அரசியல் பிரச்சாரத்தின் ஆதாரக் கோட்பாடு

========================================================================================================

அரசியல் பிரச்சாரத்தின் ஆதாரக் கோட்பாடு.

'' நீதி, மதம், அரசியல், சமுதாயம் சம்பந்தமான எல்லாவித சொல்லடுக்குகளுக்கும் பிரகடனங்களுக்கும் வாக்குறுதிகளுக்கும் பின்னே ஏதாவதொரு வர்க்கத்தின் நலன்கள் ஒழிந்து நிற்பதைக் கண்டுகொள்ள மக்கள் தெரிந்துகொள்ளாத வரையில் அரசியலில் அவர்கள் முட்டாள்தனமான ஏமாளிகளாகவும் தம்மைத் தாமே ஏமாற்றிக்கொள்வோராகவும் இருந்தனர், எப்போதும் இருப்பார்கள். பழைய ஏற்பாடு ஒவ்வொன்றும் எவ்வளவுதான் காட்டு மிராண்டித் தனமாகவும் அழுகிப் போனதாகவும் தோன்றிய போதிலும் ஏதாவது ஒரு ஆளும்வர்க்கத்தின் சக்தியைக் கொண்டு அது நிலைநிறுத்தப்பட்டு வருகிறது. சீர்திருத்தங்கள், அபிவிருத்திகள் ஆகியவற்றின் ஆதரவாளர்கள் இதை உணராத வரையில் பழைய அமைப்பு முறையின் பாதுகாவலர்கள் அவர்களை என்றென்றும் முட்டாளாக்கிக் கொண்டே இருப்பார்கள். இந்த வர்க்கங்களின் எதிர்ப்பைத் தகர்த்து ஒழிப்பதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. அது என்ன?

பழைமையைத் துடைத்தெறியவும் புதுமையைச் சிருக்ஷ்டிக்கவும் திறன் பெற்றவையும், சமுதாயத்தில் தாங்கள் வகிக்கும் ஸ்தானத்தின் காரணமாக அப்படிச் சிருக்ஷ்டித்துக் தீரவேண்டிய நிர்ப்பந்தத்திலிருக்கிறவையுமான சக்திகளை, நம்மைச் சூழ்ந்துள்ள இதே சமுதாயத்துக்குள்ளேயே நாம் கண்டுபிடித்து, அந்தச் சக்திகளுக்கு ஞானமூட்டிப் போராட்டத்துக்கு ஸ்தாபன ரீதியாகத் திரட்ட வேண்டும். இது ஒன்றேதான் வழி. ''

மாமேதை தோழர் லெனின்
===========================================================================================================================

Monday, 30 January 2017

ஈழ மொழியுரிமைப் பாடல்


செங்களம் ஆடி வருகிற புகழோடு
சிரிக்க மறப்பேனா ?


பட்டினி கிடந்து பசியால் மெலிந்து
பாழ்பட நேர்ந்தாலும் - எந்தன்
கட்டுடல் வளைந்து கைகால் தளர்ந்து
கவலை மிகுந்தாலும் - வாழ்வு
கெட்டு நடுத்தெரு வோடு கிடந்து
கீழ்நிலை யுற்றாலும் - மன்னர்
தொட்டு வளர்த்த தமிழ்மகளின் துயர்
துடைக்க மறப்பேனா ?

நோயில் இருந்து மயங்கி வளைந்து
நுடங்கி விழுந்தாலும் - ஓலைப்
பாயில் நெளிந்து மரண மடைந்து
பாடையில் ஊர்ந்தாலும் - காட்டுத்
தீயில் அவிந்து புனலில் அழர்ந்து
சிதைந்து முடிந்தாலும் - எந்தன்
தாயில் இனிய தமிழ்மொழியின் துயர்
தாங்க மறப்பேனா ?

பட்டமளித்துப் பதவி கொடுத்தொரு
பக்கம் இழுத்தாலும் - ஆள்வோர்
கட்டி அணைத்தொரு முத்தமளித்துக்
கால்கை பிடித்தாலும் - என்னைத்
தொட்டு விழுந்து வணங்கி இருந்தவர்
தோழமை கொண்டாலும் - அந்த
வெட்டி மனிதர் உடல்களை மண்மிசை
வீழ்த்த மறப்பேனா ?

பொங்கு வெறியர் சிறைமதிலுள் எனைப்
பூட்டி வதைத்தாலும் - எந்தன்
அங்கம் பிளந்து விழுந்து துடிக்க
அடிகள் கொடுத்தாலும் - உயிர்
தொங்கி அசைந்து மடிந்து தசையுடல்
தூள்பட நேர்ந்தாலும் - ஒரு
செங்களம் ஆடி வருகிற புகழோடு
சிரிக்க மறப்பேனா ?


 - காசி ஆனந்தன் -

நன்றி : காசி ஆனந்தன் கவிதைகள்
வெளியீடு : நா. அருணாசலம், (மாணவர் புத்தகப்பண்னை)
26. ச.ப.சாலை, அடையாறு, சென்னை 20

No comments:

Post a Comment