டு வருகிறது. சீர்திருத்தங்கள், அபிவிருத்திகள் ஆகியவற்றின் ஆதரவாளர்கள் இதை உணராத வரையில் பழைய அமைப்பு முறையின் பாதுகாவலர்கள் அவர்களை என்றென்றும் முட்டாளாக்கிக் கொண்டே இருப்பார்கள். இந்த வர்க்கங்களின் எதிர்ப்பைத் தகர்த்து ஒழிப்பதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. அது என்ன?

பழைமையைத் துடைத்தெறியவும் புதுமையைச் சிருக்ஷ்டிக்கவும் திறன் பெற்றவையும், சமுதாயத்தில் தாங்கள் வகிக்கும் ஸ்தானத்தின் காரணமாக அப்படிச் சிருக்ஷ்டித்துக் தீரவேண்டிய நிர்ப்பந்தத்திலிருக்கிறவையுமான சக்திகளை, நம்மைச் சூழ்ந்துள்ள இதே சமுதாயத்துக்குள்ளேயே நாம் கண்டுபிடித்து, அந்தச் சக்திகளுக்கு ஞானமூட்டிப் போராட்டத்துக்கு ஸ்தாபன ரீதியாகத் திரட்ட வேண்டும். இது ஒன்றேதான் வழி. ''

மாமேதை தோழர் லெனின்
===========================================================================================================================

Sunday, 31 December 2017

வாராக் கடன்களை வசூலிக்காமல் மக்களின் டெபாசிட் தொகையை குறிவைக்கும் புதிய சட்டம்

 தே.தாமஸ் பிராங்கோ ராஜேந்திர தேவ்
வங்கிகளின் வாராக் கடன்களை வசூலிக்காமல் மக்களின் டெபாசிட் தொகையை குறிவைக்கும் புதிய சட்டம்: 

தொழிற்சங்கத் தலைவர் தாமஸ் பிராங்கோ குற்றச்சாட்டு

நாடாளுமன்றத்தில் மத்திய அரசால் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2017-ம் ஆண்டின் நிதித் தீர்வு மற்றும் வைப்புத் தொகைக்கான காப்பீட்டுச் சட்ட மசோதா பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய பொதுத்துறை வங்கிகளை நாசமாக்கும் ஆபத்து மிக்க இந்த மசோதா கைவிடப் பட வேண்டும் என்று வலியுறுத்தி நாடு முழுவதும் தற்போது தீவிர பிரச்சாரம் நடைபெறுகிறது. இவ்வாறு இந்த மசோதாவுக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டிருப்பவர்களில் ஒருவர் அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரான தே.தாமஸ் பிராங்கோ ராஜேந்திர தேவ். இந்த மசோதா தொடர்பாக ஆராய அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற கூட்டுக் குழு முன்னிலையிலும் ஆஜராகி, மசோதா கைவிடப்பட வேண்டும் என்று வாதாடியிருக்கிறார் பிராங்கோ.

புதிய மசோதா பற்றி ‘தி இந்து’ சார்பில் அவருடன் நடத்திய உரையாடலில் இருந்து..

வி.தேவதாசன்


நிதித் தீர்வு மற்றும் வைப்புத் தொகைக்கான காப்பீட்டுச் சட்ட மசோதாவில் அப்படி என்ன ஆபத்து இருக்கிறது?

இந்திய பொதுத்துறை நிதி நிறுவனங்களைக் காக்க இதுவரை பெயில்-அவுட் என்ற கொள்கை பின்பற்றப்பட்டு வந்தது. இந்தக் கொள்கையின்படி எந்த பொதுத்துறை வங்கியும் திவாலாக, நமது அரசு அனுமதிக்காது. ஒரு வங்கி நலிவடைய நேர்ந்தால், அரசே நிதியுதவி செய்து வங்கியைக் காப்பாற்றும்; இல்லாவிட்டால், வேறொரு வங்கியுடன் இணைக்கப்படும். பாங்க் ஆப் தஞ்சாவூர், பாங்க் ஆப் தமிழ்நாடு, பாங்க் ஆப் கொச்சின் என இதுபோன்ற பல வங்கிகள் பிற பெரிய வங்கிகளுடன் இணைக்கப்பட்டடுள்ளன. இதனால் அந்த வங்கியின் வாடிக்கையாளர்களுக்கோ, வங்கியில் டெபாசிட் செய்தவர்களுக்கோ எந்த பாதிப்பும் ஏற்பட்டதில்லை. அவர்களுக் கான வங்கி சேவை தொடர்ந்து கிடைத்தது.

