Sunday 10 September 2023

அப்பு-பாலன் நினைவு நீடூழி வாழ்க! மோடி ஆட்சியை தூக்கியெறிய சூளுரைப்போம்!!

 அப்பு-பாலன் நினைவு நீடூழி வாழ்க! 

செப்டம்பர்-12 தியாகிகள் நாள்! பாசிச எதிர்ப்பு நாள்!!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் Aug 23, 2023 செந்தளம்

அன்பார்ந்த உழைக்கும் மக்களே! புரட்சிகர, ஜனநாயக சக்திகளே!

அப்பு பாலன் நினைவு தினமான செப்.-12ஐ பாசிச எதிர்ப்பு தினமாகவும், மோடி ஆட்சியை  தூக்கியெறிவதற்கு சூளுரைக்கவேண்டிய தினமாகவும்  ம.ஜ.இ.க கடைபிடிக்கிறது. அதற்காக புரட்சிகர,  ஜனநாயக சக்திகளை அறைகூவி அழைக்கிறது.

மோடி ஆட்சி ஒழிக!

ந்தியாவை வல்லரசாக்குவோம், ஊழலை ஒழிப்போம் என்று முழங்கி ஆட்சிக்கு வந்த மோடி கும்பல் அனைத்து துறைகளிலும் படுதோல்வி அடைந்துள்ளது.  அமெரிக்காவின் புதியகாலனிய ஆதிக்கத்திற்கும்  உள்நாட்டு கார்ப்பரேட்டுகளுக்கும் நாட்டை  தாரைவார்ப்பதிலும், வரலாறு காணாத  ஊழலிலும்தான் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. வறுமை, வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு போன்றவற்றால் நாட்டு மக்களை கொன்று குவித்து வருகிறது. கார்ப்பரேட்டுகளின் வளர்ச்சியை நாட்டின் வளர்ச்சியாக காட்டி மோசடி செய்கிறது. மக்களை பொருளாதார நெருக்கடிகளில் இருந்து திசைதிருப்ப குஜராத்- மணிப்பூர் - ஹரியானா மாடல் கலவரங்களை நாடெங்கும் கட்டியமைப்பதன் வாயிலாக மீண்டும் ஆட்சியைப் பிடிக்க திட்டமிட்டு வருகிறது. இத்தகைய தேசத்துரோக ஆர்.எஸ்.எஸ்-பாஜக கும்பலை  ஆட்சியிலிருந்து தூக்கியெறிய சூளுரைக்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்.

ஜூலை 2023 இன் படி, நாட்டின் வர்த்தகத் துறை  பணவீக்கமானது 7.44% ஆகவும், உணவுத்துறை  பணவீக்கமானது 11.51 % ஆகவும் உயர்ந்துள்ளது. எரிவாயு சிலிண்டர் விலை சுமார் ரூ.1,200 வரை உயர்ந்துவிட்டது. பெட்ரோல் விலை ரூ.102.6, டீசல் விலை ரூ.94.3 என உயர்ந்துள்ளது. காய்கறிகள் விலை 37.3%, மசாலா பொருட்கள் 21.6%, பருப்பு வகைகள் 13%, பால் 8.3%, பெட்ரோல் டீசல் 3.7% மற்றும் வீட்டு பராமரிப்பு 5% வரை விலை உயர்ந்துள்ளது. மோடி கும்பல் ஆட்சிக்கு வந்தபோது (2014) வேலை வாய்ப்பின்மை விகிதம் 5.2% ஆக இருந்தது. ஜூலை 23 கணக்கீட்டின் படி 7.95% ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு மக்கள் சொல்லொணா துயரத்தில் செத்து மடிகின்றனர். இந்த அடிப்படை பிரச்சினைகளைத் திசைதிருப்ப குஜராத் மாடல் கலவரத்தை ஹரியானாவில் கட்டியமைத்து 10 க்கும் மேற்பட்ட இசுலாமியர்களை கொன்றுள்ளது. மணிப்பூர் மண்ணில் இரத்தம் இன்னமும் காயவில்லை. இந்துமத உணர்வுகளைத் தூண்டி வாக்கு வங்கியாக மாற்றி ஆட்சியை பிடிக்க இரத்த வெறிகொண்டு அலைகிறது. நரவேட்டையாடும் இந்த பிணந்தின்னி கும்பலை இனியும் ஆள அனுமதிக்கலாமா? கூடாது.

