Thursday 5 November 2009

150 வருடகாலம் பழமைவாய்ந்த முத்துமாரியம்மன் ஆலயம் நுவரெலியாவில் தகர்ப்பு.

150 வருடகாலம் பழமைவாய்ந்த முத்துமாரியம்மன் ஆலயம் நுவரெலியாவில் தகர்ப்பு.
இந்துக் கோவிலை அப்புறப்படுத்தியது ஏன்? : ம.மா. சபை உறுப்பினர் கேள்வி
வீரகேசரி இணையம் 11/4/2009 10:25:52 AM -
நுவரெலியா மாநகரசபை எல்லைக்குட்பட்ட கண்டி - நுவரெலியா வீதியில் டெல்வெஸ்ட் பாலத்திற்கு அருகில் அமைந்திருந்த முத்துமாரியம்மன் ஆலயத்தை யாருடைய உத்தரவுக்கமைய நுவரெலியா மாநகரசபை உடைத்து அப்புறப்படுத்தியது என்று மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் மத்திய மாகாண சபை அமர்வின்போது கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று 3 ஆம் திகதி மத்திய மாகாணசபை அமர்வு சபைத் தலைவர் சாலிய திசாநாயக்க தலைமையில் நடைபெற்றபோதே இந்தக் கேள்வியை அவர் எழுப்பினார்.

"டெல்வெஸ்ட் முத்துமாரியம்மன் ஆலயம் 150 வருட கால பழைமைவாய்ந்தது. அவ்வாலயத்தை பம்பரகல P.W.D. தொழிலாளர் குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் நிர்வகித்து வருகின்றனர்.

இப்பிரதேசத்தில் உள்ள மூன்று ஆலயங்கள் இம்முத்துமாரியம்மன் ஆலயத்திலிருந்து தீர்த்தம் எடுத்து சென்றே திருவிழாவை நடத்தி வருகின்றன.

கடந்த செப்டம்பர் 17 ஆம் திகதி இனந்தெரியாதவர்களால் இவ்வாலயத்தின் கூரைகள் சேதப்படுத்தப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டிருந்தன. இதைத் தொடர்ந்து பிரதேச மக்கள் ஒன்றிணைந்து மீண்டும் கூரைகளைச் சரி செய்திருந்தனர். ஆனால் அதற்குப் பின்னர் நுவரெலியா மாநகர சபை ஆணையாளர் விடுத்த உத்தரவின்பேரில் இவ்வாலயம் உடைத்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள், குறிப்பாக இந்து மக்கள் பெருமளவில் வாழ்ந்துவரும் இப்பிரதேசத்தில் கடந்த 150 வருட காலமாக வழிபட்டு வந்த ஆலயத்தை அப்புறப்படுத்த வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது? இனவாதத்தால் சீரழிந்து போயிருக்கின்ற நிலைமை போதாதென்று மதவாத பிரச்சினைகளை உருவாக்குவதற்கு சிலர் முயற்சிக்கின்றனரா என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.

மத்திய மாகாண சபையின் இந்து கலாசாரத்திற்குப் பொறுப்பான அமைச்சர் வாழும் பிரதேசத்திலேயே இந்துக் கோவிலொன்று உடைத்து அப்புறப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த விடயம் பிரதேச இந்து மக்கள் மத்தியில் வேதனையையும்,விசனத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

மத்திய மாகாணசபை இந்தக் கோவில் உடைக்கப்பட்டது தொடர்பாக உரிய விசாரணைகளை நடத்தவேண்டும். மீண்டும் இக்கோவிலை நிர்மாணித்து இயங்கச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்" எனவும் மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் வேண்டுகோள் விடுத்தார்.

அதேவேளை இவ்விடயம் தொடர்பாக நேற்று நடைபெற்ற நுவரேலிய மாநகரசபை கூட்டத்தில் மாநகரசபை உறுப்பினர் எஸ். விஜயகுமார் பேசும்போது, "டெல்வெஸ்ட் முத்துமாரியம்மன் ஆலயம் உடைக்கப்பட்டது கண்டனத்துக்குரியது. உடனடியாக ஆலயத்தை நிர்மாணித்து மக்கள் வழிபட வழிசெய்ய வேண்டும்.

ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்ற பல்வேறு மதப்பிரிவினரிடையே பிளவுகளை ஏற்படுத்த மாநகர சபையின் உயர் அதிகாரிகள் முயலக்கூடாது. அத்துடன் இவ்விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படாவிட்டால் மாநகரசபைக்கு எதிராக இப்பிரதேச மக்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கமுடியாது" எனத் தெரிவித்தார்.
குறிப்பு : அழுத்தம் நமது

No comments:

Post a Comment

2024 மே நாளில் சூளுரைப்போம்!

  2024 மே நாள் வாழ்க! உலக உழைக்கும் மக்கள், மாதர், தொழிலாளர் விவசாயிகள், ஒடுக்கப்படும் தேசங்களின் ஒப்பற்ற புரட்சிகர மே தினம் நீடூழி வாழ்க!! ...