தற்போதைய புதிய மசோதாவின்படி பெயில்-இன் முறை அமலுக்கு வரும். இனிமேல் நலிவடையும் நிலையில் உள்ள வங்கிகளுக்கு அரசு நிதியுதவி செய்யாது; அந்த வங்கி மேலும் நலிவடைந்து திவாலாக அனுமதிக்கப்படலாம். அந்த நிலையில், அந்த வங்கியை எவ்வாறு நிர்வகிப்பது என்பது பற்றி புதிதாக அமைக்கப்படவுள்ள தீர்வுக் கழகம் முடிவு செய்யும். தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ வேறு அமைப்புகளிடம் அந்த வங்கியின் நிர்வாகம் ஒப்படைக்கப்படும். பெரும்பாலும் தனியார் கைகளுக்குதான் அரசு வங்கி செல்லும். இந்த சூழலில் வங்கியில் டெபாசிட் செய்தவர்களுக்கு முழு தொகையும் கிடைக்காது. ஒரு பகுதி மட்டுமே கிடைக்கும். டெபாசிட் தொகையில் எத்தனை சதவீதம் திருப்பித் தரலாம் என்பதை தீர்வுக் கழகம்தான் தீர்மானிக்கும்.

டெபாசிட்டின் பெரும்பகுதி வங்கியின் முதலீடாக மாற்றப்பட்டு, அதற்கு ஈடான பங்குகள் டெபாசிட்தாரர்களுக்கு வழங்கப்படலாம். ஆக, திவாலாகும் நிலைக்குச் செல்லும் வங்கிகளுக்கு அரசு நிதியுதவி வழங்குவதற்கு பதிலாக, வாடிக்கையாளர்களின் டெபாசிட் தொகை பயன்படுத்தப்படும். இதனால் இந்திய மக்களின் சேமிப்புத் தொகை அபகரிக்கப்படுவதோடு, வங்கிகள் மீதான மக்களின் நம்பிக்கையும் அடியோடு அறுத்தெறியப்படும்.


இந்த மசோதா தொடர்பாக மக்களிடம் வேண்டுமென்றே சிலர் பீதி கிளப்புவதாக நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறுகிறாரே?

எங்கள் வாதம் கற்பனையானது அல்ல; வரைவு மசோதாவில் உள்ள ஷரத்துகளின் அடிப்படையிலேயே பேசுகிறோம். பெயில்-இன் முறை; வங்கிகள் திவாலாக அனுமதிக்கலாம்; வாடிக்கையாளர்களின் டெபாசிட் தொகையைக் கொண்டு வங்கியை நிர்வகிக்கலாம்; டெபாசிட் தொகை வாடிக்கையாளர்களுக்கு முழுமையாகக் கிடைக்காது என்பது உள்ளிட்ட பாதிப்புகள் மசோதாவின் ஷரத்துகளில் மிகத் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளன.

எந்தெந்த ஷரத்துகளில் என்ன கூறப்பட்டுள்ளது என்பதையும், அதில் உள்ள ஆபத்துகளையும்தான் கூறுகிறோம். அதேபோல, குறிப்பிட்ட அந்த ஷரத்தில் அப்படி ஆபத்தான எந்த அம்சமும் இல்லை என்று நிதியமைச்சரும், மற்றவர்களும் விளக்க வேண்டும். ஆனால், ஆபத்து இல்லை என்று பொதுவாக மறுக்கிறார்களே தவிர, குறிப்பிட்ட ஆபத்தான ஷரத்துகள் பற்றி விளக்கம் தர அவர்கள் தயாராக இல்லை.

அச்சமூட்டும் ஷரத்துகள் பற்றி கூற முடியுமா?

