Friday 11 December 2020

சென்னைபஞ்சாப்பில் இருந்து 1,200 டிராக்டர்களில் மேலும் 50,000 விவசாயிகள் டெல்லிக்கு புறப்பட்டனர்:

 


போராட்டத்தை தீவிரப்படுத்த நடவடிக்கை: 

இன்று முதல் சுங்கச் சாவடிகள் முற்றுகை

தினகரன்  2020-12-12 

புதுடெல்லி: மத்திய வேளாண் சட்டங்களை எதிர்த்து, டெல்லியில் விவசாயிகள் 16வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், பஞ்சாப்பின் பல்வேறு பகுதிகளில் இருந்து 1200 டிராக்டர்களில் மேலும் 50 ஆயிரம் விவசாயிகள் டெல்லி நோக்கி புறப்பட்டுள்ளனர்.  மத்திய அரசு இயற்றிய 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லி எல்லையில் முகாமிட்டு 16வது நாளாக நேற்றும் தங்களின் போராட்டத்தை தொடர்ந்தனர். மத்திய அரசு நடத்திய அனைத்து பேச்சுவார்த்தைகளும் தோல்வி அடைந்த நிலையில், இனி பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை என விவசாயிகள் திட்டவட்டமாக கூறி உள்ளனர். வேளாண் சட்டங்களை ரத்து செய்வதை தவிர வேறெந்த நிபந்தனையையும் ஏற்கப் போவதில்லை என்ற உறுதியுடன் விவசாயிகள் போராடி வருகின்றனர். மத்திய அரசு சட்டத்தில் திருத்தம் செய்ய தயாராக உள்ளதே தவிர, எக்காரணம் கொண்டும் சட்டத்தை ரத்து செய்யக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளது. இதனால், விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தமுடிவு செய்துள்ளனர்.

டெல்லிக்குள் நுழையும் அனைத்து சாலைகளையும் முடக்கப் போவதாக ஏற்கனவே அறிவித்துள்ளனர். இந்நிலையில், போராட்டத்தை தீவிரப்படுத்த விவசாயிகள் கரங்களை பலப்படுத்தும் வகையில் பஞ்சாப்பின் பெரோசிபூர், பெசில்கா, அபோகர் பரித்கோட் மற்றும் மோகா ஆகிய பகுதிகளில் இருந்து மேலும் 50 ஆயிரம் விவசாயிகள் டெல்லி நோக்கி புறப்பட்டுள்ளனர். இது குறித்து மஸ்தூர் சங்கராஸ் கமிட்டி என்ற விவசாய அமைப்பின் தலைவர் சத்னம் சிங் கூறுகையில், ‘‘இனி எங்கள் போராட்டம் சாகும் வரை நடக்கும். எந்த சூழலிலும் எங்கள் நிலத்தை விட்டு வெளியேற மாட்டோம். எங்களுக்கு ஆதரவாக 1200 டிராக்டர்களில் மேலும் 50 ஆயிரம்  விவசாயிகள் பஞ்சாப்பில் இருந்து புறப்பட்டுள்ளனர். அவர்கள் நாளை (இன்று) டெல்லி சிங்கு எல்லையை வந்தடைவார்கள்,’’ என்றார்.

ஏற்கனவே அறிவித்தபடி, விவசாயிகள் இன்று நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளை முடக்கும் போராட்டத்தை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர். பாரதிய கிஷான் சங்க தலைவர் ராகேஷ் திகைத் கூறுகையில், ‘‘மோடி அரசையும், கார்ப்பரேட் நிறுவனங்களையும் எதிர்த்து இன்று சுங்கச்சாவடிகளை முடக்கும் போராட்டத்தை நடத்துவோம். அதைத் தொடர்ந்து வரும் 14ம் தேதி அனைத்து மாவட்ட முக்கிய நகரங்களிலும் விவசாயிகள் போராட்டம் நடைபெறும்,’’ என்றார். விவசாயிகள் மேலும் அதிகளவில் கூடுவதால் மத்திய அரசும் பாதுகாப்பை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமூக விரோதிகளை அனுமதிக்காதீர்கள்

டெல்லி திக்ரி எல்லையில் விவசாயிகள் போராட்டத்தில் ஒரு பிரிவினர், பல்வேறு குற்றச்சாட்டின் கீழ் கைதானவர்களை விடுவிக்க கோரி கோஷமிடுவதாக செய்திகள் வெளியாகின. இந்த செய்தியை தனது டிவிட்டரில் பதிவிட்ட மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ‘‘விவசாயிகளின் போராட்டத்தை சீர்குலைக்க சமூக விரோதிகள் சதி திட்டம் தீட்டி உள்ளனர். எனவே விவசாய நண்பர்களே விழிப்புடன் இருங்கள். உங்கள் போராட்டத்தை சமூக விரோத சக்திகள் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்காதீர்கள்’’ என கூறி உள்ளார்.

நாடு முழுக்க பாஜ ஆதரவு பிரசாரம்

விவசாயிகள் போராட்டத்திற்கு அனைத்து எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், 3 வேளாண் சட்டங்களால் கிடைக்கும் நன்மைகள் தொடர்பாக நாடு தழுவிய பிரசாரத்தை முன்னெடுக்க பாஜ திட்டமிட்டுள்ளது. நாடு முழுவதும் 700 மாவட்ட கிராமங்களில் செய்தியாளர்கள் சந்திப்பு, பொது நிகழ்ச்சிகள் நடத்திய விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளதாக அக்கட்சி நிர்வாகிகள் கூறி உள்ளனர்.

உச்ச நீதிமன்றத்தில் பாரத் கிசான் வழக்கு

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் விவசாய சங்கங்கள் ஏற்கனவே வழக்கு தொடர்ந்துள்ளன. இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ‘பாரத் கிசான் சங்கம்,’ உச்ச நீதிமன்றத்தில் நேற்று புதிய இடைக்கால மனுவை தாக்கல் செய்துள்ளது. அதில், ‘வேளாண் சட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி மாற்று சந்தைகள் உருவாக்கப்பட்டால், அது விவசாய துறைகளை கண்டிப்பாக முழுமையாக சிதைத்து விடும். அதனால், இச்சட்டத்தை ரத்து செய்யும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

2024 மே நாளில் சூளுரைப்போம்!

  2024 மே நாள் வாழ்க! உலக உழைக்கும் மக்கள், மாதர், தொழிலாளர் விவசாயிகள், ஒடுக்கப்படும் தேசங்களின் ஒப்பற்ற புரட்சிகர மே தினம் நீடூழி வாழ்க!! ...