வனங்களை தனியார்மயமாக்குவதற்கான வனப்பாதுகாப்பு சட்டம் மற்றும் மருத்துவ குணம் கொண்ட மூலிகைகளை கார்ப்பரேட்டுகளுக்குத் தாரை வார்க்கும் வகையில் ஆயுர்வேதம், சித்தா உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவ திட்டமான AYUSH திட்டத்தையும், பல்லுயிர் பெருக்க மையங்களையும்  தனியார் மயமாக்கும் பல்லுயிர் பெருக்க பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றியுள்ளது மோடி அரசு. காலனிய சட்டங்களை நீக்குவது எனும் பெயரில் அதைவிட கொடிய திருத்தங்களுடன் இந்திய தண்டனை சட்ட திருத்தம், இந்திய சாட்சியச் சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறை சட்ட திருத்தங்களை அமித்ஷா தாக்கல் செய்துள்ளார். இவை போலீஸ் ராஜ்ஜியத்தை நிறுவுவதற்கான கொடிய புதிய காலனிய பாசிச சட்டங்களாகும். ஏற்கனவே டெல்லி அரசின் அரைகுறை அதிகாரத்தையும் பறித்து ஆளுநருக்கு அதிகாரம் வழங்கும் சட்டத்தையும் நிறைவேற்றியுள்ளது மோடி ஆட்சி. இவ்வாறு பாசிசத்தை அரசியல் சட்டம் வாயிலாகவே அரங்கேற்றிவருகிறது.

மணிப்பூர் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் பாஜக அரசுகளின் பாசிச காட்டாட்சியால் நாடெங்கும் மக்கள் கொந்தளித்துள்ளனர். நிரந்தரமான பிரதமர் எனும் மோடி பிம்பம் நொறுங்கிவிட்டது. வடகிழக்கு மாகாணங்கள் முழுவதையும் உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி, முக்கியமாக ஜப்பானின் ஜிகா நிறுவனம் மற்றும் அம்பானி அதானிகளின் வேட்டைக்காடாக மாற்ற அம்மக்களை மதரீதியாக, இனரீதியாக பிளவுபடுத்திவருகிறது. மணிப்பூர் பாஜக அரசும் மோடி அரசும் கூட்டு சேர்ந்து நரவேட்டையாடி வருகிறது. ஆகவேதான் அதன் மீதான பாராளுமன்ற விவாதத்திற்கு வராமல் கோழைத்தனமாக அதானி வீட்டு கழிப்பறையில் ஒளிந்துகொண்டார் மோடி. பிறகு எதிர்க்கட்சிகள் வெளியேறிய பின்பு யாருமில்லாத மன்றத்தில் டீ ஆற்றுகிறார்.

எனவே நாட்டை நரகத்தில் ஆழ்த்தியுள்ள இந்த தேசவிரோத மக்கள் விரோத காவிக்குண்டர்களின் கார்ப்பரேட் எடுபிடி ஆட்சிக்கு சவக்குழி வெட்டவேண்டும். இல்லாவிடில் மக்களுக்கு மேலும் மேலும் இக்கும்பல் சவக்குழி வெட்டும். இரத்த வெள்ளத்தில் நம்மை மிதக்க வைக்கும். மணிப்பூர், ஹரியானா மாடலில் நாடெங்கும் மக்கள் கொல்லப்பட்டு பெண்களை நிர்வாண ஊர்வலம் அழைத்துச் செல்லும் இந்த பாசிசக் கும்பல்.

திமுகவின் இரட்டை நிலைபாடு

ஒரு புறம் தனது தரகு முதலாளித்துவ நலன்களிலிருந்து பாஜக எதிர்ப்பு பேசிக்கொண்டே மறுபுறம் சாதிய வன்கொடுமைகளின் தாய்நாடாக தமிழ் நாட்டை மாற்றி வருகிறது தி.மு.க அரசு. அண்மையில்  நாங்குனேரியில் சின்னத்துரை குடும்பம் மீது சாதிவெறி கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளது. அவர்களை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யாமல் SC/ST சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது. அமைச்சர் அன்பில் பொய்யாமொழி பாதிக்கப்பட்ட மாணவர்கள், தாக்கிய மாணவர்கள் அனைவரையும் சமப்படுத்தி பேசுகிறார். திராவிட மாடல் அரசுக்கு கல்வித்துறை, அரசு நிர்வாகம், காவல் துறையில் ஊடுருவியுள்ள சங்பரிவார கும்பலை களையெடுக்க கூட வக்கில்லை.

மேலும் நீட் படுகொலைகள் தொடர்கதையாகி வருகிறது. இவ்வாண்டு ஜெகதீஸ் மற்றும் அவரது தந்தை இருவரும் தற்கொலை செய்து மாண்டுவிட்டனர். ஆட்சிக்கு வந்தால் நீட் இரத்து செய்யப்படும் என கூறிய தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் மசோதா ஒன்றை தாக்கல் செய்துவிட்டு கடமை முடிந்துவிட்டதாக கருதிவிட்டது. தொடர் மக்கள்திரள் போராட்டங்களை நடத்தாமல் சட்டவாதத்தில் மூழ்கிவிட்டது. 2 ஆண்டுகளாக எந்த போராட்டத்தையும் நடத்தாத திமுக அரசு நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கியதும் போராட்ட நாடகம் நடத்துகிறது. மக்கள் விரோத ஆளுநர் ரம்மி ரவியோ நீட்டை இரத்து செய்ய முடியாது என ஊளையிடுகிறார்.