பெயில்-இன் முறை பற்றி மசோதாவின் 32-வது ஷரத்திலும், 4-வது அட்டவணையில் உள்ள 48-வது ஷரத்திலும் விவரிக்கப்பட்டுள்ளது. நலிவடையும் வங்கிகளுக்கு நிதியுதவி அளித்து பாதுகாக்கத் தேவையில்லை என்றும், அத்தகைய வங்கிகளை திவாலாக விட்டுவிடலாம் என்பது பற்றியும் 13-வது ஷரத்தில் கூறப்பட்டுள்ளது. தீர்வுக் கழகத்தின் வானளாவிய அதிகாரம் பற்றியும், தீர்வுக் கழகத்தின் முடிவை எதிர்த்து எந்த நீதிமன்றத்திலும் மேல்முறையீடுகூட செய்ய முடியாது என்பது பற்றியும் 65-வது ஷரத்தில் கூறப்பட்டுள்ளது. இத்தகைய ஷரத்துகளில் கூறப்பட்டிருக்கும் அம்சங்கள் மற்றும் அவற்றின் ஆபத்துகள் பற்றித்தான் எங்களது அச்சத்தை, கவலையை வெளிப்படுத்துகிறோமே தவிர, கற்பனையாக நாங்கள் எதையும் கூறவில்லை.

ஒருவர் எவ்வளவு டெபாசிட் செய்தாலும், வங்கி திவாலானால் அவருக்கு ரூ.1 லட்சம் மட்டுமே திரும்பக் கிடைக்கும் என்றுதான் ஏற்கெனவே இருக்கும் சட்டத்திலேயே உள்ளது. அப்படியிருக்க, தற்போதைய மசோதாவால் என்ன ஆபத்து வரப்போகிறது?

ஏற்கெனவே உள்ள சட்டத்தின்படி அதிகபட்சம் ரூ.1 லட்சம் மட்டுமே கிடைக்கும் என்பது உண்மைதான். 1961-ம் ஆண்டில் வைப்புத் தொகை காப்பீடு மற்றும் கடன் உத்தரவாதக் கழகச் சட்டம் கொண்டுவந்தபோது, வங்கி திவாலானால் அதிகபட்சம் ரூ.5 ஆயிரம் மட்டுமே கிடைக்கும் என்ற நிலை இருந்தது. பின்னர் இந்த காப்பீட்டுத் தொகை படிப்படியாக உயர்த்தப்பட்டு தற்போது ரூ.1 லட்சம் என்ற அளவை எட்டியுள்ளது.

ஆனால், அந்த சட்டம் கொண்டு வரப்பட்ட 1961-ம் ஆண்டுமுதல், சில கூட்டுறவு வங்கிகள் தவிர, எந்த வங்கியையும் நமது அரசு திவாலாக விட்டதில்லை. மக்கள் தங்கள் டெபாசிட் தொகையை இழக்க நேரிட்டது இல்லை என்பதே உண்மை. டெபாசிட்தாரர்கள் இழப்பீடு கோராத காரணத்தால், வைப்புத் தொகை காப்பீடு மற்றும் கடன் உத்தரவாதக் கழகத்தில் செலுத்தப்படும் பிரீமியம் தொகை வளர்ச்சியடைந்து அந்தக் காப்பீட்டுக் கழகம் தற்போது பெரும் லாபத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதும் உண்மை.

மக்களின் டெபாசிட் தொகைக்கு இதுவரை ஆபத்து வராதபோது, இனிமேல் எப்படி வரும்?

ஏற்கெனவே கூறியபடி, இதுநாள் வரை பெயில்-அவுட் முறை பின்பற்றப்பட்டது. எவ்வளவு பெரிய நெருக்கடிகள் ஏற்பட்டாலும் எந்த வங்கியையும் திவாலாக விடாமல் பாதுகாக்க வேண்டும் என்பது அரசின் கொள்கை யாக இருந்தது. அதனால் வங்கிகளும் திவாலாகவில்லை; மக்களின் சேமிப்புக்கும் ஆபத்து வரவில்லை.

ஆனால் இப்போதைய மசோதா சட்டமானால், பெயில்-இன் முறை நடைமுறைக்கு வரும். இதன்படி, மிக லாபகரமாக இயங்கி வரக்கூடிய பாரத ஸ்டேட் வங்கி உட்பட எந்த பொதுத்துறை வங்கியையும் திவாலாக விடலாம்; அதில் அரசு தலையிடத் தேவையில்லை என அரசின் கொள்கையும், நிலைப்பாடும் மாறுகிறது. இதனால் ஏராளமான பொதுத்துறை வங்கிகள் நலிவடையும் நிலைக்கு கொண்டு செல்லப்பட்டு, தனியார் கைகளுக்கு மாற்றப்படும். பொதுமக்களின் சேமிப்பு அபகரிக்கப்படும்.

கொடுத்த கடனைத் திருப்பி வசூலிக்காத வங்கிகள் மற்றும் அதனால் பல்லாயிரம் கோடியாகப் பெருகும் வாராக் கடன். இதை தடுத்து, வங்கி நிர்வாகத்தை செம்மைப்படுத்தவே இந்த சீர்திருத்த நடவடிக்கைகள் என்று கூறப்படுகிறதே?

வங்கி செயல்பாடுகள் பற்றியும், வாராக் கடன்கள் பற்றியும் ஒரு மாயத் தோற்றம் பலரது மனதில் உருவாக்கப்பட்டிருக்கிறது. வங்கி நிர்வாகம் என்றவுடனேயே மயிலாப்பூரிலோ, மணப்பாறையிலோ நாம் பார்க்கும் வங்கிக் கிளையும், அங்குள்ள மேலாளர்களும், கிளர்க்குகளும்தான் மக்களின் மனத்திரையில் தோன்றுகின்றனர். அவர்கள்தான் வங்கிப் பணத்தை கோடிக்கணக்கில் கடன் கொடுத்து, திரும்ப வசூலிக்காமல் வங்கிகளை நஷ்டப்படுத்துவது போன்ற தோற்றம் உருவாக்கப்படுகிறது. நாம் பார்க்கும் இதுபோன்ற வங்கிகளுக்கு லட்சக்கணக்கிலோ அல்லது சில கோடிகள் வரை மட்டுமே கடன் கொடுக்கும் அதிகாரம் உள்ளது. அவ்வாறு ஏழைகளுக்கும், நடுத்தர மக்களுக்கும் இவர்கள் கொடுக்கும் கடனில் 95 சதவீதத்துக்கும் மேல் திரும்ப வசூலித்து விடுகின்றனர்.

சாதாரண கிளைகளில் ஏழைகளுக்கு, விவசாயிகளுக்கு, சிறுதொழில்புரிவோருக்கு, நடுத்தர வர்க்கத்தினருக்கு தொழில்புரியவும், வீடு கட்டவும், வாகனங்கள் வாங்கவும் கொடுக்கப்படும் கடன் தொகை திரும்ப வந்துவிடுகிறது. வங்கிகளின் இயக்குநர்கள், நிதியமைச்சக உயர் அதிகாரிகள் மட்டத்தில் முடிவு செய்யப்பட்டு, அவர்களது பரிந்துரையின்பேரில் பணக்கார தனியார் தொழில் நிறுவனங்களுக்கு கொடுக்கும் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன்தான் திரும்ப வசூலிக்கப்படுவது இல்லை. அதனால்தான் வங்கிகளின் வாராக்கடன் இந்த அளவுக்கு பெருகியுள்ளது.

ரிசர்வ் வங்கியே வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, மொத்த வாராக் கடனில் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொடுத்த கடன் தொகை மட்டும் 88.4 சதவீதம். மற்ற அனைத்து தரப்புகளிடம் இருந்து வெறும் 11.6 சதவீதம் மட்டுமே வரவேண்டியுள்ளது. ஆக, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொடுத்த பல்லாயிரம் கோடி ரூபாய் கடனை திருப்பி வசூலிக்க உறுதியான நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, வாராக்கடன் பிரச்சினைக்கு தீர்வு காணவே புதிய மசோதா என்பது வெறும் கண்துடைப்பான வாதம்.

அப்படியானால், மத்திய அரசு இத்தகைய முடிவுக்கு வர என்ன காரணம்?

2008-ம் ஆண்டு அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின்போது அந்த நாட்டில் 452 வங்கிகள் திவாலாகின. அந்த வங்கிகளைக் காப்பாற்ற அமெரிக்க அரசால் முடியவில்லை. அதன் பிறகு, நலிவடையும் வங்கிகள் விவகாரத்தில் அரசு தலையிடுவதில்லை என்றும், அந்தந்த வங்கிகளே அதனைப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அமெரிக்கா முடிவெடுத்தது. இவ்வாறு நலிவடையும் வங்கிகளை தனியார் கைகளுக்கு மாற்றுவதற்காக ஒரு வாரியமும் உருவாக்கப்பட்டது. அமெரிக்கா மட்டுமின்றி ஜி-7 நாடுகள் அனைத்தும் இந்த வாரியத்தில் உறுப்பினராகி, தங்கள் நாடுகளில் இந்த கொள்கைகளை அமல்படுத்தத் தொடங்கின.