நேட்டோவின் ஆசிய விரிவாக்கம்

சர்வதேச அளவில் அமெரிக்காவின் தெற்காசிய மேலாதிக்கத்திற்காக குவாட், ஆக்கஸை அடுத்து, ஜப்பானின் தலைமையில் நேட்டோ - இந்தோ பசிபிக் கூட்டமைப்பு ஒன்று  உருவாக்கப்பட்டுள்ளது. ஜப்பான்,  ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் கொரியா உள்ளிட்ட நாடுகளின் இராணுவ மற்றும் வர்த்தக கூட்டமைப்பான இது சீனாவை முக்கிய எதிரியாக அறிவித்துள்ளது. ஜப்பானின் தலை நகரில் நேட்டோ அலுவலகம் அமைப்பது, உக்ரைனுக்கு ஆயுதம் வழங்குவது, நேட்டோவிற்கு ஜி.டி.பி-யில் 2% நிதி ஒதுக்குவது, ஐ.டி.பி.பி. (ITPP) திட்டம் உள்ளிட்ட அம்சங்களை இது கொண்டுள்ளது. சீனா ஏற்கனவே இப்பிராந்தியத்தில் தனது இராணுவ இருப்பை அதிகப்படுத்தி வருகிறது. இதனால் அங்கு அமெரிக்கா, சீனா இடையே பனிப்போர் மூளும் சூழல் உருவாகியுள்ளது. எனவே இந்த நேட்டோவின் ஆசிய விரிவாக்க திட்டத்தை மட்டுமின்றி சீனாவின் அத்துமீறலை எதிர்த்தும், உக்ரைனில் இருந்து நேட்டோ - ரசியாவை வெளியேற்றக் கோரியும் நாம் குரல் கொடுக்க வேண்டும்.

பாஜக ஆட்சியை தூக்கியெறிவது எனும் முழக்கத்தை மையமான முழக்கமாக கொண்டு பாசிச எதிர்ப்புணர்வு கொண்ட ஜனநாயக சக்திகளும் புரட்சிகர சக்திகளும் ஒருங்கிணைந்து புதிய ஜனநாயகப் புரட்சியின் வாயிலாக ஒரு மக்கள் ஜனநாயக குடியரசு அமைக்க அணிதிரளுமாறு அறைகூவல் விடுக்கிறோம்.


* நாடெங்கும் மணிப்பூர், ஹரியானா மாடல் கலவரங்களை கட்டியமைத்து ஆட்சியை பிடிக்க முயலும் ஆர்.எஸ்.எஸ் - பாஜகவின் சதிகளை முறியடிப்போம்!

* ஜப்பான் ஏகாதிபத்தியம் மற்றும் அம்பானி-அதானியின் வேட்டைக்காடாக வடகிழக்கு மாநிலங்களை மாற்றும் பாஜக ஆட்சிக்கு சவக்குழி வெட்டுவோம்!

* கார்ப்பரேட் நலன்களுக்கான வனப் பாதுகாப்பு மற்றும் பல்லுயிர் பெருக்க பாதுகாப்பு சட்டங்களை எதிர்ப்போம்!

* புதிய காலனிய நலன்களுக்கான இந்திய சாட்சியச் சட்ட திருத்தம், தண்டனை மற்றும் குற்றவியல் சட்ட திருத்தங்களை எதிர்ப்போம்!

* டெல்லி யூனியன் பிரதேச சட்டத்தை எதிர்ப்போம்! மாநில உரிமைகளுக்காகப் போராடுவோம்!

* வறுமை, வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பொருளாதார நெருக்கடிகளை தீர்க்க  வக்கற்ற மோடி ஆட்சி ஒழிக!

தி.மு.க அரசே!

* நாங்குநேரி சின்னதுரை குடும்பம் மீதான சாதிய வன்கொடுமைக்கு காரணமான சாதிவெறியர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்!

* கல்வித்துறையில் ஊடுருவியுள்ள சாதிவெறி -  சங்பரிவார கும்பலை களையெடு!


> அமெரிக்காவின் தெற்காசிய மேலாதிக்கத்திற்கான நேட்டோ - இந்தோ பசிபிக் கூட்டமைப்பை (NATO -IP4) எதிர்ப்போம்!

> அமெரிக்க - ரசிய ஏகாதிபத்திய நாடுகளே!  உக்ரைனிலிருந்து வெளியேறு!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்

தமிழ்நாடு

No comments:

Post a Comment

2024 மே நாளில் சூளுரைப்போம்!

  2024 மே நாள் வாழ்க! உலக உழைக்கும் மக்கள், மாதர், தொழிலாளர் விவசாயிகள், ஒடுக்கப்படும் தேசங்களின் ஒப்பற்ற புரட்சிகர மே தினம் நீடூழி வாழ்க!! ...