வங்கிகள் அனைத்தையும் தனியார்மயமாக்க வேண்டும் என்ற கொள்கைகளைக் கொண்ட உலக வங்கி, சர்வதேச நிதியம் போன்ற அமைப்புகளும் பின்னர் இந்த வாரியத்தில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டன. அதன் பிறகு இந்தியா உள்ளிட்ட ஜி-20 நாடுகளும் உறுப்பினர்கள் ஆனார்கள். அந்தக் கொள்கையின் அடிப்படையிலேயே இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளையும் தனியார் வசம் மாற்றும் நோக்கில் தற்போது இந்த புதிய மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

‘பிரதமர் மோடி எந்த சீர்திருத்த நடவடிக்கை எடுத்தாலும், அதை எதிர்க்க வேண்டும் என்ற நோக்கில் இங்கு பிரச்சாரம் நடக்கிறது. அந்த பிரச்சாரங்களை மக்கள் ஏற்காததாலேயே, அடுத்தடுத்த தேர்தல்களில் பாஜக தொடர்ந்து வெற்றிகளைக் குவிக்கிறது’ என்று கூறப்படுவது பற்றி..

தேர்தல்களில் பெறும் வெற்றிகளால் மட்டுமே, பணமதிப்பு நீக்கம் போன்ற தவறான பொருளாதார நடவடிக்கைகளுக்கு மக்கள் நற்சான்று வழங்கிவிட்டதாகக் கூற முடியாது. இதுபோன்ற நடவடிக்கைகளின் பாதிப்புகள் மக்களுக்கு முழுமையாக தெரியவர இன்னும் அவகாசம் தேவைப்படலாம். பணமதிப்பு நீக்கம் போன்ற நடவடிக்கைகளைவிட, தற்போதைய நிதித் தீர்வு மற்றும் வைப்புத் தொகை காப்பீட்டுச் சட்ட மசோதா மக்களிடம் உடனடி தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது.

வங்கிகளில் சேமிப்பு வைத்திருப்பவர்களில் மிகப் பெரும்பாலானோர் நடுத்தர வர்க்கத்தினர். தாங்கள் வாழ்நாள் முழுவதும் உழைத்து சேமித்த தொகைக்கு ஆபத்து என்றால் அதை நடுத்தர வர்க்கத்தினர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எஸ்பிஐ உட்பட பல வங்கிகளில் உள்ள தங்கள் டெபாசிட் தொகையை மக்கள் இப்போதே வேகமாக எடுக்கத் தொடங்கியுள்ளனர். ஆகவே, பிற பொருளாதார நடவடிக்கைகள் போல, இந்த மசோதாவை அவ்வளவு எளிதில் நிறைவேற்றி, நடைமுறைப்படுத்தி விட முடியாது. மக்களிடம் எழும் பெரும் எதிர்ப்பின் காரணமாக இந்த மசோதா நிச்சயம் கைவிடப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.

புதிய மசோதாவால் என்ன ஆபத்து?

வெளிப்படைத்தன்மை இல்லாத, உள்நோக்கம் கொண்ட மசோதா இது. தற்போது உள்ள சட்டத்தின்படி வங்கிகளை திவாலாக விடுவதும், அத்தகைய நிலை ஏற்பட்டால் தனியார்வசம் அந்த வங்கியை ஒப்படைப்பது என்பதும் எளிதானது அல்ல. தனியாருக்கு கொடுக்க வேண்டுமானால் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டு, ஒப்புதல் பெற வேண்டும்.

ஆனால், தற்போதைய மசோதாவின்படி அமைக்கப்படவுள்ள தீர்வுக் கழகம், நலிவடையும் வங்கியை தனியாரிடமோ, மற்றவர்களிடமோ ஒப்படைத்துவிட்டு, அந்த தகவலை மட்டும் நாடாளுமன்றத்துக்கு தெரிவித்தால் போதும். மேலும், வங்கிகளை திவாலாக அனுமதிக்கலாம் என்று கூறுவதன் மூலம், லாபத்தில் இயங்கும் வங்கிகளின் பணத்தை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பெருமளவில் கடனாகக் கொடுத்துவிட்டு, அதை முறையாக வசூலிக்காமல், வாராக் கடன் அளவைப் பெருக்கி, வங்கியை நஷ்டப்படுத்தி, இறுதியாக தனியார் கார்ப ்பரேட் வசம், வங்கி நிர்வாகத்தை ஒப்படைத்துவிட வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது என்பதுதான் எங்கள் பிரதான குற்றச்சாட்டு.

No comments:

Post a Comment